Sunday, 13 January 2019

பொங்கல் வாழ்த்துப்பா!



ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
ஆனை கட்டி போரடித்த- தரணியிலே
அந்த யானையே ஊருக்குள் நுழைந்து
போரடிக்க நெற்பயிரெங்கே என்று
கேட்கும் காலமானதே இன்று
தை பிறந்தால் வழிப் பிறக்கும் தங்கமே-தங்கம்
 சுவைக்கு கரும்பு, பசிக்கு சக்கரைப் பொங்கல்,
உடுக்க  பட்டாடை சகிதம் ஆனந்தக் கூத்தாடி
உழவனின் தோழன் எருதுக்கு ஒரு விழா
மஞ்சு விரட்டு, எருது கட்டு, ஜல்லிக் கட்டு
அகிலமெங்கும் தமிழ் புகழ் பரப்பும் தை திருநாள்.

குடிசையில் வாழ்ந்த கூன் விழுந்த பாட்டி
கொஞ்சம், கொஞ்சமாய் சேர்த்து
அஞ்சரைப் பட்டியில் வைத்த
ஆயிரம் ரூபாயும் செல்லாமல் போச்சே!

யார் கண் அல்லது ஊரார் கண் பட்டதா
உனக்குத்தான் தெரியும் ஏகனே,
மண்ணில் தாமிர கலவை கேன்சர்
கொடிய நோய் தாக்கம் தடுக்க
வெகுண்டது தூத்துக்குடி நகரம்
வீர போரில் சூழல் குண்டு பாய்ந்தது
வீர மறவன் மட்டுமல்ல வீரத்தாயும் தானே!

நடப்பதிற்கே செருப்பில்லை, எட்டு வழி சாலை ஏனோ
பொன்னைக் காப்பது போல மண்ணைக் காத்த
சேலம் மக்கள் வெகுண்டனர் குரல் எழுப்பி
நீதி அரசர்கள் வநதார்கள் கருணை காட்ட
மரம் நடும் திட்டம் ஒரு பக்கம்
அந்த மலையையே குடையும்
நியூட்ரான், எலெக்ட்ரான், மெதேன் 
என்று இனிப்பான கசப்பு 
மருந்து பசப்பு வார்த்தை 
பயிர் விளையும்விளை நிலமும் 
பாழாக்க  எங்கே சொல்வது என் வேதனையை 
வயலிலும் வாழ்வில்லை, ஒதுங்கும்
 மலையிலும் வழியில்லை !

மண்ணையும், மரங்களையும் புரட்டிப் போட்ட
கஜா காட்டேரிப் புயல் மற்றொரு பக்கம்-பலன்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற
தமிழ் மண்ணில்-துணிப் பையுடன்
ரேஷன் கடைகளில் மானியம் வாங்க
காத்திருக்கும் தரணி புகழ் சமுதாயமே!

வருடம் தோறும் நண்பர்களுக்கு பொங்கல்
 நல் வாழ்த்துப் பாடும் நான்-இன்று
வாங்கி விட்டாயா அரசு மானியம் என்று
கேட்கும் பரிதாப நிலையா வருவது
அடுத்த வருடமட்டுமல்ல இனி
இந்த நிலை என்றுமே வரக்கூடாது
என்று இறைவனை வேண்டுகிறேன்!





No comments:

Post a Comment