Sunday 2 July, 2023

வாழ்வோமா வாருங்கள் நாம் வளமாக நலமாக!

 


 (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

சுகம் என்பது பல கோடி சொத்துக்கள் இருந்தால் மட்டும் வருவதில்லை. அபரிமிதமான பணம் இருந்தால் அதனை எப்படி கட்டிக் காப்பது என்ற எண்ணத்திலே நிம்மதியினை சிலர் தொலைத்து விடுவர். புகழ் இருந்தால் வீண் பழி, பொறாமையும் சிலரை ஆட்டிப் படைக்க ஆரம்பிக்கும். எப்படி இறப்பும், பிறப்பும், இரணமும் யாரும் நிர்ணயிக்கமுடியாதோ அதேபோன்று தான் சந்தோஷம் எப்படி வரும் என்று சொல்லமுடியாது. அதனை பிறராலும் நிரந்தரமாக கொடுக்க முடியாது. வாழ்க்கையில் சிறந்ததினை தேர்ந்தெடுப்பது சந்தோசத்தினைத் தரும். அவனவன் எண்ணத்திலும், நடத்தையிலும் தான் நல்ல சுகத்தினை அடைய முடியும். சந்தோசத்தினை தேர்ந்தெடுப்பவர் தன்னுடைய குறிக்கோளை அடைந்து விடுவர். உறுதியான கொள்கை நம்பிக்கையூட்டி வெற்றியினைத் தேடித் தரும்.

இஸ்லாம் வாழ்வின்  உள்ளுணர்வில் சொத்து, குழந்தைகள், நன்றிக் கடனோடு இருப்பது சுகம் தரும் என்று கூறுகிறது. புற வாழ்க்கையில் சொத்து, நோயற்ற . வாழ்வு, நல்ல நண்பர்கள், நல்ல வாழ்க்கை துணை அவசியம் என்று கூறுகிறது. ஒரு மனிதனைப் பார்த்து சிரிப்பதும் ஒரு நற்செயல்(பரக்கத்) எனறு கூறுகிறது. உடல் நலத்துடன் வாழ்வது, அளவோடு உணவோ, தண்ணீரோ எடுத்துக் கொள்வது, உடல் சுத்தம், தியானம், சட்டத்திற்குட்பட்ட பொழுதுபோக்கு, இயற்கையினை ரசிப்பது, உதாரணத்திற்கு, மரம், செடி, பூ, மலை, கடல், ஆறு, நீர் வீழ்ச்சி, பறவைகள் ஓசை போன்றவை  மனிதனை உட்சாகப் படுத்தும். மற்றவர்கள் வெறுப்பது பொய் சொல்வது, புறம் பேசுவது, கூடா நட்பு கொள்வது, கெட்ட எண்ணங்கள், பார்வையினை, மனதினை சஞ்சலத்திற்குட்பட வைப்பது ஆகும்..

மன உளைச்சல் வருவதற்கு முக்கிய காரணங்கள்:

1) கொள்கையில்லா மானக்கேடான செயல்.

2) செய்த தவறை திருந்தாமல் திரும்பத்திரும்ப செய்வது.

3) தேவையில்லா பேச்சு, வீணான, அர்த்தமற்ற வாக்குவாதம்,

4) தீய நண்பர்கள் சகவாசம்.

5) சொன்னதினை காப்பாற்ற முடியாதது, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது.

6) அதிர்ஷ்டம் கதவினை தட்டும்போது பயன் படுத்திக் கொள்ள தவறியது.

6) பொருள் தான் ஒரே சுகம் என்று அதனையே எண்ணி வாழாதிருப்பது.

ஒருவர் புற்றுநோய் போன்றவற்றால் அவதிப் படுகிறார். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் இறைவனடி சேர்ந்து விடுவார் என்று கணித்து அதனை நோயாளியும் அறிந்து விட்டார் என்றால் அவருடைய மரணம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே வந்து விடும் என்று இங்கிலாந்து நாட்டின் எடின்பரோ மருத்துவமனை தலைமை மருத்துவர் (Scott murray) ஸ்காட் முரே கூறுகிறார்.

