Wednesday, 18 October 2017

சமத்துவ ஹஜ் பயணம்-சிறப்புப் பார்வை!


டாக்டர் .பீ. முகமது அலி,.பீ.எஸ்()
முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் கடைசி கடமையான புனித ஹஜ் பயணத்தினை மேற்கொள்வது ஒவ்வொரு வசதியுள்ள மற்றும் உடல் திடகார்த்தமான முஸ்லிமின் கடமையாகும் என்பது அனைவருக்கும் தெரியும். 1999ம் ஆண்டு அரசு சார்பான அலுவலக பணியில் நான் இருந்த போதுஉம்ரா மனைவியுடன் செய்துள்ளேன். இருந்தாலும் 2006 ம் ஆண்டு பணி ஓய்விற்கு பின்பு ஹஜ்ஜினை  நிறைவேற்றவில்லை என்கிற நெருடல் என் மனதில் இருந்தது. தனியார் டிராவல்ஸ்  மூலமும், அரசு ஹஜ் அமைப்பின் மூலமும் ஹஜ் பயணம் மேற்கொண்டோர் சொல்லும் செய்திகளையும், பள்ளிவாசல் பயான்கள் மூலம் ஹஜ்ஜின்பயனைப் பற்றி சொல்ல கேட்கும் போதும் நாமும் எப்படியாவது இந்த வருடம் ஹஜ் பயணத்தினை மேற்கொண்டு விடவேண்டும், அதுவும் அரசு சார்பாக மிக குறைந்த செலவினைக் கொண்ட ஹஜ்ஜினை நிறைவேற்றிவிட என்று எண்ணி விண்ணப்பித்தேன். எனது வயது 70தினை தாண்டிவிட்டதால் குலுக்கல் இல்லாமல் மனைவியுடன் செல்ல அனுமதி கிடைத்தது.

தனியார் நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும்போது சாப்பாடு மற்றும் தங்குமிடம் சிறப்பாக இருக்குமென்றாலும் சில சமயங்களில் தனியார் நிறுவனங்களின் செயல் பாடுகள் குறைகளுடன் அமைந்து விடுகின்றது. சில புற்றீசல் போன்ற அமைப்புகள் சில இமாம்கள் மூலம் இதனை ஒரு தொழிலாகவே செய்வதும் வெளிப்படையானது. 18 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையினைச் சார்ந்த ஒரு ஹஜ் டிராவல் நிறுவனம் ஹஜ்ஜுக்கு அனுப்புகின்றோம் என்று பணம் வசூல் செய்து ஏப்பமிட்டதும், மண்ணடியினைச் சார்ந்த ஒரு தொழிலதிபரை நம்பி பணத்தினை ஏமாந்த அப்பிராணி சாகுல் ஹமீது என்பவர் பெங்களூர் லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டதும் பலருக்குத் தெரியும். சென்னையை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவினைச் சார்ந்த ஒரு டிராவல் நிறுவனம் இதுபோன்று கடலூர், விழுப்புர மாவட்டங்களில் 24 பேர்களிடம் தலா ரூ 3/ லட்சம் என்று வசூல் செய்து 2017ல் ஹஜ்ஜுக்கு அனுப்பாமல் ஏப்பமிட்டதும் அதில் ஏமாந்தவர்களில் என் கல்லூரி நண்பன் நெல்லிக்   குப்பம் அபுசாலியும் இருக்கின்றார் என்று நினைக்கும்போது மிகுந்த வருத்தமாக உள்ளது. 2017  ம் வருடம் சௌதி அரசு 61 போலி ஹஜ் ட்ராவல்ஸ்  நிறுவனங்களைக் கண்டுபிடித்தும், 10,533 சௌதி குடிமக்கள் மற்றும் 2,13,533 மற்ற நாட்டு குடிமக்களை பிடித்து விசாரித்து வருவதாக (23.8.2017) செய்தி வெளியிட்டுள்ளது. அரசு அமைப்பின் மூலம் ஹஜ் செல்பவர்களை இந்திய வெளியுறவுத் துறையினர் விருந்தாளிகளாக கருதுவதால் அவசரகாலத்தில் சௌதியில் உதவும் காட்சிகளைக் காணமுடிகிறது.
2017  ம் வருடம் 23 லட்சம் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். அதில் இந்தியா சார்பாக 1,70,025 பேர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். அவர்களில்  அரசு ஹஜ் மூலம் 1,36,020 பேர்களும், 45,000 பேர்கள் தனியார் அமைப்பின் மூலமும் ஹஜ்ஜினை நிறைவேற்றியுள்ளனர்.. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான்-நிக்கோபார் பகுதியிலிருந்து 3226 பேர்கள் ஹஜ் மேற்கொண்டனர்.

