Tuesday, 20 November 2018

தேனிலும் மகத்துவம், தேனீயிலும் மருத்துவம்-இறைவன் படைப்பு!



(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,பிஎச், டி.ஐ.பீ.எஸ்(ஓ )

அல் குரான் அத்தியாயம் 16 அந் நஹ்லில் அல்லாஹ் மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து படைத்ததினையும், அவனை படைத்து அனாதையாக விடாது அவனுக்கு உணவு, உடையினை அவனே படைத்ததினையும், அவனுக்கு வாகன வசதிக்கு உபயோகப் படும் படி, குதிரை, கோவேறு கழுதைகளையும் படைத்தது பற்றியும்,  மனிதன் இறை தேடுவதற்கு சூரிய பகலையும், ஓய்வெடுப்பதிற்கு  இரவான சந்திரனையும் படைத்து, அதனை தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து , கடலிலிருந்து உணவுப் பொருட்களையும், வித, விதமான முத்துப் போன்ற ஆபரணங்களையும் படைத்து, மலைகளை பூமி சமநிலையில் இருக்கும்படி ஊண்டியுள்ளதினையும் தெள்ளத் தெளிவாக கூறுகிறது என்பதினை சான்றோர் அறிவர். அத்துடன் தேனின் மகிமையையும் எடுத்தும் சொல்லியுள்ளது.
ஆனால் தேனீயின் மருத்துவக் குணத்தினை ஒரு சிலரே அறிந்திருப்பார்கள். நாம் சென்னை அபிராமி மால் போன்ற மால்களுக்கு செல்லும் போது  சிலர் தண்ணீர் தொட்டியில் மீன்கள் விளையாட காலை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பதினை காணலாம். கிராமங்களில் குளங்களில் குளிக்கும்போது மீன்கள் நமது கால்களை வருண்டும். அப்போது நாம் காலை எடுத்து விடுவோம். ஆனால் அதே மீன் தொட்டிகளில் மணிக்கணக்கில் காலை வைத்துக் கொண்டு மாலில் உட்கார்ந்து இருப்பார்கள். அதற்கு 'பிஷ்' தெராபி என்பார்கள். அந்த மீன்கள் தாய்லாந்திலிருந்து தருவிக்கப் பட்ட மீன்களாகும்.  அவ்வாறு செய்வது மூலம் கால்களில் சுரணை வருவதிற்கு  என்று சொல்வார்கள், 
வயதாகிவிட்டால் மூட்டு வலிகள், கால், கைகளில் சுரணை என்ற உணர்ச்சி மங்கி விடும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், அல்லது அமர்ந்திருப்பவர்களுக்கும் கால் மரத்துப் போகும். அதனை 'ருமாட்டிசம்' என்று அழைப்பார்கள். அது போன்ற ருமாட்டிசத்தினை குணமாக்க டாக்டர்களை அணுக வேண்டியிருக்கும். ஆனால் அதனையே ஒரு எகிப்திய நாட்டு சாதாரண மனிதர் தேனீ மூலம் குணமாக்கியுள்ளார் என்று அறியும்  போது ஆச்சரியமாக இல்லையா. விஷ பாம்புகளின் விஷம் உயிர் கொல்லி நோய்களை குணமாக்கும் என்று விஞ்ஞானப் பூர்வமாக சுத்திகரிக்கப் பட்டு பயன் பாட்டிற்கு கொண்டு வர பட்டுள்ளது. ஆனால் தேனீயை மனித உடலில் கடிக்க விடப் பட்டு வாத நோயினை அந்த மனிதர் குணமாக்கியது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தானே!
வசனம் 68 -69 ல்,  அல்லாஹ், தேனீக்கு வஹி மூலம், 'மலைகளிலும், மரங்களிலும் நீ கூடு கட்டிக்கொள், பல தரப்பட்ட பழங்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக் கொள், சீரான வழியில் சென்று கொண்டிரு' என்று கூறியும், மக்களுக்கு அறிவுறுத்தும்படி தேனின் வயிற்றிலிருந்து ஒரு வித திரவம்  வெளிப் படுகிறது(தேன்) தேனீ மூலம் மக்களுக்கு நிவாரணம் உண்டு என்று கூறுகின்றான்.
அந்த இறை வசனத்தினை எகிப்தில் வாழும் உமர் அப்துல் ஹாசன் என்பவர் தன்னுடைய ஆராய்ச்சியில்  அப்படி என்ன மருத்துவ குணம் தேனீயால் உள்ளது என்று செயலில்  இறங்கினார். அதன் பயனாக ஒரு தேனீ வளர்க்கும் பண்ணையினை ஆரம்பித்தார். தேனீக்களினை தினசரி பராமரித்தார். அப்படி பராமரிக்கும் அவர் கையில் தேனீ கடிப்பதினையும் அதனால் அவர் கையில் உள்ள இயற்கை வலி நீங்குவதையும் கண்டார். உடனே அவருடைய ஆராய்ச்சியினை கை, கால் மரமரத்துப் போனவர்களுக்கு தேனீக்களை கடிக்கவிட்டுப் பார்த்தார். என்னே ஆச்சரியம் கை, கால்களில் உணர்வு வந்தது. அதன் பின்னர் அவரை நோக்கி ருமாட்டிசம் நோயாளிகள் தேனீக்கள் போன்று அவரிடம் குவிய ஆரம்பித்து விட்டனர். அவர் இலவசமாகவும் சிகிச்சை அளிக்கின்றாராம். அந்த படம் இணைத்துள்ளேன்.
இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் அகிலத்தினை படைத்து, ஆறறிவு கொண்ட மனிதனையும் படைத்து அவன் ஆராய்ச்சி செய்வதற்காக அல் குரானையும் படைத்திருப்பதால் குரானை அர்த்தம் தெறிந்து ஓதினால் அகிலமும் வெல்லலாமல்லவா?


