Wednesday, 20 August 2014

என்று தணியும் இந்தத் சுதந்திரத் தாகம்?


15.8.2014 அன்று 68வது  சுதந்திர விழாவினை வெற்றிகரமாக கொண்டாடி உள்ளோம்.
இந்திய மக்களாகிய நாம் மொகலாயர், ஐரோப்பியர் என்ற அந்நிய படைகளை எதிர்கொள்ள ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்தெறிந்து ஹிமாலிய மலைபோன்று ஓரணியில் ஆர்த்தெழுந்து  வெற்றிகொண்டோம் என்ற மகிழ்ச்சியில், 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' என்று அனைத்து மக்களாலும் கொண்டாடப் படுகிறதா என்று ஒரு சுய கேள்வியினை இங்கே எழுப்புவது சரியானதாக இருக்கும் என நம்புகிறேன்!
ஒரு ஜனநாயக நாட்டில் அனைத்து மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க உறைவிடம், சுகாதரமானக் காற்று, சுத்தகரிக்கப் பட்ட தண்ணீர், தடையில்லா மின்சாரம், தட்டுத் தடுமாற வைக்காத ரோடு,  விண்ணையும் வெல்லும் கல்வி, கறைபடாத நிர்வாகம், அன்பொழுகும் அரசியல் நாகரிகம், உண்மை பேசும் பத்திரிக்கை உலகம்,அண்டை நாட்டவர் மதிக்கும் நாட்டுப் பாதுகாப்பு அரண், களங்கமில்லா நீதித்துறை, 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற சமூக நீதி, பொருளாதாரத்தில் தன்னிறைவு போன்றவை பெற்றால் மட்டுமே நம் சுதந்திரம் ஆனந்தத்தினைக் கொடுத்து விட்ட பலனைப் பெறமுடியும்.

இன்றைய சூழ்நிலை எவ்வாறு மேற்கூறிய கனவுகளிருந்து வேறு பட்டிருக்கின்றது என்பதினைக் கீழ்கண்ட எடுத்துக் காட்டுகள் மூலம் தெளிவாக்கலாம்:
1) 2014 ஆம் வருடத்தில் நமது நாட்டின் ஜனத்தொகை 127,02,72,105 ஆகும்.
இந்த ஜனத்தொகை இந்திய நாட்டினை உலகின் இரண்டாவது மிகப் பெரிய மக்கள்
தொகைக் கொண்ட நாடாக உயர்த்தி உள்ளது என்று பெருமைப் படலாம்.
ஆனால் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் 26 சதவீதமாக உயர்ந்து வேதனையாக உள்ளது.
அதாவது ஒரு நாளைக்கு தனி நபர் நாள் ஒன்றுக்கு ரூ.பத்து கூட சம்பாதிக்காத நபர் தான் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர் ஆவர். இந்தியா பெரிய நாடாக இருந்தாலும், உணவு உற்பத்திற்கு சில விவசாயிகளையே நம்பி இருக்க வேண்டி உள்ளது. இந்திய நாடு உற்பத்தியில் உலகின் பத்தாவது நாடாக இருந்தாலும் வறுமை, உஊழல், போதிய சத்துணவு இல்லாமை, சுகாதார வசதியின்மை, தீவிர வாதம், அரசியல் வாதிகளின் பிற்போக்குத் தன்மையினால் நமது நாடு பின்தங்கி உள்ளது. 
2) மகாத்மா இங்கிலாந்தில் படித்து, தென் ஆப்பிரிக்காவில் சட்ட வல்லுனராக பணியாற்றி, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயருடன் சரிசமமாக கோட்டு, சூட்டு அணிந்து வாதம் செய்யும் திறன் படைத்தவர். அப்படிப் பட்டவர் தமிழ் நாட்டிற்கு வந்தபோது இங்கே உள்ள உழவர் இடுப்பில் ஒரு துணியும், மேலில் ஒரு துணியும் அணிந்திருப்பது கண்டு வெதும்பி ஒவ்வொரு குடிமகனும் சரியான உடை அணியும் வரை தான் கோட்டு, சூட்டு அணிவதில்லை என்று கடைசி வரை வாழ்ந்தார். ஆனால் அவர் கனவு என்றுமே நிறைவேறாதா என்பதினை கிராமத்துப் பெண்கள் தங்கள் மானத்தினைக் கூட மறைக்க முடியாத கிழிந்த ஆடையினைப் பார்க்கும்போது கேள்வி கேட்கத் தூண்டுகிறதல்லவா?