20.8.2017 ந் தேதி இரவு சௌதி விமானம் மூலம்  புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலையில்  ஜெத்தா வந்தடைந்தோம். எங்களுக்கு மக்காவில் ரூபாத் என்ற ஆற்காடு தங்கும் விடுதியில் இடம் கிடைத்தது. ஜெத்தா விமான நிலையத்திலிருந்து காலந்தாழ்த்தி புறப்பட்ட எங்கள் பஸ் பாலைவனம் மற்றும் மரமில்லா கற் குன்றுகளைக் கடந்து சென்றது. ஒன்றுமே விளையாத மக்கா நகரில் 23 லட்ச மக்களைக் ஈர்க்கும் தன்மை எப்படி ஏற்பட்டது என்று இஸ்லாமிய வரலாறு படித்த என் சிந்தனையினை தூண்டியது. அந்தப் பெருமை பெருமானாருக்கு ஏக இறை தத்துவத்தினை வகி மூலம்  இறக்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே தகும். பல்வேறு இன அமைப்பாக இருந்த சௌதி அராபியாவினை ஒரு அரசின் கீழ் கொண்டு வந்த பெருமை மற்றும் எண்ணெய் கிணறு வளத்தினை 1933ல் கண்டு பிடித்த பெருமை அரசர் அப்துல் அஜீஜ் பின் சாத் அவர்களுக்கும், இன்றைய நவீன செல்வம் பொங்கும்  நாடாக  1973-74ல் மாற்றிய பெருமை அரசர் அப்துல்லாவிற்கும் தகும் என்றால் மறுப்பதிக்கில்லை. இந்த வருடம் மட்டும் 6.7லட்சம் குயுபீக் மீட்டர் தண்ணீரினை சௌதி அரசு மக்கா மாநகருக்கு ஹாஜிகளின் உபயோகத்திற்காக கொடுத்திருக்கின்றது என்றால் பாருங்களேன்.

