Saturday 19 July, 2014

மனம் போன போக்கிலே மங்கையர் வாழலாமா?


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
சமீப காலங்களில் ஒரு முஸ்லிம் பெண் எழுத்தாளர், பெண் கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆண் படைப்பாளிகளால் புறக்கணிக்கப் படுகின்றார்கள் என்று 2014 ஜூலை மாதம் முதல் வாரத்தில் குரல் எழுப்பி உள்ளார். அந்த எழுத்தாளரே முஸ்லிம் சமூகத்தில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று புத்தக வாயிலாகவும், பத்திரிக்கைகளிலும் கருத்துக் களை வெளியிட்டு உள்ளார். அவர் கூற்று உண்மையா என்று ஆராய்வதிற்காகவே இந்தக் கட்டுரை புனையப் பட்டுள்ளது.
படித்த இளைஞர்கள் எழுத்தாளர்கள் பெண்களா அல்லது ஆண்களா என்று பார்ப்பதில்லை. அல்லது படைப்பாளிகளும் எந்த ஒரு படைப்பாளியையும் தரம் தாழ்த்திப் பார்ப்பதில்லை. ஒருவர் வாழ்க்கையில் முன்னேற இன்னொருவர் ஏணியா இருந்தால் அவர் பிற்காலாத்தில் சோபிக்க முடியாது.  தன் கையை ஊண்டி கர்ணம் போடுகிறவர்கள் தான் முன்னேற முடியும் என்பதினை உலக பெண் பிரபலங்கள் காட்டி உள்ளார்கள்.
உதாரணமாக 'தி அன் அமெரிக்கன்ஸ்' எழுதிய மோலி ஆண்டபோல் என்ற கவிஞர், 'வி நீட் நியூ நேம்ஸ்' எழுதிய புலவாயா, 'தி அற்காடிஸ்ட்' எழுதிய அமெண்டா கப்ளின், ஹன்டேர்ஸ் இன் தி ஸ்நொவ்' எழுதிய டிசி ஹிளியர்ட் ஆகிய படைப்பாளிகளும் பெண்களாக இருந்தாலும் அவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டை சொல்லவில்லை. இந்திய முஸ்லிம் பெண் படைப்பாளிகளான, 2000 ஆம் ஆண்டு சிறந்த கவிதைக்கான பரிசினை வென்ற சானாஸ் ஹபிப், ரசிதா  ஜஹான், அனிஸ் ஜங் ஆகிய படைப்பாளிகளும், அல்லது பல விருதுகள் வென்ற அருந்ததி ராயும் எப்போதும் குறை சொன்னது இல்லை.
அல்லது உலகில் தலை சிறந்த பெண்மணிகள் என்று கருதப் படும் ஜெர்மன் நாட்டு அதிபர் ஏஞ்சலினா மார்கள், பெப்சிகோலா நிர்வாகி இந்திரா நூயி, ஐசிஐசிஐ நிர்வாகி சந்தா கோச்சார், இந்தியன் தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் தங்களை பெண்கள் என்பதால் புறக்கணிக்கின்றனர் என்று ஒருபோதும் சொன்னதில்லை.
பின் எங்கே இந்த ஆணாதிக்க புகார் வந்தது?

