Monday, 9 September 2013

கண்டதும்-கேட்டதும்

கண்டதும்-கேட்டதும் 

எனது புதுக் கல்லூரி நண்பர் அமீரும், நானும் அவர் ஊரைச் சார்ந்த ஒரு பணக்கார பெருமுகர் ஜனாஸா தொழுகைக்கு சென்னை ராயப் பேட்டையில் உள்ள அடக்கஸ்தலத்திற்கு சென்றிருந்தோம். அசர் தொழுகைக்குப் பின்பு அடக்கம் செய்வது  அறிந்து அசர் தொழுகைக்கு தயாரானோம். அப்போது அந்தப் பிரமுகரின் ஜனாசாவினை தொழும் உள்ளறைக்குள் வைக்கப் பட்டது. அசர் தொழுததும் ஜனாஸா தொழுகையும் வைக்கப் பட்டது.
ஆனால் ஜனாஸா தொழுகைக்கு என்று தனியாக பள்ளிக்கு வெளியே அதற்கான இடம் ஒதுக்கப் பட்டது அறிந்தும் ஜனாஸா உள்ளே வைக்கப் பட்டிருந்தது அவரின் பணக்கார அந்தஸ்து அறிந்து வைக்கப் பட்டது என்று கூறப் பட்டது.
சில நாட்களுக்கு பின்பு எனது நண்பர் அமீர் அவர் ஊரைச் சார்ந்த ஒரு மத்திய வர்க்க பிரமுகரின் ஜனாசத் தொழுகைக்குச் சென்றதாகவும் அப்போது அவருடைய ஜனாஸா தொழுகை பள்ளிக்கு வெளியே உள்ள இடத்தில் தொழுகை வைத்ததாகவும் கூறினார்.

அதே போன்று தான்  வாடியில் முக்கிய பிரமுகர், பணக்காரர் என்றால் முன்புறத்திலும், சாதாரண குடிமகனுக்கு மைய வாடியில் கடைசியிலும் இடம் அளிப்பது வாடிக்கையாக இருக்கிறது.
அல்லாஹ்வின் படைப்பில் ஏழைப் பணக்காரன் பார்ப்பதில்லை. அவன் வளரும் போதுதான் உயர்நிலை, தாழ் நிலை பார்க்கிறான்.
எவ்வளவு உயர் நிலையில் இருந்தாலும் ஒருவன் உயிருடன் இருக்கும்போது தான் அவன் மனிதனாகிறான். அவன் இறந்த பின்பு ஜனாசாவாகத் தான் கருதப் படுகிறான். ஜனாசாவிற்கு உரிய மரியாதைக் கொடுத்து அடக்கம் செய்ய வேண்டும் தான். ஆனால் உயிருடன் வாழ்ந்த படோபத்தினை ஜனாசவான பின்பும் நாம் காட்டத் தான் வேண்டுமா என்று ஒரு கணம் சிந்திக்க வேண்டாமா?

புகாரி 6490 இல் அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாக சொல்லப் பட்டது: அல்லாஹ்வின் தூதர் பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்," செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் நினைத்துப் பார்க்கட்டும்.

