Tuesday, 30 October 2012

ஈமானிருந்தால் எதனையும் வெல்லலாம்!


அல்குரான் 2:197 என்ற பகுதியில்,'ஹஜ்ஜுக்கு தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் தலையாயது இறை அச்சமே. அறிவுடையோர் அல்லாஹ்வினை அஞ்சுங்கள்' கூறப் பட்டுள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் மார்ஷல் டிட்டோவின் ஆதிக்கத்தில் இருந்த யுகோஸ்லாவிய, அவர் மறைவிற்குப் பின்பு பல பகுதிகளாக உடைந்து போஸ்னியா மற்றும் செர்பியா என்ற தேசங்கள் உருவானது. செர்பியா இன மக்களின் தலைவர்கள் போஸ்னியாவில் அதிக்கம் செலுத்தி அங்குள்ள முஸ்லிம்களை மனித வேட்டையாடினர். அதனை சகிக்காத உலக மக்கள் அடக்குமுறைக்கு எதிரான குரல் எழுப்பினர். அதன் விளைவு ஐரோப்பிய கூட்டுப் படை ஐ.நா. ஒப்புதலுடன் அங்கு நுழைந்து நிலைமையினைக் கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, செர்பியா வெறியர்களான மிலோவிக், கராடிக் போன்றோரை சிறைப்பிடித்து உலக நாடுகளின் நீதி மன்றத்தின் முன் நிறுத்தியது.
அந்த போஸ்னியா நாட்டு முஸ்லிம் ஒருவர் இஸ்லாமியரின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜினை துல் ஹஜ் மாதத்தில்  சகல வசதிகளுடன் கூடிய நவீன உலகத்தில் வித்தியாசமாக நிறைவேற்றியுள்ளார்.
வரலாறு காலத்திற்கு இடைப்பட்ட மேடீவல் காலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒரு அரசனை வீழ்த்தி அரசைக் கைப்பற்ற நினைக்கும் மகன் தனது தந்தையினை ஹஜ்ஜுக்கு அனுப்புவானாம். ஏனென்றால் அரசன் ஹஜ்ஜுக்கு பல மலைகள், பள்ளத்தாக்குகள், காடுகள், பாலைவனங்கள் ஆகியவற்றினைக் கடக்கும்போது நோயிலோ அல்லது வழிப்பறி கொள்ளையர்களாவோ  கொல்லப் பட்டு திரும்பி வரமாட்டாராம். அப்போது மகன் அரியணை ஏறுவானாம். 
ஆனால் நவீன காலத்தில் பஸ்,கார்,கப்பல், விமானம் மூலம் ஹஜ் செய்ய எளிதாக முடிகிறது.  இன்று அரசு சார்பாக ஹஜ் செல்ல வேண்டுமென்றால் ரூ 1,20,000/  தேவைப் படுகிறது. தனியார் மூலம் ஹஜ் நிறைவேற்ற வேண்டுமென்றால் ரூ 3,50,000/ தேவைப் படுகிறது. அதிலும் ஹஜ்ஜுக்கு 19.10.2012 அன்று அனுப்புகிறோம் என்று சென்னை பாலவாக்கத்தில் அல் முனைவரா ஹஜ் செர்விசெஸ் 90 பேர்களிடம் தலா ரூ 2,20,000/ வாங்கி  ஏப்பம் விட்ட கதை காவல் துறை வரை சென்றுள்ளது.
ஆனால் கையில் வெறும் ரூ 14,000/ எடுத்துக் கொண்டு, 20 கிலோ எடையுள்ள உடமைகளை முதுகில் சுமந்து கொண்டு போஸ்னியா நாட்டின் 47 வயதான வாலிபர், ஈமான் என்ற தேவையினை மனதில் எடுத்துக் கொண்டு மக்கா சென்றிருக்கிறார் என்றால் அதிசயமானது தானே! 'சனத் ஹச்டிக்' என்ற அந்த போஸ்னிய நாட்டின் வாலிபர் பொடி நடையாக 314 நாட்களில்  5,650 கிலோமீட்டர் தூரத்தினை செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்டான் மற்றும் சிரியா நாடுகளைக் கடந்து, புனித மக்கமா நகரினை அடைந்து, இறைவனின் ஹஜ் கடமையினை நிரவேற்றிருப்பது பாராட்டத்தக்கது ஒன்றல்லவா?
ஆனால் சிலருக்கு பணம் இருந்தும் ஹஜ் செல்ல மனம் வருவதில்லை. சிலருக்கு பணம் இருந்தும் உற்றாருக்கு உதவி செய்து ஹஜ்ஜுக்கு அனுப்புவதில்லை.  வசதியுள்ள சிலர் வசதியில்லா தன் உடன் பிறப்புகளுக்கு உதவி ஹஜ்ஜுக்கு அனுப்பாமல் பலர் புகழ்வார்களே என்று பல தடவை உம்ரா மற்றும் ஹஜ் செல்வர். வசதி இல்லாதவர் ஹஜ்ஜுக்கு ஏங்குவதினை மறந்து அரசு மூலமாக நடத்தும் ஹஜ் சர்வீஸ் மூலம் செல்லலாம். அல்லது கப்பல் மூலம் செல்லலாம் அல்லது பஸ் மூலம் செல்லலாம் அல்லது உடல், மன வலிமை உள்ளோர் போஸ்னியா இளைஞர் போன்று பொடி நடையாக சென்று நிறைவேற்றலாம். அதற்கும் முடியாதவர் ஈமானோடு வாழ்ந்து அல்லாஹ்வின் ஜென்னத்தில் சீமானாக வாழலாமே!
  