Tuesday, 13 November 2018

முதலாம் உலக யுத்தத்தின் தாக்கமும்-அதனால் ஏற்பட்ட ஆக்கப் பூர்வ பலனும்!


முதலாம் உலக யுத்தத்தின் தாக்கமும்- பலனும்!
( டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச். டி, ஐ.பீ. எஸ்(ஓ)

11.11.2018 ஞாயிறு அன்று பாரிஸ் நகரில் உலக தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி முதலாம் உலகப் போர் முடிவுற்றதினை நினைவுபடுத்தும் விதமாக விழா எடுத்தது அனைவருக்கும் தெரியும். உலக முதலாம் யுத்தம் 1914 முதல் 1918 வரை நடந்தது. அந்த யுத்தத்தில் ஒண்றரைக் கோடி மக்கள்- வீரர்கள் உட்பட பலரும் கொல்லப் பட்டார்கள், மற்றும் இரண்டு கோடியே முப்பது லட்சம் பேர்கள் படுங்காயம் அடைந்தார்கள். அந்த யுத்தம் 11.11 .1918 ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் வட பாரிஸ் நகரில்  பெர்டினாண்ட் ரயிலில் கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. பிரான்ஸ் கமாண்டர் பெர்டினாண்ட் ஜெர்மன் நாடு மறுபடியும் போர் தொடங்காதவாறு மிகக் கடுமையான கட்டுப் பாடு கொண்ட ஒப்பந்தம் கையெழுத்திடச் செய்தார். ஆனால் போர் நின்றதா என்றால் இல்லை. காலச்சக்கரம் சுழலும் போது அதே பிரான்ஸ் நாட்டினைப் பழிவாங்க ஜெர்மன் அதிபர் ஹிட்லர் 1940 ம் ஆண்டு அதே பெர்டினாண்ட் ரயிலில் போர் நிறுத்த ஒப்பந்தம் பிரான்ஸை செய்ய வைத்த வரலாறும்  உண்டு. இது ஒரு பக்கம் இருந்தாலும் முதலாம் உலகப் போரின் மூலம் பல முக்கியமான சமுதாய நன்மைகளும் உலகிற்கு  கிடைத்திருக்கின்றது. அவை எவை என்று நாம் காண்போம்:
1 ) உலகில் பகல் நேர வேலையினைக் குறைத்து எரிபொருளினை மிச்சமிடும் செயல் முறையினை முதல் முதலில் ஆஸ்ட்ரோ-ஹங்கேரியன், பிறகு ஜெர்மன் மற்றும் கூட்டுப் படை நாடுகள்  கடைப் பிடித்தது. 
2 )  பத்தொன்பதாம் நூற்றாண்டில் டைம் பீஸ்கள் நேரத்தினை அறிவதற்காக உபயோகப் பட்டாலும், முதல் உலகப் போரின் போதுதான் வீரர்கள் கைகளில் அணிந்து நேரம் பார்க்கும் விதமாக ரிஸ்ட் வாட்ச்கள் வந்தன. போர் முடிந்ததும் அவைகள் மெரி கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பரிசுப் பொருளாகவும் அளிக்கப் பட்டது.

