Wednesday, 20 November 2024

முனிவர்கள் ஆடைகளால் கவர்தார்களா?

 

(டாக்டர் .பீ.முகமது அலி,.பீ.எஸ்()

சமீப காலங்களில் தமிழகத்தில் வள்ளுவம் தந்த திருவள்ளுவர் சிலைகளுக்கு காலங்காலமாக அணியும் வெண்ணிற ஆடைக்குப் பதிலாக ஒரு மதத்தின் அடையாளமான காவி உடையினை அணிவிப்பதனால் தமிழர்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது அனைவரும் அறிவர். வள்ளுவம் ஒரு மதத்தாருக்கு மட்டும் போதிக்கப் படுகிறதா? என்றால் இல்லையே! உலக நாடுகளின் பிரதிநிதிகள் பல்வேறு மதத்தினைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் .நா. சபையிலேயே வள்ளுவர் கருத்தினை இந்தியா சார்பாக எடுத்தியம்ப வில்லையா! அது எதனைக் காட்டியது, இந்தியா மத சார்பற்ற நாடு என்று வெளி உலகிற்கு காட்டத்தானே, அப்படி இருக்கும்போது  இங்கே ஏன் வீணான சர்ச்சைக்கு இடம் கொடுக்கின்றனர் என்று தெரியவில்லையே!

            ஞானிகள், முனிவர்கள் மனிதர்களில் சிறந்தவர்களாக கருதப் பட்டனர், ஏனென்றால் மனிதர்கள் சிறப்பாக வாழ  பொன் எழுத்துக்களால் பொறிக்கக் கூடிய கருத்துக்களை கூறியுள்ளனர் என்பதால் தானே! அவர்கள் ஒரு காலமும் தங்களை ஒரு பொருளாலோ, உடையாலோ முன்னிறுத்தவில்லையே! பின் ஏன் வீணான சர்ச்சை?

உதாரணத்திற்கு மஹாத்மா காந்தி இங்கிலாந்து சென்று சட்டப் பட்டப் படிப்பினை முடித்து இந்தியா திரும்பி இந்தியாவிற்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் போராட துவங்கினார். போராட்டங்களில் மக்களை ஒருங்கிணைக்க இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பயணம் மேற்கொண்டார். அவ்வாறு பயணங்களில் ஒரு பகுதியாக தமிழ்நாடு வந்தார். 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மஹாத்மா காந்தி சென்னையிலிருந்து மதுரை ரயிலில் பயணம் மேற்கொண்டபோது   ஏழை விவசாயி இடுப்பில் ஒரு துணியும், வெயிலைத் தாங்க தலையில் ஒரு துண்டும் கட்டிகொண்டு ஏர் உழுவதினைப் பார்த்ததும், அந்நிய கலாச்சார பேண்ட், கோட்டை துறந்து இடுப்பில் ஒரு துணியும், மேலில் ஒரு துண்டும் தான் அணிந்திருந்தார், சதிகாரர்கள் குண்டுக்கு 1948ம் வருடம் பலியாகும் வரை என்பது இந்திய வரலாறு. ஆனால் இந்த சுதந்திர நாட்டில் மஹாத்மா காந்தி போதனைகளை மறந்து ஏதோ படித்தோம், உயர் பதவி கிடைத்தது என்பதிற்காக ஞானிகள், முனிவர்கள்  போன்றவர்களை உடைகளால் சிறுமைப் படுத்தலாமா?

