(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,(ஐ.பி.எஸ்(ஓ)
நான் 12.5.2026 இரவு எட்டு மணிக்கு ஒரு வேலையாக சென்னை பிராட் வே வழியாக ஆட்டோவில் ல் வரும்போது ஒரு ஆண் தனது புர்கா போட்ட இளம் வயது மனைவியை ரோட்டு ஓரத்தில் பொது மக்கள் பார்க்கும் விதமாக தலைமுடியினை பிடித்து அடித்தும், அதனை இரண்டு சிறு குழந்தைகள் தடுத்தும், அப்போது அருகில் இருந்தவரிடமிருந்து அந்த பெண்ணை காப்பாற்றி அனுப்பி வைப்பதும் கண்டு மனம் வெதும்பினேன். அந்த பெண்ணும் தவறு செய்தாலும் அதனை பலர் கண்பட அடிப்பதா, அதுபோன்று இஸ்லாத்தில் சொல்லப் பட்டுள்ளதாலதா இல்லையே! மனைவி தவறு செய்தால் கண்டிக்கவும், அதனை மீறி நடந்தால் அறைக்குள் காயம் படாது சிறிதாக அடித்து திருத்தவும் தான் கதீசுகள் சொல்லியுள்ளது. மனைவி அந்த பிள்ளைகளை பெற்று காப்பாற்ற எவ்வளவு சிரமப் பட்டிருப்பாள், அவனுக்கு சுகம் தர எவ்வளவு உடல் ரீதியாக சிரமப் பட்டிருப்பாள், அதனையெல்லாம் மறந்து விட்டு வன் முறையில் ஈடுபடுவது எவ்வளவு ஹராமான செயல் என்று நினைத்து பார்க்க வேண்டாமா?
குழந்தைகளை படிக்கவில்லை என்று அடிக்கும் பெற்றோர்களைப் பார்க்கலாம். நானும் எனது மகனை 35 ஆண்டுகளுக்கு முன்பு, அவன் எட்டாவது படிக்கும்
போது மாலையில் டியூஷன் ஆசிரியர் காத்திருந்தும் படிக்காமல் சக தோழர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதினை அறிந்து தலையில் கொட்டி அழைத்து வந்துள்ளேன். வீட்டிற்கு வந்த மகன் தனது தாயாரிடம் குறை சொன்னது என்னவென்றால், 'தன் நண்பர்கள் முன்னாள் அடித்தது அவமானதாக இருந்தது என்று சொல்லியுள்ளான். அப்போது நான் சிந்தித்ததில் எந்த கோபமும்,எரிச்சலும் பொது இடங்களில் வெளிப்படுத்துதல் கூடாது என்பது.உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள் 'அவ்வாறு அடிப்பதினால் அவர்கள் மூளை மங்கி விடுமாம். அவர்கள் எரிச்சலும், உங்கள் மீது கோபமும் உள்ளவர்களாக மாறி விடுவார்களாம்.
கோபம் என்பது என்னவென்றால் ஒருவருடைய எரிச்சலும், வெறுப்பும், வேற்று மனப் பான்மையும் வெளிப்படையாக காட்டுவது ஆகும். கோபத்தினால் ரத்த நாளங்கள் விரிவடைந்து முகமும், விழிகளும் சிகப்பு நிறமாக மாறும். 2) கோபத்தினால் இரண்டு புருவங்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டி முகத்தில் சுருக்கமும் ஏற்படும். 3) கோபம் வரும்போது, வாய்க்கு வந்ததினை கட்டுப்படுத்த முடியாமல் வெளிக்காட்டியும், வன் முறை செயலிலும் இறங்க செய்யும். 4) கோபத்தினால் பின் விளைவு என்ன என்று தெரியாமல் போய் விடும்.
கோபம் ஒரு மனிதருடைய உரிமை பறிபோகும் போது அதனைப் பெற காட்டுவதாகும். ஆனால் சில்லறை விஷயங்களுக்காக கோபப் படுவது தடுக்கப் பட வேண்டும். கோபமானது ஒருவருடைய குடும்பம், சமூகம் ஆகியவற்றில் தீய மனிதர்கள் இருந்தால், அவர்களின் நியாயமற்ற செயல்களால். இயற்கையாகவே கோபம் வரும். ஒருவர் மற்றொருவரைப் பற்றி கீழ்த்தரமாக கேலி செய்தாலும் கோபம் உண்டாகும்.
