Thursday, 7 March 2019

எடுப்பார் கைப்பிள்ளையாக மாறியதேன் இஸ்லாமிய இயக்கம்?



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்.டி.ஐ.பீ.எஸ்(ஓ )
இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு இந்திய முஸ்லிம் லீக் வட இந்தியாவில் மறையத் தொடங்கியது. அதன் பின்பு கண்ணிய மிகு காயிதே மில்லத் தலைமையில் தென்னிந்தியாவில் வேரூன்றத் தொடங்கியது. காயிதே மில்லத் அவர்கள் தமிழ் நாட்டினைச் சார்ந்தவரானாலும் கேரளா மாநிலத்தின் முஸ்லிம்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். அவருடைய ஆளுமை இன்று தமிழகத்தில் உள்ள அமைப்பிற்கு எவரும் உயர்ந்ததில்லை.
            தமிழ் நாட்டில் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட பெரியார், குலக்கல்வி புகழ் ராஜாஜி, கர்ம வீரர் காமராஜர் போன்றோர்களிடையே மதிப்பும் மரியாதையும் கொண்டவராக காயிதே மில்லத் அவரகள் திகழ்ந்தார்கள்.1967 தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி கூட்டணியில் சேர்ந்ததினால் காயிதே மில்லத் மீது பேரறிஞர் அண்ணா மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், முதல்வர் பதவி ஏற்குமுன்பு காயிதே மில்லத் குரோம்பேட்டை வீட்டிற்கே சென்று மரியாதை செலுத்தி விட்டு பின்பு பதவி ஏற்றார் என்பது வரலாறு.
            காயிதே மில்லத் மறைவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகு கட்சியில் ஒரு மாற்றத்தினை கண்டது. 1972 தி.மு.க வில் பிளவு ஏற்பட்டபோது லீகு கட்சியிலும் பிளவு ஏற்பட்டது. அப்துல் சமது தலைமையில் தி.மு.க.ஆதரவு நிலையம், அப்துல் லத்தீப் தலைமையில் அ.இ.அ.தி.மு.க ஆதரவு நிலையம் எடுக்க ஆரம்பித்தது. முஸ்லீம் லீகு கட்சி பெரும்பாலும் வியாபாரி பெருமக்கள், கடல் கரை ஒர செல்வந்தர்கள் ஆதரவு நிலையே இருந்தது. சாமானியர்கள் இரண்டாம் தர உறுப்பினர்களாகவே இருந்தார்கள். 1977 நடந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் மக்கள் அமோக ஆதரவுடன் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சி அமைத்தார்கள்.
            இந்த நேரத்தில் முஸ்லிம் இளைஞர்கள் பொருளீட்டுவதிற்காக 1970 -1980 ஆண்டுகளில் வளைகுடா மற்றும், சௌதி அரேபியா நாடுகளுக்குச் சென்றார்கள். அப்படி சென்றவர்கள் தூய ‘வகாபிசம்’ என்ற மார்க்க கட்டுப் பாடுகளை கற்று வந்ததினால், இங்குள்ள தர்கா வழிபாடு, வலிமார்கள் துதிபாடு, மற்றும் திருமண சடங்குகளில் உள்ள வரதட்சிணை, சீர், சீராட்டு  போன்றவற்றினை கண்டு மனம் வெறுத்து தூய இஸ்லாமிய மார்க்கத்திற்கு வழி தேடினர்.
            இந்திய யூனியன் முஸ்லிம் லீகு கட்சியின் பலவீனமும், வளைகுடா நாடுகளின் தாக்கமும் இளைஞர்களிடையே புதிய வழிகளைத் தேட ஆரம்பித்தனர்.இந்த நேரத்தில் தான் ஹிந்து அமைப்பின் ராம் ஜென்ம பூமி அமைப்போம் என்ற கோஷமும், ஷாபானு வழக்கில் விவாகரத்து பெண்ணின் ஜீவனாம்சம் சம்பநதமான தீர்ப்பும் வெகுவாகவே பாதிக்க வைத்தது முஸ்லிம் இளைஞர்களை. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பிரிவினை ஒவ்வொரு ஜாமத்திலும் பிரதிபலித்தது. முஸ்லிம் இளைஞர்கள் எழுச்சி தவ்ஹித் என்ற ஓரிறைக் கொள்கையில் உறுதியாக நிலைத்து ஹனபி, ஷாபி, மாலிகி, ஹன்பலி பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு ஒரே மார்க்கம் தவுஹீத் என்று பறை சாட்டப்பட்டது. அல் உமா என்ற இயக்கம் கோவையில் வேரூன்றத் தொடங்கியது.
            டிசம்பர் 6 , 1992 அயோத்தியுள்ள பாபரி மஸ்ஜித் இடிப்பு, அதன் பிறகு ஏற்பட்ட குண்டு வெடிப்பு, வன்முறை போன்ற சம்பவங்கள் 1995 ல்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பினை ஏற்படுத்தியது. அதன் முக்கிய தலைவர்களாக மௌலவி பி.ஜெ., பேரா. ஜவஹருல்லாஹ், எஸ்.எம்.பக்கர் போன்றோர் அதன் தலைவர்களாக இருந்தனர். 1997  நவம்பரில் கோவை டிராபிக் த.கா செல்வராஜ் கொலை செய்யப் பட்டதால் முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ இயக்கங்கள் அதனை ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் என நினைத்து வன்முறையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டது. சிலர் காவலர் துணையுடன் நடத்தப பட்டது என்ற குற்றச் சாட்டுகள் எழுந்ததின் பயனாக கோபம் அடைந்த சிலர் 14 .2 .1998 பல குண்டுவெடிப்புகளை வழி வகுத்தனர். அதன் தாக்கம் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கத் தான் செய்கிறது இன்னமும்.
            அது வரை முஸ்லிம் ஆதரவு எடுத்துவந்த தி.மு.கவும் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் 'தீவிரவாதிகள்' என்ற புனைப் பெயர் இட்டனர். தி.மு.க வும் 1999 ம் இதுவரை பி.ஜெ.பியினை மதவாத இயக்கம் என்று அழைத்து வந்த நிலையினை மாற்றி மத்தியில் அமைந்த பி.ஜெ.பி அரசில் அங்கம் வகிக்க ஆரம்பித்தது. அதனையே அ. இ.அ .தி.மு.கவும் வழி மொழிந்தது.
            ஒன்றிணைந்த த.மு.மு.க விழும் ஈகோ பிரச்சனையால் பி.ஜெ. பிரிந்து  டி.ஏன்.டி.ஜெ. என்ற தூய தவுஹீத் இயக்கம் ஆரம்பித்தார். ஆனால் த.மு.மு.க. வஹாபி கொள்கையுடன், சமுதாய சேவையான இட ஒதுக்கீடு கொள்கையினை பின்பற்றி செயலாற்ற தொடங்கியது. த.மு.மு.க விலும் பிளவு ஏற்பட்டு ஐ.என்.டி.ஜெ. பாக்கர் தலைமையில் உருவானது. த.மு.மு.க. அரசியலில் எந்த அணிக்கு போகின்றதோ அதன் எதிர் அணிக்கு ஆதரவு கொடுக்கும் நிலையினையும் நிலையினை  இரு தவுஹித் அமைப்புகளும் எடுத்தது. அதனால் தமிழ்நாட்டில் அரியணையில் இருக்கும் கட்சிகள் முஸ்லிம் அமைப்புகளுக்கு ஓரிரு சட்டமன்ற இடங்களை கொடுத்து விட்டு முஸ்லிம்கள் ஆதரவினை எதிர் பார்த்தனர்.
            சௌதி அராபியாவை ரியாத் நகரில் இலங்கை வீட்டு வேலை செய்யும் ரிஸ்வான என்ற முஸ்லிம் பெண் தன்னுடைய எஜமானி மேல் இருக்கும் கோபத்தால்  2007 ம் ஆண்டு இரண்டு வயது குழந்தையினை கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை நிறைவேற்றியபோது உலகமே எதிர்த்தது. இங்குள்ள முஸ்லிம் அமைப்புகளும் அதனை எதிர்த்தது. அனால் தவுஹீத் அமைப்பு மட்டும் அது சரிதான் என்ற வேறுபட்ட நிலை எடுத்தது. 2012  ம் ஆண்டு ரஸூலுல்லாஹ்வினைப் பற்றி ஒரு படத்தினை அமெரிக்கா நிறுவனம் வெளியிட்டபோது மற்ற இஸ்லாமிய இயக்கங்கள் அமெரிக்கா கான்சுலேட் அருகில் போராட்டம் நடத்தியபோது தவ்ஹித் இயக்கம் அதில் கலந்து கொள்ளவில்லை. 2013 ம் ஆண்டு நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதினை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்தபோது தவ்ஹித் அமைப்பு அமைதியாக இருந்தது.
            முஸ்லிம் அமைப்புகள் ஒரு காலத்திலும் ஒன்று சேர மாட்டார்கள் என்ற கொள்கைகளை வைத்து முஸ்லிம் அமைப்பினை 2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சி பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு தமீம் அன்சாரி தலைமையில் மனித நேய ஜனநாயக கட்சி என்று அமைத்து இரண்டு தொகுதிகளை ஒதுக்கி அதில் தமீம் அன்சாரி வெற்றிபெற செய்தனர். தவ்ஹித் அமைப்பிலும் பெண்கள் சம்பந்தமான அதுதடுத்து புகார்கள் வந்து அதன் தலைவர்களான பி.ஜெ. அல்டாபி, செயது இப்ராஹிம் ஆகியோர் நீக்கம் செய்யப் பட்டு வலுவிழந்த இயக்கமானது தவ்ஹித்.
            இது போன்ற இஸ்லாமிய பிரிவுகளாலும், சில தப்லிக் அமைப்புகளாலும் முஸ்லிம் இளைஞர்கள் படிப்பதினை விட்டுவிட்டு ஊர் ஊராக சுற்றுவதும், சிறு சிறு வேலைகளை நாடி வெளி நாட்டுக்குச் சென்று சம்பதியதியத்தில் ஈடுபடுவதுதான் பல இயக்கங்களுக்கு ஆதரவு கொடுப்பதும் திட்டமிட்ட இஸ்லாமிய சகோதரர்களை பிரிக்கும் செயலாகவே கருதப் படுகிறது
எஸ்.டி.பி.ஐ. கேரளாவுனைச் சார்ந்த இயக்கமாக இருப்பதினால் தமிழ் நாட்டில் அரசியல் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை.
2019 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் அரசியல் கட்சிகள் முஸ்லிம் இயக்கங்களில் ஆழம் பார்க்கும் விதமாக கூட்டணி அமைத்திருப்பினை காணலாம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கிற்கு தி.மு.காவில் ஒரு இடம் கொடுத்து விட்டு இது வரை ஆதரவு தெரிவித்து வந்த எம்.எம்.கவிற்கு ஒரு இடமும் ஒதுக்கவில்லை. மனித நேய ஜனநாயக கட்சிக்கும் தி.மு.க.ஆதரவு நிலை எடுத்தாலும் அதவும் ஒதுக்கப் பட்டது. எஸ்.டி.பி.ஐ. மட்டும் தினகரன் கட்சியில் கூட்டு சேர்ந்துள்ளது. அதன் அரசியல் துவக்கம் இனிமேல் தான் தெரியும்.
 தி.மு.காவில் உறுபடியில்லா பாரிவேந்தருக்கு  ஒரு இடமும், மேற்கு மண்டலத்தில் மட்டும் மூன்று பிரிவுகளாக உள்ள கொங்குநாடு கட்சிக்கு ஒரு இடமும், ஐ.யு.எம்.எல்லுக்கு அவர்களுக்கு இணையாக ஒரு இடமும் ஒதுக்கியுள்ளது. வட மாநிலங்களில் மட்டும் குறிப்பிட்ட மாவட்டங்களில் கணிசமான ஓட்டுக்களை வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கும் பொது தமிழ்நாட்டில் பரவலாக இருக்கும் ஏழு சதவீத முஸ்லிம்களுக்கு ஒரே ஒரு இடம் தான் என்று பார்க்கும் போது பரிதாபமாக இல்லையா சகோதரர்களே.
            இதற்கு காரணம் தமிழ் நாடு முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் ஒற்றுமையாக அரசியலில் வேறுபாடுகளை களைந்து ஒரே அணியில் சேர்ந்து இட ஒதுக்கீடு கேட்கமாட்டார்கள் என்று நினைத்துத் தான் ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா என்ற கூற்றுக்கு இணங்க தொகுதி கொடுத்துள்ளார்கள். முஸ்லிம் இயக்கங்கள் வரும் காலங்களில் வேற்றுமைகளை மறந்து அரசியல் களம் அமைத்து சட்டமன்ற, பஞ்சாயத் தேர்தல்களில் ஓர் அணியினை ஏற்படுத்தினால் ஒழிய இஸ்லாமிய இயக்கங்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறும் பரிதாப நிலைதான் ஏற்படும். இஸ்லாமிய இயக்கங்களை இணைக்கும் காயிதே மில்லத் போன்ற தலைவர்கள் இன்று தமிழ் நாட்டில் இல்லாததே இந்த பரிதாபநிலை!
             
           
           

No comments:

Post a Comment