3) தெரு ஓரங்களில் வானமே கூடாரமாக வாழும் மக்கள் ஒரு கோடியே, 87 லக்ஷம் ஆகும். இந்திய நாட்டில் ஏழை மக்கள் காலணிகள் 49,000 ஆகும் என்று 2008 ஆய்வு கூறுகிறது. அவை அனைத்தும் குளங்கள், ஏரிகள், கழிவுநீர் வாய்க்கால்கள், ரோடு ஓரங்கள் போன்றவற்றினை ஆக்கிரமித்துள்ளன என்றும் கூறுகிறது.  மாட மாளிகைகள் வாழும் சீமான்களும், அரசியல் வாதிகளும் இந்த அபலைகள் கண்டு மனம் இறங்குவார்களா? என்பது சந்தேகமே! காரணம், சமீபத்தில் பாராளுமன்ற அறை ஒதுக்கீடு பங்கு போடுவதிற்கே இரு கட்சி எம்.பிக்கள் முண்டாசு கட்டினது அனைத்துப் பத்திரிக்கைகளிலும் பார்த்து இருப்பீர்கள். வேறு எங்கே அவர்களுக்கு மக்கள் பிரச்சனைப் பற்றி சிந்திப்பதிற்கு!

4) அடுப்பெரிக்க மரவிறகு சாணம், உபயோகிப்பது, வாகனப் புகை, தொழிற்சாலைகளில் கக்கும் புகை, அறுவடைக்குப் பிறகு வைக்கோல் எரிக்கும் புகை, மத சடங்குகள் செய்யும் போது  உருவாக்கும் புகை ஆகியவைகள் நுரையீரலைப் பாதித்து மனிதன் உடல் நிலை பாதிக்கச் செய்கிறது. 2013 ஆம் ஆண்டு ஆய்வுப் படி இந்திய நாடு அமெரிக்கா, சீனாவினை விட 30 சதவீத சுகாதாரமற்ற காற்று உலா வருகிறது. என்று கூறுகிறது.
5) தண்ணீர் பற்றாக்குறை இயற்கை பொய்த்தல், மனித இனம் உபயோகித்தல், நதி நீர் வீணாக கடலில் கலப்பது போன்றவற்றால் ஏற்படுகின்றது. மனித இனம் சுவைக்கும் படி சுத்தரிகக்கப்பட்ட தண்ணீர் கிடைப்பதில்லை. இந்தியாவின் 80 சதவீத தண்ணீர் தேவை பூமியிலிருந்து கிடைக்கின்றது. அதில் பெரும்பகுதி தேக்கி வைக்கக் கூடிய திட்டங்கள் இல்லாததால் வீணாகிறது. குடிப்பதிற்கு தண்ணீர் இல்லாததால் விலங்கினங்கள் கூட காட்டிலிருந்து கிராமத்துக்குள் நுழையும் பரிதாபம் உள்ளது. இந்திய வற்ற ஜீவா நதிகள் கடலில் கலக்கலாமே தவிர அண்டை மாநில மக்கள் பயன்பர தரக்கூடாது என்ற குறுகிய எண்ணம் நம்மிடையே நிலவுவது முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 வரை உயர்த்தி தண்ணீர் பஞ்சம் தமிழகத்தில் நீங்க வழிவகை செய்யுங்கள் என்று உச்ச நீதி மன்றம் உத்திரவிட்டும், அதனை நிறைவேற்ற கேரளா தயங்குகிறது. சில அரசியல் வாதிகள் நதிகளை இணைத்தால் இயற்கை சூழல் கெட்டுவிடும் என்கின்றனர். ஆனால் உலகில் செயற்கையான கால்வாய்கள் அமைத்து வளம்பெற வாழும் நாடுகள் இருக்கத்தான் செய்கின்றன: உதாரணமாக:
1) அட்லாண்டிக் கடலையும், பசிபிக் கடலையும் இணைக்கும் பனாமா கால்வாய். சீனாவின் 1776 கிலோமீட்டர் இணைப்புக் கொண்ட கிராண்ட் கால்வாய் ,ரஷ்யாவில் 1375 கி.மீ.நீளம் கொண்ட கரர்க்கம் கால்வாய் , 1935கி.மீ.தூரமுள்ள சுயெஸ் கால்வாய்.
