Tuesday, 28 February 2023

மாட மாளிகைகள் மண் குவியலானதே!

 


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

 

6,2,2023 அதிகாலை 4.30 மணியளவில் அனைவரும் நீண்ட உறக்கத்தில் துயிலும் போது 7.8 ரிக்டர் அளவு நில நடுக்கம் துருக்கி-சிரியா நாடுகளில் ஏற்பட்டு மாட மாளிகைகளான குடியிருப்புகள் 2,64, 000 மண்ணோடு மண்ணாக இடிந்தது கண்டு உலகமே அதிர்ந்தது என்றால் மறுக்க முடியாது. அதில் கொல்லப் பட்டோர் 50,132, என்றும் இடம் பெயர்ந்தோர் 1.50 கோடியாக ஆய்வில் சொல்கின்றன. உலக வங்கி துருக்கி-சிரியா நில நடுக்கம் ஏற்படுத்திய சேதம் 4.84 லட்சம் கோடி என்று கணக்கிட்டுள்ளது. அவைகள் சீரமைக்கும் போது இன்னும் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்றும் சொல்லியுள்ளது.

            முதலில் நில நடுக்கம் என்றால் என்னவென்று காணலாம். நீங்கள் மரகூழால் செய்யப் பட்ட பிளைவுடை பார்த்திருப்பீர்கள். அதில் மரபலகைகள் ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கு வைக்கப் பட்டிருக்கும். அதேபோன்று தான் பூமிக்குக்கீழே பாறைகள் ஒன்றோடு ஒன்றாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். அந்த பாறைகளின் தட்டுகள் அசைவினைதான்(fault) என்று அழைப்பார்கள். அந்த பாறைகளின் அசைவுகள் ஒரு சில அங்குலத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலும் உணரக்கூடிய அதிசயமாகும். அந்த அசைவு  சாதாரண வகையினை(normal) என்றும், பின்னோக்கி அசைவினை( slip fault) என்றும், இடது-வலது அசைவு என்று நான்கு வகைகளாக பிரிக்கின்றனர் வல்லுநர்கள். பதினாறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நில நடுக்கம்(Quaternary faults) என்றும் கணக்கிடுகின்றனர்.

            நாகரீகம் தோன்றுவதற்கு முன்பு, இருண்ட காலத்தில் பூகம்பத்தினை கடவுளின் கோபம் என்றே கருதி வணங்கியதும் உண்டு. எப்போது தொழில் புரட்சி 19ம் நூற்றாண்டில் ஏற்பட்டதோ அப்போதிருந்து தான் அறிஞர்கள் பூகம்பத்தின் பின்னெனியினை ஆராய முற்பட்டனர். 1960ம் ஆண்டு தான் புவியியலின் 'டெக்னோனிக்ஸ் கோட்பாடு' உருவாக்கப்பட்ட பின்பு பூகம்பத்தின் உண்மையான காரணம் அறியப் பட்டது.

எரிமலைகள் செயல் பாட்டில் மாறுதல், நிலாசுரங்கங்கள், பெரிய அணை கட்டுதல் அல்லது வின் கற்கள் விழுதல் போன்றவைகளாலும் ஏற்படுகின்றன. இதனைத் தவிர ஏழு காரணங்கள் பூகம்பத்தின் மூல காரணியாக கருதப் படுகிறது. அவை பின் வருமாறு:

1)    உங்களுக்கெல்லாம் தெரியும் பூமி தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றுமென்று.அப்படி பூமி சுற்றும்போது அதன் சுற்றில் சிறு துளி பாதை மாற்றம் ஏற்பட்டாலும் கூட நில நடுக்கம் ஏற்படும்.

2)    கடந்த 149 ஆண்டுகளில் 728 பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவைகளுக்கெல்லாம் காரணங்கள் கனிவளத்திற்கு சுரங்கம் தோண்டுவது, அணு ஆயுத வெடிப்புகள் நடத்துவது, நிலத்திலிருந்து நீர் எடுப்பது போன்றாகும்.

