Thursday, 23 February 2012

அரிய நோய்க்கும் அரு மருந்து இருக்கிறது அல்குரானிலே!

நான் கல்லூரி மாணவனாக இருந்த போது உலக குத்துச் சண்டையில் கொடிகட்டிப் பரந்த
‘கேசிஎஸ் கிளை’ எதிரிகள் மீது குதித்து குதித்து விடும் குத்துக்களையும், எதிரிகள் விடும்
குத்துக்களை லாவகமாக சமாளித்தும், எதிரிகளை டான்ஸ் ஆடி கோப மூட்டியும் அதன் பின்பு
அவர்களை வீழ்த்துவதும் கண்கொள்ளா காட்சிகளாக இருக்கும். எப்படி மஞ்சு விரட்டில் மாட்டின் திமில் மீது
தொத்திக் கொண்டு சீறி பாயும் காலை மாட்டினை அடக்குகிறானோ அதேபோன்று பல களங்களை
வெற்றிக் கொண்ட வீரராகத் திகழ்ந்தார். சில நேரங்களில் தோற்றாலும் மூன்று முறை உலக குத்துச்
சண்டை பட்டத்தினை வென்று வாகை சூடிய ஒரே வீரன் அவர். இரும்புபோன்ற வலுவான உடல் வாகு கொண்ட
அவர் உள்ளம் மட்டும் ஏக இறைவன் அல்லாஹ் நோக்கியே இருந்தது. ஓரிறைக் கொள்கை கொண்ட அவர்
பெயரையும் முகமது என மாற்றிக் கொண்டது அனைவருக்கும் தெரியும். அது மட்டுமா அந்நிய அப்பாவி மக்களைக்
கொல்லும் அமெரிக்கா ராணுவத்தின் கட்டாய சேவையில் பதவி போனாலும் செல்ல மாட்டேன் என்று பட்டத்தினை பறி கொடுத்து, திரும்பவும் வென்று காட்டிய மாவீரன் முகமது அலியே சேரும். வல்லவன் என்பது ஒருவனை அடித்து வீழ்த்துவது அல்ல, மாறாக அவனை நேசக் கரத்தோடு நெஞ்சில் அனைத்துக் கொள்வதே ஆகும் என்ற தத்துவத்தினைப் போதித்தவரும் அவரே! ஆகவே தான் அவரை உலக நாடுகளின் சபையின் அமைதிக்கான தூதுவராக நியமித்து அழகு பார்த்தது. ஆனால் தற்போது அவர் உடல் 'பார்க்கின்சன்' நோயால் துவண்டு போய் உள்ளது.
என்னோடு புதுக் கல்லூரியில் 1966-1969 ஆண்டுகளில் படித்து, விடுதியில் ஒன்றாக தங்கி புதுக் கல்லூரிக்கு கூடைப் பந்திலும், சிறகுப் பந்துப் போட்டியிலும் பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வாங்கித் தந்த முகமது இர்பான் என் இனிய நண்பர். படிப்பிற்குப் பின்பு ஹாங்காங் நகரில் கல் வியாபாரம் செய்தார். 1985 ஆம் ஆண்டு நான் ஹாங்காங் சென்றபோது விருந்தோம்பலில் திளைக்க வைத்தார். அங்குள்ள டிராமினை விட வேகமாக நடக்கும் ஆற்றலினை அவரிடம் கண்டேன். இருபது ஆண்டுக்குப் பின்பு அவர் சென்னையில் குடியேறி விட்டார் என கேள்விப் பட்டு எங்களது கல்லூரித் தோழர் அமீர் அப்துல் காதருடன் நுங்கம் பாக்கம் வீட்டிற்கு வீட்டுக்குச் சென்றோம்.
எங்களை அதே பாசத்துடன் கட்டி அணைத்து வரவேற்றார். ஆனால் அவர் உடல் மட்டும் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப் பட்டது கண்டு மனம் வேதனையில் நொறுங்கிப் போனது. இறைவா ஏன் என் இனிய நண்பருக்கு இந்த நோயினைக் கொடுத்தாய் என்று குறை படவும் தோன்றியது.
அப்போது பார்க்கின்சன் நோயென்றால் என்ன என்று அலசத் தோன்றியது
மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் இழந்து உடல் உறுப்புகள் ஆட்டம் கண்டும், விரைப்புத்தன்மை கொண்டும், செயல்பாடுகள் மெதுவாகவும் இருத்தல் என்று அறிந்தேன்.
21.2.2012 தினசரி பத்திரிக்கையினை புரட்டும்போது ஒரு சுவையான செய்தி வெளி வந்திருந்ததினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். அமெரிக்கா நரம்பியல் இயக்குனரக தலைவர் மார்க் மாட்சென் வயது
முதிர்ச்சிப் பற்றி ஆராயும்போது ஒரு கண்டு பிடிப்பினை வெளியிட்டுள்ளார். 'ஒரு மனிதன் சில நாட்கள் உண்ணா
நோன்பு இருந்தால் அவனால் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். எப்படி என்றால் உண்ணா நோன்பு இருந்தால் கலோரி மூளைக்குச் செல்வது குறைக்கப் பட்டு மூளையின் நரம்பு மண்டலத்தினை பாதுகாத்து பார்க்கின்சன் மற்றும் அல்ழேமியர் போன்ற நோய்களிடமிருந்து காப்பாற்ற முடியும்' என்கிறார்.