Saturday, 6 October 2012

ஏழை சிறுபான்மையினர் மாணவர் நலன் காப்போம்!



5.10.2012 அன்று சென்னையில் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் உதவித் தலைவரும், முன்னாள் ஓய்வு பெற்ற பெங்களூர் போலீஸ் கமிசனருமான திரு ஹெச். சங்களியனா அவர்கள் சமூதாய அமைப்புகள் சிந்தித்து செயலாற்ற சில செய்திகளை தனது பேட்டியில் சொல்லியுள்ளார். அவர் சொல்லிய செய்தியின் சாராம்சம் கீழே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்:
1) சிறுபான்மை மாணவர் கல்வி உதவித் தொகையினை இந்த நிதி ஆண்டில் (31.3.2013) தமிழ் நாட்டில் பள்ளிக் கல்வி உதவித் தொகை ரூ 34 கோடியினைப் பெற 2,87,659 மாணவ மாணவியர் தகுதி பெற்றவர். மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 36, 438 பேர்கள் பயன் பெற ரூ 18.88 கோடிகள் ஓதிகீடும், தொழில் கல்வி பயிலும் 2301 பேர்களும் பயன் அடையலாம். அதனைப் பெற விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் இந்த மாதம் கடைசியாகும்(31.10.2012.
சிறுபான்மையினர் கல்வி உதவி பெற தகுதி என்ன என்று பார்க்கலாம்:
1) பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் பள்ளிப் படிப்பில் ஐம்பது சத வீத மதிப்பெண் பெற்றிக்க வேண்டும்.
2) அவர்களுடைய பெற்றோர் மற்றும் பாதுகாவலர் வருட வருமானம் ரூ ஒரு லக்ஷத்திற்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
3) தொழில் நுட்ப கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தங்களுடைய பள்ளிப் படிப்பில் ஐம்பது சதவீதம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அவர்களுடைய பெற்றோர் மற்றும் பாதுகாவலர் வருட வருமானம் ரூ இரண்டரை லக்ஷத்தினுக்கு மிகையாமல் இருக்க வேண்டும்.
பள்ளி மாணவரின் பெற்றோர் வருட வருமானம் ஒரு லக்ஷம் என்பதும், தொழில் கல்வி கற்கும் பெற்றோர் வருமானம் ரூ இரண்டரை லக்ஷம் என்பதும் எப்போதோ நிர்ணயிக்கப் பட்ட வருமான வரம்பு. அதனை உயர்த்த மைனாரிட்டி கமிசனுக்கு எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்றும், அப்படி வந்தால் அதனை கண்டிப்பாக உயர்த்தத் தயார் என்றும் திரு. எச். சங்களியானா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். அதனை முக்கியமாக சமுதாய அமைப்புகள் கையில் எடுத்து வருமான வரம்பை உயர்த்த மனுக்கள் ஒற்றுமையுடன் அனுப்ப வேண்டும்.
2) தமிழக சிறுபான்மையர் ஆணையகத்திற்கு ஒரு தலைவரும், ஆறு உறுப்பினர்களும் இது வரை நியமிக்கப்படவில்லை. சமுதாய இயக்கங்கள் ஒருங்கிணைத்து சிறுபான்மையினர் ஆணையகத்திற்கு உடனே தலைவரையும், உறுப்பினர்களையும் நியமிப்பதோடு, முஸ்லிம்களுக்கும், கிருத்துவர்களுக்கும் சுழற்சி முறையில் தலைவர் பதவி தரவேண்டு என்று கோரிக்கையினையும் வைக்க வேண்டும்.
3) சிறுபான்மையினர் நலனுக்காக நடத்தப் படும் பாலிடச்னிக்குகள், ஐ.டி.ஐகள் பயிற்சி கருவிகள் பழமை வாய்ந்ததாக சொல்லப் படுகிறது. தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கேப்ப அவைகளை நவீனப் படுத்த கோரிக்கைகளை வைக்க வேண்டும்.
4) இன்னும் கூட சில முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிலையங்கள் மைனாரிட்டி தகுதியினை அரசிடமிருந்தோ அல்லது மைனாரிட்டி கமிசனிடமிருந்தோ பெற வில்லை. சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதி அரசர் பால் வசந்தகுமார் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட தீர்ப்பில் ஒரு தடவை மைனாரிட்டி தகுதிப் பெற்ற கல்வி நிறுவனங்கள் வருடந்தோறும் புதிப்பிக்க வேண்டியத்தில்லை என்று சொல்லியுள்ளார். இதனை கல்வி நிறுவனம் நடத்தும் சிறுபான்மையினர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
5) இது வரை ஒவ்வொரு ஊரிலுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை, ஆண், பெண், குழந்தைகள், மற்றும் வாக்கு அளிக்கக்கூடிய தகுதி உள்ளவர் பட்டியல், அவர்களுடைய வருட வருமானம், கல்வித் தகுதி போன்ற விவரங்கள் அடங்கிய விவரங்களை சமூதாய இயக்கங்கள் சேகரிக்க வில்லை. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியருக்கு சலுகைகள் வழங்க குரல் எழுப்பி உள்ளார். அதேபோன்று சமூதாய அமைப்புகளும் முனைப்புடன் அதில் ஈடு பட வேண்டும். அப்போது தான் அரசிடமோ அல்லது மைனாரிட்டி கமிசனிடமோ நமது கோரிக்கையினை வைக்க முடியும்.
ஆகவே சமூதாய இயக்கங்கள் மைனாரிட்டி மாணவர்கள் நலன் காத்தும், அவர்களுக்கு சேர வேண்டிய அரசு சலுகை பெற்றும், மாநிலத்தில் சமூதாய மக்கள் அரசியல், கல்வி, சமூகம், பொருளாதாரத்தில் உரிய இடத்தினைப் பெற சமூதாய இயக்கங்கள் வேற்றுமை மறந்து ஒற்றுமையுடன் செயலாற்றலாமா?