3)     கட்டிடக் கலையின் தரமற்ற செயல்கள். அதற்கு உதாரணமாக துருக்கியில் தரமற்ற உயர்ந்த கட்டிடங்கள் கட்டிய குற்றச்சாட்டில் இது வரை 130 பேர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறதாம். நிலத்தைத் தோண்டி எண்ணெய் அல்லது எரிவாயு எடுத்தல், 

4)     பூமி பாறை அமைப்பில் குளிர் நிலை ஏற்படும் போது எரிமலை வெடித்து சிதறுதல்.

5)     நில நடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அடிக்கடி ஏற்படுதல்.

6)     பூலோக அமைப்பின் மாற்றத்தால் பூமி ரேகையில் மாற்றம்(faults) ஏற்படுகின்றன.

7)     பூமியின் அடிபக்கத்தில் உள்ள அமைப்பில் வருடத்திற்கு 47 மில்லி மீட்டர் அசைவிற்கு நெருக்கம்  ஏற்படும்போது நில நடுக்கம் ஏற்படுகின்றது.

 

200 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்க தாக்கத்தினை சிறிது  பார்க்கலாம்.

1) 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் 7.6 ரிக்டர் நில நடுக்கம் ஏற்பட்டு 73,000 பேர்கள் மடிந்தனர்.

2) 2013ம் ஆண்டு பலுச்சிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் 800 பேர்கள் உயிர் இழப்பு.

3) 2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9000 பேர்கள் மாண்டனர்.

4) 2011ம் ஆண்டு ஜப்பானிய புகிசுமா, நியூகினியா நாடுகளில் 9.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டு 18,000 பேர்கள் அழிந்தனர்.

5) 2006ல் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா நாடுகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 6000 பேர்கள் பலியானர்

         6) 2016ல் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 7.8 ரிக்டர் அளவில் 600 உயிர் சேதம்

சிலி நாட்டில் 1960ம் ஆண்டு ஏற்பட்ட 9.5 ரிக்டர் நில நடுக்கம் சக்தி வாய்ந்ததாகி சுனாமி அலைகள் ஏற்பட்டு 3000 மக்கள் மாண்டனர். அதன் தாக்கம் பல ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடு வரை உணரப் பட்டதாம்.

இந்தியாவில் 1993ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் ஏற்பட்ட 6.4. ரிக்டர் நில நடுக்கத்தில் 10,000 பேர்களுக்கு மேல் இறந்தனர். அதன் காரணம் மலைப் பகுதியில் பாறைகளைக் கொண்டு கட்டப் பட்ட வீடுகள் குடியிருந்தோர் மீது விழுந்ததினால் உயிர் சேதம் அதிகமானதாம்.

 

அற்புதமான மீட்புப் பணி:

ஐ.நா. மற்றும் சர்வதேச மீட்புப் பணியினர் துருக்கி மற்றும் சிரியாவில் கண் துஞ்சாது பசி நோக்காது பணியாற்றி இதுவரை 6443 பேர்களை உயிருடன் இடிபாடுகளிடையே மீட்டுள்ளது பாராட்டத் தக்கது. ஒரு மனிதன் உயிர் வாழ முக்கியமாக கருதப் படுவது காற்று, நீர், உணவு. கல்லுக்குள் உயிர் வாழும் தேரை, வறண்ட பூமியில் இருக்கும் மீன் முட்டைகள் மழை பொழிந்ததும் எல்லாம் வல்ல அல்லாஹ் உயிர்  கொடுத்து வாழ்வு  அளிக்கின்றான் என்று உங்களுக்குத் தெரியும். அதுவும் மனிதன் 24 மணி நேரம் வாழலாம். ஆனால் என்ன அதிசயங்கள் பாருங்கள் மீட்புப்பணியினர் 12   நாட்களுக்குப் பின்பு ஒரு மனிதர் மற்றுமொரு  சிறுவனை மீட்டுள்ளனர். அந்த மனிதரிடம் நீங்கள் எப்படி அதிசயமாக உயிர் வாழ முடிந்தது என்ற வினாவிற்கு தான் இறந்து விடுவேன் என்று இறைவனிடம் வேண்டியதாகவும் அப்போது வெள்ளை உடையில் காட்சி தந்த ஒரு பெரியவர் தன் முன் தோன்றி எதுவும் பேசாமல் உணவு, தண்ணீர் கொடுத்ததாகவும் கூறியிருக்கிறாராம். நீங்கள் தொலைக் காட்சியில் பார்த்திருப்பீர்கள் ஒரு சிறுவன் மீது பெரிய தூண் விழுந்து அமுக்கி இருப்பதினையும், மீட்புப் பணியினர் கை கூட நுழையாத இடத்தில் சிக்கி இருப்பதினையும், ஆகவே அந்த பையன் தாகம் தீர்க்க தண்ணீர் பாட்டிலில் உள்ள மூடியில் நீர் நிரப்பி அந்த பையன் வாயில் ஊற்றி உயிர் பிழைக்க வைத்து மீட்டதையும், ஒரு சிறுமி மற்றும் அவளுடைய தம்பி ஆகியோரை இடிபாடுகள் இடையில் சிக்கி இருக்கும் போது அந்த சிறுவனை, சிறுமி மேலே படுத்து மீட்கும் வரை காப்பாற்றியதும்,   அதிசயம் அல்லவா?

