Monday, 26 August 2024

குடி கொடுக்கும் நாடாகலாமா?

 

              

          (டாக்டர் .பீ.முகமது அலி,.பீ.எஸ் ()

2024ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு சம்பவங்கள் என்னை இந்த கட்டுரை எழுதத் தூண்டியது. ஒன்று சென்னையில் நான்காம் வருட முஸ்லிம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தனது 4 சக கல்லூரி  மாணவிகளுடன்    குடித்து, ஆட்டம் போடும் Pub கூடத்திற்கு இரவு சென்றுள்ளார். இரவு முழுவதுடன் ஆட்டம் போட்டதில் மயங்கி விழுந்து மரணத்தினை தழுவியுள்ளார். அடுத்தது கேரளாவில் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் ஐந்து முஸ்லிம் மாணவர்கள் விடுமுறையினை மகிழ்ச்சியாக கழிக்க காரில் கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். வண்டி ஊட்டிய மாணவரும், மற்றவர்களும் மது அருந்தியுள்ளனர். அவர்கள் சென்ற கார் மலையில் விபத்துக்குள்ளாகி இறந்தது உண்மையிலே எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டது. காரணம் தங்களது பிள்ளைகள் படித்து என்ஜினீர்களாகி தங்களையும் தங்கள் குடும்பத்தினவரையும் காப்பாற்றுவார்கள் என்று இருந்த பெற்றோர் நிலைமை என்னாகியிருக்கும் என்று நீங்களே சற்று எண்ணிப் பாருங்கள்.

            மகாத்மா காந்தி அவர்கள், மதுவிலக்கு பற்றி கூறும்போது,'ஆயிரம் கள்ளுக்கடைகளை மூடி ஒரு பள்ளிக்கூடத்தினை திறக்கும் படி' சொன்னார். கர்ம வீரர் காமராஜர் பள்ளிக்குழந்தைகள் ஒட்டிய வயிறோடு கல்வி கட்க வருவதினைக் கண்டு மதிய உணவினை கொடுக்கும் படி செய்தார். பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த இரண்டு வருட காலத்தில் மதுக் கூட்டத்தினை திறந்து விடவில்லை. ஆனால் அதற்கு பின்பு வந்த அரசுகள் மது விற்பதே அரசு முக்கிய வருமானமாகக் கருதியது கேவலமாக இல்லையா?

            இந்தியாவில் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. இவைகளில் குடியில்லா மாநிலங்களாக பிஹார், குஜராத், மிசோராம், நாகாலாந்து மற்றும் லக்ச்சத்தீவு ஆகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மது விலக்குப் பற்றி,'Directive Principle of State Policy' என்ற கொள்கையில் கூறும்போது மாநிலங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் மது, போதை மருந்துகள் போன்றவற்றினை கட்டுப் படுத்த உரிமை வழங்கப் பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் 100 மில்லி ரத்தத்தில் 0.03 மில்லி மது இருந்தால் குற்றமாகும்.

            இந்திய அரசிலமைப்பு சட்டத்தில் உள்ள மாநில அரசுகளின் அதிகாரத்தில் மஹாராஷ்டிரா அரசு 'The Bombay Prohibition Act 1949' சட்டம் இயற்றி '25 வயதிற்கு மேற்பட்டவர் அனுமதி சீட்டுடன் மது வாங்கலாம், 21 வயதிற்கு மேற்பட்டவர் குடிக்கலாம் என்று அமல் படுத்தப் பட்டது. அதனையே மற்ற மாநிலங்கள் கடைப் பிடிக்க ஆரம்பித்தன.

            NCRB National crime record bureau(தேசிய குற்ற பதிவேடு சேகரிக்கும் அலுவலகம்) இந்திய நாட்டில் மது அருந்துவதால் என்னென்ன குற்றங்கள் நடைபெறுகின்றன என்று பட்டியலிட்டுள்ளது. 37 சதவீத பாலியல் தொடர்பான குற்றங்கள் நடைபெறுகின்றனவாம். பாலியல் குற்றங்கள் தொடர்ந்து கல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொலை போன்று நடக்கின்றனவாம். 15 வழிபறிகள், 63 சதவீதம் சக நண்பர்கள், தோழிகளுடன் சேர்ந்து குற்ற செயல்கள் நடக்கின்றனவாம். ஆய்வின் படி 16வயதிலிருந்து 30 வயது வரை இளைஞர்கள் மது அருந்துவது அதிகமாம். பிறக்கும்போது எல்லா குழந்தைகளும் நல்லவர்கள் தானாம் ஆனால் கூடா நட்பில் கேடுகளில் இளைஞர்கள் ஈடுபடுகிறார்களாம். ஆகவே தான் எங்க ஊர் பெரியவர் ஒருவர் தனது புகைபிடிக்கும் சிறுவனான மகனைப்  பிடித்து 'கண்மாய்கரைக்குப் போகாதே, காஜா பீடி வாங்காதே' என்று அடிப்பதை பார்த்திருக்கிறேன். அதன் பொருள் கண்மாய்கரையில் உள்ள பெட்டிக் கடையில் விற்கும் காஜா பீடியினை நண்பர்களோடு புகைப்பதினைப் கண்ட பின்புதான் அவரை அந்த வயதான தந்தை அடித்தார்.

