Sunday, 13 November 2022

மயக்கமென்ன, அதன் மர்மனென்ன!

 


டாக்டர் ஏ.பீ. முகமது அலி,(ஐ.பீ.எஸ்(ஓ)

என்னுடன் நடைப் பயிற்சிக்கு வரும் நண்பர்கள் நமது இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி குடும்பத்தினையும், தொழிலையும், படிப்பினையும் சரியாக கவனிக்க முடியாமல் உடல்  கூனிக்குறுகி, பெற்றோர்கள், உற்றார் மற்றும் உணவினர்கள் கூறும் அறிவுரைகளைக்கு மதிப்பு தராமல், வன்முறையிலும் ஈடுபட்டு  சீரழிவில் செல்கிறார்களே அதற்கு முடிவு கட்டமுடியாதா என்ற கேள்வியினை எழுப்பினர்.

            அவர்கள் எழுப்பியது நியாயமான கேள்வி தானே!  முன்பெல்லாம் விவசாய தொழிலாளர்கள் பனை, தென்னை மரத்திலிருந்து இறக்கப் படும் கள்ளினை அளவோடு உடல் வலியினைப் போக்க ஒரு நிவாரனியாக குடிப்பர், அதுவும் அளவோடு. ஆகவே அவர்கள் உடல் வலிமை பெற்றும் இருந்தார்கள். அதன் பின்பு வெல்லம், வாழைப்பழ தோல்கள்,நெல், படிகாரம், வேலம் பட்டை ஆகியவைகளை ஊற வைத்து காச்சி சாராயமாக குடிக்க ஆரம்பித்தனர். அதில் மெத்தனால் கலந்து சாப்பிட்டதால் சிலர் இறந்தும், இன்னும் சிலர் கண் பார்வை மங்கியும் கஷ்டப் பட்டனர். மீனவர் பழைய சோற்றினை கிளோரின் மாத்திரை கலந்து மண்ணில் புதைத்து வைத்து உப்பி வரும்போது அதனை 'சுண்டிச் சோறு' என்று அழைக்கப்படுவதினை அதிகாலையில் கடலுக்கு மீன் பிடிக்க 'தங்கலுக்காக' செல்லும்போது எடுத்துச் செல்வர். அது கடலின் உப்புக் காற்று குமட்டலை தடுத்து நிறுத்துமாம். இதுதான் தமிழகத்தில் வழக்கமாக இருந்தது. எப்போது அந்நிய கலாட்சாரம் 1500 நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்ததோ அதிலிருந்து IMFL என்ற 'இந்தியன் மேடு பாரின் லிகர்' என்று அழைக்கப் படும் மதுவிற்கும் , பலவகையான போதைப் பொருளுக்கும் அடிமையானர்.

            சமீப காலமாக இளைஞர்கள், மாணவர்கள் அதுவும் கொரானா காலத்தில்  வேலை, கல்விக்கூடங்களை விடுமுறை அளிக்கப் பட்டதால் கோகைன், ஹிராயின், கேட்டமின், மர்ஜூனா, ஓபியம், மெத்தம்பெட்டமின், ஆம்பிடமின், செசன்சொல், மென்றக்ஸ், எல்எஸ்டி மாத்திரை, டிடிகேசிக் ஊசி போன்றவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். நான் மாநில கல்லூரியில் 1969ம் ஆண்டு எம்.ஏ படிக்கும்போது எனது வகுப்பு மாணவன் ஒரு சினிமா நடிகர் மகன் . அவன் கல்லூரிக்கு வரும்போது எல்.எஸ்.டி மாத்திரை எடுத்துக் கொண்டு வருவான். பேராசிரியர் வகுப்பு ஆரம்பித்ததும் மேஜையில் தலை வைத்து தூங்கி விடுவான். அவனை எழுப்பினால், பேராசிரியர் சொல்வார், 'தொந்தரவு செய்யாதீர்கள் அவன் தூங்கட்டும்' என்று பெருந்தன்மையுடன் சொல்வார். இதே நிலையில் தான் இன்றைய போதைக்கு அடிமையான இளைய சமுதாயம் ஒரு மயக்க நிலையில் உள்ளது என்பதினை மறுக்க முடியுமா?

            இந்த நூற்றாண்டின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர் என அழைக்கப்படும் அர்ஜென்டினா நாட்டு வீரர் ‘மடோனா’ போதையின் அடிமையில் சிக்கி, தன உடல் நலம் குன்றி, கோடிக்கணக்கான விளம்பர வருமானம் இழந்து, புகழையும் இழந்தார். அவர் 1996 ஜனவரி மாதம் அறிவித்த பேட்டியில், 'போதைக்கு அடிமையான ஒரு மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு நாளும் போதையுடன் சண்டையிட வேண்டும்" என்று கூறினார். மேலும் அவர் போதைக்கு அடிமையாவது எந்தளவிற்கு கொடுமை என்பதினை விளக்கினார். "ஒரு நாள் அவர் போதையின் உச்சக்கட்டத்தில் படுத்து இருந்தபோது நான்கு வயதான என் அருமை மகள் கியானினா, தன்னை எழுப்பி தனக்கு தாகமாக இருக்கிறது ஒரு கிளாஸ் தண்ணீர் வேண்டும் என்று கூறியுள்ளார் பிஞ்சுக் குழந்தை. ஆனால் நான் எழுந்திருக்க முயலும் போது என்னை கட்டிலோடு கட்டிலாக கட்டிப் போட்டிருப்பது போல எழுந்திருக்க முடியாத உணர்வு ஏற்பட்டது. அதற்குக் காரணம் நான் கோக்கையின் என்ற போதைப் பொருளை சுவாசித்த விளைவு தான். உடனே என் அன்பு மகள் சொன்னாள், 'அப்பாவே உன்னால் எனக்கு தாகத்திற்கு தண்ணீர் கூட எடுத்துக் கொடுக்க முடியாதா' என்று கேட்டது வாழ்நாள் முழுவதும் என் இதயத்தில் தைத்த முள்ளாக வலிக்கின்றது என்று.


 

            இப்போது போதைக்குப் பயன் பெரும் பல்வேறு போதைப் பொருட்கள் அதனை எதிலிருந்து தயாரிக்கின்றார்கள் என்று பார்க்கலாம்.: 1) கோக்கையின் போதைப் பொருள் கோகைன், கோகோ  என்ற செடியிலிருந்து தயாரிக்கப் படுகிறது. இது பெரும்பாலும் தென் அமெரிக்க நாடுகளில் விளையும் செடி. அதனை அமெரிக்கா மற்றும் வளம் பொருந்திய நாடுகளில் உபயோகிக்கப் படுகிறது. கோகைன், மர்ஜூனா வகையினைச் சார்ந்தது. அதனை புகைப்பதால் நரம்பு மண்டலத்தினை பாதித்து உயர் ரத்த அழுத்தத்தினைக் கொடுக்கிறது.