            எரிகிற கொள்ளியில் பிடுங்கியது லாபம்:

ஐம்பது ஆயிரத்திற்கு மேல் உயிர் பலி வாங்கிய நில நடுக்கத்தில் இடிபாடுகளில் உள்ள கட்டிடங்களில் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை யடித்த கும்பலைச் சார்ந்த 96 பேர்கள் கைது செய்துள்ளனர் துருக்கியில். சாதாரண யுத்த காலங்களில் தான் கொள்ளைமற்றும் அரசுக்கெதிரான கலவரங்கள் போன்ற  சம்பவங்களில்  கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நிகழுந்துள்ளன. இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்ற படைகள் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்த்தின என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் உலகம் போற்றும் உத்தம நபி அவர்கள் காலத்தில் படைத்தளபதிகளுக்கும், வீரர்களுக்கும் கண்டிப்பான உத்தரவினை கொடுத்தார்கள். அது என்ன தெரியுமா? படை வீரர்கள் வெற்றி மமதையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடக்கூடாது, வீடுகளை, மரங்கள் பயிர்களை  எரிக்கக் கூடாது, நீர்நிலைகளை நாசம் செய்யக் கூடாது, பிராணிகளை, வயதானவர், பெண்டிர் சிறார்களை  வதை செய்யக்கூடாது என்பதாகவும், புற முதுகிட்டு ஓடுவனையும், சரணடைவனையும் கொல்லக்  கூடாது, நாகரீகமாக நடத்த வேண்டுமென்றே கூறியிருப்பது இன்றைய காலக் கட்டத்தில் உக்ரைன் நாட்டில் ரஸ்யா போரினால் நடக்கும் அழிவினைக்கு ஒரு படிப்பினையாகாதா ரஸூலல்லாஹ்வின் பொன் எழுத்துக்கள்?

            துருக்கியில் சேதத்தினை பார்க்க வந்து அந்த நாட்டு அதிபர் சேதத்தினைப் பார்த்து கண்ணீர் சிந்தினாராம். அதற்கு சிலர் நெதர்லாந்து புவியியல் நிபுணர் ‘ஹுஹாபீட்’ மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று. நீங்கள் கேட்கலாம் இவ்வளவு பெரிய இழப்பில் அவர் என்னதான் செய்ய முடியுமென்று. 2019-2021 வரை உலகம் முழுவதும் கொரானா என்ற நோயால் 7.5 கோடி மக்கள் பாதிக்கப்  பட்டும், 68.58 லட்சம் மக்கள் இறந்தனர் என்று. அதற்கு மூல காரணமே சீன நாட்டில் ஒரு ஆராய்ச்சி நிறுவன மையத்திலிருந்து கசிந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது என்று. ஆனால் சீனாவில் பெரும் பாதிப்பு ஏற்பட வில்லை. அதற்கொரு காரணம் என்னவென்றால் அங்கே மக்களை வீட்டுக்குள் அடைத்தும், வீதிகள், பொது இடங்கள் ஆகியவற்றில் நோய் தடுப்பு தெளிப்பான்களை தெளித்தும், பரிசோதனைகளை தீவிரப் படுத்தியும், மக்கள் நடமாட்டத்தினை கட்டுப் படுத்தியும் ராணுவ நடவடிக்கையினை எடுத்ததால் பெரும் சேதம் ஏற்பட வில்லையாம். அதேபோன்று துருக்கியில் மாட மாளிகைகளில் வசிக்கும் மக்களை திறந்த வெளி கொண்ட மைதானத்தில் தங்க வைத்தும், எச்சரிக்கை ஒலி மக்களுக்குக் அறிவித்தும் பெரிய இழப்பினை தடுத்திருக்கலாமாம்.