               
இரவில் கண்ணைப் பறிக்கும் மின்விளக்குகளில் புனித ஹரத்திற்கு  எத்தனை கோகினூர் வைரங்கள் வந்தாலும் ஈடாகாதுதவாப் செய்வதற்கும் காபாவை மற்றும் ஹஜ்ருல் அஸ்வத் கல்லினை தொடுவதற்கும் முண்டியடிக்கும் ஆண், பெண் ஆகியோர் ஆர்வ மிகுதியால் காண முடிகிறது. ஆனால் கலீபா உமர்(ரழி) அஸ்வத் வெறும் கல் தான், வலது கையினை தூக்கிஇறைவன் பெரியவன்’ என்று சொன்னாலே போதும் என்று சொன்னதாக வரலாறு சொன்னாலும் கூட ஆர்வ மிகுதியால்  வயதான ஆண்கள்  மற்றும் பெண்கள் கூட்ட நெரிசலில் முட்டி மோதி அதன் அருகில் நெருங்க முயற்சிப்பது தேவையில்லாத  ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது. அதனை அங்குள்ள பாதுகாவலர்களும் விரும்புவதில்லை.
முன்பெல்லாம் காபாவிற்கு  வெளியே கையேந்தும் யாசகர்களை சிறு கம்பு கொண்டும் விரட்டும் அரேபிய கண்காணிப்பாளர்களைக் காண முடிந்தது. ஆனால் அந்த முறை ஒழிந்து விட்டதோ என்று என்னும் அளவிற்கு புர்கா பெண்கள் யாசகம் கேட்பதினை காண முடிந்தது. அப்போது தான் என் நண்பர் ஒருவர் சொல்லும்போது, சிலர் ஹஜ்ஜுக்கு குறைந்த செலவில் அனுப்புகின்றோம் என்று பெண்களைக் கூட்டி வந்து ஹரத்திலும், மதினா மஸ்ஜிதே நவபியிலும் விட்டு கையேந்தி யாசகம் கேட்டு அதனை வசூல் செய்து பின்பு திருப்பி அனுப்பி விடுவதாக கூறுவதில் உண்மை இருக்குமோ  என்று நம்ப வேண்டியுள்ளதுஅது மட்டுமல்லாது மக்காவிலும், மதினாவில் சுத்தப் படுத்தும் வேளையில் ஈடுபடும் ஆசிய நாட்டு தொழிழாளர்கள் ஹாஜிகளிடம் ஒரு ரியால், இரண்டு ரியால் காசுக்காக தங்கள் கடமையினை செய்யாமல் நிற்பதும் காண முடிந்தது. இவ்வாறு கையூட்டுக்காக ஏங்கும் தொழிலாளர்களால், புர்கா போட்ட பெண்களாலும் ஒரு காலத்தில் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நினைக்கத் தோன்றுகின்றது.
காபத்துல்லாவிலும், மதினா மஸ்ஜிதே நவாபியிலும் காவலர்கள், 'ஹாஜி, ஹாஜி' என்று அதட்டி வரம்பு மீறுபவர்களை ஒழுங்கு படுத்துகிறார்களே தவிர, இங்குள்ள காவலர்கள் போல தடி கொண்டு தாக்குவதில்லை. அதிகாலை தஹஜூன், மற்றும் பஜர் தொழுகையின் போதும் காவலர்கள் பாதுகாப்பாகவும், போக்குவரத்து ஒழுங்கு படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தனர், அதன் மூலம் அத்தனை மக்கள் கூடும் இடங்களில் பெரிய விபத்தோ அல்லது இங்குள்ள வழிப்பறி, கொள்ளை மற்றும் ஆதாயக் கொலைகள் நடக்கவில்லை என்ற பெருமை  அந்த நாட்டின் கடுமையான சட்டத்தினையே சாரும்.
28.8.2017ல் பஜ்ருக்குப் பின்பு மக்காவிலிருந்து மீனாவிற்கு பஸ் வரும் தயாராக இருங்கள் என்று முவல்லிமிடமிருந்து நோட்டிஸ் ஓட்டப் பட்டது. ஆகவே ஆண்கள் மற்றும் பெண்கள் இஹ்ராம்  உடை உடுத்தி தயாராக இருந்தார்கள், ஆனால் சொன்னபடி மதியம் ஒருமணி வரை வண்டி வரவில்லை, ஆகவே அடுத்த கட்டிடத்திற்கு பாகிஸ்தான் ஹாஜிகளை ஏற்ற வந்த பஸ்களில் டிரைவர்கள் உதவியுடன் ஒரு வழியாக மினா வந்து கிடைத்த படுக்கைகளை பிடித்தோம். அந்தப் படுக்கைகள் 6அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்டது. ஒரு கூடாரத்தில் 100லிருந்து 150 வரை ஹாஜிகள் தங்க வைக்கப் பட்டனர். அந்த படுக்கையின் மீது விரிக்க புது விரிப்பு வழங்கப் பட்டது. அதனை சிலர் தங்கள் பைகளில் பத்திரப் படுத்திக் கொண்டனர். படுக்கைகள் நெருக்கமாக இருந்ததாலும், படுக்கைகளில் செருப்புக் காலுடன் நடந்ததாலும் சிறு-சிறு சச்சரவு ஏற்பட்டது. அத்துடன் ஒரே டெண்டில் பல இடங்களில் ஜமாத் தொழுகை படுக்கையினை எடுத்து விட்டு நடந்தது. ஆகவே இனி வருங்காலங்களில் அடுக்குமுறை படுக்கைகள் வைத்து 50 வயதுக்குமேல் உள்ளவர்கள் நடு, மேல் அடுக்குகளில், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் கீழ் படுக்கைகளிலும் அமர்த்தினால் வசதியாக இருக்கும்.
                 முதல் நாள் போலவே அடுத்தநாள் காலையில் அய்யாமுஸ்தரிக் ஆரம்பித்து விடுவதால்  அரபாத் மைதானத்திற்கு செல்ல வேண்டிய மக்தப் 55க்கு வாகனம் வரவில்லை. ஆகவே பக்கத்தில் உள்ள மக்தப் 52, 56 வண்டிகளில் ஓட்டுநர் உதவியுடன் மதியம் வந்து சேர்ந்தோம் அரபா மைதானம் . அந்த மைதானத்தில் உள்ள மலைக்குன்றில் வெயில் இருந்தாலும், கூடாரத்தில் வெயில் அடித்தாலும் அகிலம் போற்றும் பெருமானார்  எந்த வித ஒலி பெருக்கியில்லாமல் லட்ச மக்கிளிடையே கடைசி உரை ஆற்றிய இடம் என்று தங்கி கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டு துவா செய்தது கல் நெஞ்சையும் கரைய வைக்கும் காட்சியாக இருந்தது. மாலை மங்கியதும் முஸ்தலிபா மைதானத்திற்கு வந்து சேர்ந்தோம். அது ஒரு திறந்த வெளி மைதானமாகவும், இரவு பகல் போல மின்சார ஒளி கொண்டதாகவும் இருந்தது. சாரை, சாரையாக மக்கள் வெள்ளம் அங்கு வந்து சேர்ந்து, மைதானத்தில் சிறு,சிறு கற்களை தேடி கண்டுபிடித்து எடுக்க ஆரம்பித்தது தென் ஆப்பிரிக்க மக்கள் ஓடைகளில் வைரங்களை தேடுவது போல இருந்தது. அவரவர் கொண்டு வந்த படுக்கைகளும், துண்டுகளையும் விரித்து தொழுது விட்டு படுத்தாலும் தூங்காமல் கண்விழித்து  அங்கு சேரும் பல்வேறு நாட்டு ஹாஜிகளைப் ஆவலாக பார்த்துக் கொண்டு இருந்தனர். அதிகாலையானதும் மினா நோக்கிப் புறப் பட்டனர். கருப்பு இன  மக்கள் ஹாஜிகள் விட்டுச் சென்ற படுக்கைகளை, விரிப்புகளை இங்குள்ள காகிதம் சேகரிப்பது போல சேகரித்துக் கொண்டிருந்தனர்.