உயிரோடு இருக்கும்போதே மேற்கோள்காட்டிய பெருமானார்(ஸல்) அறிவுரை இருக்கும்போது ஒருவர் ஜனாஸா ஆனா பின்பு ஏன் இந்த வீண் ஜம்பம்?
சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரியார் கட்சிப் பிரமுகர் இஸ்லாம் மார்க்கத்தில் சேர்ந்ததும், அது சம்பந்தமாக சில இஸ்லாமிய இயக்கங்கள் உணர்ச்சி மேலிட மாற்று மதப்  பிரமுகர்களை சென்னைப் பிரதான பள்ளிவாசலுக்கு அழைத்து ஒரு அரசியல் கட்சிப் பிரமுகர் போன்று வரவேற்புக் கொடுத்து அவருக்குக் கைரவப் படுத்தியதும் பத்திரிக்கை வாயிலாகப் படித்து விட்டு என்னுடைய ஒருக் கட்டுரையில், இஸ்லாமிய மார்க்கம் ஒரு கடல் போன்றது அதில் பல துளி மழை நீரும், ஆறுகளும் கலக்கலாம் அதற்காக ஏன் இந்த வீணான ஆர்ப்பாட்டம் என எழுதி இருந்தேன்.
பல ஆண்டுகளுக்கு முன்னாள் முரசொலி அடியார் என்பவரும் இதுபோன்று இஸ்லாத்தினைத் தழுவி இஸ்லாம் சம்பந்தமாக பல கூட்டங்களில்  பேசியும், தனது கருத்துக்களை  புத்தகமாகவும் வெளியிட்டார். அவர் சொல்லிலும், செயலிலும் இஸ்லாத்தினை தழுவியதோடு தோற்றத்தில் இஸ்லாமியனாக தாடி வைத்துக் காட்சி அளித்தார். அவரை பாராட்டி பாகிஸ்த்தான் ஜனாதிபதியும் விருந்து கொடுத்தார்.
ஆனால் சமீபத்தில் இஸ்லாத்தில் சேர்ந்த அந்தப் பிரமுகரோ இஸ்லாத்தில் சேர்ந்ததோடு நின்று விட்டு தனது மாற்றத்தினை அரசு கெசட்டுவில் கூட மாற்றவில்லை. முக்கிய பத்திரிக்கையில் விளம்பரமாக தன்னுடைய பெயரினை மாற்றியதாக கொடுக்க வில்லை, அல்லது ஒரு நீதி மன்றத்தில் தான் முஸ்லிமாக மாறிவிட்டேன் என்று ஒரு பிரமான பத்திரமாக தாக்கல் செய்ய வில்லை. தன்னுடைய பழைய பெயரினையும் இஸ்லாமிய பெயரோடு அடை மொழியில் சேர்த்துக்  கொண்டார்.  நான்  நினைத்தேன் அவர் வேலூர்  பாக்கியாத்துஸ் சாலியா, தேவ பந்த் தாருல் உலூம், பெங்களூர் ஷபீலூர்  ரஷாத்  போன்ற அரபிக் கல்லூரிகளில்  சேர்ந்து முறையாக இஸ்லாமிய கல்வியினைப் புரிந்து, பின்பு இஸ்லாமியக் கூட்டங்களில் பேசுவார் என்று. ஆனால்  அவர் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து விட்டார். தோற்றத்திலும் முரசொலி அடியார் போன்று தாடி  கூட இல்லாத ஒரு பிரமுகரானார்.
அவர் சமீபத்தில் இறைவனடி சேர்ந்தார். அந்த ஜனாஸா தொழுகை சென்னை அண்ணா சாலைப்  பள்ளியில் பலக் கட்சிப் பிரமுகர் படை சூழ நடத்தப் பட்டது. அந்தப் பள்ளியின் முக்கிய நிர்வாகிக் கூட அப்படி ஜனாஸாத் தொழுகை நடத்தப் படவில்லை என்று அவருடைய வாரிசுகள் என்னிடம் வருத்தப் பட்டுள்ளனர். அதன் பின்பு அவர் ஜனாஸா அடக்கம் செய்வதா அல்லது எரிப்பதா என்பதில் சர்ச்சை வந்து அந்தப் பிரமுகர் வாய்மொழியாக சொன்னது என்று சிலக் கட்சிப் பிரமுகர்கள் சொன்னதால் தன்னால் சீரணிக்க முடியாத முடிவான ஒன்றினை எடுத்ததாக ஒரு சமுதாய வார இதழில் அதன் தலைவரே சொல்லி உள்ளார்.
மந்தவெளி தலைமை இமாம் மௌலவி இலியாஸ் அசரத்து அவர்கள் அந்தப் பெரியாரின் சீடர் ஜனாசா கொடுக்கப் பட்ட விதம் சரியா என்ற கேள்விக்கும் பதில் ஒரு  இஸ்லாமிய வாரப் பத்திரிக்கைக்கு பேட்டிக்  கொடுக்கும் பொது, அது' தவறான வழிக் காட்டுதல்' என்றும் அதற்குத் துணை போனவர்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இறந்த பிரமுகராவது இஸ்லாத்திற்கு வழிக் காட்டுதலாக தான் இஸ்லாத்தினை தழுவி விட்டேன், தான் வாழ்வது அல்லது மடிவது இஸ்லாமிய வழிமுறைப் படி தான் நடக்கும் என்று கூறியிருந்தால் இந்த குளறுபடி நடந்திருக்காது அல்லவா?


இது போன்ற நிகழ்வுகள் இனிமேயும் நடக்கலாம். தொப்பி அணியாத, கைலி அணியாத முஸ்லிம் நான் என்று ஒருவர் சொன்னார் என்றால் சமூதாய மக்கள் இனிமேலும் ஏமாற வேண்டாம் அவர் உண்மையிலேயே மார்க்கம் மாறி அதன் படி சட்ட நடவடிக்கைகளையும் மார்க்க நடவடிக்கைகளிலும் எடுத்திருக்கிறாரா என அறிந்து கொள்ளவேண்டும்  என்று சொன்னால் சரியா?