2) மார்பின் ஒரு வலி நிவாரணியாகும். அதனை உட்கொள்வதால் மூளையினை பாதித்து கோமா என்ற மயக்க நிலைக்கு சென்று இறப்பு ஏற்படுகிறது. 2010ம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப் பட்ட சர்வேயில் 18 வயதிற்குட்பட்டோர் மார்பின் உபயோகிப்பது 2,14,000 ஆக இருந்தது 2002ம் ஆண்டு 3,59,000 ஆக உயர்ந்துள்ளதாம். 3) ஹெராயின் சமையலுக்கு பயன்பெறும் கசகசா செடியின் ஓடுகளிருந்து வடியும் ரப்பர் மரத்திலிருந்து வடியும் பால் போன்ற திரவத்தில் பல வேதிய பொருட்கள் கலந்து தயாரிக்கப் படுகிறது. இவை ‘கோல்டன் ட்ரியாங்கில்’ என்று அழைக்கப் படும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற முச்சந்திப்பில் பயிரிடப் படுகிறது. இந்தியாவில் உ.பி., ம.பி, ராஜஸ்தான் போன்ற எல்லையோர மாநிலங்களில் அரசு அனுமதியுடன் வளர்க்கப் படுகிறது. ஏனென்றால் அது மருந்து தயாரிக்கப் பயன் படுகிறது. நான் சிறு வயதிலிருந்த போது வயிக்குப் போக்கிற்கு நாட்டு வைத்தியரிடம் அழைக்குச் சென்றால் ஒரு சிறு கருப்பு உருண்டை கொடுப்பார். அது இப்போது தான் அபின் என்ற போதைப் பொருளுடன் சில நாட்டு மருந்தில் தயாரிக்கும் கலவை என்று. அதனை பயன் படுத்திதான் 'மற்ற போதைப் பொருட்களான சாராஸ் , மெத் என்று அழைக்கப் படும் மெத்தம்பெட்டமைன், கேட்டமின், செசன்சொல் ' என்பவைகளும் தயாரிக்கப் படுகின்றன. கேட்டமின் விலங்குகள் அறுவை சிகிச்சை செய்யும்போது பயன் படுத்துவதாகும் மயக்க மருந்தாகும். ஆனால் அதனை மனிதன் பயன் படுத்தும் பொருளாக கடத்தப் படுகிறது. 4) கஞ்சா செடிகள் மூலம் ஆந்திரா, தமிழ்நாடு மேகமலை, தேனி, போடிமெட்டு, கேரளா மூணாறு எல்லை ஓரங்களில் பயிரிடப் படுகிறது. அவை புகைக்கப் படும் பொருளாகி மூளை பகுதிகளை பாதித்து சுய உணர்வு குன்றும் நிலை ஏற்படுகிறது.5) ஆம்பிட்டமின் என்ற ரேவ் போதைப் பொருள் பார்ட்டிகளில் பயன்படுத்தும் போதையாகும். அது வைத்திருந்ததாகத் தான் போலியாக மும்பையில் கப்பல் பார்ட்டிக்கு செல்லும்போது தேசிய போதைப் பொருள் அணியால் கைது செய்யப் பட்டார் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்.

            5) டிடிஜே இன்செக்ஷ்ன் என்பது ஆஸ்பத்திரியில் உபயோகப் படுத்திய ஊசிகளை எடுத்து அதனில் போதை பவுடர்களை தண்ணீருடன் கலந்து போதை அடிமையானவர்களை குறைந்த செலவில் செலுத்துகிறார்கள். அதனை குத்தல் எனவும் அழைக்கின்றனர். அதன் விளைவு ஆஸ்பத்திரியில் எச் ஐ வி நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கும் பயன்பட்ட சிரஞ்சிகளை எடுத்து மறுபடியும் போதைக்கு பயன் படுத்துவதால் அந்த நோய்களும் அதனை உபயோகிப்பவர்களுக்கு தொற்றிக் கொள்ளும்.

6) குப்பைகளில் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை சேகரிக்கும் சிறுவர்களும் பெரியவர்களும் கார், பைக், சைக்கிள் பஞ்சர் ஓட்டும் சொலுஷனை போதை பொருளாக ஸ்வாசிக்கின்றனர்.

7) இப்போது ‘இ சிகரெட்’ என்ற நடுத்தர மேல்குடி மக்கள் உபயோகிக்கும் போதையாக  பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் 2021ம் ஆண்டு நடத்தப்  பட்ட சர்வேயில் பள்ளியில் 6வதிலிருந்து 12வகுப்பு படிக்கும் மாணவர் வரை இ-சிகரெட் புகைப்பது அதிகமாகி அது துப்பாக்கி கலாட்சாரத்திற்கும் வழிவகுக்கின்றதாம்.

போதைப் பொருட்கள் கடத்துவதால் தீவிரவாதம், போட்டி அரசாங்கம் நடத்துவது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விளையாட்டுகளுக்கும், அறிவுசால் மாணவர்கள் உயர்நிலைக்கு வரமுடியாமல் போவதற்கு  வழிவகுக்கின்றது, என்பதினை சில சம்பவங்களைக் கொண்டு உங்களுக்கு விளக்கலாம் என எண்ணுகிறேன்:

1)                  அமெரிக்கா, மற்றும் மெக்ஸிகோபோன்ற தென் அமேரிக்கா நாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தும் ஒரு படையினையே வைத்திருந்த 'குஸ்மான் என்ற எல்சாக்கோ' போதைப் பொருளை கடத்துவதிற்கு கப்பல்களையே வைத்திருந்ததும், பிடிபட்டால் மிகவும் பாதுகாப்பாக உள்ள சிறைச் சாலையிலிருந்து தப்பிப்பதற்கு டிராலி என்ற ரயிலையே சுரங்கம் தோண்டி, மின்சார அமைப்பை  ஏற்படுத்தி இரண்டு தடவை தப்பித்ததும், மூன்றாவது தடவை மாட்டிக் கொண்டு தற்போது அமெரிக்க சிறைச்சாலையில் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவிக்கின்றான். அவனைப் பற்றிய தகவல் காவல் துறைக்கு தெரிவிப்பவர்கள், எதிர்தரப்பு கடத்தல் காரர்கள் என்று 2000 பேர்களுக்கு மேல் கொலை செய்திருப்பதாக தகவல் சொல்கிறது. 2007ம் ஆண்டு மெக்ஸிகோவில் ஒரு வீட்டில் போதைப் பொருள் கும்பல் பதுங்கியுள்ளதாக வந்த தகவலின் பேரில் சோதனை இடும்போது 900 கோடி அமெரிக்கன் டாலர்கள் இருந்ததாம். ஆகவே எந்த அளவிற்கும் மனிதர்களை போதைக்கு அடிமையாக்கி பணம் சேர்க்கின்றனர் என்பது நமக்கெல்லாம் அதிசயமாக இல்லையா?

2)                  போதைப் பொருட்கள் தமிழகத்திலிருந்து படகுகள், விமானப் பயணியர் மூலம் இலங்கைக்கு கடத்தப் படுகிறது. ஆனால் அங்குள்ள மக்கள் அதிகமாக அதனை உபயோகிப்பதில்லை. மாறாக அதனை இலங்கை கடல் எல்லையில் நங்கூரம் இட்டு இருக்கும் சரக்கு கப்பலுக்கு கொண்டு சென்று அதற்காக தங்க கட்டிகளை வாங்கி பண்டமாற்றும் முறைப் படி போராளி குழுக்களுக்கு ஆயுதங்கள் வாங்கும் பொருளாக உபயோகிக்கின்றனர். அதன் விளைவு தான் தமிழக கடற்கரை ஒர மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம், கைது நடவடிக்கைகளை செய் கின்றனர், அதனால் அப்பாவி மீனவர்களும் பாதிக்கின்றனர். போதைப் பொருள் கடத்துபவர்கள் எப்படி தீவிர வாத நடவடிக்கை எடுப்பார்கள் என்பதினை ஒரு சம்பவம் மூலம் உங்களுக்கு விளக்கின்றேன். நான் 1994ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக போதைப்பொருள் தடுப்பு குழு எஸ்பியாக பணியாற்றியபோது சென்னை மண்ணடியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலை சோதனை செய்தபோது முகமது ஆசாத், கலால், யோகராஜா, லாரஸ் ஆகியோரிடமிருந்து போதைப் பொருள் மட்டுமல்ல, தங்கள் பாதுகாப்பிற்கு ஒரு துப்பாக்கி, 3 குண்டுகள், ஒரு கத்தி வைத்திருந்தனர் என்று பார்க்கும்  அவர்கள் எதற்கும் அஞ்சா தீவிர வாத கும்பல் தானே!

3)                  அதேபோன்று காசுக்கா உயிரை பணயம் வைத்து போதைப்பொருட்கள் கடத்தும் கும்பலை 1994ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை திருவல்லிகேனியில் பிடித்தோம். அங்குள்ள ஒருவீட்டில் இரவு சோதனையிடும்போது  பெரிய கேப்சுல் வடிவத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பிகளில் ஹெராயின் பவுடர்களை நிரப்பிக் கொண்டிருந்த இலங்கையினைச் சார்ந்த ஜிப்ரி என்ற சிராஜூதின், ரவிச்சந்திரன், காசிம் ஆகியோர்களை பிடித்து விசாரித்தபோது அதனை 'குருவி' என்ற கடத்துபவர்களுக்குக் கொடுத்து விழுங்கச் சொல்லி தயார் நிலையில் வைத்திருக்கும் இலங்கை டிக்கெட்டில் ஏற்றி விடுவார்களாம். அப்படி விழுங்குபவர்கள் கொழும்பு சென்றபின்பு இனிமா கொடுத்து கழிவுமூலம் வெளியேற்றுவார்களாம். ஆனால் வழியில் தடங்கள் ஏற்பட்டால் குறைந்த வருமானத்திற்காக கடத்தல் செய்பவர்கள் உயிரே குப்பிகள் குடலுக்குள் வெடித்து இறந்து ஆபத்து ஏற்படுமாம்.

