Thursday, 28 March 2013

சமூதாய சிந்தனை தேரோட்டம்!



    இன்று அதிகாலை(27.3.2013) நடைப் பயிற்ச்சியில் நண்பர்களுடன் ஈடுபட்டிருக்கும்போது சாவன்னா என்ற நண்பர்  கேட்டார், 'ஏன் காக்கா, நமது சமூதாயத்தில் பெரிய தனவந்தர்கள் இருக்கிறார்களே, அப்படி இருந்தும் ஏழை முஸ்லிம்கள் தங்குவதிற்கான தங்கும் இடங்களோ, அல்லது மருத்துவ சேவைக்கான  மருத்துவமனைகளோ இல்லை,' என்ற ஏக்கத்துடனான வினா எழுப்பினார். அவர் கேட்ட கேள்வியில் பிறந்த விடை தான் இந்தக் கட்டுரை! 
            தமிழகத்தில் குஜராத், மகாராஷ்டிரா,ராஜஸ்த்தான் போன்ற மாநிலங்களில் இருந்து குடியேறிய ஜைன மத மக்கள் 85,000 அதாவது 0.13 சதவீத மக்கள் உள்ளனர். ஆனால் அந்த மக்கள் மண்டலகள் அமைத்து வெளியூரிலிருந்து வரும் ஜைனர்கள் தங்குவதிற்கும், சாப்பிடுவதிற்கும் வசதி செய்து கொடுக்கின்றார்கள்.
அது மட்டுமல்ல இலவச மருத்துவ முகாம்கள் அமைத்து மருந்துடன் கூடிய சேவைகளையும் செய்கிறார்கள்.
சென்னை மின்ட் பகுதியில் ஜெயின் கோவில் பகுதியில் சென்றால் தெரியும்,  கலை,மாலை ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்குகிறார்கள்.
அதேபோன்று திருநெல்வேலி, தூத்துக்குடி விருதுநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள  நாடார் மகாசபையினைச் சார்ந்தவர்கள் சென்னை வந்தால் தங்குவதிற்கு மண்டபங்கள் கட்டி உள்ளனர். மற்ற ஊர்களிலும் அதுபோன்ற அமைப்புகள் உள்ளன. 
ஆனால் ஏழு சதவீதம் கொண்ட நமது சமூதாயத்தினர் சென்னை வந்தால் இலவசத்திலோ அல்லது குறைந்த கட்டணத்தில் தங்க சென்னை சென்ட்ரலுக்கு எதிர்ப்புறமுள்ள சித்திக் செராயும், புளியந்தோப்பிலுள்ள ஹஜ் கமிட்டியும் தான் உள்ளது. அதேபோன்று இலவசமாகவும் குறைந்த செலவில் உள்ள மருத்துவ சேவையும் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள கிரசண்ட் மருத்தவ மனையும், வர்த்தக ரீதியாக உள்ள கீழ்பாக் ஆயிசா மருத்துவ மனையும், திருவல்லிகேணியில் ஹிபா, மதனி மருத்துவ மனைகளும் உளளன. கடற்கரை நகரங்களான கீழக்கரை யூசுப் சுலைகா மருததுவ மனை , காயல்ப் பட்டிணம் கே .டி .எம் மருத்துவமனையும், இளையாங்குடியில் செம்பிறை மருத்துவமனையும்  செயல் பட்டு வருகின்றன. ஆனால் மற்ற ஊர்களில் அதுபோன்ற ஒருங்கிணைந்த மருத்துவ மனைகள் இல்லை. ஆகவே பெரும்பாலான சமூதாய மக்கள் அருகில் உள்ள மருத்துவ மணிக்குப் படையெடுக்கும் நிலை ஏற்படுகிறது. அதுவும் வெளிநாடுகளில் வாழும் ஆண் துணையில்லாத பெண்கள் அடுத்த  ஆண் துணையினைத்  தேடுவதால் பல்வேறு தவறுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தங்கள் உறுப்பினர்களிடம் ரத்த முகாமுகள் நடத்தி அந்நிய மருத்துவ மணிக்குத்தான் வழங்குகிறார்கள். ஆகவே நமது சமூதாய மக்கள் மருத்துவ மனைகள் அமைத்து சுகாதாரத்தில் தன்னிறைவு பெற வேண்டும்.
