(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பி.எஸ்(ஓ)
இஃப்த்தார் என்பது ஒரு நாடக நிகழ்வு அல்ல, மார்க்க வழிபாடு என்பதினை வலியுறுத்தி இந்த கட்டுரையினை உங்கள் பரிசீலனைக்கு வைக்கிறேன்.
இஃப்த்தார் என்பது புனித மிகு ரமலான் மாத்தில் பசித்திருந்து, விழித்திருந்து, தனித்திருந்து, திக்ர் செய்து எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு படைப்பினை தந்து பரிபாலிக்கின்றதிற்கு நன்றி சொல்லி பகல் பூரா நோன்பிருந்து சூரிய மறையும் போது பேரித்தம் பழத்தினையும், தண்ணீரையும் உட்கொண்டு நிறைவு பெற செய்யும் ஒரு வழிமுறையாகும்.
ரசூலுல்லாஹ் யுத்த காலத்தில் வெறும் பேரித்தம் பழம் சாப்பிட்டும், தண்ணீர் பருகியும் ஆடம்பரமில்லா இஃப்த்தாரை வழி வகுத்தகர்கள். அது மட்டுமல்லாமல் இஸ்லாமியரிடையே நட்பு, அன்பு, பாசம், பரிவு ஆகியவற்றினையும், ஒற்றுமையின் உறுதிப்பாட்டையும், செயல் படுத்துகிற ஒரு கடமையாகவும் கருதப் பட்டது. எப்படி
வ ற்றியிருக்கின்ற நிலத்தில் தோண்ட தோண்ட நீர் வழிகிறதோ அதேபோன்று ஒருவருடைய உள்ளத்தில் ஈகையும், இறக்கக் குணமும் பெறுக வேண்டும் என்று உலகத்திற்கு எடுத்துக்காட்டும் செயலாக கருத வேண்டும். இப்த்தார்
இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஐநா சபையின் யுனஸ்கோ அங்கீகாரம் அறிவுறுத்துள்ளது என்பது இஸ்லாமிய நிகழ்வுக்கு ஒரு பெருமை என்பதினை யாரும் மறுக்க முடியாதல்லவா?
நோன்பு திறப்பதற்கு முன்பு கீழ்கண்ட வழி முறைகளை கையாள்வது கடமையாகும்:
1) மக்ரிப் நேரம் வந்ததும் நீர் அருந்தியாவது நோன்பு திறந்து விட வேண்டும்.
2) நோன்பு திறப்பதற்கு முன்பு வெளி சுத்தமான ஒளு செய்து விட வேண்டும்.
3) நோன்பு திறப்பதற்கு முன்பு நோன்பு வைத்ததிற்கு உடல் திறனை கொடுத்த அல்லாஹ்விற்கு நன்றி சொல்ல வேண்டும்.
4) அதன் பின்பு மக்ரிப் தொழுகை நடத்த வேண்டும்.
5) அதன் பின்பு உணவுகள் உடலில் ஜீரணிக்கக் கூடிய அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
நான் மேலே குறிப்பிட்டது எல்லாம் நான் சிறு வயதிலிருந்து நோன்பு வைக்கும்போது இமாம்களாலும், பெற்றோர்களாலும் போதித்த அறிவுரையாகும்.
ஆனால் சமீப காலங்களில் நோன்பு திறக்கும் நிகழ்வு ஒரு திருமண விசேஷ நடவடிக்கை போல நடக்கிறது. மாற்று
சமூகத்தினர் நோன்பு வைத்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால் 'என்ன பாய் மாலையில் பிரியாணி ரெடியா? என்று கேலி பேசும் அளவிற்கு உள்ளது வருத்தம் அளிக்கிறது தானே! அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுக்கு கீழுள்ள இஸ்லாமிய தலைவர்களை அவர்கள் மற்ற மாற்று மத தலைவர்கள் கலந்து கொள்ள ஏதாவது திருமண மண்டபம், அல்லது ஹோட்டலில் ஏற்பாடு செய்யச் சொல்லி வற்புறுத்துவதின் பேரில் அதிக செலவு செய்து முனங்கிக் கொண்டே வழியில்லாமல் நடத்துவது எனக்கு தெரிந்த இரண்டு சம்பவங்களை உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கிறன். 30
ஆண்டுகளுக்கு
முன்னாள் ஆட்சியினை இழந்த முன்னாள் முதல்வர் அவர் மந்திரி சபையில் இருந்த இஸ்லாமிய
அமைச்சரை அழைத்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியினை சென்னை ராதாகிருஷ்ண சாலையில் அமைந்துள்ள ஹோட்டலில் நடத்தும் படி கட்டளையிட்டுள்ளார். அந்த பேச்சினை தட்ட முடியாமல் வசதி படைத்ததால் ஏற்பாடு செய்து விட்டு என்னை தொலைபேசியில் அழைத்து கலந்து கொள்ளுமாறு கூறினார். நான் கேட்டேன் இது யார் செலவு என்று, அதற்கு அவர் அதனை ஏன் கேட்கிறீர்கள் நான் தான் செலவு செய்கிறேன், செய்ய வில்லையென்றால் அடுத்த தடவை தேர்தலில் போட்டி போட வாய்ப்பு கிடைக்காது என்றார்.