மறுபடியும் முஸ்தலிபாவினை விட்டு மினா வருவத்திற்காக மக்தப் 55 வண்டியினை சிரமப்பட்டு கண்டுபிடித்தால் அராபிய டிரைவர் தரையில் படுத்துக் கொண்டு வரமாட்டேன் என்கிறார். எங்களோடு வந்த ஒருவர் முவல்லிமியிடம் தொலை பேசியில் பேசினார். இருந்தாலும் பயனில்லாததால் கிடைத்த வண்டியில் ஏறி மினா வந்து பெரிய ஜம்ரத்திற்கு கற்களை வீசினோம். அன்று மாலை 6 மணிக்கு நாங்கள் குர்பானிக்கு ரூபாய் கட்டியதிற்காக குர்பானி கொடுக்கப் பட்டுவிட்டது என்கிற தொலை பேசிக்கு தகவல் வரும் என்றார்கள். ஆனால் இரவு முழுவதும் அந்த தகவல் வரவில்லை.
அன்று இரவு மினாவில் எனக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. அது என்னவென்றால் நான் உம்ரா நிறைவுற்றதிற்கான அடையாளமாக தலை முடியினையும், முறுக்கு மீசையையும் மழிக்கவில்லை. அதனைப் பார்த்த பலர் என்னிடம் நேரிலேயே கேட்டு விட்டார்கள். தியாக திருநாளில் தலை முடியைக் கூட மழிக்க மனம் வரவில்லையே என்ற குறை ஏற்பட்டது. அதனை எனது அறை நண்பர் முகமது ஷபியிடம் சொன்னேன். உடனே அவர் நீங்கள் விரும்பினால் நான் எடுக்கின்றேன் என்று டிஸ்போஸபிள் ரேசரை எடுத்து வந்து சிறு பிள்ளையை உட்கார வைப்பது போல தரையில் உட்கார வைத்து முடியினை மழித்தது 65 வருடத்திற்கு முன்பு சிறுவனாக இருந்த  போது தான். அன்று ஹாஜி நண்பர் ஒரு நாவிதராகி  என்னை ஒரு சிறு பிள்ளையாக்கி முடியினை மழித்து எனது ஹஜ் கடமையினை முடித்தது மறக்க முடியாதது ஆகும். 
இந்த ஹஜ்ஜினை உடல் திடகார்த்தமானவர்கள் மட்டும் நிறைவேற்றவில்லை மாறாக கண்பார்வையற்றோர், முடமானவர், ஆட்டிச நோயால் பாதிக்கப் பட்டோர் , வயதானவர் பிறர் உதவியுடன் நிறைவேற்றினார்கள். தவாப் மற்றும் ஸயீ செய்வதற்காக தாயையும், மனைவியினையும், சகோதர சகோதரிகளையும் அவர்கள் முடியாதவர்கள் என்று எண்ணி மனமுவந்து அவர்கள் கடமையினை நிறைவேற்ற செய்தது எப்படி இஸ்லாத்தில் பெற்றோர்களுக்கும், உடன் பிறந்தவர்களுக்கும் கடமையினை செய்யவேண்டும் என்று எடுத்துக் காட்டியது. நான் பெரிய ஜம்ராத்திற்கு கல்லடிக்க செல்லும்போது   ஆஜானுபாகவான் போன்ற இருவர் இஹ்ராம்  உடை உடுத்தி என் முன்னே சென்று கொண்டிருநதனர். எனது ஆவல் மிகுதியால் அவர்கள் அருகில் சென்று நீங்கள் ஜப்பானியர்களா என்றேன் அவர்கள் இல்லை நாங்கள் ஹாங்காங் நாட்டினவர் என்றனர். நீங்கள் சுமோ மல்யுத்தக் காரர்களா என்று வினவியதிற்கு அவர்கள் ஆம் நங்கள் சுமோ யுத்தம் செய்பவர்கள் என்கிறார்கள். மாமிச மலைபோன்று இருக்கின்ற அவர்களையும் அல்லாஹ் ஏக இறை தத்துவத்தால் தன் பக்கம் இழுத்து விட்டான் என்று எண்ணும்போது இறைவனின் மகிமையினை  'அல்ஹம்துலில்லாஹ்'  என்று சொல்ல வைத்தது.