Tuesday, 27 August 2013

Historical and scientific facts


சக்கரை நோய் தீர்க்கும் அருமருந்து நோன்பு!
உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளை அளித்தான் எல்லாம் வல்ல அல்லாஹ் என்று அல்குரான் சொல்லுகிறது (40:84)
அதே அல்லாஹ் வருடத்தில் ரமலான் மாதத்தில் நோன்பு கடைப் பிடியுங்கள் என்று கட்டளை இட்டுள்ளான். ஆகவே தான் கடந்த ரமலான் மாதம் கோடிகனக்கானோர் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து நோன்பினைக் கடைப்பிடித்தனர். எம்பெருமானார் ஸல்லல்லாஹு (அலை) அவர்களும் பலப் போரினிலும் பட்டினிக் கிடந்து, சகாபிகளுடன் நோன்பிருந்தார்கள் என்ற வரலாறு கூறுகின்றது.
ஆனால் இன்று சிலர் நோன்பு காலங்களில் வெளிப்படையாக வயிறு முட்ட உண்டும், மது அருந்தியும் இஸ்லாம் மார்க்கத்தில் பெயரளவு முஸ்லிம்களாக உலவி வருகின்றனர்.
இன்னும் சிலர் தாங்கள் இனிப்பு நீர் நோயாளிகள் என்றும், இன்சுலின் மாத்திரை ஊசிகள் வருடம் முழுவதும் போடுவதாக நொண்டிச்சாக்கினை கூறுவார்கள்.
ஆனால் அப்படி சொல்லுவர்களுக்கு பட்டினி கிடந்தால் நீரழிவு குணமாகும் என்று ஆராச்சியில் தெளிவாக கூறப் பட்டுள்ளது:
இங்கிலாந்தினைச் சார்ந்த 59 வயதினைச் சார்ந்த ரிச்சர்ட் மிகவும் வாட்ட சாட்டமான ஆசாமி. தினமும் உடல் பயிற்ச்சியினை தவறாக மேற்கொள்ளுபவர். ஒருநாள் அவருக்கு  'டைப் 2' வகை நீரழிவு நோய் இருப்பதாக டாக்டர் சொன்னதும் ஒரேயடியாக அதிர்ந்து விட்டார். அதற்கு மருந்து உண்டா என்று தேடியதில்அதிர்ஷ்ட வசமாக அவருக்கு ஒரு இனிப்பான செய்தி காத்திருந்தது. அதாவது,' நியுகேசில்' பல்கலைக் கழக பேராசிரியர் ராய் டெய்லர் என்பவர் ஒரு மனிதன் தனது உணவு வகையில் குறைந்த அளவு கலோரிகளை உட்கொண்டால், நீரழிவு நோயினை குணப் படுத்தலாம் என்று ஆராய்ச்சியில் கண்டு பிடித்திருந்தார்.
அதன்படி, ஒரு மனிதனுக்கு அன்றாடம் 2500 கலோரிகள் தேவை.
ஆனால் ஒரு மனிதர் அன்றாடம் 800 கலோரிகள் எடுத்துக் கொண்டால் உடம்பில் சேர்ந்துள்ள கொழுப்பு எரிக்கப்பட்டு, உடலை சுற்றியுள்ள கொழுப்பு எரிக்கப் பட்டு, கல்லீரலும், கணையமும் இயல்பான அளவிற்கு இன்சுலினை சுரப்பதால் ரத்தத்தில் சர்க்கரை நார்மல் அளவிற்கு வந்து விடுகின்றது.

அதனை அறிந்த ரிச்சர்ட் தனது உணவு கட்டுபாட்டிற்காக 11 நாட்கள் அரைகுறை உணவு அருந்தி, பட்டிணி கிடந்து சக்கரை நோயினை விட்டோழித்திருக்கிறார் என்று உண்மை வரலாறு சொல்கிறது. இதனைத் தான் ரசூலல்லாவும் 1400 ஆண்டு களுக்கு முன்னாள் விளக்கிச் சொல்லி இன்று கோடிக் கணக்கான முஸ்லிம் மக்களும் நோன்பினைக் கடைப் பிடிக்கின்றனர். ஆனால் இன்றும் கூட சில பெயரளவு முஸ்லிம்கள் இனிப்பு நீர் நோய் என்று நோன்பினைப் கடைப் பிடிக்காமல் இருந்தால் மேற்கண்ட உண்மை நிகழ்வினை எடுத்துச் சொல்லி வருகின்ற  வருடமாவது நோன்பினை நோற்க வலியிருத்துவோமாக!

Thursday, 4 July 2013

சாதனையும்-சமூதாய வேதனையும்!

                         

சாதனையும்-சமூதாய வேதனையும்!