ஏற்கனவே உள்ள மருத்துவ மனைக்கு வரும் டாக்டர்ஸ் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க தரமான கல்வி நினையங்கள் இல்லாததால் முஸ்லிம் ஊர்களில் தங்குவதில்லை என்ற குறை இருப்பது உண்மைதான்  சென்னை போன்ற ஊர்களில் உள்ள முஸ்லிம் கல்வி நிலையங்களும் தரமில்லாததால் கிருத்துவர்கள் நடத்தும் பள்ளிகளுக்குப் படைஎடுக்கின்றார்கள். ஆனால் அந்த நிர்வாகத்தால் முஸ்லிம் பெண்கள், ஆண்கள் நடத்தப் படும் விதமே அவமானம் தான்  மியாசி என்ற தென் இந்திய முஸ்லிம்கள் அமைப்புக் கூட்டத்தில் ஒரு உண்மை சம்பவத்தினை ஒரு பொறுப்புள்ள உறுப்பினர் சொன்னார். அதாவது ஒரு முஸ்லிம் பெண் மண்ணடியிலுள்ள ஒரு கிருத்துவ பள்ளிக் கூடத்தின் தலைமை ஆசிரியரின் காலில் தன் மகன் அட்மிஷனுக்கு காலில் விழுந்திருக்கிறார். ஏன் இந்த பரிதாப நிலை என்றால் மண்ணடியில் கூட முஸ்லிம்கள் நடத்தும் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. ஆனால் அதன் தரத்தினை உயர்த்த முடியாத பரிதாப நிலைத்தான். இந்த கேடுகெட்ட செயலுக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். ஆகவே பதவிக்காக பள்ளி அல்லது கல்லூரி நிர்வாகிகள் என்ற நிலைமாறி முஸ்லிம் சமூதாய மக்களுக்குத் தரமான கல்வி நிலையங்கள் நடத்த வேண்டும்.
            ஐரோப்பாவில் உள்ள முன்னாள் யுகோஸ்லாவியாவில் பிறந்து கல்கத்தாவில் சேவைக்காக தன் வாழ்நாளைத் தியாகம் செய்த அன்னை தெரசா நோபிள் பரிசினை 1979 ஆம் ஆண்டு வாங்கும் பொது அதன் பொருட்டு ஆறு லக்ஷம் ரூபாய் செலவில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.ஆனால் தெரசா தனக்கு விருந்து வேண்டாம். அந்தப் பணத்தினைக் கொடுத்தால் கல்கத்தாவில் நடை பாதையில் வாழும் ஏழைகளுக்கு வழங்குவேன் என்று கேட்டுப் பெற்று பணியாற்றினார். அதே போன்று பதவிக்காக சமூதாய பொது நிர்வாகங்களுக்கு வராது முஸ்லிம் மக்களை வாழ வைக்க வழி வகைகளை சமூதாய இயக்கங்கள் செய்ய வேண்டும்.

Tuesday, 5 March 2013

பெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்!


பெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்!

ஒவ்வொரு வருடம் மார்ச் மாதம் மனித உரிமை நாளும், பெண்கள் வலிமை நாளும் கொண்டாடப் பட்டு வருகிறது. உரிமை என்பது உறுதி செய்யப் பட்ட சுதந்திரமாகும். ஆனால் பெரும்பாலோருக்கு என்னன்ன உரிமை பெற்றிருக்கிறார்கள் என்பது கூட தெரிவதில்லை. அதிலும் பெரும்பாலான பெண்கள் படிப்பறிவு இல்லாததால் அவர்களுடைய உரிமையினை நிலைநாட்டுவதில்லை.
சமூதாயம் என்பது பல சிறு குழுக்கள் கொண்ட ஒரு கூட்டமைப்பாகும். சமூக விஞ்ஞானி ரோஸ்கோ பவுண்ட் என்பவர், 'பல குழுக்களை நடு நிலை குலையாது பாது காத்தல் அவசியம்' என்கிறார். பல சமூக குழுக்களில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர், மற்றும் பிற்படுத்தப் பட்டோர் மிகவும் பாது காக்கப் பட வேண்டியவராவர். ஒவ்வொரு நாகரீக சமூதாயமும் மனித உரிமையினை காக்க வேண்டியது கடமையாகும். 
இன்னொரு சமூக விஞ்ஞானி ராபர்ட் இங்கர்சால், 'ஒரு சமூதாயத்தில் பிரபலமான சாதனைப் படைக்கும் மனிதர்கள் உருவாக வேண்டுமென்றால் அந்த சமூதாயம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்த சமூகமாக இருக்க வேண்டும்' என்று கூறுகிறார்.