Wednesday, 26 September 2012


"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?"
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
2012 செப்டம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்கள் உலக முஸ்லிம்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்திய வாரங்களாக அமைந்தது. அதற்கு காரணம், 'மனிதரில் புனிதர், கோமான்கள் போற்றிய சீமான், ஈருலக ஒளி விளக்கு எம்பெருமானார் முகமது நபி (ஸல்) அவர்கள் பற்றி அமெரிக்கா வாழ் படத்தயாரிப்பாளர்கள் 'ரெவ்.டோரி ஜான்', 'மோரிஸ் சாதக் மற்றும் கிஸ்மத் சக்லான' ஆகியோர்  அவதூறு குறும் படம், "இன்னோசென்ஸ் ஆப் இஸ்லாம்" எடுத்து அதனை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்க்கும் படி 'யு டுப்' என்ற வலை தளத்தில் வெளியிட்டது அனைவருக்கும் தெரியும். 
அதனைப் பார்த்த முஸ்லிம்கள், 'தங்கள் உயிருக்கும் மேலான ரசூலல்லாஹ் பற்றி ஏளனமும், அவமானமும் செய்கிறார்களே என்றால் பொறுத்துக் கொள்வார்களா? அது அமெரிக்காவில் கருத்து சுதந்தரமாக அவர்கள் கருதலாம். அதே கருத்துச் சுதந்தரத்தினை உபயோகித்து இயேசு பெருமானார் பற்றியோ அல்லது மோசஸ்  அவர்களைப் பற்றியோ தவறான குறும்படம் முஸ்லிம் அல்லாதவர் கூட வெளியிட்டால் சும்மா இருப்பார்களா? ஏன் முஸ்லிம்கள் கூட சும்மா இருக்க மாட்டார்கள் ஏனென்றால் இயேசு பெருமானாரும், மோசஸ் அவர்களும் இஸ்லாமியர்களுக்கு நபிகளாக ஈசா(அலை ) என்றும் மூஸா(அலை ) என்றும் போற்றப் படுபவர்கள் தானே! 
இவ்வளவு நடந்தும் அந்தக் குறும்படம் தடை செய்யப் படவில்லை, அந்த தயாரிப்பாளர்களை கைது செய்யப் படவில்லை. ஏன், அந்தப் படத்தில் நடித்த இரண்டு ஹாலிவுட் ஆண் நடிகர்களும், ஒரு பெண் நடிகையும் எங்களிடம் படத்தயாரிப்பாளர்கள் பொய்யான காரணத்தினைச் சொல்லி படம் எடுத்து விட்டனர் என்று நீதி மன்றம் வரை சென்றுள்ளனர். அதற்குப் பிறகாது அந்தப் படத்தினை தடை செய்திருக்கலாம். ஆனால் இது வரை அதற்கு முடிவில்லையே, அது ஏன் என்ற கோபம் இஸ்லாமியருக்கு இருக்கத்தானே செய்யும்!
ஆமாம் இவ்வளவிற்கும் அந்த தயாரிப்பாளர்களுக்கு எவ்வாறு அப்படி படம் எடுக்கத் தைரியம் வந்தது என்று ஆராயும்போது கீழ்க்கண்ட காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுவது இயற்கை தானே:
1) 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக வர்த்தக மையம் தகர்க்கபட்டதிற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள அல் கொய்டா தான் காரணம் என்று ஆப்கானிஸ்தானில் படை எடுத்து நேட்டோ ராணுவம் அங்கிருது 2014 ஆம் ஆண்டில் தானே விலகியது.
2) மனித கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக பொய்யான காரணம் சொல்லி, இராக்கில் படை எடுத்து சதாம் ஹுசைனை அகற்றி விட்டு, உள்நாட்டு கலவரத்திற்கு வித்திட்டு விட்டது.
3) அரேபிய, ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஆட்சி செய்யும் தலைவர்கள் கொடுமையாளர்கள், ஊழல் பேர்வழிகள் என்று பறை சாற்றி மேற்கத்திய கல்வி கற்ற இளைஞர்களை தூண்டி விட்டு எகிப்து, லிபியா, டூனிஷியா போன்ற நாடுகளின் தலைவர்கள் மாற்றப் பட்டனர்.
4) ஏன் இன்னும் சிரியா, மன், பக்ரைன் போன்ற நாடுகளில் முஸ்லிம்களிடையே கொந்தளிப்பிற்கு வித்திட்டு விட்டனர் என்றால் மிகையாகாது.
ஆகவேதான் இஸ்லாமியர் கிள்ளுக் கீரைகள், அவர்களை குனியக் குனியக் கொட்டலாம் என்று எண்ணி தூங்கிக் கொண்டிருந்த சமுதாய இளைஞர்களை சிலிர்த்து எழ செய்து விட்டார்கள். அதன் விளைவு தான் உலகமெங்கும் ஆர்ப்பாட்டம், தர்ணா, முற்றுகை, வன்முறைக்கு 50 பேர்கள் இது வரை பலியாகி விட்டதாக செய்திகள் சொல்லுகின்றன.
அநீதிக்கு எதிராக எப்போதுமே குரல் கொடுக்கும் தமிழக முஸ்லிம்களும் அதற்கு விதி விலக்கல்ல என்பதினைக் காட்ட 26 முஸ்லிம் அமைப்புகளும் சென்னை அண்ணா சாலையினை ஸ்தம்பிக்க வைத்து விட்டனர். ஆகா தமிழக முஸ்லிம்களிடையே இத்தனை அமைப்புகளா என்று உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் 'அமைதிப் பூங்காவாக மாறிய' இன்னும் சில  இயக்கங்களும் உண்டு என்றால் பாருங்களேன்!