சமீபத்தில் வெளியான(2013) பள்ளி இறுதிப் படிப்பிலும், பத்தாவது படிப்பிலும் சமூதாய மாணவ மாணவிய கண்மணிகள் பலர் மாநில அளவில் சிறப்பான முறையில் தேர்வு கண்டு அனைவரும் மகிழ்ந்திருப்போம். ஆனால் மத்திய சிறையில் இருந்த படியே பள்ளி இறுதிப் படிப்பு எழுதிய சிறைக் கைதிகளில் சமூதாய இளைஞர்கள் மூன்று பேர்கள்  மாநில அளவில் ரேங்கு எடுத்துத் தேறி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது  ரத்தக் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடிய வில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் 1998 ஆம் ஆண்டு  கோவை நகரில் நடந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப் படுத்திக் கைது செய்யப் பட்டு சிறையில் வாடுபவர்கள். அவர்களை நம்பி இருக்கும் குடும்பங்கள் வறுமையில் வாழுவதினை எண்ணி மனம் வெம்பாமல் எந்த மனிதாபமுள்ள சமுதாயதினவரும் இருக்க முடியாது.
அதேபோன்று தான் 1.7.2013 அன்று பதினேழு வயதில் கோவை குண்டு வெடிப்பில் கைது செய்யப் பட்ட ஒரு மைனர் இன்று 34 வயதானாலும் சிறையில் இருந்து விடுதலை செய்ய வில்லை என அறிந்த சென்னை உயர் நீதி மன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. அவர் 15 
வருட பொன்னான வாழ்வினை யாரும் திரும்பப் பெறமுடியுமா என எண்ணிப் பார்க்க வேண்டும்.
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு ரஷ்யா நாட்டின் செச்சன்யா மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்த இரண்டு இளைஞர்கள் சம்பந்தப் பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு குடியுரிமை கிடைப்பதே குதிரைக் கொம்பு. ஆனால் அந்த இருபரில் இறந்த டாமர்லின் பல்கலைக் கழக குத்துச் சண்டையில் வெற்றி பெற்று குடியுரிமையும், இரண்டாயிரம் அமெரிக்க டாலரும் பரிசாகப் பெற்றுள்ளார்  அப்படி திறமை வாய்ந்த இரு இளைஞர்களும் தவறான வழி நடத்தளாலும், சிந்தனையாலும் ஒருவர் கொல்லப் பட்டுள்ளார். மற்றொருவர் வெஞ்சிறையில் வாடுகின்றார்.
நான் மேற்காட்டிய இரண்டு சம்பவங்களும். கல்வி, கேள்வி, விளையாட்டில் திறமை வாய்ந்த இளைஞர்கள்  தவறான தலைவர்களின் தவறான வழிக் காட்டுதலால் சொல்லவென்னா துன்பங்கள் அடைந்து வருகின்றனர். ஆனால் அவர்களை தூண்டி விடும் தலைவர்கள் சுகமான வாழ்வான குளிர் சாதன படுக்கை அறை, வாகனம், தனக்கும், தனது வாருசுகளுக்கும் தேவையான சொத்துக்களைத் தரும் வியாபார தளங்கள் போன்ற வற்றினைக் கொண்டு இன்பம்  சுவைத்துக் கொண்டு உள்ளனர்.
நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போது என்.சி.சி. மாணவப் பிரிவின் சார்ஜென்ட்டாக பணியாற்றினேன். தேசிய மாணவர்ப் பிரிவின் பயிற்சி கட்டளைகள் எல்லாமே ஹிந்தி மொழியில் தான் இருக்கும். அதனை உபயோகித்து  மற்ற கேடட்டுகளிடம் பயிற்சி வாங்கி இருக்கிறேன். அதன் பின்பு 1965 ஆம் ஆண்டு புகுமுக வகுப்பு  கல்லூரியில் படிக்கும்போது ஹிந்தி எதிர்ப்புப் போர் கொழுந்து விட்டு எரிந்தது. அதில் என்னையும் இணைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தாது  இறுதி ஆண்டு பரிட்சையில் தோல்வி அடைந்தேன். ஆனால் அந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தினைத் தூண்டி விட்ட தலைவர்களின் குழந்தைகள் ஹிந்திப் படிப்பினை எடுத்து தேர்ச்சிப் பெற்று தலைநகர் டெல்லியிலும் முக்கிய பதவி சுகம் அடைந்தனர் என்று அனைவருக்கும் தெரியும்.
அதேபோன்று தான் இன்றும் சமூதாய இளம் பிஞ்சு உள்ளங்களில் தவறான கருத்துக்களை விதைத்து அவர்கள் உழைப்பில் சுகம் காண்கின்றனர். இஸ்லாம் ஒரு அமைதி காக்கும் மார்க்கம் . அடுத்த வீட்டார் வேற்று மதத்தவரானாலும் மதித்து நடக்க வேண்டும் என்று அல் குரான் 49:11 இல் கூறியுள்ளது 
'மூமின்களே பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் . ஏனெனில், நிச்சயமாக எண்ணங்களில், நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்ககூடும் என்கிறது அல் குரான் (49:12)'
ஆடம்பர திருமண விருந்து வேண்டாம் என்று கூறிக்கொண்டு தங்கள் குழந்தைகள் திருமண விருந்து மட்டும் மிகப் பிரமாண்டமான திடலில் வைக்கின்றனர் தலைவர்கள். அதனை பார்க்கும்போது ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லை என்று தனது மனைவியிடம் சொல்வது போன்று இருக்கிறதல்லவா?
ஆகவே இளம் சிறார்கள், பள்ளி மாணவ மாணவியர், இளைஞர்கள் கல்வி கேள்விகளில் முன்னேற அனைத்து உதவிகளும் நாம் செய்வதோடு, அவர்கள் முன்னேற தடைக் கல்லாக இருக்கக் கூடாது. சமூதாயத்தினவருக்கு தனி ஒதிக்கீடு வேண்டும் எனக் கோருகிறோம்  பாராட்டக் கூடிய ஒன்றே. ஆனால் கொடுத்த 3.5 சதவீத ஒதுக்கீடிலும் சமூதாயத்தினவர் பயன்பெற நாம் ஆக்கமும் ஊக்கமும் செய்ய வில்லையே அது என் என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. கல்வியில் முக்கியத்துவம் கொடுத்து இளைஞர்களை முன்னேறச் செய்தால் தான் சமூதாயம் முன்னேறும். வெறும் அரசியல் வார்த்தை ஜாலங்களால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. மற்ற அரசியல் கட்சிகள் சமூதாயத்தினவரை தேர்தல் நேர பகடைக் காய்களாக பயன் படுத்த் அனுமதிக் கூடாது. அதேபோன்று தேர்தல் வாக்குறிதிகள் காற்றில்  பறக்க விடும் காகிதத் துண்டாக மாறக்கூடாது. சென்ற தேர்தல் (2011) நேரத்தில் கொடுத்த வாக்குறிதிகள் ஆளும் கட்சியால் நிறைவேற்ற வில்லை என்று தற்போது குற்றம் சொல்லும் சமூதாய இயக்கங்கள், அந்த வாக்குறிதிகளை எழுத்து மூலமாக ஏன் வாங்கவில்லை என்று உங்களுக்கு தோன்றுவது போல எனக்கும் தோன்றத் தான் செய்கிறது.
எனவே இனியும் சமூதாய இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் இளைஞர்களை வழிக் கெடுக்காது நல்வழி நடத்தினால் பல்வேறு சாதனைகளை படைக்கும் வல்லவர்களாக உருவாகுவார்கள் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஆசையே! 