ஆண்களும் பெண்களும் சமூதாயம் என்ற அழகு கட்டிடத்தினைத்  தாங்கிப் பிடிக்கும் பலமான தூண்களாகும்.  ஆனால் சமீப கால சம்பவங்கள் பெண்களை தரம் தாழ்த்தி அழகு பார்க்கும் ஒரு நிலையாக உள்ளது. பெண்கள் உடல் வாகு இலகுவானதுதான். ஏனெறால் அவர்கள் குழந்தை பெற்கும் திறனும், குழந்தையினை பாலூட்டி வளர்க்கும் சக்தியும் கொண்டதால் வலிமை இழந்தவர்களாக  காட்சி தருகிறார்கள். மிகவும் வலிமை மிகுந்த ஆடவர் பெண்களை காட்டில் புள்ளி மான்களை வேட்டையாடும் வலிமையான புலிகள் போன்று  இருக்கிறார்கள். ஆனால் நாகரீக உலகம் அவர்களை மென்மைப் படுத்த வேண்டும்.
ஆசியாவிலும், தென் அமெரிக்காவிலும் இன்னும் ஆணாதிக்க சமூதாயம் தான் நடந்து கொண்டு இருக்கிறது. ஆணாதிக்க சமூகத்தில் கணவர்கள் மனைவிமார்களை கொடுமைப் படுத்தும் சம்பவங்களும், ஆண்கள் பெண்களை பாலியல் தொந்தரவு செய்வதும், ஆண்கள் சிறார்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும், இளம் சிறுமிகளை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொடுப்பதும், அத்துடன் தேவதாசி முறையும், விதவைத் திருமண மறுப்பும், பலதார மணமும்  நடந்து கொண்டுதான் உள்ளது. ஆகவே அரசும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் மக்களுடைய, அதுவும் குறிப்பாக நலிந்த சமூகத்தினரின் உரிமைகள் என்னன்ன என்பதினைப் போதிக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும்.
இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப் பட்டோர் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும்,மூத்த குடிமக்களாவோர் ஆவர். ஆகவே பெண்களின் நலன் ஐ.நா.சபையின் பட்டயத்தில் 1945 ஆம் வருடம் அதிகமாக காணப் பட்டது. 1946 ஆம் ஆண்டு உலக பெண்களின் அரசியல், பொருளாதாரம், சிவில், சமூக மற்றும் கல்வி போன்றவற்றின் நிலை பற்றி அறிய ஒரு கமிசன் அமைக்கப் பட்டது. அதன் பலனாக 1948 ஆம் ஆண்டு மனித உரிமை பற்றிய சர்வதேச அறிவிப்பு வெளியானது. அதில் மனிதராக பிறந்தவர் அனைவரும் சுதந்திரப் பறவை மற்றும் சம உரிமை கொண்டவர்கள் என்றும் கூறப்பட்டது. பெண்களைப் பாலியல் குற்றங்களில் தள்ளும் பழக்க முள்ள அந்நாளில் 1949 ஆம் ஆண்டு பெண்களை பாலியல் குற்றத்தில் ஈடுபடுத்துவது குற்றம் என்றும், அவ்வாறு தொழிலில் ஈடு பட்டவர்களை நல்வழிப் படுத்துவது அரசின் கடமை என்று அறிவிக்கப் பட்டது. 1952 ஆம் ஆண்டு பெண்களுக்கு அரசியல் உரிமை கொடுத்து அவர்கள் ஓட்டுப் போடும் வாய்ப்பும் வழங்கி, பெண்களை ஓட்டுப்போடாமல் தடுப்பது குற்றம் என்றும் அறிவிக்கப் பட்டது . வெளிநாட்டுப் பெண்களை மணம் முடித்து அவர்களை கணவர்மார்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையினை 1957 ஆம் ஆண்டு அமைக்கப் பட்ட கமிசன் அவர்களுக்கு கணவர் நாட்டுக் குடிமக்கள் என்று அறிவிப்பு செய்தது. 1967 மற்றும் 1979 ஆண்டுகளில் அமைக்கப் பட்ட கமிசன்கள் பெண்கள் என்பதால் ஒதுக்குவது குற்றம் என்று அறிவிப்புச் செய்ததோடு அவர்களுடைய சுய கௌரவத்தினைப் பாதிக்கும் செயலாக அறிவிப்பு செய்தது. 1993 ஆம் ஆண்டு ஐ.நா.சபை உறுப்பு நாடுகள் அனைத்தும் பெண்களுக்கு எதிரான பொது இடத்திலோ அல்லது தனிமையிலோ வன்முறையில் ஈடுபடுவது குற்றமாக அறிவிக்க வகை செய்தது. இதில் ஒரு ஆச்சரியப்பட விஷயம் என்னவென்றால் கற்காலத்தில் ஸ்கன்டிநேவியன் நாட்டில் எடுக்கப் பட்ட ஆறு பெண்களின் மண்டை ஓடுகளில் ஒரு ஓட்டில் அடிபட்ட காயம் இருந்திருக்கிறது. இது எதனைக் காட்டுகிறது என்றால் காலங்காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்து கொண்டுதான் வந்துள்ளது. ஏன் இன்றைய தமிழக முதல்வர் அவர்களை  1989ஆம் ஆண்டு சட்ட சபையிலேயே அந்நாள் மந்திரிகளும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் இரக்கமின்றி தாக்கிய நிகழ்ச்சி தொலைக் காட்சியில் ஆயிரக் கணக்கானோர் அதிர்ச்சியுடன் பார்த்த வன்முறை சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. 1995ஆம் ஆண்டு பீஜிங் நகரில் கூடிய கூட்டத்தில் ஆண், பெண் ஆகியோரின் அனைத்து வேறுபாட்டினையும் களைந்து அறிவிப்பு வெளியானது.