ஒருவர் எப்படி எல்லாமே வாழலாம் என்ற ஒரு சமூகமும், ஒருவர் இப்படித் தான் வாழவேண்டும் என்ற இன்னொரு சமூகமும் உலகில் உள்ளது. முன்னாள் கூறப்பட்ட  வாழ்வு சுதந்திர சமூகத்தினை சுட்டிக் காட்டுகிறது.  அமெரிக்கா போன்ற நாடுகளில் 16 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பெற்றோர் கட்டுபாட்டில் இருப்பதில்லை. அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா கூட ஒரு பேட்டியில், தன் மகள்கள் வளர்ந்து விட்டதால் சில அறிவுரைகளுடன் கூடிய கட்டளைகள் பிறப்பிக்க வேண்டியதாக கூறியிருக்கின்றார். ஏனென்றால் அமெரிக்கா மற்றும் சில மேலை நாடுகளில் ஏன் நம் இந்திய நாட்டில் கூட திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வதும், ஓரினினை சேர்க்கையில் இன்பம் காணுவதும் கூடிக் கொண்டே வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்தில் ஒரு அதிசிய நிகழ்ச்சி நடந்துள்ளது. அதாவது ஒரு 12 வயது பள்ளிச்சிறுமி தன் தாயிடம் தன் வயிறு வலிப்பதாக சொல்லியிருக்கிறாள். பெற்றோர் டாக்டரிடம் அவளை பரிசோதித்துப் பார்த்தபோது அந்த சிறுமி கற்பமடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. அதற்குக் காரணமானவன் யார் என்றால் தன் பள்ளியில் ஒன்றாகப் படிக்கும் 13 வயது சிறுவனாம். நாம் என்றால் கூவோ, முறையோ என்று அழுது புழம்பியிருப்போம். ஆனால் அந்த சிறுமியின் பெற்றோர்  மகள் கற்பமுற்றிருக்கிறாள் என்று ஒரு விழா எடுத்து விருந்தும் வைத்தார்களாம். அது ஒரு சமுதாயம். ஆனால் அந்த சமூக அமைப்பில் நாமும் இருக்க வேண்டுமா என்பது தான் என் கேள்வியே!
இரண்டாவதாக கூறப்பட்டுள்ள வாழ்வு சமூகக் கட்டுபாடுடன் நடத்தப் படும் வாழ்வு ஆகும். ஒரு சமூகத்தில் பெற்றோர்,உற்றார், பக்கத்து வீட்டார், ஊரார் என்ற சமூக வட்டத்தில் அமைவதுதான் சமூக வாழ்வு. நமது தமிழ் சமூகத்தில் ஏன் பெண் பெரியவள் ஆனதும் பெற்றோர் சிலக் கட்டுபாடுகளை விதிக்கின்றனர். ஏனென்றால் வளரும் பிள்ளைகளுக்கு நல்லவன் யார் கெட்டவன் யார் என்று தெரிவதில்லை. தமிழிலில் ஒரு பழமொழியில், ' முல்லைச் செடிக்கு கள்ளிக்கொடி என்று தெரிவதில்லை' என்று சொல்லுவார்கள். பருவம் அடைந்ததும் பெண்கள் குணத்தினை சொல்வதிற்காக மேற்கூறிய பழமொழியினை சொல்வார்கள்.
பருவம் அடைந்ததும் ‘ஜன்னலை அடைத்து விடுவார்கள்’ என்று கூப்பாடு போடுவது, பருவம் அடைந்ததும் கோழி தன்  குஞ்சினை கட்டிக்காப்பது போன்ற செயலாகும்.  ஜன்னல் திறந்து இருந்தால, 'கதவைத் திற காற்று வரும் என்று'  கதைவிட்ட பெங்களூர் சாமியார் ஒரு நடிகையைக் கூட தன் காம விளையாட்டுக்கு விட்டு விடவில்லை என்பது போலாகிவிடுமல்லவா? ஆகவே தான் பெண்களை கண்ணியம் தவறாது வளர்க்கிறார்கள் அது எப்படித் தவறாகும்? ஒன்று சமூக அமைப்பில் இருக்க வேண்டும், இல்லையென்றால் ப்ரீ சொசைட்டி என்ற அமைப்புக்கு மாறி விடவேண்டும்.
இறைவனின் படைப்பில் விலங்குகள், பிராணிகள்,பறவைகள், செடிகள், ஏன் கடல்கள் கூட ஆண், பெண் என இருபிரிவாகப் படைத்துள்ளான். அவைகளில் ஆண் இனங்கள் தங்கள் பெண் இனங்களிடம் வெறி காட்டுவதோ, பெண் இனங்களை  அடிமைப் படுத்திக் கொடுமைப் படுத்துவதோ இல்லை.ஆண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய் வதும், இனப் பெருக்கத்தின் சுமைகளை தாங்குவதும் குஞ்சுகளை, குட்டிகளை பராமரிப்பதும் பெண் இனங்களே.அந்த இரு பாலாரிடமும் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் அவை இணக்கமாகவே வாழ்கின்றன. ஆனால் மனித இனத்தில் மட்டும் அந்த ஏற்றத் தாழ்வு, ஆணாதிக்கக் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அதன் ஒரு விளைவு தான் பெண் சிசுக் கொலை, வரதட்ச்சனைக் கொடுமை, பாலியல் வன்முறை, உடன்கட்டை ஏறுதல், விதவை இழிவு, முதியோர் புறக்கணிப்பு,போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நம்மை விட்டு நீங்க பெருமானாரின் கதீசுகளும், வழிமுறைகளும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஒழிக்கப் பட்டு விட்டன.
இஸ்லாமிய மார்க்கத்தில் ஆணாதிக்க விமர்சனத்திற்கு ஆளாவது முக்கிய காரணமாக இருப்பது ஹிஜாப் முறை கடைப் பிடிப்பது தான். பெண்ணை ஆணாதிக்கத்தின் உச்சக் கட்டக் கொடுமையில் இருந்து விடுவிக்க இஸ்லாம் பரிந்துரைக்கும் காரணமே ஹிஜாப் தான். ஏன் என்றால் ஹிஜாப் பெண்ணை கடைச்ச்சரக்காகவும், காட்ச்சிப் பொருளாகவும் ஆக்கி அவளது கற்ப்பை சூறையாடும் காமுகர்களிடம் இருந்து விடுவிக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கின்றது என்றால் மறுக்கமுடியாது. அது மட்டுமா? ஒரு பெண் பொது வாழ்வில் ஈடுபடும்போது அந்நிய ஆண்களின் காமப் பார்வையும், மற்றும் பிற தீங்குகளில் இருந்தும் ஏற்படும் இடையூறுகளில் இருந்து தவிர்த்து அவளது கடமையினை நிறைவேற்ற பயன் படுவது தான் ஹிஜாப் ஆகும். எத்தனையோ மேல்நாட்டுப் பெண்கள் ஹிஜாப் அணிவதை மிகவும் பெருமையாக பேசுகிறார்கள். ஏன் நம் தெருவில் நடமாடும், அல்லது வாகனங்களில் செல்லும் அந்நிய பெண்கள் கூட ஹிஜாப் அணிவதினை சென்னையில் பார்க்கவில்லையா?
ஒரு காலத்தில் ஹிஜாப் அணிந்து விளையாட்டில் கலந்து கொள்ள அனுமதியில்லை. ஆனால் இன்று உலகப் போட்டிகளில் ஈரான் நாட்டுப் பெண்கள் ஓட்டப் போட்டிகளிலும், கால்பந்து போட்டிகளிலும்  பங்கேற்பதினைக் காணலாமல்லவா? அதில் என்ன கண்ணியம் கேட்டு விட்டது?
உலகெங்கும் பெண்ணடிமைத்தனம் மேலோங்கியக் காலங்களில் பெண்ணுக்கு,
1) பெண் குழந்தை பிறப்பது இழிவல்ல எனக் கருதி அந்தக் குழந்தையினை உயிருடன் புதைக்கும் தாய் மனம் பதை பதைக்கும் பாதாகரமான செயலைத் தடுத்து ஒழித்தது.
2) கல்வி கற்பது ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்குமுள்ள உரிமை என்று கூறியது. 3) மானிட சமன்பாடு இஸ்லாத்தில் உண்டு.திருக் குரான்( 4"1), "மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனைப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆன்மாவில் படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்னர், அவர்கள் இருவரிலிருந்தும் பல ஆண்களையும்,பெண்களையும் பரவச் செயதான்'.
3) பெண்களின் உயிர், கண்ணியம், சொத்து ஆகியவற்றிக்கான உரிமைகள் ஆண்களைப் போன்றே வழங்கப் படுகின்றன. சொத்துக்கள் வைத்திருப்பது மட்டுமன்றி அதனை விற்கவோ, வாங்கவோ பூரண சுதந்திரம் பெண்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
4) ஆண்களைப் போன்று பெண்களுக்கும் பொருளீட்டும் சமத்துவத்தினை தந்தது இஸ்லாம். அமெரிக்காவில் கூட 2008 ஆண்டு பாரக் ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியான பின்பு தான் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம் வழங்கி ஆணையிடப் பட்டது.
5) ஆண்கள் இறந்து விட்டால் பெண்களுக்கு சொத்தில் பங்கு.
6)இஸ்லாமிய திருமணம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை உள்ள வாழ்க்கை ஒப்பந்தம் தவிர யாருக்கும் எவரும் அடிமையில்லை. பெண்ணுக்கு மகர் கொடுத்து செய்யுன் சீர் திருத்தக் கல்யாணம்.
7)ஆண்களுக்கு மட்டுமன்றி பெண்களுக்கும் விவாகரத்து பெரும் உரிமை உண்டு. அதேபோன்று பெண்கள் மறுமணம் செய்யவும் அனுமதியுண்டு.
8) பெண்களுக்கு சாட்சியம் சொல்ல உரிமை உண்டு இஸ்லாத்தில்.
9) போரில் கூட எதிரி நாட்டுப் பெண்களை பாதுகாப்போடு கண்ணியமாக நடத்த வேண்டும் என்று சொல்லி அதன் படி நடந்தது இஸ்லாம்.