Tuesday, 21 May 2013

சாதனைக்கு ஒரு சாரார் மட்டும் உரியவரல்ல!



சாதனைக்கு ஒரு சாரார் மட்டும் உரியவரல்ல!
வானத்தினையும், பூமியையும் படைத்து, அதனை ஆராய்வதிற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் எல்லாம் வல்ல அல்லாஹ் அளித்துள்ளான்' என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்கிறது.
ஆனால் கல்வியிலும், சாதனையிலும் இன்றும் நாம் பின்னோக்கித் தான் உள்ளோம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஏன் நம்மிடம் திறமை இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். திறமை இஸ்லாமியரிடையே பட்டை தீட்டப் படாத வைரம்போலவும், இலை மறை காயாகவும் உள்ளது. அதனைக் வெளிக்கொண்டு வருவது நமது கையிலேயே தான் உள்ளது என்றால் மறுக்க முடியாது என்பதினைக் கீழ்கொண்ட உதாரணங்களுடன் விளக்கலாம் என உள்ளேன்:
1) தமிழ் நாட்டில் பெண் ஐ.ஏ. எஸ். அதிகாரிகள் வருவது அரிது. அப்படி வந்தாலும் முக்காடுக்கு முழுக்குப் போடும் அதிகாரிகள் சிலர் வந்துள்ளனர். ஆனால் முழு முக்காடுப் போட்டு, அந்த முக்காடு என் பண்பாடுக்கு எடுத்துக் காட்டு என்றும் அதனை என்றும் கைவிடேன் என்று துணிச்சலாக சொல்லும் ஒரு பெண் ஐ. ஏ . எஸ். அதிகாரியாக   சென்னை சைதாபேட்டை மாநகராட்சி பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்ற தமீம் அன்சாரிய தேர்வாகி உள்ளார்.
2) அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் சமீப காலங்களில் வேட்டையாடப் படுகின்றனர் என்று நாம் பத்திரிக்கை வாயிலாக அறிவோம். அதில் முஸ்லிம்கள் உயர் பதவிக்கு வருவது மிகவும் அரிது. அந்த மாநிலத்தில் முன்னாள் ஜனாதிபதி பாக்ருதீன் அலி, முன்னாள் முதல்வர் டிமூர் போன்றவர்களுக்குப் பின்பு 60 ஆண்டுகள் சென்று ஒரு முஸ்லிம் பெண் உம்மெ பார்டினா ஆதில் 2012ஆம் ஆண்டு ஐ.ஏ.ஏஸ். பரிச்சையில் வெற்றி பெற்றுள்ளார்.
3) இமயமலையில் ஏறி வெற்றிக் கொள்பவர்கள் என்று பார்ப்போமேயானால் முஸ்லிம்கள் சிலரே. ! . .. முதன் முதலில் துருக்கியினைச் சார்ந்த அலி மெஹ்ரக் என்ற முஸ்லிம் ஆணும், அதன் பின்பு மலேசியா பெண்மணியும், ஈரான் தேசத்தினைச் சார்ந்த இரண்டு பெண்மணிகளும் வெற்றி கொண்டுள்ளார்கள்.
ஆனால் அந்த இமயமலை சிகரத்தினையும் சௌதி நாட்டில் ஜெத்தாவினைச் சேர்ந்த ரஹா  மொபாரக் என்ற முஸ்லிம் பெண்மணி வெற்றி பெற்று இருக்கின்றார் என்று நினைக்கும்போது  நமது நெஞ்சமெல்லாம் இனிக்கும். அதே நேரத்தில் ஒரு கசப்பான செய்தியினையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
சென்னையின் பல பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத அல்லது பாதியில் விடுபட்ட சிறுவர்கள் 2000 பேர்கள் பட்டியல் எடுத்து அதில் எந்தப் பகுதியில் அதிகமான சிறுவர் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால், ஆறு வயது முதல் பதினாலு வயதுவரை உள்ளவர்களில் தலா 192 பேர்கள் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜார்ஜ் டவுனும், பெரம்பூரும் ஆகும்.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜார்ஜ் டவுனில் சிறார்கள் கல்வி கற்பதும், பள்ளிக் கல்வியிலிருந்து பாதியில் நிற்பதும் உண்மையாகிறது.
2) வறுமைக் கோட்டினுக்குக் கீழே உள்ள முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாது நாலு காசு சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினர்களாக கருதுகிறார்கள்.
3) அப்படி அனுப்பப் படும் சிறார்கள் குற்றம் செய்யும் வேற்று சிறார்கள் துணைக் கிடைத்து வழி பிரண்டு போகிறார்கள்.