வாழும்போது நன்றியுடன் வாழுங்கள்: இஸ்லாத்தில் நம்மை உலகில் மனிதனாக படைத்து பல்வேறு சொத்து சுகங்களையெல்லாம் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்த தொழுகையினை கடைப் பிடித்து வாருங்கள் என்று அறிவுறுத்துகிறது. அதனையே ‘டச்’ நாட்டின் ஆய்வு ஒன்று, 'இளம்வயதைத் தாண்டி, நடு மற்றும் முதுமையினை தாண்டும் போது உடல் சம்பந்தமான பல தொல்லைகளும், பல அன்பிற்கினியவர்களை இழந்து தனிமையில் இருப்பவர்கள் அவர்கள் தங்கள் வாழ்நாளில் நன்றியுடன் அன்பு செலுத்தியிருந்தால் தங்களை தனி மரமாக நினைக்க மாட்டார்கள். அமெரிக்கா ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் அன்பான மனைவி அல்லது கணவன் கிடைத்து விட்டால் பல்லாண்டு வாழலாமாம், நெதர்லாந்து ஹார்லேன்(Netharland Hearlen open university) திறந்த வெளி பல்கலைக் கழக பேராசிரியர் ஜெனிபர் கூறும்போது ஒருவர் நன்றியுடன் இருக்க வேண்டுமென்றால் நட்பு வட்டாரத்தினை அதிகப் படுத்தி, சமூக வலைக்குட்பட்டவராக இருக்க வேண்டுமென்கிறார். பிரிட்டிஷ் ஆய்வு ஒன்றில் 2021ம் ஆண்டு கொரானா காலத்தில் உற்றார், உறவினர், உடன் பிறந்தோரை காண இயலாதவர்கள் ஆன்லைன் பேச்சு தொடர்பினை ஏற்படுத்தி உறவினை மேம்படுத்திக் கொண்டார்கள் என்று கூறுகிறது.

 

உங்கள் உடலுக்குத் தேவைப் படுகின்ற மருத்துவ குறிப்பு:

2009ம் ஆண்டு ஜெர்மனிய அரசு ஒரு சட்டம் கொண்டுவந்தது.அதனில் குடிமக்கள் வருங்காலங்களில் உங்களுக்கு தேவைப் படுகின்ற மருத்துவ வசதி, ஒவ்வாமை, மருத்துவர்  பற்றிய குறிப்பு எழுதி வைத்திருக்க வேண்டும் என்று அறிவுத்தப் பட்டுள்ளது. ஜெர்மனிய பெர்லின் பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் ஜான் கிராவ் 2019ம் ஆண்டில் கூறும்போது உங்களுக்கு இருக்கும் நேரம், அதற்கு தேவைப் படுகின்ற மருத்துவர், போன்றவற்றினை, சொத்து பாகப் பிரிவினை, பவர் ஆப் அட்டர்னி போன்றவற்றை குறிப்பு எழுதி வையுங்கள் ஏனென்றால் 'தூங்குகின்றபோது எழுப்புகின்ற மூச்சு டக் என்று போனாலும் போச்சு' என்ற பழமொழிக்கிணங்க திடீரென்று ஏற்படுகின்ற அசவ்கரியங்களால் உங்கள் உற்றார், உறவினர் ஆகியோர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்.