இந்திய நாட்டின் அரசியல் சட்டம் 1951 பகுதி இரண்டில் பெண்களுக்கான சமத்துவ உரிமையினை உறுதி செய்தது. அதில் சதி தடுப்புச் சட்டம், சீதன ஒழிப்புச் சட்டம், பாலியல் தொழில் ஒழிப்புச் சட்டம் போன்றவை முக்கியமானவையாகும்.
அரசியல் சட்டம் பகுதி  நான்கில் டிரெக்டிவ் ப்ரின்ச்பில் ஆப் ஸ்டேட் பாலிசி என்ற அரசின் கொள்கையினை வழிச் செலுத்தும் நெறிகள் என்ற  பகுதியில் வேலையில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம்,கருவுற்ற நேரத்தில் பெண்களுக்கான சலுகைகள், பெண்களை மதிக்கும் விதமான அறிவுப்புகள் மற்றும் பெண்களுக்கு அவமான காரியங்களிருந்து விலக்கம் போன்ற நடவடிக்கைகள் போன்றன செயல் படுத்தப் பட்டன.

அதிலும் மனித உரிமைக் காப்பதிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதிலும் இந்திய நாட்டு நீதி மன்றங்களின் பல் வேறு தீர்ப்புகள்  மெச்சத்தகுந்தது என்றால் மறுக்க முடியாதது ஆகும்.
உதாரணத்திற்கு:
i ) கைதிகளுக்கு கைவிலங்கு இடுவது தடுக்கப் பட்டுள்ளது
ii ) இரவு நேரத்தில் ஆண்கள் இல்லாத வேலையில் வீடுகளில் சோதனை இடுவது தடுக்கப் பட்டுள்ளது.
iii ) பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்வது தடுக்கப் பட்டுள்ளது.
iv ) உண்மை இல்லாத கைது போன்ற நடவடிக்கையில் பாதிக்கப் பட்டோருக்கு நிதி உதவி அளிப்பது
v ) பாலியல் கொடுமை  மனித உரிமைக்கு எதிரானக் குற்றம் என்று அறிவித்தல்.
vi ) சிறுமியர் திருமணம் தடுக்கப்பட்டுள்ளது.
vii ) இஸ்லாமியப் பெண்களுக்கு ஜீவனாம்சம் அளிக்கப்பட்டுள்ளது.
viii ) தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்முறைச் சட்டத்திற்கு வழிவகை செய்தது.
ix ) தேசிய மனித உரிமை கமிசன் அமைப்பதிற்கு வழி வகுத்தது.
x ) தகவல் உரிமைச் சட்டம் இயற்றி சாதாரண குடிமகன் தகவல்ப் பெற சட்டம் இயற்ற வழிவகுத்தது.
xi ) வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு அரசு உணவு வழங்க வேண்டும் என ஆணையிட்டது.
xii ) பிரிடிஸ்  காலனி போலீஸின் புரையோடிய சட்டங்களைத் திருத்த போலிஸ் சீர்திருத்த கொண்டு வர ஆணைப் பிறப்பித்தது.
சமூகத்தில் பெண்களுக்கு வலிமை சேர்த்தல்:
ஒவ்வொரு மார்ச் 8 ஆம் தேதியும் பெண்களுக்கு வலிமை சேர்க்கும் நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்திய தேசம் 1857 ஆம் ஆண்டு முதலாவது விடுதலைப் போரினைக் கண்டது. அதே வருடத்தில் நியூ யார்க் நகரில் மார்ச் மாதம் எட்டாம் நாள் ஆயிரக் கணக்கான வேலைப் பார்க்கும் பெண்கள் தங்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளம் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்து போலீஸாரால் ஓட, ஓட விரட்டி அடிக்கப் பட்டனர். அந்த நாளை குறிக்ககூடிய தனமே பெண்கள் தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. ஆனால் பெண்களுக்கு நிகரான ஊதியம் அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டு பாரக் ஒபாமா ஜனாதிபதியான்ப் பின்புதான் வழங்கப் பட்டது என்றால் ஆச்சரியமாகத் தெரியவில்லையா? அப்படிப் பட்ட ஆணாதிக்க மிக்க உலகில் பெண்கள் உலா வருகின்றனர். பெரும்பாலும் பெண்கள் புகுந்த வீட்டிதால் கொடுமையினை அனுபவிக்கின்றனர்.