4) வசதி படைத்த பெற்றோர்கள் சிறார்களின் படிப்பில் கவனம் செலுத்தாது, அதிகம் செல்லம் கொடுத்து அந்த சிறார்கள் பாதியில் பள்ளிப் படிப்பினை விடும் நிலையும், படிக்காமல் அவர்களையும் தொழிலில் ஈடுபடுத்துவது.
ஆகவே சமூதாய மக்கள் குழந்தைகள் பள்ளியில் படிக்கவும், சாதனை புரியவும் கீழ்க்கண்ட  வழிமுறைகளைக் கடைப் பிடிப்பது அவசியமே!
1) வயது ஆறிலிருந்து வயது பதினான்கு வரை பள்ளிப் படிப்பு சிறார்களுக்கு கட்டாயம். அதனை முஸ்லிம்களுக்கு எடுத்துச் சொல்லி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச் சொல்லலாம்.
2) வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள முஸ்லிம்கள் பலன் பெற அரசு திட்டங்கள் கிடைக்க வழி வகை செய்யலாம். பைதுல் மால் போன்று அமைப்பினை ஏற்படுத்தி சுய வேலைக்கு ஏற்பாடு செய்யலாம்.  11.5.2013 அன்று சென்னை புதுக் கல்லூரியில் சிறுபான்மை துறை அமைச்சர் முகமது ஜான் அவர்களுடன், சகோதரர் ஜவஹிருல்லாஹ் சட்டமன்ற உறுப்பினருடன் நானும் கலந்துகொண்டேன்.அப்போது அமைச்சர் கூறும்போது, 'அரசு சலுகை பெற வரும் முஸ்லிம்கள் குறைவே' என்று குறை பட்டார். அதே நேரத்தில் இன்று(19.5.2013) நடைப் பயிற்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது மண்ணடியில் உள்ள வியாபார முஸ்லிம் நண்பர் கேட்டார், 'ஏன் அண்ணே, எங்கள் கடைக்கு தர்மம் கேட்டு முஸ்லிம்கள் தான் அதிகமாக வருகிறார்கள், எனக்குத் தெரிந்த ஏழ்மையான மற்ற மதத்தவர் தர்மம் கேட்டு வருவதில்லையே' என்றார்.
ஆகவே யாசகம் கேட்கும் முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளதினையே அவர் கூற்றுக் கூறுகிறது.
3) அவர் கூற்று ஏழை மக்களிடம் கௌரவத்துடன் 'கால் கஞ்சியானாலும் மூடிக் குடி' என்ற நிலை மாறி கோழையாக கையேந்தும் நிலை ஏற்படுகிறது. அதனை சமூதாய இயக்கங்கள் போக்க வேண்டும்.
4) உயர்தர கல்வி நிலையங்கள் மூலம் படித்தால் தான் உயர் பதவி அடைய முடியும் என்ற நிலையினை மாற்றி சென்னை கார்ப்பரேசன் பள்ளியில் படித்த தமிம் அன்சாரியா போன்று நீங்களும் மாநகராட்சிப் பள்ளியில் படித்தால் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தினை ஊக்குவிக்க வேண்டும்.
5) சாதனை பெண்களுக்குத் தடையில்லை என்பதினை உயரமான இமயமலையினை அடைந்த பெண்களின் கதையினை எடுத்துச் சொல்ல வேண்டும். 
6) முஸ்லிம் பெண்கள் கல்வி கற்கவும், கல்வி, சமூக, அரசியல் அமைப்புகளில் பங்கு பெறவும் வழி வகுக்க வேண்டும். முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், குவைத், எகிப்து, ஈரான் ஆகியவற்றில் முஸ்லிம் பெண்கள் பாராளுமன்றத்தில் பங்கு பெறும்போது பெண்களுக்கு ஒதுக்கீடு உள்ள நமது நாட்டில் பெண்களின் சேவையினை ஒதுக்கித் தள்ளக்கூடாது. தென் இந்திய கல்வி சங்கத்தில் சென்னையில் 2012 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் அமைப்பில் ஐ.ஐ.டி தொழில் கல்வி நிலையங்களில் சேர முஸ்லிம் மாணவர்களுக்கு பயிர்ச்சி கொடுக்க ஒரு குழு அமைத்தார்கள். அதில் சிலர்  மாணவிகளைச் சேர்த்தால் பண்பாடு கெட்டுவிடும் என்றார்கள். அவர்களுக்கு சமீபத்தில் வெளியான பிளஸ் 2 பரிச்சையில் 1200 விழுக்காடுக்கு ஒரு முஸ்லிம் மாணவி 1190 எடுத்துத் தெரியிருக்கின்றார். அவர் கணிதம், கணினி, வணிக வியல் ஆகிய பாடங்களில் 200 மதிப்பெண்ணுக்கு 200 வாங்கி உள்ளார். அவர் ஐ.ஐ.டியில் சேர ஆசைப் பட்டால் அவருக்கு நாம் மத அடிப்படியில் பயிற்சிக் கொடுக்க ஏன் மறுக்க வேண்டும். 
ஆகவே முஸ்லிம் மக்கள் முஸ்லிம்கள் சாதனைகளை ஊக்குவிக்க வேண்டுமே தவிர அவர்கள் வளர்ச்சிக்குத் எந்த விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது.