பக்தி இயக்க காலங்களில்(Bakthi movement) மக்கள் ஜாதி, மத, இன வேறுபாடுகளை களைந்து மக்களின் நல் வாழ்விற்காக நாலு நல் உபதேசங்கள் இரத்தின சுருக்கமாக சொன்னார்கள். ஞானிகள், முனிவர்கள் போதனைகளால் மனிதர்கள் வாழ்க்கைக்கு நம்பிக்கையும், உத்திரவாதமும், சொந்தக் காலில் நிற்க தன்னம்பிக்கையும் ஊட்டினார்கள். அவர்கள் முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தனர். தங்களை முன்னிலைப் படுத்தவோ, அல்லது உடமைகளை முக்கியத்துவமோ ஒரு போதும் காட்டியதில்லையே! திகம்பர் ஜெயின் முனிகள் உடைக்கே முக்கியத்துவம் கொடுக்காமல் நிர்வாணமாகவும், ஒரு எறும்புக்குக் கூட நடக்கும்போது துன்பம் கொடுக்கக் கூடாது என்று மயில் சிறகுகளால் சுத்தம் செய்து நடப்பதினை நாம் பார்த்திருக்கோமே!

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சராம் மேலோங்கி நிலைத்து நிற்க வழிவகுத்த முன்னோடிகள் ராமானுஜர், தெய்வநாயகம் பிள்ளை, மாணிக்க வாசகர், சுந்தரமூர்த்தி நாயனார்,ஆண்டாள், அருணகிரிநாதர், அவ்வையார்,  அகஸ்தியர், ராமலிங்க அடிகளார்  போன்றோர் அணிந்திருந்தது வெண்ணிற ஆடைதான் என்பது வரலாறு, தமிழர்கள் பாரம்பரிய உடையும் வெள்ளை வேஷ்டி, சட்டை, வெள்ளைத் தூண்டும் தானே! அது கந்தையானாலும், கசக்கி கட்டு என்று போதித்தவர்களும் பக்தி இயக்க பெரியவர்கள் தானே! எந்த முனிவர்களாவது தங்களை முன்னிறுத்தி தனக்கென்று தனியாக மடம் வேண்டும், கல்லறை மண்டபம் வேண்டும், சிலை வேண்டும், தன்னை போற்றிப் புகழ வேண்டும் என்றும் சொன்ன வரலாறு உண்டா? அல்லது ஏழை தமிழ்நாடு விவசாயி அணிந்திருந்த இரண்டே இரண்டு துணிகளான இடுப்பில் ஒன்றும், தலையில் ஒன்றும் இருந்ததினை பார்த்து ஆங்கிலேய கலாச்சரமான பேண்ட், கோட்டினை தூக்கி எறிந்து விட்டு அதே இரண்டு துணிகளுடன் வலம் வந்தாரே அப்போதாவது அவர் தன்னைப்போல உடை அணியவேண்டும் என்று மக்களை கேட்டுக் கொண்டாரா ? இல்லையே. அவர் கேட்டதெல்லாம், அந்நிய உடையிலிருந்து கதர் உடைக்கு மாறுங்கள் என்று தானே கேட்டுக் கொண்டார்?

அராபியாவின் இருண்ட காலத்திலிருந்து அராபியர்களை ஒளி மயமான இஸ்லாமிய மார்க்கத்திற்கு தனது போதனைகளால் கவர்ந்த ரசூலுல்லாஹ் முகமது நபி அவர்கள் கூட தன்னை ஒருபோதும் முன்னிலை நிறுத்தக் கூடிய வரைபடம், சிலை, மண்டபம் ஒன்று இருக்கக் கூடாது என்று  தானே போதனை செய்தார்கள்.  அதனால் தான் அவர்கள் மறைந்து 1400 ஆண்டுகளுக்குப் பின்னரும் ரசூலுல்லாஹ் உருவ ஒரு கீறல் கூட இன்று வரை பார்க்க முடியவில்லையே!

ஒரு மனிதனுக்கு பலன் கிடைக்க வேண்டுமென்றால் வித விதமான உடைகள் அணிவதினை பார்த்திருக்கிறோம். அதனைத் தான் ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆனால் முற்றும் துறந்த முனிவர்களுக்கு, ஞானிகளுக்கு எந்த விதத்தில் ஆடை உதவும் என்று தெரியவில்லையே! விஞ்ஞானிகள், படைப்பாளிகள் கூட உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே! உதாரணத்திற்கு அறிவியல் மேதை ஈன்ஸ்டெனும், தற்காலிய  Face Book நிறுவனர் ஜக்கர் பெக்கும் தங்களுடைய உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையே!