மக்களின் தண்ணீர் தேவையினை தீர்க்காவிட்டால் மக்கள் தெருவில் இறங்கி போராட நேரிடும் என்பதினை ஒரு எடுத்துக் காட்டு மூலம் தெரிவிக்கலாம் என நிக்கின்றேன்.  15.8.2014 அன்று உசிலம்பட்டி அடுத்த தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழாவினால் கொண்டாட வந்த தலைவரை அந்தக் கிராமத்து மக்கள் தங்கள் கிராமத்தில் தண்ணீர் தட்டிப்பாட்டினை நீக்கிவிட்டு கொண்டாடுங்கள் என்று முற்றுகையிட்டதாக செய்திகள் வந்தன. இதே நிலை பல இடங்களிலும் எதிர்காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையினை நீக்கவிட்டால்  என்பது திண்ணமே!
6) நமது நாட்டில் மின்சார தேவை 249 ஜிகாவாட்ஸ் ஆக உள்ளது. ஆனால் உற்பத்தி 168 ஜிகா வாட்ஸ் ஆகும். 2011 ஆம் ஆண்டு கணக்குப் படி 30 கோடி மக்கள் மின்சாரமில்லா வாழ்க்கையில்  போதிய மின் திட்ட உற்பத்தி இல்லாததால் அவதிப் படுகின்றனர். அதனால் உற்பத்தியும் பாதிக்கின்றது.
7) இந்தியாவில் 46,89,842 கி.மீ.தூரத்திற்கு ரோடு அமைத்திருப்பதாக 2013 ஆம் ஆண்டு சர்வே சொல்கிறது. அது உலகில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் சொல்கிறது. ஆனால் 25 சதவீத ரோடுகள் குண்டும் குழியுமாக இருப்பதிற்குக் காரணம் திறமை இல்லா இன்ஜினீயர்கள், வேலையாட்கள், ஒதுக்கப் பட்ட பணத்தினை உறிஞ்சும் அரசியல் மற்றும் அதிகாரிகள் என்றால் மிகையாகாது.
8) 2011 சர்வே படி 74.04 சதவீத மக்கள் தான் கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்கின்றார்கள். படிக்காதவர்களில் 98 சதவீத மக்கள் ஏழைகளாக இருக்கின்றார்கள். பள்ளிப் படிப்பிலிருந்து உயர் கல்வியினை தொடர்கின்றவர்கள் 20 சதவீத மாகவே உள்ளது. அதிலும் ஆராய்ச்சியில் ஈடுபாடு உள்ளவர்கள் எண்ணிக்கை .05 ஆகவே இருக்கின்றது. அதற்குக் காரணம் குடும்பத்தினைக் காப்பாற்ற முதலில் வேளையில் அமர்வதே பிரதானமாக உள்ளது.
9) இந்திய திரு நாட்டினை மட்டுமல்லாது உலகத்தினையே  உலுக்கிய மகா ஊழல் வருசையில் 1) நிலக்கரி ஒதுக்கீடு 2) கர்நாடக வக்ப் போர்ட் நிலம் ஒதுக்கீடு 3) உ.பி. மாநில என்.ஆர்.எச்.எம். 4) 2ஜி அலைக்கற்றை 5) உ.பியின் ஏழை மக்களுக்கு விநியோகிக்க வாங்கப்பட்ட தானியங்கள் வெளிமார்க்கட்டில் விற்கப்பட்ட வெக்ககேடு ஆகியவை மிகப் பெரிய ஊழல்கள் ஆகும். அதில் பல்வேறு அரசு ஊழியர்களும், அரசியல் வாதிகளும் அடங்குவர்.