            சிலர் நினைக்கின்றார்கள் அளவோடு குடிப்பது தவறில்லையென்று. சம்பிதாரயத்திற்காக நாள் தோறும் சிறு ஒயின் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது என்று நினைக்கின்றனர். 2018ம் ஆண்டு 'Lancet' என்ற ஆராய்ச்சி நிறுவனம் 198 நாடுகளில் நாள் தோறும் அளவோடு குடிப்பவர்களின் உடல் நிலை பற்றிய கருத்து கூறும்போது வலிப்பு மற்றும் இதய நோய் வருவது அதிகம் என்று கூறுகிறது. கனடாவினை தலைமையிடமாக கொண்ட 'Institute of substance use research' டைரக்டர் Tim Naimi' கூறும்போது ஒரு நாளைக்கு அளவோடு குடிப்பவர்களுக்கு கல்லீரல், நுரையீரல், மார்பு, தொண்டை,ஆசன வாய் போன்ற இடங்களில் நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகிறார்.

            சிலர் வெறும் குடலில் குடிப்பர். அந்த ஆல்கஹால் குடல் தசை பகுதியில் 30 நிமிடங்களுக்குள் சென்று ரத்தத்தில் கலந்து விடுமாம். ஆனால் சாப்பிட்டபின்பு மது குடிப்பது ரத்தத்தில் கலப்பதற்கு 90 நிமிடங்கள் ஆகுமாம். வெறும் குடலில் மது குடிப்பது அல்சர் நோய்க்கு வழி வகுக்குமாம். ஆறு, அணைகளிருந்து  வரும் நீரை சுத்தப் படுத்தி மக்களுக்கு பைப்புகளில் வழங்க எப்படி டிரீட்மெண்ட் கூடம் உள்ளதோ அதேபோன்று நரம்புகள்  கொண்டு வரும் ரத்தத்தினை சுத்தம் செய்ய ஆரோக்கியமான கல்லீரல் அவசியம். ஆனால் அந்த கல்லீரல் குடியால் சீக்கிரமே கெட்டு அழுகி போய் பின்பு மாற்று ஏற்பாட்டுக்கு நோயாளிகள் அலைவதினை கண்கூடாக அறிவோம். மது குடிப்பதினால் மூலையின் செயல் பாடு சுருங்கி விடும் என்று 2022ம் ஆண்டு வெளியான Nature என்ற ஜர்னலில் வந்துள்ளதுஅது மட்டுமா? குடிப்பதினால் நீங்கள் சந்தோசமாக இருக்கும் மன நிலையினை சோக நிலையாக மாற்றுகிறது, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தீர்வு எடுக்கும் நிலை வந்தால் எடுக்க முடியாமல் தடுமாறும் நிலைக்கு தள்ள நேரிடும். அது மட்டுமல்லாமல் பிரசித்த பெற்ற சிந்தனையாளர், ஷேக்ஸ்பியர்,'குடிப்பது ஆர்வத்தினை உண்டாக்கும் ஆனால் செயல் திறன் இல்லாமல் போய் விடும்' என்று கூறினார். அவர் சொல்வது எவ்வாறு உண்மை என்று பல உண்மை நிகழ்வுகளை படிக்கும்போதும், பார்க்கும்போதும் தெரிகிறது. மொடா குடிகாரன் கணவன் .தாம்பத்திய உறவிற்கு உதவாமல் மல்லாக்க விழுந்து குறட்டை விடும் செயலையும், குடிகார பெண்கள் மலடாவதினையும் ஆய்வுகள் கூறுகின்றன.

            இந்தியாவில் ஒரு நாளைக்கு 15 மதுகுடிப்பதால் இறக்கின்றார்களாம். மது குடிக்கும் பழக்கம் 2003-2005ல் சராசரி ஒரு மனிதன் குடிப்பது 1.6 லிட்டராக இருந்தது 2010-2012ல் 2.2. லிட்டராக அதிகரித்து விட்டது என்று உலக சுகாதார கழகம் சொல்கிறது. அத்துடன் இந்தியர்கள் மது குடிப்பது 11 சதவீதம் அதிகரித்து விட்டதாம். கேரளா மற்றும் தமிழககத்தில்  தேர்தலுக்கு முன்பு நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பில் 47 சதவீத கேரளா ஆண்களும், 52 சதவீத தமிழக ஆண்களும் மதுக்கு எதிராக குரல் கொடுத்தார்களாம். ஆனால் இரண்டு மாநிலத்திலுமே அனைத்து பெண்களும் மதுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக அறிக்கை கூறுகிறது.