இன்றைய உலகில் பெரும்பாலான பெண்கள் வறுமையில் வாடுகின்றனர். உலக விலை வாசி உயர்வில் ஒரு வேலை உணவு உண்பது என்பதே பெண்களுக்கு அரிதாக இருக்கும்போது அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு எப்படி பாலூட்டமுடியும் என்பதினை சோமாலிய, மொசாம்பிக்,நைஜீரியா போன்ற நாடுகளில் பெண்கள் நிலையும், குழந்தைகள் நிலையினையும் தொலைக் காட்சிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. உலகில் படிக்காதவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், எச்,ஐ.வி. போன்ற நோயால் பாதிக்கப் பட்டோர் பெரும்பாலும் பெண்கள்தான். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவ மனைகளும் உண்டு. ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று மில்லியன் பெண் குழந்தைகள் பள்ளிகூடத்திலிருந்து நின்று விட்டன. காரணமென்ன என்று ஆராய்ந்தால் பள்ளிக்கூடத்தில் தனியான கழிவறை இல்லை என்பதுதான்.
ஆகவே பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற மைக்ரோ பினான்ஸ் என்ற சிறு பொருளுதவி தொழில் தொடங்க மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற உதவி செய்தால் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற முடியும்.
இன்று இந்திய நாட்டில் பஞ்சாயத் ராஜ் என்ற மூன்றடுக்கு தேர்தல் முறையும் அதில் பெண்களுக்கான முப்பது சதவீத ஒதுக்கீடு மூலம் 80,000 மகளிர் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அதேபோன்று பிற்பட்டோருக்கும் மகளிரில் ஒதுக்கீடு செய்து சட்டமன்றம் மற்றும் மக்களவையிலும் ஒதுக்கீடு செய்து பெண்கள் குரல் அதிகமாக இந்திய ஜனநாயகத்தில் ஒலிக்க வழி வகை செய்ய வேண்டும்.
அனால் அவர்களுக்கு கல்வியும் உரிய உரிமையும் கொடுத்தால் அவர்கள் ஆண்களை மின்சுபவர்களாக இருக்கின்றார்கள் பல உதாரணங்களால் நிரூபிக்க முடியும்:
i ) இன்று உலகின் முக்கிய நாடுகளான ஜெர்மனி,தென் கொரியா,பிரேசில், கொசோவோ, ஐயெர்லண்ட், செர்பியா, மாளவி,பங்களாதேஸ் போன்ற நாடுகளில் பெண் அதிபர்கள் உள்ளனர்.
ii ) உலகின் உயர்ந்த விருதான நோபெல் பரிசினை 40 பெண்கள் பெற்றுள்ளனர். இந்த வருடம் அமைதிக்கான நோபெல் பரிசினை கூட்டாக எமனைச் சார்ந்த தவக்கல் என்ற பெண்மணியும், கென்யாவினைச சார்ந்த மதாயும் கூட்டாகப் பெற்றுள்ளனர்.
iii ) பர்மாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை சென்றாலும் போராடி ஜனநாயகத்திற்கு நோபெல் பரிசுப் பெற்ற ஆங் சன் சூ கி வழி வகுத்துள்ளார்.
iv )  தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தாலும் பரவாயில்லை என்று பெண் கல்விக்காக குரல் பாகிஸ்தானைச் சார்ந்த மலாலா கொடுத்துள்ளார்.
v ) வின் வெளிப் பயணத்தில் ஆண் துணையில்லாது விண்கலத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று திரும்பி இருக்கிறார் சுனித வில்லியம்.
vii ) லண்டன் ஒலிம்பிக்கில் மெடல் வாங்கிதிரும்பி இருக்கிறார்கள் மேரி கொமும் மற்றும் சைனா நேஹ்வாலும்.
viii ) அண்டை நாட்டின் வாலாட்டத்தினை 1971 ஆண்டுப் போரில் ஒடுக்கியும், தேசிய ஒருபைப்பாட்டினை காளிஸ்த்தான் தீவிரவாதிகளை ஒடுக்கி தன உயிர் போனாலும் பரவாயில்லை என்று உலகிற்கு காட்டிய இந்திரா காந்தியாலும்
ix ) வல்லரசு அமெரிக்காவில் இந்திய வம்சா வழி பொருளாதார நிபுணராக பொருபேற்றிருக்கும் இந்திரா நூயி 
 x ) ஆணாதிக்க மிக்க தமிழகத்தில் சிறை சென்றாலும் மூன்றாவது முறையாக அரியணை ஏறிய தமிழக முதல்வர் ஆகியோராலும் பெண்கள் முன்னேற முடியும் என்று உலகிற்கு காட்டப் பட்டுள்ளது.