மறப்பது, மன்னிப்பதின் பலன்:

பெல்ஜியம் நாட்டின் (Kulevan) குளேவின் பல்கலைக் கழக பேராசிரியை Jenny Dezutter ஜே டுசெட்டெர் உற்றார், உறவினர், உடன் பிறந்தோர் செய்த சில தவறுகளை மன்னிக்காவிட்டால் காலம் முழுவதும் அழுக்கு மூட்டைகளை முதுகில் பாரமாக சுமந்தவர் ஆவீர். அதனால் காலம் முழுவதும் அவதிப் படுவீர். ஆகவே மற்றவர்கள் செய்த தவறை உடனேயே மன்னித்து விடுங்கள், அதற்காக சரியான நேரத்தினை எதிர்பார்க்காதீர்கள் என்று அறிவுறுத்துகிறார்.

மருத்துவம் பாதி, தைரியம் மீதி:

பல ஆண்டுகளாக அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக் கழக மருத்துவமனையில் நோய் தடுப்பு சிகிச்சையளிக்கும் மருத்துவர்(Byock) பயோக் பல நோயாளிகளின் சிகிச்சைகளை கண்காணித்து வருகின்றார். அவர் ஒரு உதாரணத்தினை சுட்டிக் காட்டுகிறார். 'ஒருவர் கார் விபத்தில் சிக்கி இறந்து விடும் நிலையில் இருந்தால், அவர் ஒரு வேலை சுய உணர்வு இருந்தால் என்ன சொல்ல வேண்டும். தனது மனைவி, பெற்றோர், குழந்தைகள், ஆகியோரிடம் ‘முதலில் என்னை மன்னித்து விடுங்கள், தான் தவறிழைத்திருந்தால் என்னை சபிக்காமல் மறந்து விடுங்கள்,  நானும் உங்களை மன்னித்து விடுகிறேன், உங்களை உண்மையிலேயே நேசிக்கியின்றேன், அன்பு செலுத்துகிறேன்' என்று சொல்லுங்கள். அது போன்ற கார் விபத்து உங்களுக்கு நடக்க வேண்டும் அப்போது தான் அதுபோன்ற வார்த்தைகளை சொல்ல வேண்டும் என்று காலம் தாழ்த்தாதீர்கள். நலமுடன் இருக்கும்போதே நல்ல நாலு வார்த்தைகளை கூறுங்கள் என்று சொல்கிறார் டாக்டர் பாயோக். மேலும் அது போன்ற நல்ல வார்த்தைகளை சொல்லும்போது உங்கள் மன இருக்கத்தினை லேசாக்கி, அன்பின் பாச பிடிப்பினை இறுக்கி நோயிலிருந்து நலம் பெற உதவுமாம்.

சந்தோசமாக இருப்பவர்கள் எதிர்மறை நடவடிக்கையில் இறங்க மாட்டார்கள். சந்தோசமாக இருப்பவர்கள் நேரத்தோடு வேலைக்கு வருவதுடன், சாக்குபோக்கு சொல்லி வேலைக்கு வராமல் இருக்க மாட்டார்கள். அப்படிப் பட்டவர்களால் உற்பத்தி அதிகரிக்கும்.

சந்தோசமான வாழ்வில் பல நன்மைகள் அடையலாம்

1) நல்ல துணைவியர் கிடைத்துவிட்டால் பல காலம் வாழலாம்.

2) நெஞ்சம் படபடப்பு, தலைவலி, போன்றவை குறையும்.

3) இருதய நோய் வருவது தடுக்கப் படும்.

4) நோய் எதிர்ப்பு சக்தியினைக் கொடுக்கும்

5) தானும் சந்தோஷமாகி மற்றவர்களுக்கும் மகிழ்வினைத் தரும்.

6) உடல் சக்தியினை அதிகப்படுத்தும்

7) மாத சம்பளம் பெறுபவர்களை விட மணியினைக் கணக்கிட்டு சம்பளம் பெறுபவர்கள் சந்தோசமாக வாழ்வார்கள்.

8) ஒருவர் ஏற்படுத்தும் நட்பு, அவர் அணியும் வெள்ளை மற்றும் சுத்தமான உடையிலும் கூட சந்தோசத்தியனைக் காணலாம்.