                18.9.2017 அன்று மதினா வந்தோம். அழகு கல்லோவியம் தாஜ் மகாலையும் மிஞ்சும் பளிங்கு கற்களால் அலங்கரித்து எழுப்பப்பட்ட  ரசூலுல்லாஹ் வாழ்ந்த, மறைந்த இல்லத்தினை காண ஒரு பரவசமேற்பட்டது. மஸ்ஜிதுநபியில் புனித ரவ்ல ஷெரீப் அடைந்ததும், ஸல்லல்லாஹ் அவர்களுக்கு ஸலாம் சொல்ல அடக்கஸ்தலத்திற்கு செல்பவர்கள் இறைவனிடம் கையேந்தி கேட்கும் துவாவைப் போல் நபி அவர்களிடம் கையேந்தி துவா கேட்டு நபிகளாரின் அடக்கஸ்தலத்தை ஒரு தர்காவாக்கி ஷிர்க்கான செயல் அங்கே நடந்து விடக்கூடாது என்று அங்குள்ள பாதுகாவலர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். நீண்ட வரிசையில் நிற்பவர்கள் நபி அவர்களுக்கு ஸ்லாம் சொன்ன உடன் ஒரு நொடிக்கு மேல் நிற்க அனுமதிக்கப் படுவதில்லை.
           மஸ்ஜிதே நபவியின் மேற்பரப்புதலம் முழுவதும் மூடப் பட்ட நிலையில் குறிப்பிட்ட இடம் மட்டும் மேற்கூரை மூடப் படாமல் இருக்கிறது. அந்த இடத்தில் மிகப் பெரிய குடைகள் இடம் பிடித்திருக்கின்றன. இந்த குடிகளின் கீழ் ஹாஜிகள் தொழுவதினைக் காணலாம். அதற்கு ஒரு வரலாறு உள்ளது. ஒரு சமயம் மதினா நகரில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதாம். ஆனால் ஒரு நபி தோழர்(ஸஹாபி) அபூதல்ஹா பைரஹா தோட்டம் மட்டும் செழிப்பாகவும், வற்றாத கிணறு கொண்டதாகவும் இருந்ததாம். ஒரு சமயம் அபூதல்ஹா நபி பெருமானார் சபைக்கு வந்தபோது வஹி ஒன்று நபி அவர்களுக்கு இறங்கியதாம். உங்களுடைய ஸஹாபி ஒருவர் வருவார் அவரிடம் மதினா மக்கள் வறட்சியால் பாதிக்கப் படுவதினை சொல்லுங்கள் என்று. அப்போது அபூதல்ஹா சபைக்கு வந்ததும் அதனை கேள்விப் பட்டு அந்தத் தோட்டத்தினையே தானமாக கொடுத்ததாக வரலாறும் உண்டு.