            மத சடங்குகளிலும், திருமண மற்றும் இறப்பு நிகழும்போதும், வெற்றி விழா கொண்டாடும் போதும், நண்பர்கள் பொழுதினை கழிக்கும்போதும் மது அருந்துவது ஒரு சம்பிரதாயமாக உள்ளது. 2024 ஜூன் மாதம் 18ந் தேதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு இறப்பு சம்பவத்தில் பங்கு கொண்டவர்கள் மது அருந்தியதால் 67 இறப்புகள் ஏற்பட்டன. 2020 ம் ஆண்டு ஆய்வுப் படி 58 சதவீத ஆண்களும்,13 சதவீத பெண்களும் மொடாக் குடிகாரர்களாக இருக்கிறார்களாம்

            மதங்களில் மது அருந்துவது பற்றி பல கருத்துக்கள் கூறுகின்றன. ஹிந்து மதத்தில் லார்ட் சிவா வானத்திலிருந்து சோம பானம் இறங்கியதை அருந்தியதாக சொல்லப் படுகிறது. ஹிந்து மத சட்டம்(11:94(3) படி மத குருமார்களோ, அல்லது மன்னரோ, அல்லது குடிமகனோ மது அருந்துவதினை தடை செய்யப் பட்டுள்ளது. ஆனால் சாதுக்கள் பாங்க், கஞ்சா,சராஸ்,ஹாஸிஸ் போன்ற போதைப் பொருட்களை உபயோகிக்கின்றனர். ஜெயின், புத்த மற்றும் சீக்கிய மதத்தில் மது அருந்துவதினை தடை செய்துள்ளது. கிறித்துவ மத சடங்குகளில் ஒயின் குடிப்பது சம்பிரதமாக இருக்கிறது. ஆனாலும் அதிகமாக குடிப்பது உடலுக்கும், உள்ளத்திற்கும்  கெடுதி என்று எச்சரிக்கை விடுகிறது.இஸ்லாமிய மார்க்கத்திலும் மது அருந்துவது, விற்பது முற்றிலுமாக தடை செய்யப் பட்டுள்ளது.

            கள்ளச்சாராயம் திருட்டுத்தனமாக தயாரிப்பதால் பல்வேறு இன்னல்கள் சமூதாயத்தில் ஏற்படுகிறது.கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு கழிவு சக்கரை, வேலம் பட்டை, படிகாரம், வயலுக்கு உரமாக உள்ள யூரியா போன்றவைகளை உபயோகித்து பானையில் ஊறல் மூன்று நாட்களுக்கு வைத்து ஊறியதுடன் காய்ச்சி அதில் வரும் ஆவியினை குளிரவைத்து குடிக்கின்றனர். இதில் மெத்தனால் என்ற பெயிண்ட் அடிப்பதிற்கு உபயோகப் படுத்தும் திரவத்தினை மிகவும் விலை குறைவாக இருப்பதால் சாராயத்தில் கலப்பதினால் தீங்குகள் ஏற்படுகிறது. உயிர் பழிகள், கண் பார்வை இழத்தல் போன்ற தீங்குகள் ஏற்படுகின்றன.

            பெரும்பாலும் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் சமூதாயத்தில் சக்தி  வாய்ந்தவர்களாக இருப்பர். அவர்கள் செய்யும் தொழிலுக்கு கீழ் ஜாதி மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவர். ஜாதி சண்டைகள் வருவதே எங்கே கள்ளச்சாராய தொழில் கொடி கட்டி பறக்கின்றதோ அங்கே தான் ஏற்படுகின்றது. சில சமயங்களில் தொழிற்சாலைகளுக்குப் பயன் படுத்தும் ஸ்பிரிட்டினை தண்ணீர் மற்றும் எலுமிச்சை பழம் கலந்து குடிப்பர். அதுவும் உடலுக்கு கேடு விலைக்கக் கூடியது.