நான் கூண்ட, முஸ்லிம் அமைப்புகளிடம் வேற்றுமையினை மறந்து ஒற்றுமை காணுங்கள் என்று, 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு', சகோதர யுத்தம் சமுதாய தீங்கு', 'கண்கள் குலமாகுதம்மா', 'இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா', ஏன் இளைத்தாய் என் இனிய சமுதாயமே', 'முஸ்லிம் நலனுக்கு குரல் கொடுப்போம்' போன்ற கட்டுரைகள் எழுதி முஸ்லிம் பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும் வெளி வந்துள்ளன என்பதினை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட ஆசைப் படுகிறேன். ஏனென்றால் இஸ்லாமியர் ஒன்று படுவது காலத்தின் கட்டாயம்.  மைனாரிட்டி சமூகமாக இருக்கின்றது என்றெண்ணி குனியக் குனியக் கொட்ட நினைக்கும் ஆதிக்க வர்க்கத்தின் அடக்கு முறைகளின் செயலுக்கு சவாலாக அமைந்து விட்டது தமிழக முஸ்லிம்களின் எதிர்ப்பு அலை. தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், 'சாக்காடையில் விழுந்து எழுந்து வரும் பன்றியிடமிருந்து விலகி இருங்கள்' என்று. அப்படி முஸ்லிம்களால் விலகி இருக்க முடியுமா இந்த விசயத்தில். முடியாது தானே!
தமிழில் மற்றுமொரு பழமொழி சொல்வார்கள், 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா' என்று. அது என்ன என்று விளக்கலாம் என்று நினைக்கின்றேன்.
ஒரு ரிஷி இறைவனிடம் தனக்கு எதனையும் பார்வையிலேயே சுட்டி எரிக்கும் வரம் வேண்டும் என்று கேட்டுப் பெற்றார். அதனை சோதனை செய்ய ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து அந்த வழியில் வானத்தில் பரந்த கொக்கினை கோபமாக பார்த்தார். அது உடனே எரிந்து கருகி விழுந்தது. ஆகா நமக்கு யாரையும் வீழ்த்த தனி தகுதி வந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு கொஞ்ச தூரம் நடந்து ஒரு ஊரினை அடைந்தார். அங்குள்ள ஒரு வீட்டின் முன் நின்று, 'அம்மா யாசகர் வந்திருக்கின்றேன் சாப்பாடு வேண்டும் என்று குரல் எழுப்பி இருக்கின்றார். வீட்டினுள் இருந்த பெண்மணி இந்தோ வருகிறேன் சிறிது பொறுங்கள் என்று சொல்லி விட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தன் கணவருக்கு பரிமாறிவிட்டு வெளியே சாதத்துடன் வந்துள்ளார். கோபம் அடைந்த முனிவர் ஏன் உடனே    வரவில்லை என்று கேட்டார் அதற்கு கொஞ்சம் தூரம் சென்றால் ஒரு கறிக்கடை வரும் அங்குள்ள முஸ்லிம் வியாபாரியிடம் கேளுங்கள் பதில் வரும் என்று சொல்லி விட்டாள். உடனே சாமியார் வேக வேகமாக கறிக்கடைக்குச் சென்று யாசகம் கேட்டார். வியாபாரி அந்த நேரத்தில் கடையினை அவசர, அவசரமாக மூடி விட்டு வீட்டுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த வியாபாரியும் முனிவரிடம் வாருங்கள் தருகிறேன் என்று கூறி விட்டு நடையினைக் கட்டினார். வியாபாரி வீட்டினில் சென்று பசியுடன் இருக்கும் வயதான தன் தந்தைக்கு சாப்பாடு வழங்கி விட்டு அதன் பின்பு முனிவருக்கு சாதம் எடுத்து வந்தார். உடனே முனிவர் கோபப்பட்டு ஏன் இந்த சாதம் கொண்டு வர இவ்வளவு நேரம் என்னை யார் என்று நினைகின்றே என்று கேட்டு கோபப் பட்டார். அப்போது அமைதியாக அந்த வியாபாரி சாமியாரே, உங்களை விட என் வயதான தகப்பனார் தான் முக்கியத்துவம் என்றாரே பார்க்கலாம். அப்போது தான் அந்த முனிவரும் தனது  கோப வரத்திற்கு மேல் பாசமும் பற்றும் தான் முக்கியத்துவம் என்று உணர்ந்து அமைதியானார்'.
இஸ்லாம் ஒரு உலக அமைதி, ஒற்றுமை, சமதர்ம சமூதாயம் படைக்கும் மார்க்கம். அந்த மார்க்கத்தினை உலகினுக்கு அறிமுகப் படுத்திய இறுதி நபி பெருமானாரைப் பற்றியோ அல்லது ஏக அல்லாஹ்வினைப் பற்றியோ எந்த ஏகாதிப்பத்திய சக்திகளும் இழிவு படுத்தினால் முஸ்லிம்கள் பொறுக்க மாட்டார்கள், மாறாக பொங்கி எழுவார்கள் என்பதினை காட்ட அனைத்து இயக்கங்களும் ஒரு கூட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தால் சரியா?