ஆனால் அந்த இஸ்லாமிய மார்க்கத்திற்கு களங்கம் ஏற்படும் அளவிற்கு இஸ்லாமியப் பெண் ஒருவர் தன்னுடைய கருத்துக்களால் தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தி வருவது அவரது அறியாமையினைக் காட்டுகிறது.
தமிழில் ஒரு பழமொழி,'சீமைக்கு ராணியானாலும், வீட்டுக்கு அவள் மனைவி' என்பதினை எந்தப் பெண்ணும் மறக்கக் கூடாது.
இந்திய நாட்டில் முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி மனைவி ஒரு முறை, 'ஜனாதிபதி மாளிகையில் உள்ளூர் வெளிநாடு பிரமுகர்கள் பலருக்கு சமைத்துப் போட 250 சமையக் காரர்கள் இருந்தாலும் நான் என் கணவருக்கு என் கைப் பட சமைப்பதையே பெருமையாக எண்ணுகிறேன்'
என்று கூறினார்.

ஆகவே வாழ்க்கையில் முன்னேற பல்வேறு வழிகள் உண்டு. அதற்காக தான் சார்ந்த சமூகத்தினை தரம் தாழ்த்தி எழுதி ஒருக் காலமும் புகழ் அடைய முடியாது என்பது வெள்ளிடைமலையல்லவா?

No comments:

Post a Comment