            அதன் பின்பு துருக்கிய அதிபர் ஒரு வருடத்திற்குள் அனைவரையும் குடியமைத்த வீடுகள் கட்டித்தரப் படுமென்று. அதற்கு சர்வதேச விஞ்ஞானிகள் ஹுஹாபீட் உட்பட  அவசரப்பட்டு எந்த மாடி வீடுகளையும் கட்ட வேண்டாம் ஏனென்றால் வரும் காலங்களில் வாடா அமெரிக்கா கலிபோர்னியாவிலிருந்து ஆரம்பித்து, அர்ஜென்டினா, ஜப்பான், சீனா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இமயமலை பகுதிகள், இலங்கை, முடிவில் இந்திய பெருங்கடல் பகுதியில் தனது கோர தாண்டவத்தினை நிறுத்துமாம். அவர்கள் சொன்னது போல துருக்கியில், 20.2.2023, 22.2.2023 மற்றும் 27.2.2023 ஆகிய தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கின்ற வீடுகளுக்கும் சேதம் விளைவித்துள்ளதாம். அதேபோன்று பாகிஸ்தான், கஜிஸ்தான் நாடுகளிலும் 22.2.2023 அன்று நில நடுக்கம் ஏற்பட்டிருக்காம்.

            புனித குர்ஆனில் சூரா 99அஸ்-ஸல்ஸாளாவில் பூகம்பத்தினைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறுகிறது. பூமி நடுங்கும் போது மனிதன் ஆடிப் போகிறான். பல்வேறு தீய செயல்களில் ஈடுபட்டிருக்கும் மனித வர்க்கம் பூமி ஆடும்போது தான் தான் செய்த தவறுக்காக கண்ணீர் சிந்துகிறான். அதனையே தான் துருக்கி அதிபரும்  நெதர்லாந்து விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்தும் மக்களை எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுக்கவில்லையே என்றுகண்ணீர் சிந்தியிருக்கிறார். புனித குர்ஆனில்’ நூகு’ அலைஹி ஸலாம் எச்சரிக்கை செய்தும் அங்குள்ள மக்கள் ஓரிறை கொள்கைக்கு எதிராக இருந்ததினால் நீரினால் இறைவன் அழிவை கொடுத்ததும். அதே போன்று தான் ‘ஆது’ சமூகத்தினரை சூறாவளி காற்றால்  காவு கொண்டதையும், ஓரின சேர்க்கையில் சுகம் கண்ட ‘லூத்’ சமூகத்தினரை கல் மழை பொழிந்து அழித்ததையும் தவறிழைக்கும் மக்களுக்கு ஒரு பாடமாகவே அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

            ஆகவே இயற்கை பேரழிவான சுனாமி, நில நடுக்கம், நிலச்சரிவு, பனிக்கட்டி மழை, எரிமலை, பெரு வெள்ளம் ஆகியவை செல்வத்தால் பெருமை கொள்பவர்களுக்கு, பூமி அதிரும்படி நடப்பவர்களுக்கு, சர்வாதிகாரிகளுக்கு, நிராதிபதியாக இருக்கும் மக்களை கொல்பவர்களுக்கு, ஆயுத பலத்தினை நம்பி வாழ்பர்களுக்கு, பெற்றோரை கவனிக்காதவர்களுக்கு, மனைவி, மக்களை வெறுப்பவர்களுக்கு, உற்றார், உறவினர், உடன் பிறந்தோர் உறவை அறுத்து விடுபவர்களுகளும்  திருந்துவதற்கு ஒரு பாடமாக அமையாதா?

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment