Monday, 12 August 2019

பாரத மதாக்கி ஜே'


                       
              (டாக்டர் ஏ.பீ. முகமது அலி),

2019 ம் மக்களவை தேர்தலுக்குப் பின்பு மைனாரிட்டி முஸ்லிம்  மக்கள் சிலரை ஹிந்துத்துவ அமைப்புனர்,' பாரத மாதா கி ஜே' என்று கோசம் போடச் சொல்லி துன்புறுத்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளதை அனைவரும் அறிவர்.  அவ்வாறான செய்கைகள் மூலம் மைனாரிட்டி சமூகத்தினரிடையே ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதினை யாரும் மறுக்க முடியாது. மத்தியில் ஆளுகின்ற தலைமை அவ்வாறான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டுகோள் இட்டாலும் அதற்கான செயல் திட்டம் குறைவே என்று சம்பவங்கள் அடங்கிய செய்திகள் வந்து கொண்டுள்ளனவே.
            இந்திய நாடு பல்வேறு ஜாதி, மதம், நிறம், இனம், மொழி ஆகியவற்றை கடந்து வேற்றுமையில் ஒற்றுமையை கண்ட பண்பான நாடு என்பதினை பண்டைய கால வரலாற்றுச் சுவடிகள் பறை சாற்றும். அதனைப் போன்று தான் சீன நாட்டு வரலாறும் உள்ளது. தேர்தல் வரும் போகும், ஆனால் வருங்கால இந்தியா எப்படி இருக்க வேண்டுமென்றால் மதச்சார்பு அற்ற, சமதர்ம சமுதாயம் என்ற மிகவும் பலமான அடித்தள மிக்க ஜனநாயக  அரசினை  எழுப்பினால் மட்டுமே முடியும் என்பதினை யாரும் மறந்து விடக்கூடாது.
            பல தரப்பு மக்கள் வாழும் பெரிய நகரங்களில் பல்வேறு வேற்றுமை இருந்தாலும் மனக் கசப்பினை காண முடியாது. அங்குள்ள சிலரிடம் கலந்துரையாடியபோது'ஹிந்துஸ்தான்', 'பாரத்' போன்ற வாசகங்கள் மாயாஜால காலங்களில் உள்ள சமஸ்கிருத வார்த்தைகளில் வந்தது என்பது புலனாகிறது.
            ஆனால் சுதந்திர இந்தியாவிற்குப் பின்னர் இந்தியாவின் வடக்கேயுள்ள ஹைபர் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கேயுள்ள கன்னியாகுமாரி வரையிலும் உள்ள விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கின்ற வறுமை,கடன் தொல்லை,கந்துவட்டிக் கொடுமை, கடுமையான வீட்டு வாடகை, வரித்தொல்லை, தண்ணீர் பஞ்சம், குழந்தைகள் படிப்புச் செலவு,விவசாய நிலங்களில் அகல ரோடு, மீத்தேன்,கெயில் குழாய்கள் பதிப்பு  போன்ற கஷ்டங்கள் கதை கதையாக சொல்வது பரிதாபமும் பரிதாபமே!
            இந்திய நாட்டின் சுதந்திரம் படித்த இளைஞர்களால் மட்டுமே அடைந்து விடவில்லை. மாறாக இடுப்பில் கோவணம் தலையில் முண்டாசு கட்டிய கடைநிலை விவசாயிகள் மூலமும் தான் கிடைத்தது என்பதினை யாரும் மறந்து விடக்கூடாது. இவ்வளவிற்கு ஏன் காந்திஜியே தமிழ்நாட்டின் கோவணம் கட்டிய விவசாயினைப் பார்த்துத் தானே தனது உடையினை அவர்கள் போன்று மாற்றினார். இன்று முன்னேறிய நாடுகளாக அமெரிக்கா, ருசியா, சீனா, ஜப்பான்  பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து விருப்பத்திற்கு காரணம் மக்கள் தங்களுக்கிடையே நிலவும் வேற்றுமைகளை மறந்து நாட்டின் ஒற்றுமைக்கும், உழைப்பிற்கும் மதிப்பினைக் கொடுத்ததினால் இன்று பரிமாண வளர்ச்சியடைந்துள்ளது.
            சுதந்திர இந்தியாவின் முதல் பிராதன மந்திரி பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதிய, 'டிஸ்கவரி ஆப் இந்தியா' என்ற நூலில் பாரத மாதா என்றால் யார் என்பதினை மிகவும் தெள்ளத் தெளிவாக மக்களுக்கு  விளக்கி எழுதியுள்ளார். அதில், 'நான் சிலக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது என்னை வரவேற்கும் உற்சாகத்தில், 'பாரத மாதகி ஜே' என்று கோசம் எழுப்புவதினை பார்த்தேன். அப்படி கோசம் எழுப்புவர்களைப் பார்த்து, பாரத மாதாகி ஜே என்றால் என்ன என்று அவர்களை கேட்டேன். என்னுடைய கேள்வியினை எதிர் பார்க்காத அவர்கள் திகைப்பு அடைந்தார்கள். நான் அவர்களைப் பார்த்து அன்னைக்கு வெற்றியா என்று கேட்டேன். அதற்கு பதில் சொல்வதிற்குப் பதிலாக ஒருவர் முகத்தினை ஒருவர் பார்த்தார்கள். அதன் பிறகு ஒரு கட்டத்தில் ஜாட் இன வாலிபர் எழுந்து 'டர்டி' என்ற நல்ல இந்தியா என்கிறார்.
நான் அவரை விடவில்லை. மாறாக அவரிடம் நீங்கள் உங்கள் ஊரைச் சொன்னீர்களா அல்லது மாவட்டத்தினை சொன்னீர்களா அல்லது அனைத்து இந்தியாவினையும் சொன்னீர்களா இப்படியாக  வினா எழுப்பி பதில்களும் பெற்றேன். இறுதியாக அவர்களிடம் நான், இந்தியா என்பது . மலைகளையோ, காடுகள், ஆறுகள், பாலைவனங்கள், பரந்த வயல் வெளிகள் அடங்கிய ஒரு குறுகிய வட்டத்தில் அடங்கிய பொருள் கொண்டதில்லை.மாறாக இந்தியா என்பது அதில் வாழும் பலகோடி மக்களையும் சார்ந்ததாகும், அவர்கள் வெற்றி புன்னகையோடு இருந்தால் தான் நாடும் போற்றக்கூடிய ஒன்றாக திகழும்.என்று அவர்களுடைய  மூலையில் பசுமரத்தில் அடிக்கப் பட்ட ஆணிபோல பதிய வைத்தேன் என்று எழுதியுள்ளது இந்தக் காலத்தில் குறுகிய வட்டத்தில் குதிரை சவாரி செய்யும் குறுகிய எண்ணம் கொண்ட துவேஷ மானவர்களுக்கு முகத்தில் அறைந்தால் போல கூறும் சம்மட்டி அடியாகும்.
            உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ரஞ்சன் கோகாய் அவர்கள் அஸ்ஸாம் தலைநகர் கௌகாத்தியில் 4 .8 .2019  ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, 'மக்களை அச்சுறுத்தும் விதமாக சில தனிநபர், குழுமம் செயல்பாடுகள் கவலையளிக்கின்றது. அப்படிப் பட்டவர்கள் நாட்டின் பண்பாது, பாரம்பரியம் ஆகியவற்றிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 'லாயல்டி' அர்ப்பணிப்பு பற்றி கூறும்போது, 'நமது அர்ப்பணிப்பு மதத்தின் பெயரால் வருவதில்லை, மாறாக இந்தியாவில் வாழும் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணம் உள்ளத்தில் மேலோங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
லத்தீன் அமெரிக்கா உலகப் புகழ் பெற்ற ஆயுத போராளி சேகுவாரா போன்று இந்தியா சுதந்திரத்திற்காக இந்தியா தேசிய படையினை நிறுவிய வங்க சிங்கம் நேதாஜி அவர்கள், 'புது இந்தியா மதத்தின் பெயரால் உருவாக்க முடியாது. மாறாக அந்த குறுகிய வட்டத்தினை உடைத்தெறிந்து நாமெல்லாம் இந்தியர் என்ற எண்ணம் மேலோங்கி புது இந்தியா இளமைப் பருவம் முதலே உருவாக வேண்டும்' என்று அறைகூவல் விடுத்தார்.
ஆகவே ‘பாரத மாதகி ஜே’ என்று சொல்ல சிறுபான்மை மக்களை துன்புறுத்தும் சிலர் குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்று ஹஜ் பெருநாள் இன்று கேட்டுக்கொண்டால் சரிதானே!

No comments:

Post a Comment