உங்களுக்கு மூன்று உண்மை சம்பவங்களை எடுத்துச் சொல்லி எப்படி உடையினால் சங்கடங்கள் வந்தன என்று எடுத்துச் சொல்லலாம் என நினைக்கின்றேன்:

1)      ஒரு திருமண வரவேற்பிற்கு ஒருவர் சாதாரண உடையான வேஷ்டி, சட்டை அணிந்து சென்றிருந்தார். வரவேற்பில் நின்றிருந்தவருக்கு அவரை தெரியாது. ஆகையால் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. அதன் பின்பு பேண்ட், சட்டை, ஓவர் கோட் அணிந்து சென்றார். அவர் அனுமதிக்கப் பட்டார். இவ்வளவிற்கும் திருமண வீட்டாருக்கு அவர் முக்கியமாக வேண்டப் பட்டவர். வரவேற்பு முடிந்து விருந்து பரிமாறப் பட்டது. வரவேற்பில் நின்றவர் தான் உணவும் பரிமாறினார். அப்போது விருந்தாளி சொன்னார் அந்த சாப்பாடினை இந்த கோட்டில் போடுங்கள் என்றாராம். ஏனென்றால் இந்த கோட்டுக்குத்தான் இங்கே மதிப்பு என்றாராம். அதன் பின்னர் தான் திருமண வீட்டருக்குத் தெரிந்து வருத்தம் தெரிவித்தார்களாம்.

2)      பல கல்வி நிலையங்களுக்குச் சொந்தக்காரரும், தொழிலதிபருமான அழகப்பச் செட்டியார் ஒரு தடவை பம்பாய் சென்று ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கினாராம். அங்குள்ள உணவு விடுதிக்கு வேஷ்டி, சட்டையுடன் சென்றிருந்தாராம். ஆனால் வாயிற் காப்போன் அவரை அனுமதிக்கவில்லையாம். உடனே அவர் முதலாளி யார் என்று அறிந்து அவரை சந்தித்து உங்கள் ஹோட்டல் என்ன விலை நான் வாங்கி கொள்கிறேன் என்றாராம். அதன் பின்னர் தான் அந்த முதலாளிக்கே அழகப்ப செட்டியாருக்கு நேர்ந்த அவமானம் அறிந்து மன்னிப்புக் கேட்டாராம்.

3)      அதே போன்ற ஒரு உண்மை சம்பவம் 11.7.2014ல் ஒரு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கே நடந்ததாம். மதராஸ் கிரிக்கட் கிளப்(MCA) அரங்கில் ஓய்வு பெற்ற மெட்ராஸ் ஹை கோர்ட் தலைமை நீதிபதி  நீதிபதி டி.எஸ்.அருணாசலம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அன்றைய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமனை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தாராம். அவரும் வேட்டி, சட்டை அணிந்து கிளப்பிற்கு சென்றாராம். ஆனால் காவலாளி அவரை அனுமதிக்க வில்லையாம். அந்த செய்தி அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா காதிற்கு சென்று அதன் பின்னர் அந்த கிளப்பில் வேட்டி, சட்டைக்கு அனுமதி கொடுக்கப் பட்டதாம்.

தமிழ் சினிமா பாடல் ஒன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. 'ஆளைப் பார்த்து, அழகைப் பார்த்து ஆசை கொள்ளாதே என்று'.. ஆகவே படித்தோம், உயர் பதவி பெற்றோம் என்பதால் சர்ச்சையான, ஒன்றுக்கும் உதவாத விவாதங்களுக்கு இடம் கொடுக்காமல் தான் பெற்ற கல்வி மத சார்பற்ற இந்திய மக்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயன் பெற பதவி இருக்கும் வரை நன்மை செய்யவேண்டும் என்ற சொல்வது சரியாகுமா?

 

 

 

 

 

 

 

1

No comments:

Post a Comment