Wednesday, 12 September 2012

மாணவா, மாணவா, கம்பும், கத்தியும் நம் தோழனா மாணவா?

6.9.2012, 7.9.2012 தேதிகளில் சென்னை மாநிலக் கல்லூரி சம்பந்தமாக பரபரப்பான செய்திகள் வெளி வந்தன. நானும், 'பிரின்சஸ் ஆப் பிரெசிடென்சி' என்ற அந்த   மாநிலக் கல்லூரியில் 1969-1971 படித்ததால்  பிளாஷ் பேக்கான செய்திகளை உங்களோடு பகிர்ந்து  கொள்ளலாம் என  .நினைகின்றேன்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உள்ள மூன்று மாநகரங்களான மெட்ராஸ், கல்கட்டா மற்றும் பாம்பே ஆகியவற்றில் இந்திய குடி மக்களுக்கும் தன்னுடைய மக்களுக்கும் பயன்படும் விதமாக மூன்று கல்லூரிகளை முதன் முதலில் ஆரம்பித்தார்கள்.  . ஆசியாவின் நீண்ட கடக்கரை கொண்ட மெரினாவின்  அலைகளின் ஓசை  ரசிக்கும்படி செவ்வண்ணக் கற்களால் அமைத்தார்கள்.    ஆசிரியராக பணியாற்றிய   முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாக்கிரிஷனாலும், அதன் மாணவரான நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரனாலும்   அதன் புகழ் உச்சாணிக்குச் சென்று மாநிலக் கல்லூரியில் படிப்பது என்பதே ஒரு பெருமையாக இருந்தது.. மெட்ராஸ  அங்கீக யுனிவேர்சிடியால் அங்கீக பட்ட மாணவர் பேரவை இருந்தது மாணவத் தலைவருக்கு  தனி அறை கொண்ட ஒரே கல்லூரி மாநிலக் கல்லூரியாகும்..
அப்போது தேர்தல் மாணவத் தலைவர், செயலாளர், மகளிர் செயலாளர் ஆகியோருக்கு நடக்கும். அதுவும் எப்போது என்றால் கல்லூரி நிறைவு நாள் நெருங்கும்போது டிசெம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் நடக்கும்
அதற்குக் காரணம் அப்போது தான் ஒரு வருடம் பழகிய மாணவர்களுக்கு நன்கு அறிமுகமான நபர் தேர்ந்தெடுக்கப் படுவார். போட்டியிடும் மாணவர் பெயர், பதவி வகுப்பு கொண்ட விசிடிங் கார்டு மூன்று இஞ்சி அகலமும், நான்கு இஞ்சி நீளமும் கொண்டது போட்டியிடுவர்களால் வழங்கப் படும். அது கல்.தவிர எந்த வித விளம்பரமும் செய்யக் கூடாது.     லூரி வகுப் பறைகளுக்குச் சென்று ஆசிரியர் அனுமதியுடன் ஐந்து நிமிடம் வேட்பாளர் ஆதரவு கோரலாம். அதனை மீறி யாரும் விளம்பரம் செய்தால் அவர்கள் வேட்பு மனு தள்ளுபடி செய்யப் படும். வேட்பாளர்கள் அரசியல் சார்ந்திருந்தாலும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளக் கூடாது. நாங்கள் படிக்கும்போது  பேராசிரியர் ராமச் சந்திரன் என்பவர் முதல்வராக இருந்தார். அவர் வெளியே வந்தால் மாணவர் பெட்டிப் பாம்பாக அடங்குவர். அப்படிப் பட்ட மரியாதை. நான் கூட அப்போது சேர்மனுக்கு போட்டியிட்ட அப்பாசாமிக்கு ஆதரவாக முன்மொழிந்தேன். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜெயராமன் வெற்றி பெற்றார். இருந்தாலும் அப்பாசாமியும், ஜெயராமனும் நண்பர்கள்தான். அந்த நட்பு கெடாமல் இருந்தது. ஆனால் சமீப கால சம்பவங்களை நினைக்கும் பொது எப்படி இருந்த மாநிலக் கல்லூரி இப்படி ஆகி விட்டதே என்று எண்ணி வருத்தமடையச் செய்கிறது.
சமீப கால கல்லூரி  வன்முறை கீழ்க் கண்ட காரணங்களால் ஏற்படுகின்றன:  
1) ஜாதி சண்டை: 'ஜாதிகள் இல்லையடிப் பாப்பா' என்று பாடிய பாரதியார் வாழ்ந்த நாட்டில் ஜாதிகளால் ஜாதி துவேசத்தால் மாணவர் இடையே சண்டை வந்துள்ளது. அது பள்ளி மாணவர்களையும் விட்டு வைக்க வில்லை.