குரான் கண்காட்சி பார்க்க வேண்டிய ஒன்று. மூன்றாம் கலீபா உதுமான்(ரழி) அவர்களுடைய கைப்பிரதியிலிருந்து, பல்வேறு காலக் கட்டத்தில் ஓவியம் போல எழுதப் பட்ட குரான் பிரதிநிதிகள் கண்களையும், மனதையும் கவர்ந்தது. இஸ்லாம் மற்ற மதங்கள் போல ஒரு மாயையினை போதிக்கவில்லை, அது ஒரு  அழிக்கமுடியா வரலாற்று பெட்டகம்   என்றால் மிகையாகாது.

                 ஹஜ்ஜின் சிறப்பு தகவல்கள்! 
                
1) மக்கமா நகர் அல்ஹரத்திலும் மதினா நகர் மஸ்ஜிதே நவாபியிலும் ஹாஜிகள் வசதிக்காக நாலாவது கட்டிட விஸ்தரிப்பு என்ற பணி முழுமூச்சில் நடந்து கொண்டுள்ளது. அது மட்டுமல்ல மதினாவில் பள்ளியில் வெளிப் புறத்திலும் வசதியாக தொழுவதிற்காக வண்ண விளக்குகள் கொண்ட குளிர் தண்ணீரை தெளிக்கின்ற விரிகொடைகள்  வசதி செய்யப் பட்டுள்ளது. ஆனால் அந்த வசதி மக்கா ஹரத்தின் வெளியே இல்லை. அதனை சரி செய்வதிற்காக 53 அகலம் மற்றும் 53 மீட்டர் நீளம் கொண்ட கொடைகளை அமைக்க திட்டமிட்டுள்ளார்கள் ஹாஜிகள் வசதிக்காக.

2) இந்த வருடம் வருகை தந்த ஹாஜிகளுக்கு ஒரு புதிய நடைமுறை விமான தளங்களில் பார்த்திருப்பார்கள். ஹாஜிகள் வருகை அவர்களின் நம்பகத்தன்மை அறிய பயோமெட்ரிக்ஸ் என்ற கைவிரல் ரேகை மற்றும் கண் அமைப்பு பதிவுகள் செய்யப் பட்டன.

3) நான் மக்காவில் இருந்தபோது என்னை ஒருவர் சந்தித்தார். 'சார் நீங்கள் இங்கிருந்து வீணாக ஜம், ஜம் தண்ணீர் மற்றும் பேரித்தம் பழங்களை சுமக்க வேண்டாம். நீங்கள் ஆர்டர் கொடுத்தால் நீங்கள் சென்னை திரும்புமுன் உங்களுக்குக் கிடைக்க வழிவகை செய்வேன் என்றார். நானும் அவரிடம் ஜம் ஜம் தண்ணீர் அனுப்ப எவ்வளவு செலவாகும் என்றேன். அவர் 10 லிட்டர் கேன் 300ரியால் ஆகும் என்றார். நான் நாகரிகமாக மறுத்து விட்டேன். இது போன்று சிலர் ஜம் ஜம் தண்ணீருடன் சாதாரண தண்ணீரைக் கலந்து சீல் வைத்து விற்பனை செய்வதாக சென்னை வந்ததும் கேள்விப்பட்டேன்.புனித தண்ணீரிலும் மோசடி வேலையா என்று எண்ணத் தோன்றுகிறது.