17.ஜூன் 2021 வருடங்களுக்கு முன்பு தமிழ் தொலைக்காட்சி சேவையில் 'யாகவா முனிவர் என்பவருக்கும், சென்னை கடற்கரை சாலை ஆசிரமம் அமைத்திருந்த 'சிவசங்கர் பாபா' என்பவருக்கும் ஆன்மிகம் தொடர்பான விவாதம் நடந்தபோது யாகவா முனிவர், ஆத்திரத்தில் சிவா சங்கர் பாபாவை அடிக்கப் பாய்ந்து தொடரே நிறுத்தப் பட்டது நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது ஒருவரைப் பார்த்து அடுத்தவர் கேலியும், கிண்டலும் செய்ததால் வந்த வினைதானே!
ஒருவர் அகங்காரமாக இருந்தால் அதனை சுட்டிக் காட்டும்போது கோபப் படுவதும். ஒருவருடைய தவறான நடத்தை, செயல், குறை சுட்டிக் காட்டப் பட்டால் அவர் கோபத்திற்கு ஆளாகிறார். 1989ம் ஆண்டு மார்ச் 25 ம் தேதி தமிழக சட்டசபையில் ஆளும் கட்சி தலைவர் நிதிநிலை அறிக்கை படிக்கும் முன்பு, எதிர் கட்சி தலைவர் 'கிரிமினல்' படிக்கக் கூடாது என்று கூறியதால் வன்முறை வெடித்ததினை தொலைக் காட்சிகள் படம் பிடித்துக் காட்டின.
ஒருவருடைய பழைய பகைமையினையோ, நடத்தினையோ. அல்லது மதத்தினையோ சுட்டிக் காட்டினால் கோபம் உண்டாகுமல்லவா? ஒருவர் தேர்தலில் உள்ள பகையினையோ அல்லது தங்களது காரியங்கள் வெற்றியில் அமைந்து விடவில்லையா என்று பாராளுமன்றங்களில் அடிதடிகள் நடப்பதினை உலக அளவில் தொலைக் காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.
19.12.2024 அன்று இந்திய பாராளுமன்ற வளாகத்தில் பிஜேபி பாராளுமன்ற உறுப்பினர்கள் சாரங்கி, ராஜ்புட் ஆகியோருக்கும், காங்கிரஸ் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக மாறி, மாறி குற்றச்சாட்டு எழுந்ததல்லவா? அது போன்ற ஆரோக்கியமற்ற செயல் ஜனநாயகத்தில் தேவையில்லையல்லவா?
2007 ம் ஆண்டு தைவான் பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்களுக்கு தகராறு ஏற்பட்டு சிலர் சபாநாயகர் மேஜைமீது நின்று குதித்ததினை தொலைக் காட்சிகள் படம் பிடித்து காட்டின.
துருக்கி பாராளுமன்றத்தில் 11.2,2026 அன்று நீதி பரிபாலன அமைச்சர் நியமனம் சம்பந்தமாக ஆளும் கட்சிக்கும் எதிர் கட்சி உறுப்பினர்களுக்கும் கைகலப்பாக மாறியது தொலைக் காட்சிகள் படம் பிடித்துக் காட்டின. நாட்டினை ஆளுபவர்கள் நீதி பரிபாலன முறைப்படி, வரம்பு மீறாது, வெறுப்புக் காட்ட வேண்டுமல்லவா? 14.05.2026 அன்று ராஜீய பயணமாக சீன சென்ற அமெரிக்க அதிபர் சொல்கிறார், ஈரான் நாடு தனது உடன்படிக்கையினை உடனே ஒத்துக்க கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் ஈரானை 5நிமிடங்களில் அழித்து விடுவேன் என்று எச்சரிக்கை விடுவது. இதனையே தான் சீன நாட்டிடம் சொன்னார். ஆனால் அதன் அதிபர் ‘சி’ எங்களை பயமுறுத்தி பணிய வைக்க முடியாது, மாறாக பேச்சு வார்த்தைகள் மூலம் தான் தீர்வு காண வேண்டும் என்று கறாராக சொன்னதால் சமீபத்தில் சீனா சென்றுள்ளார். இதுபோன்ற கோபமான செயல்களால் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கரண் பாஸ், ஜோ லோபிக்ரான், சாரா ஜேக்கப், ஜேமி பாஸ்கின் ஆகியோர் அமெரிக்க அதிபரின் மன நிலையினை மனோ தாத்துவ நிபுணர்கள் பரிசோதனை செய்ய உத்திராவிட வேண்டுமென்றனர். அந்த கேவலமான மன நிலைக்கு ஒரு அதிபர் கோபத்தினை வெளிப்படையாக காட்டலாமா? அது கேலி கூத்தாக உலகமே பார்த்துக் கொண்டு தானே இருக்கிறது.