10) அரசியலில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் பொதுமக்கள் நலன் கருதி பொது நன்மைகளுக்காக தலைவர்கள் ஒற்றுமையாக செயல்படுவது மேலைநாடுகளில் பார்க்கலாம். ஏன் புதுடெல்லி அரசியலிலும் காணலாம். ஆனால் மாநிலங்களில் அந்த ஒற்றுமை தலைவர்களிலே இல்லாததால் மாநிலங்கள் பின்தங்கி உள்ளன. அதனை முறியடிக்கும் விதமாக ஆந்திராவில் கவர்னர் முயற்சியில் தெலுங்கானா முதல்வரும், ஆந்திரா முதல்வரும் தங்கள் மாநில வேறுபாடுகளைக் களைய சந்தித்திருப்பது சிறந்த முன் மாதிரியாகும். இதனையே அனைவரும் பின்பற்றினால் நாடு நலன்பெரும்.
11) பத்திரிக்கை சுதந்திரம் வேண்டும் தான், அதற்காக தனிப்பட்டவர் சுதந்திரத்தில் தலையிட்டு ஒருதலை பட்சமாக விசாரணை நடத்தி, தண்டனையும் கொடுக்க சிபாரிசு செய்யும் அளவிற்கு செய்திகள் வெளியிடுவது எந்த வகையில் நியாயம் என்று கேட்கின்ற பலரும் இருகின்றார்கள் அல்லவா?
12) நீதித்துறை சமன் செய்து சீர்தூக்குவதாக இருக்க வேண்டும். ஆனால் அந்த நீதிபதி நியமனத்தில் ஒருதலை பட்சம், ஊழல் நீதி அரசர்கள் உச்ச்சமன்றத்திற்கு மற்றும் உயர் நீதிமன்றத்திற்கு நியமனம் போன்ற விவகாரங்கள் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கச்சே எழுப்பி இருப்பது உயர் நீதி மன்றங்களில் இனியும் நீதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இல்லையா?
13) இந்திய நாடு இரண்டாகப் பிரிந்த போது மதக் கலவரங்கள் ஏற்பட்டு சொந்த மண்ணிலே சொத்து சுகம் இழந்து அகதிகளானோம். அதன் உச்சக் கட்டத்தில் இந்தியநாட்டின் சுதந்திரத் தந்தை மகாத்மா காந்தியினையே இழந்தோம். ஆனால் கடந்த நான்கு மாதத்தில் 509 மதக் கலவரங்கள் நம் நாட்டில் நடந்திருக்கின்றது என்று ஊடகங்கள் சொல்லும் போது  சுதந்திர இந்தியாவில் இன்னுமா மதக் கலவரம் என்று கேட்கத்தோனாமலில்லை!
14) ஒரு நாடு தன் எல்லைப் புறத்தினை காப்பது மிக முக்கியமாகும். நாம் மூன்று புறத்திலும் கடலாலும், வடபுறத்தில் மலையாலும் சூழப் பட்டுள்ளோம். 1971 ஆம் ஆண்டு பங்களாதேஸ் யுத்தத்தின்போது இந்தியாவினை அமெரிக்கா தன் போர்க்கப்பலை இந்து மகாக்  கடல் பகுதிக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக அனுப்பி பயமுறுத்தும் வேளையில் ஈடுபட்டது. 1962 ஆம் ஆண்டு சீனா நமது எல்லையில் ஊடுருவியது, அதில் நமது படைகளுக்கு தோல்வி கிடைத்தது. ஆனால் அதன் பின்பு வந்த கார்கில் போர், சியாச்சன் போர்களில் நாம் பாகிஸ்தானை வென்றோம். இன்று கூட சீனா நமது எல்லையில் ஊடுருவி சீண்டுகிறது. ஆகவே இந்திய நாடு பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்றால் தனது படைபலத்தினை வல்லரசு நாடுகளுக்கு இணையாக  உயர்த்த வேண்டும்.
நான் மேற்கோடிட்ட செயல்கள் சுதந்திர இந்தியாவிற்கு களங்கம் விளைவிக்கின்றன. எப்போது நம் நாடு உணவு, உடை, இருப்பிடம், மின்சாரம், தண்ணீர், ரோடு வசதி, உயர்கல்வி, மலிவான மருத்துவ சிகிச்சை, மாசில்லா காற்று போன்றவை கிடைக்கப் பெருகின்றோமோ அப்போதுதான் நாம் உண்மையான சுதந்திரத்தினை சுவைக்க முடியும் என்றால் மிகையாகுமா?


No comments:

Post a Comment