2012 மார்ச்சு மாதம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுக்கா எம்.கல்லுப்பட்டி 
கிராமத்தில் இருக்கும் பள்ளிக் கூடத்தில்   12 ஆம் வகுப்பு மாணவர் இடையே ஒரு சிறு சண்டை ஆரம்பித்து அதில் அந்த கிராமத்தினைச் சார்ந்த மக்களும் இரு பிரிவினராக சண்டையிட்டுக் கொண்டதாக செய்தி வந்தன.
அடுத்த படியாக 2008 ஆம் ஆண்டு சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை இந்தியாவினை மட்டுமல்லாது உலக மாணவ உலகத்தினையே உலுக்கியது என்றால் மிகையாகாது. அந்த சம்பவத்தின் உண்மையினை அறிய தன்னார்வ குழு மார்க்ஸ் தலைமையில் ஆராய்ந்து ஒரு அறிக்கையினை அளித்தது. அதில் அதில் மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டைக்குக் காரணம் ஜாதி துவேசம் தான் என்றது.
2) பஸ் பயணத்தில் வரும் தகராறு:
நான் சென்னை புதுக் கல்லூரியில் படித்தபோது 1968 ஆம் ஆண்டு எங்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் அண்ணா சாலையில் அப்போது இயங்கி வந்த அரசு ஆண்கள் கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் பஸ்ஸில் பயணம் செய்யும்போது  தகராறு வந்தது. அப்போது கலைக் கல்லூரி மாணவர் சிலர் சபைர் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் தாக்கப் பட்டனர். அதன் விளைவு கலைக் கல்லூரி மாணவர்கள் புதுக் கல்லூரிக்கு படை எடுத்தனர். நல்ல வேலையாக போலீஸ் பெரிய கலவராம் வராமல் தடுத்தது. அதன் பின்பு 1969 வருடம் நான் மாநிலக் கல்லூரியில் எம்.ஏ சேரும்போது எனது வகுப்பு நண்பனும் கலைக் கல்லூரியில் படித்தவனுமான காந்திராஜனை முதல் நாள் சந்திப்பில் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவன், 'டேய், உங்கள் கல்லூரி மாணவர் சபைர் தியேட்டரில் தாக்கும் பொது அடி வாங்கியவனில் நானும் ஒருவன் என்றானே' பார்க்கலாம். அப்போது எனது வருத்தத்தினை அவனிடம் தெரிவித்தேன். அவன் யாருமில்லை, மறைந்த நடிகர் சந்தனத்தின் மகனும் தற்போதைய நடிகர் சந்தானபாரதியின் சகோதரனும் ஆவான்.

ii) பஸ் தகராறில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர் பாதிப்பு:
1969 ஆம் வருடம் கீழ்பாக் கெல்லிஸ் சட்டக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும், போக்கு வரத்து ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டு அதன் விளைவு ஒரு பஸ் ஊழியர் இறக்கும் நிலைக்கு வந்தது. சிறு வாக்குவாதம் ஒரு கொலையில் கொண்டுபோய் முடிந்தது.

iii) சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் தலைவர் தேர்தலில் பஸ்ஸில் தங்கள் கைவரிசையினை காட்டும் விதமாக பஸ் கூரையில் ஏறி பயணம் செய்து பஸ் ஓட்டை விழுந்தது என்ற செய்தியினை இங்கே தந்துள்ளேன். அது மட்டுமல்லாது பாது காப்பில் இருந்த பெண் போலீசாரும் காயம் அடைததாக செய்தி வந்தது.
உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப் பட்ட லிங்டோ குழு ஒரு அறிக்கையினை அளித்துள்ளது. அதில் மாணவர் தேர்தலில் வீண் செலவினை தவிர்க்க விளம்பர தட்டிகள், பலகைகள், நோட்டீஸ் போன்றவையும் தடை செய்யவும், ஒலி பெருக்கி தடை செய்தும், வாகனம், மிருகம் போன்றவை விளம்பர தடை செய்தும் அறிக்கை கொடுத்துள்ளது.