9) குடும்பத்தினை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைப்பதினை விட இடைவெளி விட்டு வெளியே அழைத்து செல்வது சந்தோசத்தினைக் கொடுக்குமாம். அதுவும் நீர், நிலை அருகில் அழைத்துச் சென்றால் சந்தோசமாக இருக்குமாம். ஆகவே தான் கோடை வாசஸ்தலம், குற்றாலம் போன்ற நீர் வீழ்ச்சிகளுக்கு நமது பெரியவர்கள் குடும்பத்தினை அழைத்துச் செல்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் சந்தோசமாக இருந்தால் ஒருவருடைய சந்தோஷமும் பெருகுமாம்.

மகிழ்வுடன் வாழ்வதற்கு முக்கிய நடைமுறைகள்:

1) தீய செயல்கள் விட்டொழித்தால்.

2) சிரித்த முகத்துடன் காட்சியளித்தல், அதற்காக பொய்யான சிரிக்கக் கூடாது. பெண்கள் சிரித்தாலோ அல்லது அந்நிய ஆண்கள் பெண்களை நோக்கி சிரித்தாலோ தவறாக கருத்திக்கொள்வர். அதனை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

3) இடைவிடா உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சி உங்களது உடல் அழகு படுத்துவது மட்டுமல்லாமல், உங்களிடம் இருக்கும் படபடப்பு, உயர் ரத்த அழுத்தம், கோபம் போன்றவை நீங்கி, முகத்தினையும் அழகுப் படுத்தும்.

4) நேரத்தோடு குறைந்த அளவு 7 மணி நேரம் இரவு தூக்கம் இதய நோயை நீக்குகிறது, உடல் சோர்வு, சக்கரை நோயை தடுக்கிறது.

5) உடலுக்கு, வயதிற்கேற்ற உணவினை சாப்பிடுவது

6) நன்றியுடன் பயணிப்பது, மற்றவர்கள் நற்செயல்களை பாராட்ட மறக்காதது.

7) உங்கள் தவறுகளை ஒத்துக் கொள்வது

8) புத்தகங்கள், பத்திரிக்கைகள்  படிப்பது, உலக செய்திகளை அறிந்து கொள்வது

9) பெற்றவர்கள் சொத்து, சுகம், செல்வதுடன் ஒப்பிட்டு பார்க்காதது

10) ஒழுகீனமில்லாத வாழ்க்கை

11) உங்கள் வருங்கால ஒரு வார திட்டத்தினை குறிப்பெடுப்பது  

12) உங்கள் கையில் பல மணி நேரம் போன் இல்லை என்று நினைத்து உங்கள் மனதினை ஓர் நிலைப் படுத்தி மூளைக்கும் அமைதிகொடுத்து, சிந்தனைகளை அலைய விடாது இருப்பது உதவும், அதே போன்று தான் இரவு நேரங்களில் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு காணொளிகளை காணாமல் தவிர்ப்பது

13) சிறிது நேரம் உங்களை மனிதனாக படைத்த இறைவனை நினைத்து அமைதியாக வணங்குவது.

14) நல்ல சமூக அமைப்பினில் தொடர்புடன் இருப்பது

15) படுக்கும் அறை மகிழ்ச்சியை தரும் விதம் சுத்தமாக, காற்றோட்டத்துடன் அமைத்துக் கொள்வது. படுக்கை அறையில் பழைய பகைமை, குறை, சண்டை, சச்சரவினை தவிர்த்து சந்தோசத்துடன், நிம்மதியாக  தூங்குவதிற்குத் தான் என்று உறுதி கொள்ள வேண்டும்.

வாழும்போது நலமாக, சந்தோசமாக, அன்புடன், பரிவுடன்,பாசத்துடன், பகை மறந்து, குடும்ப, சமூக வாழ உறவுடன் வாழவேண்டும் ,இல்லையென்றால் அந்த வாழ்வு நரகமாகவே அமையும்.

 

 

No comments:

Post a Comment