Saturday, 9 February 2013

கறுப்புக் கண்ணாடிப் பார்வையில் கருத்துச் சுதந்திரம்!


கறுப்புக் கண்ணாடிப் பார்வையில் கருத்துச் சுதந்திரம்!
விஸ்வரூபம் படம் வெளியாவதிற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததனை அடுத்து கூட்டப் பட்ட முத்தரப்புப் பேச்சுகளில் முஸ்லிம் சமுதாய மக்கள் மனம் புண்படுமளவிற்கு உள்ள ஆட்சேபகரமான பகுதிகளை நீக்கி விட்டு 7.2.2013 அன்று பல திரை அரங்குகளில் வெளியிடப் பட்டது. அதனைத் தொடர்ந்து கொடுக்கப் பட்ட பேட்டியில்  கமலகாசன் அவர்கள், 'இனிமேல் இதுபோன்ற கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான குரல் எழுப்பினால் இந்திய நாட்டினை விட்டு வெளியேறுவேன்' எனக் கூறியிருப்பது விவாததிற்கு உள்ளானதாக  கருத வேண்டி உள்ளது. 
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 14 வின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சட்டத்தின் முன்பு சமம்.  அவர்களுக்கு அரசு சம பாதுகாப்பு வழங்க வேண்டும்  அந்தக் கருத்தினை வலியுறித்தி சட்டப் பிரிவுகள் 15-8, 38,39,46 ஆகியவற்றில் இன்னும் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.அரசியல் பிரிவு 19 வின் படி  சிலக் கட்டுப்பாடுகள் உள்ளன  கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நாட்டின் நலனுக்கு, சமுதாய நலனுக்கு மற்றும் பொது மக்கள் நலனுக்கு எதிராக அமையக் கூடாது என்ற கட்டுப் பாடுகள் உள்ளன.
நடிகர் கமலகாசன் எங்களூர் இளையான்குடியின் அருகில் உள்ள பரமக்குடியினைச் சார்ந்த நல்ல கலைக் குடும்பத்தவர் என்பதினை மறுக்க முடியாது. . சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்னை வந்தபோது, அவரை அழைத்து பெரிய விளம்பரத்துடன், 'மருதநாயகம்' என்ற சரித்திரக் கதையினை எடுக்க முதல் முயற்சியில் இறங்கினார். அந்த மருத நாயகம் யார் என்று உங்கள் பலருக்குத் தெரியும் . இருந்தாலும் சுருக்கமாக சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன்..
ஆங்கிலேயரின் மதுரைப் பகுதி வரி வசூல் செய்யும் தளபதியாக இருந்து,  பின்பு ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுத்து தன்னையே அர்பணித்த தென் தமிழகத்தின் தன்னிகரற்ற தானைத் தலைவன். அந்த மருதநாயகத்தின் பெயரில் படப் பிடிப்பு ஆரம்பித்த வேகத்திலேயே நின்று விட்டது. ஒரு தமிழ் வாரப் பத்திரிக்கையில் அதற்கான காரணத்தினை ஒரு பேட்டியில்  கமலகாசன் , 'சில எதிர்பாராத எதிர்ப்புகளால் நிறுத்தப் பட்டு விட்டதாக' கூறியுள்ளார். . அந்த எதிர்பாராத எதிர்ப்பு என்ன என்று இதுவரை  சொல்ல வில்லை. . அந்த எதிர்ப்பு எங்கிருந்து வந்திருக்கும் என்று உங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்து இருக்கும் என நம்புகிறேன். அப்போது பிறந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு குடிபுகுந்து விடுவேன் என்று ஏன் சொல்லவில்லை?