3 ) ரத்த வங்கி பற்றி 1600 ஆண்டே அறிந்திருந்தாலும் , அதன் செயல் பாடு முதல் உலகப் போரின் பயனாக உலகிற்கு தெரிந்தது. அப்போது மனிதனுக்கு மனிதன் ஒரே நேரத்தில் இரத்தம் மாற்றும் முறை அறிமுகப் படுத்தும் பழக்கம் ஏற்பட்டது. முதலாம் உலகப் போரில் காயம் படும் வீரர்களுக்கு இரத்தம் அளிப்பதற்காக அமெரிக்கா நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி நிபுணர் ‘கேப்டன் ஆஸ்வேல்டு ராபர்ட்சன்’   1917 ம் ஆண்டு இரத்த சேமிப்பு வங்கியினை நிறுவி இன்று உலகம் முழுவதும்  பிரபலமாகியுள்ளது.
4 ) முதலாம் உலகப் போர் ஹாலிவுட் அமெரிக்காவில் அமைந்து யுத்த வீர தீர செயல்களை தத்துருவமாக படம் பிடித்துக் காட்டும் அளவிற்கு பிரபலமானது. ஆஸ்க்கார் முதல் விருதினை 'விங்ஸ்' என்ற யுத்த திரைப் படம் வென்றது ஒரு கதை.
5 ) ஒவ்வொரு நாட்டின் வெட்ப தட்ப சூழ்நிலைக் கேட்ப மேலுடைகள் ‘சார்ள்ஸ் மெஷின்டோஸ்’ என்ற விஞ்ஞானி கண்டு பிடித்தார். அதன் மூலம் கைத்துப்பாக்கி, வரைபடம், தேவையான பொருள்கள் கொண்டு செல்லும் விதமாகவும் அவைகள் அமைந்தன.
6 ) அமரிக்க ராணுவ வீரர்களின் சட்டைகளில்  பாக்கெட் இல்லாததினால் பணம், பொருள்கள் சட்டைகளில் எடுத்துச் செல்லும் அளவிற்கு முதல், முதலாக ஜிப்புகள் கொண்ட சட்டைப் பைகள் தைக்கப் பட்டன.அதன் மூலம் ஜிப்புகள் உபயோகம் உலகம் முழுவதும் பரவியது.
7 ) உலகப் போரில் பெண்கள் உதவி செய்தது மூலம் பெண்களுக்கான ஓட்டுரிமையினை அடைய மேற்கு அமெரிக்கா முழுவதும் 1917 ம் ஆண்டு அமல் படுத்தப் பட்டது. பிற்காலத்தில் அமெரிக்கா ஜனாதிபதி உட்ரா வில்சன் காலத்தில் 1920 ம் ஆண்டு அமெரிக்கா அரசியல் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி அமெரிக்கா முழுவதும் பெண்களுக்கான ஓட்டுரிமை அமல் படுத்தப் பட்டது.
8 ) யுத்தத்தில் காயம் பட்டவர்களுக்கு மருத்துவ உதவி அளித்த மகளிர் நர்ஸுகள் மாதவிடாய் காலத்தில் ‘கிம்பெர்லி கிளார்க்’ கம்பனி தயாரித்த மரத்தூள்களினால் செய்யப் பட்ட சானிட்டரி நாப்கின்களை  உபயோகித்தனர். அதுவே பிற்காலத்தில் பஞ்சுனால் தயாரிக்கப் பட்ட சானிட்டரி நாப்கின்கள் உருவாக வழிவகுத்தது. கிராமங்களில் இன்னும் பெண்கள் கிழிந்த துணிகளை நாப்கின்களாக பயன் படுத்துவதை இங்கு காணலாம்.
9 ) போரில் குண்டுக்காயங்கள் பட்டு சிதைந்த உடலில் அவைகள் தெரியாத படி  தையல் போடும் பிளாஸ்டிக் தையல் முறையினை முதன் முதலில் ஆங்கிலேய ராணுவ சர்ஜன் ஹெரால்டு கில்லிஸ் கண்டு பிடித்து 11000 வீரர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கின்னஸ் சாதனை புரிந்தார். அதுவே பிற்காலத்தில் முன்னோடியாக அமைந்தது.
11 ) ஜெர்மன் ராணுவத்தினர் மாமிச உணவு கெடாமல் இருப்பதிற்காக ‘மாயோர் ஆடினார்’ என்பவர் சோயா பவுடரை தடவிய மாமிச துண்டுகள் சிறிதாக(சாசேஜ்) வெட்டி பதப்படுத்தி பிற்காலத்தில் போர்க்களத்தில் சூடு பண்ணி சாப்பிடும் முறையினை கண்டு பிடித்து அதற்கு காப்புரிமையும் பெற்றார்.
12 ) உலக நாடுகள் சுற்றுலாவினை ஊக்குவிக்க கூட்டு  நாடுகள் சபையின் வழிகோட்டிற்கு   இணங்க 1920 முதல் ஒரே விதமான பாஸ்போர்ட் என்ற கடவு சீட்டு அந்தந்த நாட்டின் பெயருடன் வழங்க வழி வகுத்தது.

உலக யுத்தங்கள் பல அழிவுகளை ஏற்படுத்தினாலும், பற்பல நன்மைகளைகளுக்கும் முன்னோடியாக அமைந்திருந்தது என்றால் ஏற்புடையது தானே!