அல்ழேமியர் நோய் என்றால் என்ன என்று பார்க்கும்போது, சாதாரணமாக 65 வயதினரைப் பாதிக்கும் மறதி நோய்
இளம் வயதினரையும் பாதித்து, ஞாபக சக்தி குறைவு, குழப்பங்கள் ஏற்படுகின்றன என்றும் சொல்லப் படுகிறது.
அல்குரானிலும், கதிசுகளிலும் பார்க்கும்போது பல்வேறு ஆதாரங்கள் அவைகளுக்குக் கிடைத்தன. அவற்றில் சில வற்றை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்னை ஆயிசாப் பிராட்டியார் அவர்கள், " அண்ணலார் அவர்கள் ஷாபான் மாதம் அதிக நோன்பு கடைப் பிடித்தார்கள்' என்றார்கள்.
அல்குரானில் 2:183 அத்தியாயத்தில், "நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது, நோன்பில் பல நன்மைகளும் உள்ளதாக" கூறுகிறது.
இமாம் புகாரி அவர்கள், " நோன்பு நோற்பதால் பலவீனமோ, சோர்வோ அடைய மாட்டார்கள்" என்று கூறினார்கள்.
இமாம் அபுதாவுது அவர்கள், "நோன்பு இருந்து முடித்ததும் தாகம் தீர்ந்து, நரம்புகள் வலுபெறும், இறைவன் நாடினால் திண்ணமாக நற்கூலியும் கிடைக்கும்" என்றார்கள்.
நோன்பு காலங்களில் பசித்திருந்து, தனித்துருந்து, விழித்திருந்து இறை நேசத்துடன், தீமைகளை சுட்டெரிக்கும் வகையில் ஒருவன் செயல் பட்டால் நரம்பு தளர்ச்சி நோய்கள் ஒருவனை நெருங்காது என்று மேற்கண்ட ஆதாரங்கள் கூறவில்லையா?
ஆனால் இந்த நவீன மோக உலகத்தில் நோன்பு காலங்களில் கூட வயிறுபுடைக்க சாப்பிட்டும், மது அருந்தியும், புகைத்தும், இன்னும் கூட சில இஸ்லாமிய ஊர்களிலும் அல்லது வெளி நாடு சென்ற இளைஞர்களிடம் காணலாம்.
அவர்கள் சிறார்களாக இருந்தபோது நோன்பு வைக்க பெற்றோர்கள் வற்புருத்தியிருப்பார்கள் என்பது நிச்சயம். ஆனால் எப்படி பிற்காலத்தில் அதனை கடைப் பிடிக்காமல் முரண்படுகின்றனர் என்பது ஆச்சரியமாக இல்லையா? நான் கடுமையான காவல்துறை பணியில் இரவு பகலாக வேலைப் பார்த்தாலும் நோன்பினை விட்டதில்லை. நோன்பு இருக்கும்போது மாற்றார்கூட நம்மீது மதிப்புடன் நடந்து கொள்வார்கள் என்பதினை நான் கண்கூட பார்த்திருக்கின்றேன்.
1400 ஆண்டுகளுக்கு முன்பு நோன்பின் தத்துவத்தினை எடுத்து இயம்பிய அல்குரான், ரசூலல்லாவின் கதீசுகள் இன்றைய விஞ்ஞான உலகில் மெய்யாகி இருக்கின்றது என்பதினை மார்க் மாட்சென் கண்டு பிடிப்பு கூறவில்லையா?
ஆகவே சமுதாய மக்கள் தங்கள் சிறார்கள், இளைஞர்கள் ஆகியோரை பார்க்கின்சன், அல்ழேமிர் நோய் போன்றவை தாக்காமல் பாதுகாக்க வேண்டுமென்றால் அவர்களை நோன்பு நோற்கச் செய்து, தீய செயல் பக்கம் நாடாது இருக்க அறிவுரை சொல்ல வேண்டும்.
சாதாரண காலங்களில் கூட வயிறு முட்ட சாப்பிடாது அரை வயிற்றுடன் சாப்பிட்டு அடுத்தவர்க்கு பகிர்ந்து அளிக்கும் ஈகைக் குணம் வேண்டும்.
திருமண, மற்றும் விசேசங்களில் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் தவிர்க்க வேண்டும்.
பெரியவர்கள் உணவுக் கட்டுப் பாடுகளுடன் நடந்து கொள்வதால் அல்ழேமிர் போன்ற நோய்கள் தாக்காது இருக்கும். அத்துடன் மற்றவர்க்கு பாரமாக இருக்க மாட்டோம்.
உணவுக் கட்டுப் பாட்டு, ஆயாத்துள் குர்சி, அல்பாத்திஹா போன்ற ஆயத்துகளை ஓதி, வல்ல அல்லாஹ்வே எங்களுக்கும், எங்கள் சந்ததிகளுக்கும் பக்க வாதம், பார்க்கின்சன், அல்ழேமிர் போன்ற நோய்கள் தாக்காது பாதுகாக்க வேண்டும் என்று இரு கையேந்து துவா கேட்போமா?

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும், தங்களின் இந்த ஆக்கத்தை எங்களூர் வலைத்தளம் அதிரை எக்ஸ்பிரஸிலும் பதிவு செய்துள்ளோம். தொடர்புடைய சுட்டிகளுடன் படமும் இணைக்கப்பட்டுள்ளது.

    சுட்டி: http://adiraixpress.blogspot.com/2012/02/blog-post_24.html

    பயனுள்ள பதிவு. மென்மேலும் இத்தகைய பதிவுகளை எழுத அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக!

    ReplyDelete