4) இந்த நேரத்தில் போலியாக உயர் ஜாதி பாதாம் பருப்புடன் கூடிய பேரித்தம் பழ பாக்கெட்டுகளைத் தயார் செய்ததை  ரியாத் காவல் துறையினர் கண்டு பிடித்திருக்கின்றார்கள் என்ற செய்தி வெளிவந்தது. 'சியாக்காரி டேட்ஸ் லேபிள்' தலைப்புடன் போலியான பேரித்தம் பழ பாக்கட்டுகளை ஒரு சௌதி அரேபியர் கம்பனி பெயரில் தயார் செய்யும் போது கண்டு பிடித்து, 180 அட்டைப் பெட்டியில் வைத்திருந்த பாதாம் பருப்புகளையும், 45 ஏற்கனவே தயார் செய்யப்பட்ட அட்டைப் பெட்டிகளையும், 1,50,000 போலி லேபிள்களையும் கைப்பற்றியுள்ளார்களாம் அதன் உத்தேச மதிப்பு 6 மில்லியன் ரியால் ஆகும் என்ற செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரசூலுல்லாஹ் வியாபாரத்தில் நேர்மை காட்டுங்கள் என்று சொன்னதாக பல்வேறு உதாரணங்களுடன் பல ஹதீஸுகள் உள்ளன. இருந்தாலும் இப்படியும் காசு சம்பாதிக்கும் கும்பலும் உள்ளன என்று நினைக்கும் போது ஏமாறுபவர்கள் இருக்கும்போது ஏமாற்றுபவர்கள் காட்டில் மழைப் பொழியத்தானே செய்யும்!

ஈகை குணம் கொண்ட சௌதி மன்னர் சல்மான் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க செயல் இந்த ஹஜ்ஜில் காண முடிந்தது.
1) இஸ்ரேல் மக்களால் கொடுமைக்கு மேல் கொடுமை அனுபவித்து வரும் பாலஸ்தீன மக்கள் ஹஜ் செய்ய முடியாமல் இருந்தது. அதனை நிவர்த்தி செய்ய 2640 பாலஸ்தீன மக்களை தன் விருந்தாளியாக பாவித்து அவர்கள் ஹஜ் செய்ய அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்தார். அதில் 1000 பாலஸ்தீனர்கள் இஸ்ரேயல் ராணுவத்தால் கொல்லப் பட்ட 1000 பாலஸ்தீனர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஆவர்.

2) மினாவில் தங்கி இருந்த 5 நாட்களினை மன்னர் விருந்தாளியாக்கி அவர்கள் காலை மலை தேநீரிலிருந்து மூன்று வேலை உணவும் ஹாஜிகளுக்கு பரிமாறப்பட்டது.