அதேபோன்று தான் சென்னை எழும்புரில் உள்ள பைஸ் மகாலில் எதிர் கட்சியில் உள்ள உயரமான தலைவர் அவருடைய சென்னை மாநகராட்சி வட சென்னை
கவுன்சிலரை கூப்பிட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்துங்கள் என்று சொல்லி விட்டார். அவருக்கும் தர்ம சங்கடம், வேறு வழியில்லாமல் நடத்தி விட்டார். அந்தோ பரிதாபம்
அடுத்த தேர்தலிலும் அவருக்கு கட்சி சார்பாக டிக்கெட் கொடுக்கப் பட்டது, வெற்றி பெற்றால் செலவு செய்த காசை எடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்த அவர் தேர்தலில் தோற்று விட்டார்.
நோன்பு திறக்கும் நடவடிக்கைக்கும் 'ஈத் மிலான்' என்பதிக்கும் வேறுபாடு இருக்கிறது. ரமலான் மாதத்தில் கடை பிடிக்கும் நோன்பிற்கு பின்னால் நோன்பின் சிறப்பினை மாற்று சமூகத்தினருக்கு எடுத்து சொல்லவு ம், அவர்களுடன் சமூக நல்லுறவிற்காகவும் நடத்துகின்ற நடவடிக்கை தான் 'ஈத் மிலான்' ஆகும். அதுபோன்ற செயல்களை சென்னை தன்வந்தர்கள் வருடா வருடம் கன்னிமாரா ஹோட்டலில் நடத்துவார்கள், அதனை தீவுவெல்லிக்கேணியில் பகுதியினைச் சார்ந்த டாக்டர் காதிரி நடத்துவார். எனக்கும் அழைப்பு வந்து கலந்து கொண்டுள்ளேன்.முக்கிய பிரமுகர்களான, ஆளுநர், மந்திரிகள், நீதிபதிகளும் கலந்துள்ளனர்.
ஆனால் சமீப காலங்களில் வருகிற சட்ட மன்ற தேர்தலில் இஸ்லாமியர் ஓட்டு வங்கியினை வேட்டையாடுவதிக்காக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடப்பது தொலைக்காட்சிகள் படம் பிடித்து காட்டுகின்றன. அரசியல் தலைவர்கள் எப்போதாவது தொப்பி போடுவது அதிசயமில்லை. ஆனால் முஸ்லிம் சகோதரர்கள் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வரும்போது தொப்பி அணியாமலும், தொப்பி அணியும் மற்ற சகோதரர்களுடன் தொப்பி போடுவது அவசியமில்லை என்று வாதமிட்ட பின்னர் மற்ற அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தொப்பி அணிந்து செல்வது எப்படி நியாயமாகும்?
அது மட்டுமல்ல அவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் நோன்பு திறக்கும் வருகையினை எதிர் நோக்கி வாசலிலேயே காத்திருப்பதும், நோன்பு திறக்கும் நேரத்தினை கை விடுவது எந்த வகையில் சிறக்கும்.
கட்சி தலைவர்கள் அருகில் கற்றறிந்த இமாம்கள் அமர்ந்து இருந்து துவா துவா ஓதி நோன்பு திறக்காமலும், தலைவர்கள் தங்களை பார்க்க மாட்டார்களா அல்லது ஏதாவது பேச மாட்டார்களா அதனை தொலைக் காட்சியில் பார்க்கும் தன் வீட்டார் பெருமைப் படுவார்கள் என்ற முனைப்பிலேயே ஈடுபடுவதும், சரியா?