முன்பெல்லாம் சினிமா படங்கள் இயற்கை சூழலில்,  கலைஞர்கள் மிகவும் சிரமப் பட்டு சினிமாப் படங்கள் எடுக்கப்  பட்டதால் படங்கள் தத்ரூபமாக இருந்தன. . நடிகர், நடிகைகள் தங்கள் சொந்தக் குரலில் பாடி , பேசி, ஆடி, நடித்து இருந்தார்கள்.  ஆனால் இன்று எல்லாவற்றிற்கும் டூப் போடும் அளவிற்கு தள்ளப் பட்டுள்ளது. இன்றைய ரோபோ போன்ற எந்திர உலகத்தில் கிராபிக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதின் மூலம் கழுதையினைக் கூட குதிரையாக்கி,கிழவிகளைக்கூட குமரிகளாக்கும்  நவீன அற்புத திறன்கள் உள்ளன படைப்பாளிகளிடம். நான் 2001 யில் அமெரிக்கா சென்றபோது லாஸ் எஞ்சலில் உள்ள யுனிவெர்சல் சென்று ஆஸ்கார் விருது வென்ற, 'ஜுராசிக் பார்க்' செட்டினைப்  பார்ததேன்.  ஒரு அரங்கிற்குள் அத்தனைப் படைப்புகளையும் தத்ரூபமாக எடுத்து உள்ளார்கள். ஆகவே கிராபிக் முறையில் படம் எடுப்பதால் அது பிரமாதம் போன்று தெரிகிறது.
விஸ்வரூபம் படத்தில் 'முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிரானபோர்' என்ற அமெரிக்காவின் மறு பொய்யான முத்திரையில்  இந்தியாவிற்குள் நுழைய முயர்ச்சித்ததால் முஸ்லிம்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளார்கள் என்பதினையும், தமிழக அரசும் முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து நடந்தது என்பதினை மறுப்பதிற்கில்லை.
உண்மையிலேயே உலகில் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற படம் எடுக்க வேண்டுமென்றால் மேலை நாடுகள் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கூட்டுப் படைகள் செய்த அத்துமீறல்களை உலக மனித உரிமைக் கழகம் படம் பிடித்து ஒரு அறிக்கையாக சமர்பித்து இருப்பதினை படங்களாக திரையிட்டிருக்க வேண்டும். அந்தத் தைரியம் யாருக்குத் தான் வரும்?
அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என எண்ணுகிறேன்:
1) அபுகாரிப், குவாண்டனாமா போன்ற சிறைகளில் கைதிகளை நடத்திய ஈவு இறக்க மில்லாத நடவடிக்கைகள். அந்த கைதிகள் செய்த பாவம் என்ன. அந்நிய படை எடுப்பினை எதிர்த்ததுதான் அவர்கள் செய்த பாவம். அதற்காக அப்பாவி மக்களை தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தி மாக்களாக நடத்தியதுதான் பெரும் கொடுமையிலும் கொடுமை. பயங்கர நாய்களை கைதிகள் மீது ஏவி விட்டது.
2) லிண்டி இங்க்லண்ட் என்ற ஒரு பெண் ராணுவ அதிகாரி நிர்வாணமாக இருக்கும் ஒரு ஆண் கைதியை சங்கிலியால் பிணைத்து இழுத்து வருவது, தன் சக அதிகாரிகளுடன் அந்தக் கைதியின் மீது அமர்ந்து ஆனந்தமாக போட்டோவிற்கு போஸ் கொடுப்பது.
3) ஆப்கானிஸ்தான் நாட்டில் கொல்லப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் மீது மேலை நாட்டுப் படை வீரர்கள் சிறுநீர் கழிப்பது.
4) ஆப்கானிஸ்தான் நாட்டில் திருமண விழாவில் கூடி இருந்த பெண்கள், சிறார்கள், பெரியவர்கள் என்ற வித்யாசம் தெரியாது வானத்தில் இருந்து குண்டு மாறிப் பொழிந்து அறுபதுக்கு மேலோரைக் கொண்டது.
5) பாகிஸ்தான் நாட்டில் தணிக்கைச் சாவடியில் பணியிலிருந்த அமெரிக்காவின் படை வீரர் மது அருந்தி போதையில் காரில் சென்ற ஒரு குடும்பத்தினையே அழித்து இன்று அமரிக்காவில் நீதி மன்ற விசாரணையில் இருப்பது.
6) லிபியா  நாட்டுப் பெண் பாத்திமா போசார் என்பவர் நாலரை மாத கர்ப்பிணி. அவரை 2004 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து பிடித்து பல காலம் வைத்து சித்திரவதை செய்தது. அதுவும் கர்பிணிப் பெண்ணான அந்தப் பெண்ணை சங்கிலியில் பிணைத்து ஐந்து நாட்கள் பட்டினிப் போட்டு கொடுமை செய்தது.
7) ஐ.நா.சபையின் ஜெனீவாவை சார்ந்த குழந்தைகள் உரிமைக் கழகம் சமர்ப்பித்த அறிக்கையில்,'அமெரிக்காவின் படைகள் தங்களது போர் நடவடிக்கையால் ஆப்கானிஸ்தானில் நூற்றுக் கணக்கான குழந்தைகளை சாகடித்து விட்டதாக' குற்றம் சாட்டியுள்ளது.