4)                  போதைப் பொருளுக்கும், தீய நண்பர்களாலும் எப்படி மிகவும் புத்திசாலியான மாணவர் ஐ.ஏ.எஸ் தேர்வினை கோட்டைவிட்டார் என்று விலக்குகின்றேன். 1994ம் ஆண்டு நவம்பர் மாதம் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு டெலிபோன் பூத் வைத்திருக்கும் இலங்கை வாசிமூலம் போதைப் பொருள் கடத்துவதாக வந்த தகவல் மூலம் சோதனை செய்தபோது அந்த கடை உரிமையாளர் இலங்கை வாசி மற்றும் எம்பிஏ பட்டதாரி பாலசந்தர் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் பட்டதாரி கனடாவில் வேலை பார்த்தபோது இலங்கைவாசிகள் மூலம் போதைக்கு அடிமையாகி அவர்கள் தொடர்பில் இருந்துள்ளார். அவருடைய தந்தை சென்னை ஹார்பாரில் ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி. அவரின் வேண்டுகோளை அடுத்து பாலச்சந்தர் சென்னை திரும்பி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்துவந்தார். அவருக்கென்று ஒரு தனி அறை பெசன்ட் நகர் வீட்டில் ஒதுக்கப் பட்டது. அந்த வீட்டில் சோதனையிடும்போது ஹெராயின், கஞ்சா சிகரெட்டு, பெத்தடின் போன்ற பொருட்கள் இருந்தது கண்டு அவர் தந்தையும் கஸ்டம்ஸ் அதிகாரியுமான அவருக்கே ஒரு அதிர்ச்சியாக இருந்தது. ஆகவே பிள்ளைகள் படித்து, அவர்கள் வாழ்க்கையில் நல்ல இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆடம்பர வசதி மட்டும் செய்து கொடுத்தால் போதாது மாறாக பிள்ளைகள் வழிதவறி நடக்கக் கூடாது என்ற கண்காணிப்பு மீன் கொத்தி பறவைபோல் இருக்க வேண்டுமல்லவா?

5)                  பல்வேறு நாடுகளில் மரண தண்டனையிலிருந்து வாழ்சிறை, கடுமையான சிறை தண்டனை இருந்தும் கடத்தல் அதிகமாவே உள்ளன. பல விளையாட்டு வீரர்களிருந்து ஒலிம்பிக் வீரர்கள் வரை ‘டோப் டெஸ்ட்’ என்ற போதை பரிசோதனையில் தோல்வி காண்பதும் அவர்கள் பதக்கம் பறிக்கப் படுவதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து ரசியா சென்ற கூடைப் பந்து வீராங்கனை ‘பிரிட்டினி குர்மிட்’ அங்குள்ள விமானத் தளத்தில் சிறியளவு போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப் பட்டு, எவ்வளவோ எதிர்ப்பு கிளம்பினாலும் அங்குள்ள கோர்ட்டால் 9 வருடம் கடுந்தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இவைகளையெல்லாம் காணும்போது நாம் நமது பிள்ளைகளை போதைக்கு அடிமை, கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் எவ்வளவோ லாபம் வந்தாலும் பாழும் கிணற்றில் விழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். போதைக்கு அடிமையானவர்களை தமிழ்நாட்டில் உள்ள 129 ‘டி அடிக்சன்’ அதாவது போதையிலிருந்து விடுபடும் சிகிச்சையளிக்கும் தன்னார்வ மையங்களில் சேர்த்து சிகிச்சை அளித்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றவேண்டும்.

No comments:

Post a Comment