கட்சி தலைவர்கள் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் தங்கள் கொள்கைகளை சொல்வது தகுமா? அதனை இஸ்லாமிய தலைவர்கள் ஆதரிக்கிறார்களா? சில தலைவர்கள் தங்கள் அருகில் சில முக்காடு போடும் பெண்களையும் உட்கார வைத்துக் கொண்டு நோன்பு திறக்கிறார்கள். இஸ்லாத்திற்கு எதிரான இரண்டு செய்திகளை உங்கள் நினைவிற்கு கொண்டு வரலாம் என்று நினைக்கின்றேன்.
அன்றைய முதல்வர் உடல் நலம் குன்றி அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது தொப்பி போட்டு பெயரளவிற்கு கட்சி நடத்தும் ஒருவர் மருத்துவ மனை வாசலில் அமர்ந்து சிலருடன் அமர்ந்து 'சூரா யாசின் ' ஓதியது உங்களுக்கு நினைவிருக்கும். அடுத்த படியாக புதிதாக கட்சி ஆரம்பித்த நடிகர் தலைவர் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு பின்பு நடந்த மக்ரீப் தொழுகையிலும் முன் வரிசையில் நின்று தொழுதது தொலைக் காட்சி படம் பிடித்தது, அப்போது அந்த நடிகர் சரியாக எடுத்தீர்களா என்று கேட்பது போல கையினை காட்டியதையும் தொலைக் காட்சி படம் பிடித்துக் காட்டியது, கேலிக்கூத்து தானே!
ஒரு கிராம பழமொழி சொல்வார்கள் 'குப்பி எரிகிறது, ஆனால் கூத்தாடிக்கு கொண்டாட்டமா'என்று. உலகிலே முஸ்லிம்கள் காசா, லெபனான், ஈரான் போன்ற நாடுகளில் வேட்டையாடி, வீடுகளை இடித்தும், பாலங்களை தகர்த்தும், மின்சாரம் துண்டித்தும், காட்டில் வேட்டையாடுவது போல வேட்டையாடுவதினையும், பச்சிளம் குழந்தைகள் பாலுக்காக கதறுவதையும், சோளகஞ்சிக்காக அனுமினிய தட்டுகளை சிறு குழந்தைகளும், பெண்களும், முதியோர்களும் ஏந்துவதும், காயம் பட்டவர் மருத்துவ மனையில் ஓடி ஒளிந்தாலும் அங்கேயும் குண்டு வீச்சினுக்கு தப்ப முடியாத நிலையம், பிரைமரி பள்ளி குழந்தைகள் மீது குண்டு வீசி 80 குழந்தைகள் கொன்று குவித்ததையும் கண்டு மனம் இறங்காத மாற்று மத சகோதர, சகோதரிகள் கூட கண்ணீர் வடிக்காதவர்களில்லை.
அதே நேரத்தில் காஸ்மீரில் நோன்பு முடிந்த பின்பு அங்குள்ள முஸ்லிம் ஆண்கள், பெண்கள் அத்தனை பேர்களும் தங்களுடைய ஆபரணங்கள், பணத்தினையும் அள்ளி மேற்காசியாவில் இஸ்லாமியர் படும் துன்பங்களுக்கு வாரி வழங்கி உள்ளதினை, பத்திரிக்கைகளும், தொலைக் காட்சிகளும் படம் பிடித்துக் காட்டியது, எப்படி இந்திய-சீன 1962ம் ஆண்டு நடந்த போருக்கு இஸ்லாமியர் தங்களது வள்ளல் தன்மையினை வெளிக்காட்ட வாரி வழங்கினார்களோ அதே போன்ற நிகழ்வாக இருந்தது. அது போன்று சென்னையிலும் இருக்குமா என்பது எனக்கு தெரிந்த அளவில் இல்லை என்றே சொல்லலாம்.
ஆகவே நோன்பு நேரங்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் ஒரு தவறான முன்னுதாரணங்களை இனிமேலும் இஸ்லாமியர், இயக்கங்கள் கடைபிடித்தால் நல்லதல்லவா
No comments:
Post a Comment