            சில ஜாதி அரசியல் கட்சி தலைவர்கள் நல்லவர்கள் போல மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிக்கை விடுப்பர். அப்பிராணி மக்கள் தலைவர்கள் சொல்லுவது எவ்வளவு நல்லது என்று எண்ணுவர். ஆனால் அவர்களுடைய கட்சிக்காரர்கள் தான் அதிமாக  கள்ளச்சாராயம் மூலம் கல்லா கட்டுவர். கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள் தமிழ்நாட்டினை சுற்றியுள்ள மாநிலங்களான கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிவைகளில் மது விலக்கு அமல் செய்வதில்லை. ஆட்டினை வேட்டையாட சுற்றி வட்டம் போடும் ஓநாய்களாக பக்கத்து மாநிலங்கள் உள்ளன என்பதினை நீங்கள் அறிவீர். அந்த மாநிலங்களிருந்து எத்தனை தணிக்கைச்சாவடிகள் போட்டாலும் சந்து, பொந்துகளில் நுழைந்து மது கடத்தி பெரிய பணம் சம்பாதித்து விடுவார்கள். ஆகவே தான் 1969ம் ஆண்டுகளுக்கு பின்பு ஒவ்வொரு அரசாக மதுக் கொள்கையில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வந்துள்ளன.

            இன்றைய தமிழக அரசே மது விற்பனையை ஒரு வருமானம் ஈட்டும் தொழிலாக கருதுகிறது. அந்த தொழிலை நடத்த (TASMAC )என்ற தமிழ்நாடு மாநில மார்கட்டிங் கார்பொரேஷன் என்று பெயரிட்டுள்ளது. அந்த நிறுவனம், மது விற்பதிற்கும், குடிப்பதற்கு கூடங்களையும், சில முக்கிய நிறுவனங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கொடுத்துள்ளது. தமிழ் நாட்டில் மொத்த விற்பனை நிலையங்கள் 5402 ஆகும். அதில் வேலை பார்ப்பவர் 29,297 ஆகும். ஒரு வருட வருமானம் ரூபாய்  33, 811 கோடியாகும். பின் எப்படி பணம்  காய்க்கும் மரத்தினை வெட்ட ஆட்சியாளர்களுக்கு மனசு வரும்.

            மஹாத்மா காந்தி ஆயிரம் கள்ளுக்கடைகளை மூடி ஒரு பள்ளிக் கூடம் திறப்போம் என்று அறை கூவல் விட்டார். கர்ம வீரர் கள்ளுக்கடைக்கு முன்னுரிமை கொடுக்காது, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வயிறு நிறைய மதிய உணவினை கொடுத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மாணவர்கள் காலையில் பட்டினியாக வெறும் வயிறுடன் வந்தால் கல்வி கற்க முடியாது என்று காலை இலவச காலை உணவினை வழங்கச் செய்தார். ஆனால் தமிழ்நாடு மட்டும் மது விலக்கு அமல் படுத்த முடியுமா என்றால் முடியாது. பின்பு கள்ளச் சாராய ஆசாமிகளுக்கு கொண்டாட்டமாகிவிடும். ஆகவே இந்திய அரசே சீரான ஒருமித்த மது விலக்கு கொள்கையினை அமல் படுத்தினால் நாடும் முன்னேறும், நாட்டு மக்களும் உடல் நலத்துடனும், சண்டை சச்சரவின்றி, சாராய சாவின்றி, பாலியல் குற்றங்களின்றி சுகமாக வாழ வழி வகுக்குமல்லவா?

மத, சமுதாய பெரியவர்களும் மது என்ற சாக்கடையின் பக்கம் சென்று விடாதீர்கள் என்று இளைஞர்களுக்கு அறிவுரை எடுத்துச் சொல்ல வேண்டும். பெற்றோர், உற்றார் உறவினர்கள், ஆசிரிய பெருமக்கள்  வருங்கால சந்ததியினர் மது என்ற பாழும் கிணற்றில் விழாது கண்காணிப்பது கடமையல்லவா?

அரசும், தன்னார்வ நிறுவனங்களும் மதுவினால் ஏற்படும் தீமைகளை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அறிவுறுத்த வேண்டும்.  2000ம் ஆண்டு விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நடந்த ஜாதி கலவரங்களை கட்டுப்படுத்த சென்னையிலிருந்து டி. ஜி யாக இருந்தபோது அனுப்பப்பட்டேன். அப்போது மதக் கலவரங்கள் சாராய காய்ச்சுதல், குடிப்பதால் வருகின்றது என்பதினை உணர்ந்து மாணவர்கள், தன்னார்வ நிறுவனங்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து மது கொடுமைகளை விளக்கி பேரணியும், பொதுக்கூட்டமும், நாடகமும் வடலூர், குறிஞ்சிப்பாடிவிழுப்புரம் போன்ற இடங்களில் நடத்தி மக்களை மதுவினுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தி ஜாதி கலவரம் இல்லாமல் செய்தேன். அதேபோன்று அரசும், அதிகாரிகளும், தன்னார்வ நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்கலாமல்லவா?

 

 

           

No comments:

Post a Comment