iv) கல்லூரிக்கு வரும் வெளியே தங்கிப் படிப்பவர்கள் தங்களுடைய ஈகோ  பிரச்சனையாலும், படிப்பில் அதிகம் கவனம் செலுத்தாது ஏதோ இட ஓதிக்கீடிலும், அரசு கொடுத்த சலுகையினாலும் கல்லூரிக்கு வந்து சிறு சிறு விசையங்களுக்கும் சண்டையிட்டுக் கொள்ளுகின்றனர். பஸ் தின விழா என்று அரசு பஸ் மற்றும் அதில் பல்வேறு பயணிகள் பயணம் செய்கிறார்கள் என்பதினை மதிக்காது, போக்கு வரத்து விதிகளை மதிக்காது அதிகம் பேர்கள் ஏறி சவாரி செய்வது மட்டுமல்லாது பஸ் மேலேயும் ஏறுவது சட்டத்திற்குப் புறம்பானது தானே! அப்படி பஸ் மேல் ஏறினால் பஸ் ஓட்டுனர் பஸ்ஸினை எடுக்ககூடாது. அதனால் பஸ்சுக்கு ஏதும் சேதம் வந்தால் மாணவரே பொறுப்பு என்ற நிலையினை எற்பதுத்த வேண்டும். போராட்டம் செய்து அரசு சொத்துக்கு சேதம் விளைவிக்கும் அரசியல் கட்சிகள் பொறுப்பு என்று ஏற்கனவே உயர் நீதி மன்ற தீர்ப்பு இருக்கும்போது அது மாணவர்களுக்கும் பொருந்தும் தானே!
3) மாணவர்களின் காதல் வயப்படல்:
இளமைப் பருவத்தில் மாணவர்கள் காதல் வயப் பட்டு தங்களை காதல் மன்னர்களாக நினைத்து அவர்கள் காதலுக்கு யார் போட்டியினுக்கு வருகிறார்களோ அவர்களை ஜென்ம பகைவர்களாக நினைத்து மோதல் உருவாக்குகிறது. அவர்களுக்குத் தெரியாது கல்லூரிக் காதல் என்பது ரயில் பயணத்தில் அறிமுகம் செய்து கொண்டு ரயிலை விட்டு இறங்கியதும் மறைந்து விடுவது என்று மாணவர்களுக்கு ஏனோ தெரிவதில்லை!

4) இரண்டு பகுதி மாணவர் இடையே தகராறு:
ஹைதராபாத் நகரத்தில் தெலுங்கானா பகுதி மாணவர்களுக்கும் மற்ற பகுதி மாணவர்களுக்கும் மோதல் உருவானது. அதேபோன்று மணிப்பூரில் போடோ இன மாணவர்களுக்கும்  இடம் பெயர்ந்த மாணவர்களுக்கும் மோதல் வந்துள்ளது. காரணம் உள்ளூர் மாணவர் வாய்ப்பினை வெளி மாணவர் பறிப்பதாக உள்ள பயமே காரணம்.



5) அரசியல் சார்ந்த தகராறுகள்: 
மேற்கு வங்கத்தில் திருநாமுள் காங்கிரஸ் மற்றும் இடது சாரி மாணவர்களுக்கும் 2010 இல் நடந்த மோதல், 2011 ஏப்ரல் மாதம் அலிகார் யுனிவெர்சிடியில் இரண்டு கட்சி மாணவர்கள் துப்பாக்கி சகிதமாக மோதிக் கொண்டது, 2012 ஜனவரி மாதம் சிம்லாவில் கம்யுனிஸ்ட் மாணவர்களுக்கும் ஏ..பி.வி .பி. என்ற ப.ஜ.காவினருக்கும் மோதல் உருவாகி கல்லூரி ஒரு அரசியல் மோதலாக உருவானது உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்திலும் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளும் தனது தரப்பு மாணவர்களை தயார் செய்கிறது, ஏனென்றால் பதினெட்டு வயதினை அடைந்தத அனைவருக்கும் ஓட்டுரிமை இருப்பதால் மாணவர்களின் தேர்தலிலும் அரசியல் தலையீடு தற்போது இருக்கின்றது. 