Sunday, 12 May 2013

எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களல்ல'-அமெரிக்கப் பெண்மணி 'இறை இல்லத்தில் புகுந்தால் உயிர் வாழலாம்'-டாக்கா பெண்மணி




எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களல்ல'-அமெரிக்கப் பெண்மணி  'இறை இல்லத்தில் புகுந்தால் உயிர் வாழலாம்'-டாக்கா  பெண்மணி

'காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் நோய்' மற்றும் 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பார்கள்.
11.9.2001 நியுயார்க் இரட்டைக் கோபுர சம்பவத்திற்குப் பின்பு அமெரிக்கர்கள் உலக முஸ்லிம்களை அக்னிக் கக்கும் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதினை இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நடிகர்கள் சாருகான்,அமீர்கான், உ.பி.மாநில அமைச்சர் ஆஜம் கான் போன்றோர் முஸ்லிம் பெயரினைத் தாங்கியதாலேயே அமெரிக்கா செல்லும் பொது அங்குள்ள விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் அவமானப்படுத்த  பட்ட சம்பவங்கள் வேதனையாக இருந்திருக்கும்.
ஆனால் அதே அவமானத்தினை அமெரிக்க ராணுவத்திலேயே பணியாற்றும் ஒரு அமெரிக்கக் கிருத்துவப் பெண்மணி.' நொய்டா ஹோசென்' பெயர் ஒரு முஸ்லிம் பெயர் போன்று இருப்பதாலேயே தன சக ராணுவ வீரர்களால் அவமானப் பட்டுள்ளார்.
40 வயதான விமானப் படையில் முதல் வகுப்பு சார்ஜெண்டாக உள்ள நோய்டா ஹோசென் ஒரு கத்தோலிக்க கிறிஸ்டியன் பெண்மணி. ஆனால் அவர் பெயர் முஸ்லிம் பெயரான ஹுசைன் போன்று இருப்பதால் ஒருக் கேலிப் பொருளாக தன சக ராணுவ வீரர்களிடம் காணப் படுவதாக வேதனையுடன் புலம்பியிருக்கிறார் என்றால் பாருங்களேன். அப்படி என்ன கேலிப் பொருளாக சக ராணுவ வீரர்கள் கூப்பிடுகிறார்கள் என்றால் ,'சார்ஜெண்ட்  ஹுசைன் நீங்கள் எந்தக் கடவுளை வணங்குகிறீர்கள்' என்று கேலி செய்வார்களாம்'.  சார்ஜெண்ட் ஹோசென் கூறும்போது, 'உலகில் தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் அத்தனை பேர்களும் முஸ்லிம்கள் அல்ல'. அது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அத்தனை பேர்களும் முஸ்லிம்கள் அல்ல ' என்றும் கூறியிருக்கிறார். அவர் சாதாரணமாகக் கூறவில்லை. ஆப்கானிஸ்தானில் ராணுவப் பணியாற்றித் திரும்பியிருக்கும் நிலையில் சொல்லியிருக்கிறார் என்றால் எத்தனை உண்மை என்று உலகிற்குப் புரிந்திருக்கும். யார் கண்டது பிற்காலத்தில் சார்ஜெண்ட் நொய்டா ஹோசென் எல்லா வல்ல அல்லாஹ்வால் ஹுசைனாக மாறினாலும் மாறலாம் என்று நம்புவோமாக.
இஸ்லாமிய மார்க்கம் வன்முறைக்கு எதிரானது, பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருந்தால் தான் மட்டும் வயிறு முட்டச் சாப்பிடுவது சரியல்ல, மதத்தால் எந்த மனிதரையும் வெறுக்ககூடாது, பிற மத வழிபாடு தளங்களை சேதப் படுத்துதல் கூடாது, வழிச் சண்டைக்குப் போகக் கூடாது, சாந்தியும், சமாதானமும் மனிதனுக்குக் கேடையங்கள் என்று மனிதனைப் புனிதனாக்கும் ஒரு அற்புத மார்க்கம் தான் இஸ்லாம். .   அதே சமயத்தில் எலித் தொல்லைக்குப் பயந்து அழகான வீட்டினையே கொளுத்தும் செயலாக இஸ்லாமிய நாடுகளையும், அங்குள்ள மக்களையும் அல்லது பிற நாடுகளில் வாழும் முஸ்லிம்களையும்  அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் வஞ்சகக் கண்ணோடு பார்க்குமேயானால் சார்ஜெண்ட் நோய்ட ஹோசென் போன்ற மேலை நாட்டுப் படை வீர்கள் மட்டுமல்ல அங்குள்ள மக்களும் தீவிரமாக பரவி வரும் இஸ்லாமிய மார்கத்திற்கு வருவது காலத்தின் கட்டாயமே என்றால் மிகையாகாது!

