Sunday, 3 February 2019

உம்மத்தின் மகிழ்ச்சியும், திருஷ்டியும்!



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ )
2019 ம் ஆண்டு ஜனவரி 26 ந் தேதியிலிருந்து 28 ந் தேதி வரை தமிழக முஸ்லிம்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுத வேண்டிய நிகழ்வு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள இனாம் குளத்தூரில் நடந்துள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
பொட்டல் காடுகளாகவும், முட்கள் நிறைந்த தரிசு நிலங்களாகவும் உள்ள இடங்களில் வெள்ளையுடையும், தலையில் தொப்பியும், தாடியும் வைத்த முஸ்லிம் மக்கள் உழவர் நஞ்சை நிலத்தை பண்படுத்த செய்யும் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.   அந்த நிலங்கள் யாருடையது என்று நீங்கள் கேட்கலாம். அவைகள் அங்குள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் சொந்தமாம். அவைகளை விலை பேசி வாங்கவோ அல்லது வாடகைக்கு, அல்லது குத்தகைக்கு எடுக்கவோ இல்லையாம். அந்த ஊரில் உள்ள மக்களை அணுகி முஸ்லிம்கள் மார்க்க சம்பந்த சொற்பொழிவுகளை நிகழ்த்த வேண்டும் என்று கேட்டதும் அவர்கள் வேண்டுகோளை ஏற்று இரவலாக கொடுக்கப் பட்டதாம். அதுதான் தமிழர் பண்பாடு மற்றும் கலாட்சாரம். அது வட இந்திய கலாட்சாரத்தினை விட்டு வேறுபட்டது என்பதினை காட்டியதாம்.
            நான்கு மாதத்திற்கு முன்பு எந்த முன் அறிவுப்புமில்லாமல் எறும்புபோல சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த 'பாய் ' மார்களைக் கண்ட மணப்பாறை நுண்ணறிவுப் பிரிவு ஏடு அங்கு என்னதான் நடக்கின்றது என்று பார்த்தபோது நிலங்களை பண்படுத்தியும், முட்புதர்களை களையெடுத்தும், நீர்நிலைகளை ஆழப் படுத்தியும், செயற்கை தண்ணீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தும், பிரமாண்டமான பந்தல் எழுப்பியும், தற்காலிக கழிப்பறைகள் அமைத்தும், உணவிற்காக சிறு சிறு கூடாரங்கள் எழுப்பியும், வானங்கள் நிறுத்துவதிற்காக வசதி வாய்ப்புகள், சாலைகள் அமைத்தும், பூமியினை சமப் படுத்தியதோடு மணலும் பரப்பப் பட்டதாம். அங்கு வேலைகள் செய்து கொண்டிருந்தவர்களை அணுகி அங்கே என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபோது அல்லாஹ்வின் கட்டளைகளை விளக்கப் போகிறோமென்றும், மக்கள் தீய செயல்களிருந்து விடுபட்டு, நலமுடன் வாழ துவா செய்யப் போகின்றோம் என்றும் கூறியதை தன்னுடைய ஆய்வாளரிடம் தெரிவித்தாராம்.
            1997 ம் ஆண்டு மே மாதம் 28 ,29 ந் தேதிகளில் வேலூர் மாவட்டம் மேல்விசாரம் மாநாட்டிற்கு பின்பு   நடக்கும் முஸ்லிம்கள் மாநாடு இதுதான். தமிழ் நாட்டில் மட்டுமல்ல தென்னாட்டின் பல பகுதிகளிருந்து வந்த இஸ்லாமிய பெருமக்கள் கூடியதினை அங்கு கண்டார்கள். இந்த மாநாட்டிற்கு வீடுதோறும், நோட்டீஸ் கொடுக்கவில்லை, வீதிதோறும் ஒலி பெருக்கி வைத்து காது கிழிய கத்தவில்லை, தெரு முனைகளில் விளம்பர பேனர்களில்லை, டிராபிக் ராமசாமி போன்ற அனுமதியில்லா பேனர்கள் எடுங்கள் என்று போராட்டம் நடத்த வேலையில்லை, வீட்டுச்சுவர்களிலோ அல்லது அரசு அலுவலக கட்டிடங்களின் சுவர்களிலோ விளம்பரங்கள் இல்லை. மாறாக ஒவ்வொரு மகல்லாவிலும் ஜும்மா தொழுகைக்குப் பின்பு அறிவிப்பு மட்டும் செய்யப் பட்டது. ஆனால் அங்கு கூடியதோ மனிதக் கடல் போன்று இருந்ததாம். முஸ்லிம்கள் சாரை, சாரையாக ஒன்று கூட ஆரம்பித்தார்களாம். அங்கே ரயிலில் வருபவர்கள் இறங்குவதிற்காக ரயில்வே அமைச்சகமும் ஒவ்வொரு ரயிலும் நின்று செல்ல வசதி செய்யப் பட்டதாம், வாகனங்களில் வருபவர்கள் நெடுஞ்சாலை  டோல் கேட்டுகளில் கட்டணம் செலுத்தாமல் விரைவாக செல்ல வழிகைகள் மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் மூலம் செய்யப் பட்டதாம், மாநில அரசும் தேவையான தண்ணீர் வசதிகள், மருத்துவ வசதிகள் செய்து கொடுத்ததாம். சமுதாய அமைப்புகளான தா.மு.க. எஸ்.டி.பி.ஐ., எம்.ஜே.கே போன்ற அமைப்புகளும் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி உதவிகள் செய்தார்களாம்.  அங்கு கூடிய அனைவரும்  எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்து, 'லாயிலாஹ இல்லல்லாஹ்  ஹாஸ்பி ரப்பி ஸல்லல்லாஹ், மாபி கல்பி ஹைருல்லாஹ், நூரு முகமது ஸல்லல்லாஹ்' என்ற கோசம் வானைப் பிளந்ததாம்.
            இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலமைக் காவலர் ஒருவர் இரவு பணி முடித்து மணப்பாறை திரும்பும்போது திண்டுக்கல் செல்லும் முஸ்லிம்கள் காரில் பயணம் செய்யும்போது தன்னுடைய அனுபவம் குறித்து கீழ்கண்டவாறு கூறிக்கொண்டு வந்தாராம். 'நான் எத்தனையோ முக்கிய பிரமுகர்கள், பொதுக் கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன், அங்கெல்லாம் ஒலிபெருக்கிகள் மூலம் காதுகள் செவிடாகும், கழிப்பிட வசதி இருக்காது, உணவுக்கு அலைய வேண்டும், கூட்டத்தினருடையே தள்ளுமுள்ளு, நெரிசல்  ஏற்படும், ஒருங்கிணைப்பாளர்களிடையே சண்டை சச்சரவுகள் வரும் ஆனால் உங்கள் பாய் மார்கள் நடத்திய மாநாடு அவைகள் எதுவுமே இல்லை. அது மட்டுமல்லாமல் எங்களுக்கு ஒரு வேலையும் அங்குள்ள தொண்டர்கள் கொடுக்கவில்லை. என்னைப் போன்று பணியில் ஈடுபட்ட மற்ற காவலர்களுக்கும் வயிறார உணவு, தாகம் தீர்க்க தண்ணீர், களைப்பாற தேநீர் கொடுத்து விழுந்து விழுந்து உபசரித்தார்கள். அதனைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டேன் என்று வாயார புகழாரம். அதுவும் முக நூலில் வந்தது.
            எந்த ஒரு நல்ல விழாவிற்கும் திருஷ்டி போன்று ஒரு பாதகமான செயல் நடக்குமாம். அதேபோன்று இஸ்திமா நடக்கும் நாட்களில், வட தமிழக முஸ்லிம்கள் செல்லும் வழியான உளுந்தூர்பேட்டையில் ஒரு முஸ்லிம் அமைப்பினர் அதே நாளன்று குரான் மாநாடு என்று ஒன்று நடத்தியதாம். அதற்காக ஊர்கள் தோறும் வீதிவீதியாக வண்டிகளில் ஒலி பெருக்கி வைத்து அறிவிப்பு செய்தும், சுவர்களில் விளம்பரம் செய்தும், பேனர்கள் கட்டியும் பெரிய விளம்பரம் செய்து, பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்றும் அறிவிப்பு செய்யப் பட்டதும் அனைவருக்கும் தெரியும்  அப்படி கூடிய பெண்களை படமெடுத்து முகநூல், வாட்ஸாப்ப் போன்ற இணைய தளங்களில் செய்தி அனுப்பியதும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஏற்கனவே அந்த அந்த அமைப்பின் தலைவர் இருவர் மீது பாலியல் சம்பந்தமான புகார்கள் வந்தும், அது சம்பந்தமாக பஞ்சாயத்து நடந்தும் பிறகு நீக்கப் பட்ட பின்னரும், பெண்களை வரவழைத்து இரவு நேரங்களில் கூட்டம் நடத்தியது சரியான செயல் தானா என்று சிந்திக்க வேண்டாமா?  முஸ்லிம் பெண்கள் என்றால் ஹிஜாப் அணிந்து பிற ஆண்கள் கூட நேசமாக உறவாட மாட்டார்கள் என்றும், வீட்டில் கூட பெண்கள் மறைப்புடன் வாழ்வார்கள் என்றும், 2001 முதல் 2016 வரை ஆய்வு நடத்திய அமெரிக்கா உளவுப் படையான எப். பி.ஐ. அமெரிக்க 30 லட்சம் முஸ்லிம்கள் பற்றி அறிக்கை கொடுத்துள்ளதாக தகவல் தருகின்றது. அதுவும் எங்கே தாராள கொள்கை கொண்ட அமெரிக்காவில். ஆனால் பெண்டு பிள்ளைகளை ஊரியில் பாதுகாப்பாக இருங்கள் என்று வெளி நாட்டுக்கோ அல்லது வெளி ஊர்களுக்கோ நம்பிக்கையுடன் செல்லும் பெண்களை கால் கிளப்பி அந்நியர் வெளி ஊர்களுக்கு இரவில் வரவழைக்கலாமா அதுபோன்ற செயல்கள் தவறான வழக்கு வித்திடாதா? அதோடு முஸ்லிம்கள் ஒரு கட்டுக்கோப்பான ராணுவம் போன்றவர்கள் என்று மாற்று மதத்தினர் நினைத்திருக்கும் இதுபோன்ற போட்டி மாநாடு தேவைதானா?  மதக் கலவரம் ஏற்பட்டு அந்த பெண்கள் குழந்தைகளுக்கு தீங்கு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது?
            உத்திர பிரதேசத்தில் 45 நாட்கள் அலஹாபாத் நகரில் கும்ப மேளா நடப்பது அனைவரும் தொலைக்காட்சியிலும், பத்திரிக்கை வாயிலாகவும் படித்திருப்பீர்கள். அங்கு 25 லட்சம் மக்கள் திரண்டு கங்கையில் புனித நீராடுவதாக தெரிகின்றோம். அப்படி நடக்கும்போது அவர்களுக்கு போட்டியாக இந்து மதத்தினர் அங்கேயே அல்லது வேறு இடத்திலோ அந்த மாநிலத்தில் எந்த கூட்டத்தினையும் சேர்கின்றார்களா அல்லது அரசுதான் நடத்த விடுமா? ஊர் துண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று ஒரு பழமொழி. முஸ்லிம்கள் அமைப்பின் சிதைப்பினை எதிர்நோக்கும் அமைப்புகளுக்கு இதுபோன்ற போட்டி மாநாடு சக்கரைப் பொங்கல் போன்று ஆகாதா?
            உலக முஸ்லிம்கள் பிரிந்து வாழ்வதினால் படும் இன்னல்களை நாள் தோறும் செய்திகளாக வந்த வண்ணம் உள்ளதல்லவா? இந்த சூழ் நிலையில் மறைந்த கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் 5 .5 .1970 நடந்த அலிகார் கூட்டத்தில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாது முஸ்லிம்கள் மத்தியில் பேசும்போது, 'நாம் சிறுபான்மையினர், நாம் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது  கட்டாயம். பெரும்பான்மை சமூகத்தினர் எந்த கட்சியிலானாலும் பிரிந்திருக்கலாம், ஆனால் சிறுபான்மையினர் பிரிந்து வாழவே கூடாது. அவர்கள் சேர்ந்து வாழ்வது திருக்குரானில் கட்டளையாகும்'. காயிதே மில்லத் அவர்கள் சொல்லி சென்ற வார்த்தைகளை உளுந்தூர்பேட்டையில் மாநாடு நடத்திய அமைப்பினரும், தப்லீக் இரு பிரிவு குழுவினரும் மற்ற முஸ்லிம் அமைப்பினரும் உணர்ந்து செயல் பட்டால் தமிழக முஸ்லிம்கள் வளம் பெரும் அல்லது அவர்களுடைய எதிர்காலம் கானல் நீராகும்தானே!
           
           


No comments:

Post a Comment