6) ரேக்கிங்:
நானெல்லாம் சென்னை புதுக் கல்லூரியில் இருந்தபோது மலேசியா மாணவர்களையும், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு யார் சீனியர் என்று வெளிப் படுத்துவதிற்காகவும், கூச்சதினை    போற்குவதிற்காகவும் சில தமாசான ரேக்கிங் நடக்கும். ஆனால் மனித உடலுக்கு பங்கம் விளைவதினை ஏற்படும் அளவிற்கு எந்த ரேக்கிங்கும் இருக்காது. ஆனால் தற்போது ரேக்கிங் என்று உடலுக்கு தீங்கு விளைவிற்கும் செயலும், ஜூனியர் கடத்தப் படுவதும், பொருள் அபகரிக்கப் படுவதும், ஜாதி துவேசம் காட்டுவதும், பாலின தவறுகளும் நடப்பதுண்டு. சில நேரங்களில் சிதம்பரம் அண்ணாமலை மெடிக்கல் கல்லூரியில் பொன் நாவரசு கொலை செய்தது போன்ற சம்பவங்களும், அவமானம் தாங்காது தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் நடக்கின்றது. ஆனால் உச்ச நீதி மன்றம் சமீபத்தில் ரேக்கிங் சம்பவங்களில், வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்தல், கல்லூரியினை விட்டு நீக்குதல், அபராதமாக ரூபாய் 25000/ விதித்தல் போன்ற கடுமையான கட்டுப் பாடுகளை விதித்து அகில இந்திய தொழில் நுட்பக் கழகமும் தன ஆணையை 25.3.2012 வெளியிட்டது.

ஆகவே மாணவர்கள் தங்களின் தலையாய கடமை படித்துப் பட்டம் பெற்று நாட்டிற்கு தன்னாள் ஒரு நன்மையான காரியம் செய்ய வேண்டும் என உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) பெற்றோர்களின் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த காசு புகைத்தல்,சினிமா பார்த்தல்,  கிளப் டான்ஸ், மது, மாது போன்ற ஈடுபட்டு     வீண் விரையம் செய்யக்  கூடாது.
3) அரசு முதல் பட்டதாரிகளுக்கு பல்வேறு சலுகைகளைத் தருகிறது. நீங்களும் அந்த சலுகையினைப் பெரும் முதல் பட்டதாரியாக மாற வேண்டும்.
4) போக்குவரத்து பஸ்களில் பொது மக்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் அளவிற்கு நம் நடவடிக்கை இருக்கக் கூடாது.
5) பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உரிமை உண்டு. அந்த உரிமையினை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. பாலின சேச்டைகளில் ஈடுபடக் கூடாது.
6) நான் கோவை நகரி டி.எஸ்.பியாக 1977 ஆம் ஆண்டு பணியாற்றிய பொது பி.எஸ்.ஜி கலைக் கல்லூரி மாணவர்கள் பஸ் பாஸ் கேட்டு வேலை நிறுத்தம் செய்து கல்லூரியினை விட்டு பீளமேடு ரோடுக்கு வர முயற்சி செய்தார்கள். ஆனால் அப்போதைய கல்லூரி முதல்வர் டி.கே.பி.வரதராஜன் அவர்கள் கல்லூரி மெயின் கேட்டில் நின்று கொண்டு மாணவர் ரோடுக்கு வராமல் தடுத்தார். அவ்வாறு இல்லையென்றால் மாணவர் ரோடுக்கு வந்து பொலிசாருடன் மோதியும், ரோடில் செல்லுகின்ற வாகனமீது கல்லும் வீசி இருப்பார்கள். அதுபோன்ற முதல்வர்களை இன்று நாம் கல்லூரியில் காணுவது அரிதாக உள்ளது. மாணவர்களை கட்டுப் படுத்தும் கடமை கல்லூரி முதல்வருக்கும் ஆசிரியருக்கும் உண்டு. அது மட்டுமல்லாமல் மாணவர் தேர்வும்போது இன்டெர்னல் அசெஸ்மென்ட் அவர்கள் கையில் இருப்பதால் மாணவர்களும் பயப்படுவார்களல்லவா?
7) மாணவர்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்றாலும், அல்லது பொருளுக்கும் உடலுக்கும் பங்கம் வரும் என்றாலும் காவல் துறையினர் அனுமதி இன்றி கல்லூரி வளாகத்தில் நுழைந்து சட்டம் ஒழுங்கினை காப்பாற்றலாம் என்று ஏற்கனவே சென்னை உயர் நீதி மன்றம் வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் வந்த மோதலில் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆகவே காவல் துறையினரும் மாணவர்கள் சட்டத்தினை மதித்து நடக்கும் அளவிற்கு துணிந்து நடவடிக்கை எடுத்தால் பஸ்சுக்கும் சேதம் வராது,பொது மக்களும் பாதிக்கப் பட மாட்டார்கள், பெண்கள் அவமானப் பட மாட்டார்கள், மாணவர் உடலுக்கும் பங்கம் வராது.
8) மாணவர்கள் தங்களுடைய ஈகோ காரியங்களுக்காக கையில் கம்பையினையோ, கத்தியினையோ அல்லது கொடிய ஆயுதங்களையோ எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்து அதுத்தவருக்கு ஊறு விளைவித்தால் உங்களுடைய படிப்பும் பொய், வழக்கினை சந்தித்து, பெற்றோர்களுக்கு வீணான பொருள் சுமை கொடுத்து அதனால் நீங்கள் வேலை செய்யவோ, வெளிநாடு செல்லும் வாய்ப்பினையோ இழக்க நேரிடும். 
ஆகவே எதற்கு எடுத்தாலும்  கத்தியினை தீட்டாது, புத்தியினுக்கு சற்று வேலை மாணவர் தரவேண்டுமென்று வேண்டுகிறேன்.