இதுபோன்ற 136 சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள் அறிக்கையாக தரப் பட்டுள்ளன. ஏன் அவற்றை எல்லாம் படமாக எடுக்க யாரும் முன் வரவில்லை என்ற கேள்வி உங்களைப் போன்றவர்களுக்கு கேட்கத் தோணுவது இயற்கைத் தானே!


ஒரு நாட்டினை நேசிப்பவர் என்ன இன்னல் வந்தாலும்  எதிர் கொள்ள வேண்டுமே  ஒழிய, அதற்காக யாரும் நாட்டினை விட்டு குடிபெயர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவருமில்லை இந்திய நாட்டில். சிறுபான்மை இனத்தினை சீண்டுவது அதன் பின்பு அதனை தீர்ப்பதிற்குப் பதிலாக கருத்துச் சுதந்திரம் என்ற ஆயுதத்தினை எடுப்பது எந்தளவிற்கு நியாயம் என்று தெரியவில்லை.
அடுத்தபடியாக முண்டாசு கட்டும் தலைவராக வி.எச்.பி. என்ற அமைப்பின் தொகாடிய ஒரு ஆட்சேபகரமான கருத்தினை மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டம் போகர் நகரில் தெரிவித்துள்ளது அனைத்து செய்தித் தாள்களிலும் 6.2.2013 வந்துள்ளது.
அதாவது, 24.2.2012 அன்று ஆந்திரா எம்.ஐ.எம். எம்.ஏ ஒவைசி பேசியதிற்கு பதிலடி என்று, 'இருபது ஆண்டுகளில் காவல்த் துறையினர், தாங்கள் போட்ட ஆட்டத்திணை வேடிக்கை பார்த்தனர். அதன் விளைவு தான் அஸ்ஸாமில் 3000 பேர் கொல்லப்பட்டனர், பிஹாரி மாநிலம் பகல்பூரிலும், மோராடபடிலும், மீரட்டிலும், 2002 இல் குஜராத்திலும் அதே நிலை தான் நடந்தது, அதாவது காவல் துறையினர் வேடிக்கை பார்த்து நிண்டார்கள்' என்கிறார். அவர் கூற்றை உண்மையாக்குவது போல மகாராஷ்டிரா மாநிலம் தூளே கலவரத்தில் தவறான நடவடிக்கைக்கு ஆறு காவலர்கள் கைது செய்து இருப்பதாக செய்திகள் கூறுகிறது. இன்னும் சொல்லப் போனால் மலேகன், மெக்க மஸ்ஜித் குண்டு வெடிப்பில் ஒரு ராணுவ அதிகாரி புரோஹிட் சம்பந்தப் பட்டிருப்பதினை பார்க்கும்போது சிறுபான்மை சமூகத்தாரை குறி பார்க்கும் ஒரு பெரிய கூட்டமே இவர் பின்னனியில் இருப்பதாக உங்களுக்குத் தோணவில்லையா? அப்படி பேசி இருக்கும் தொகடியாவினை இன்னும் சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
ஆகவேதான் ஆரம்பத்தில் சொன்னேன், சட்டத்தில் அனைவருக்கும் சமம், சட்டப் படி பாதுகாப்புக் கொடுப்பது அரசு கடமை என்று. அந்த சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உனிமைக் கொடுத்து மைனாரிட்டி சமூக மக்களை மதித்து, அவர்கள் மனம் யாருடைய பேச்சு, எழுத்து, காட்சிச் சுதந்திரத்திளால் பாதகம் வராது பார்த்துக் கொள்வது அரசி சட்டப் படி தலையாய கடமையாகும். எந்தக் கலைஞரும் அந்நிய மேலை நாடுகளின் கைகூலியாக மாறி மைனாரிட்டி சமூகத்தினை கலர்க் கண்ணாடி பார்வையில் சித்தரிக்கக் கூடாது, அத்துடன் அரசும், தொகாடிய போன்ற வி.எச்.பி. தலைவர்கள் வன்முறைத் தூண்டும் பேச்சினில் உடனடி நடவடிக்கை எடுப்பதின் மூலம் நாட்டில் வன்முறையினைக் கட்டுப் படுத்தலாம். அத்துடன் அரசு காவல் துறையினர் தங்கள் கைப்பாவை என்ற எண்ணம் அனைத்து மக்களிடம் நீங்கி அமைதிப் பூங்கா நம் நாடு என்ற பெயருக்கு வழி காட்டும் என்றால் சரியாகுமா?