ஒருவர் ஒரு தவறு செய்தால் அதற்காக கோபப் படாமல் 'மறப்போம், மன்னிப்போம்' என்ற கொள்கையினை கடைப் பிடித்தல் அவரும் அமைதியாக இருப்பார் நீங்களும் அமைதியாக இருப்பீர்கள். ஒரு தடவை முகமது நபி{ஷல்)அவர்கள் மக்கா நகரில் தனது தோழர்களுடன் வரும்போது ஒருவர் வந்து நபிகளின் தாடியினை பிடித்து இழுத்து தனக்கு சேர வேண்டிய கடனை தந்து விட்டு செல்லுங்கள் என்று கோபமாக கூறினாராம். அதனை கண்டு ஆத்திரமடைந்த தோழர்களை அமைதியாக இருக்கச் சொல்லி அவருடைய கடனை அடைக்கச் சொன்னார்களாம். ஒருவர் வம்புக்கு இழுத்தால் அவரை மன்னிப்பது தான் வீரமாகுமாம். அடிக்கு அடி என்ற செயல் நன்மை பயக்கும், மாறாக திருப்பி தாக்கினால் அதன் பலனை அனுபவிக்க வேண்டும். அதற்கு உதாரணமாக தமிழ் பழமொழி, 'நாயை அடிப்பானேன் --சுமப்பானேன்' உங்களுக்கு தெரியாததல்லவா?
கோபமான நேரத்தில் ஒருவர் தனது மற்றும் தனது குடும்பத்தினை எண்ணி பார்க்க வேண்டும்.
வழிபாட்டு தளங்களில் அமைதியையும், சாந்தத்தினையும் தேடி செல்கிறார்கள். ஆனால் 7.09.2010 அன்று நோன்பு நேரத்தில் தஞ்சாவூர் திருவிடாஞ்சேரி கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் லோக்கல் ஜமாத்திற்கும், தவ்ஹித் ஜமாத் பிரிவினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவர் கொல்லப் பட்டது தான் மார்க்கம் சொன்ன சாந்தியும், சமாதானமா?
27.7.2023 அன்று திருநெல்வேலி பாளையங்கோட்டை டயோசிஸ் சர்ச் நிர்வாகம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அங்குள்ள பாதிரியாரும் தாக்கப் பட்டது மட்டுமல்லாமல் மேஜை, பென்ச் போன்றவையும் அடித்து நொறுக்கப் பட்டத்தினை நீங்களும் பார்த்திருப்பீர்கள் தொலைக் காட்சிகளில்.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தென்கலை, வடகலை பிரபந்தம் பாடுவது சம்பந்தமாக 200 ஆண்டுகள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து, அதன் முடிவில் தென்கலை பிரிவினர் பாட வேண்டும் என தீர்ப்பு வந்தும் ஒவ்வொரு வருடமும் இரண்டு பிரிவினரும் முட்டி மோதுவதும் நீங்கள் தொலைக் காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். அது போன்ற சம்பவங்களும்,கோவில் தேரோட்டங்களில் வடம் பிடித்து இழுக்க யாருக்கு முதல் உரிமை உள்ளது என்ற தகராறிலும், கோவில்களில் யாருக்கு முதல் மரியாதை என்ற
தகராறுகளிலும் வன் முறைகள் வெடிப்பதினை பார்த்திருப்பீர்கள்.
அதுபோன்ற தகராறுகளில் ஈடுபடுவார்கள் எண்ணமும், உடலும் பாதிக்கப் பட்டு வழக்கு, வக்கீல் செலவு, நீதிமன்ற வாசல்களில் அலைவதினை நீங்கள் கண்டிருக்கலாம். இது போன்ற செயல்கள் ஒரு சமூதாய வளர்ச்சியை காட்டுகிறதா அல்லது படு பள்ளத்தில் ஆதிவாசிகள் நடவடிக்கைகளுக்கு தள்ளப் படுகிறதா என்று சிறிது சிந்தனை செய்தால், அவைகளை தடுக்கலாமல்லவா?
No comments:
Post a Comment