பங்களா தேசத்தில் 24.4.2013 அன்று எட்டு மாடிகள் கொண்ட அமெரிக்கர் நடத்தும் ஆயத்த ஆடை நிறுவனக் கட்டிடம் இடிந்தது அதில் 1000 பேர் மாண்டதினையும், நூற்றுக் கணக்கானோர் காயம் பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதினையும் பத்திரிக்கைகளும், 'எலெக்ட்ரானிக் மீடியாக்களும் வெளிச்சம்  போட்டுக் காட்டின அனைவருக்கும் தெரியும். பங்களா தேஷ் அரசாங்கம் மீட்புப் பணிக்கு எந்த அந்நிய நாட்டு உதவியும் தேவையில்லை என்று தன் ஊழியர்களை வைத்தே மீட்புப் [பணியினை மேற்கொண்டது. அவ்வாறு 10.5.2013 ஈடுபடும்போது என்னே அதிசயம், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ஊழியருக்கு யாரோ ஒருவர் இடிபாடுகளிடையே தட்டுவது போன்ற ஓசைக் கேட்டு சக ஊழியர்களை அழைத்து அந்த இடத்தில் தோண்டும்போது, சுபானல்லாஹ், ஒரு பெண்மணியின் முகம் தென்பட்டது. உடனே அவசரமாக செயல்பட்டு அவரை உயிருடன் 17 நாட்களுக்குப் பின்பு மீட்டிருக்கிறார்கள் என்றால் அதிசியத்திலும் அதிசயம்.
அந்தப் பெண்மணி 19 வயதான முஸ்லிம் பெண்மணி ரேஷ்மா ஆகும். மருத்துவமனையில் சிகிச்சைப் பெரும் அவர் கூறும்போது,'தான் மாட்டிகொண்ட இடம் தொழும் அறையாகும்.  தன்னோடு வேலைப் பார்த்தவர்கள் சிலர் மாண்டு அருகில் கிடப்பதினை பார்த்திருக்கிறார். அந்த அறையின் மூலையில் சில காய்ந்த பேரித்தம் பழங்களும், ஒரு குடுவையில் தண்ணீரும் இருந்தது. அதனை சிறுக, சிறுக சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன் எப்படியும் தன்னை மீட்டு விடுவார்கள் என்று உறுதியுடன் அங்கே கிடந்த ஒரு இரும்புத் துண்டையும், இடிபாடுகள் கிடந்தக் கல்லையும் எடுத்து 17 நாட்களும் வெளியே இருப்பவர்கள் கேட்ப்பார்கள் என்ற எண்ணத்தில் தட்டியுள்ளார். ஆனால் 16 நாட்கள் ஆகியும் பலனில்லை என்று சோர்ந்திருக்கும் போது 17ஆம் நாள் தட்டும்போது சத்தம் கேட்டு மீட்டார்கள்' என்று சொல்லியுள்ளார்.
இதிலிருந்து கீழ்கண்டவை புலனாகிறது:
1) புகலிடம் தேடி இறை இல்லத்தில் புகுந்தவர்களை அல்லாஹ் ஒருபோதும் கை விட்டதில்லை.
2) 'எந்தத் துன்பம் தீர்ப்பதிற்கும் என்னிடம் கையேந்துங்கள்' என்ற கூற்று உண்மையாகி இன்னல் பட்ட ரேஷ்மாவினை ஏக இறைவன் காப்பற்றியதுபோல ஈமான் கொண்ட அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவான்.
3) பெருமானார் ஸல்லலாகு அலைவ ஸல்லம் அவர்களும் அவர்கள் தோழர்களும் பல நாட்கள் பேரித்தம் பழத்தினையும், கொஞ்சம் தண்ணீரையும் வைத்தே பல போர்களை வென்றிருக்கிறார்கள் என்பது வெறும் கதை அல்ல. மாறாக நிஜமான நிகழ்வு என்று உங்களுக்கு தற்போதுத் தெளிவாகுமல்லவா?.
4)பெண்கள் அல்லது குழந்தைகள் தனிமையில் இருந்தால் பேய்,பிசாசு , முனி, பூதம் பிடித்துக் கொள்ளும் என்ற சாத்தான் வேதம் ஓதும் பூச்சாண்டிக் புலம்பல் எல்லாம் இனி எடுபடாது. ஏனென்றால் ஒரு பெண்மணி தனிமையில் 17 நாட்கள் 90 டிகிரி வெப்பத்தில் மனத் தைரியத்துடன் வாழ்ந்து இருக்கிறாள். 
5) பயத்தினாலேயே செத்து மடியும் இந்த நவீன உலகத்தில்  மனதில் 'தில்' இருந்தால் எப்படியும் வாழலாம் என்று உலகிற்கு, குறிப்பாக பெண்களுக்கு எடுத்துக் காட்டகத் திகழ்கிறாள் ரேஷ்மா என்ற முக்காடுப் போட்ட முஸ்லிம் பெண்மணி.