3) புனித நகர்களுக்கு வருகை தரும் ஹாஜிகள் வசதிக்காக அவர்கள் போக்குவரத்தில் இலகுவாக செல்வத்திற்காக அதிவிரைவு மெட்ரோ ரயில் அமைக்கப் பட்டு வருகிறது.ஏட்டு சுரைக்காய் கதைக்குதவாது என்பார்கள். சிலர் ஹஜ் பயணம் செய்து வரலாற்று சுவடுகளை நேரில் பார்க்காமலே பல கட்டுரைகள், புத்தகங்கள் எழுதி காசாக்குவார்கள். ஆனால் அங்கு நேரில் சென் றால் தான்  மக்கா, மதினா எப்படி இஸ்லாத்தில் ஒரு முக்கிய பங்காற்றியது என்று தெரிய வரும். அதுவும் அதிக பணம் செலவழித்து தனியார் மூலம் ஹஜ் செய்யாது அரசு செய்து கொடுக்கும் வசதிகள் மூலம் ஹஜ் செய்தால் தான் அனைத்து தரப்பு மக்களின் நிறை, குறைகளை அறியமுடியும்.
ஹஜ் சென்றவர்கள் கொண்டு வருவது வற்றா ஜம் ஜம் நீர், பேரித்தம் பழம், தொழுகை விரிப்பு, பெண்கள் விரும்புவது புர்கா, மக்கானா மற்றும் தங்க நகைகள். ஆனால் உண்மையில் அங்குள்ள தங்க நகைகளை 21 காரட் நகைகள் தான் என்று சொல்லி விற்பனை செய்கிறார்கள். இங்குள்ளது போல 22 காரட் அதுவும் கேடிஎம் பொரித்தது என்று ஏமாற்றுவதில்லை.
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி ஹாஜிகளுக்கு சேவை செய்ய 19 உறுப்பினர்களை அனுப்பியதாக தகவல் உள்ளது. ஆனால் அவர்கள் ஒரு அடையாளத்திற்காவது  மேல் சட்டை எதுவும் அணியாமல், ஹாஜிகள் வருகை தந்தவுடன் அவர்கள் நலம் பற்றி விசாரிக்காமலும், மினா, அரபாத், முஸ்தலிபா மற்றும் மதினாவில் ஹாஜிகளுக்கு வழிகாட்டுபவர்களாக இருக்கவில்லை. மாறாக அவர்களும் சொந்த செலவில் ஹஜ்ஜுக்கு வந்தவர்கள் போல வருகை தந்து சென்றுவிட்டார்கள். ஆனால் பக்கத்து கேரள மாநில மற்றும்  இந்தோனேசிய, அல்ஜீரியா போன்ற நாடுகளிலிருந்து வந்த ஊழியர்கள் தங்கள் அடையாளம் கொண்ட சட்டைகளை அணிந்து சேவை செய்கின்றனர். ஒருவேளை தமிழக ஊழியர்களுக்கு அதுபோன்ற அடையாள சட்டை அணிவது கேவலமாக தெரிகிறதோ என்னவோ. இனியாவது அவர்கள் அடையாளத்துடன் சேவை செய்ய தமிழக ஹஜ் கமிட்டி வழி வகுக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் பெரும்பாலான இந்தியன் ஹஜ் சேவை ஊழியர்கள் கேரளா மாநிலத்தவர்களாக இருக்கின்றார்கள். அங்கு ஹஜ் நேரத்தில் எல்லா அலுவலர்களுக்கும் விடுமுறை அளிக்கப் படுகிறது. ஏன் சௌதியில் வேலை செய்யும் தமிழ் நாட்டுக்காரர்கள் அந்த சேவையினை செய்ய முன்வரவில்லை என்று தெரியவில்லை
27.9.2017 அன்று இரவு சென்னையில் வந்து இறங்கிய அனைத்து ஹாஜிகளுக்கும்  ஊர், உறவு வித்தியாசமில்லாமல் கட்டியணைத்து முஸாபா செய்து வரவேற்பு விமானதளத்தில் கொடுக்கப் பட்டது உண்மையிலே சமத்துவ ஹஜ்ஜின் மகிமையினை வெளிக்காட்டியது.


Thursday, 19 January 2017

ஜல்லிக் கட்டு, வெற்றிக் கட்டு!

   
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ)
சென்றேன், கண்டேன், ஆர்ப்ரியும் கடலென
பொங்கியெழுந்த ஜல்லிக் கட்டு
இளைஞர் அடலேறுகள்-மெரினா கடலோரம்
கல்லூரி மாணவப் பருவ அறுபத்தைந்தில்
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில்
நானும் பங்கு கொண்டு குண்டாந்தடி
தழும்பினைப் பெற்ற அனுபவம் 

அன்று எழுப்பியது ஹிந்தி ஒழிக என்ற கோசம்
இன்று எழுப்பியது வேண்டும் ஜல்லிக் கட்டு கோசம்
மூன்று நாட்களாக  கொட்டும் பணியிலும்
வீசும் கடுங்குளிர் கடற் காற்றிலும்
துவண்டு விடாத இளஞ்சிங்கங்களை-கண்டேன்
அவர்கள் எழுப்பிய ஜல்லிக் கட்டு கோசம்
ஆர்ப்பரியும் கடல் அலையினைத் தோக்கடித்தது

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே, தங்கம்
பாடியது அன்று, இன்று தை பிறந்து வழிபிறக்கவில்லை
ஏறு பிடித்து உழவன் வாழ்ந்தான் அன்று- இன்று
ஒட்டிய வயிறும்-கட்டிய கையுமாக வாடிய பயிறுமாக
திருவிழா எடுக்க கையில் நாலு காசில்லாமல்
கண்ணீர் சிந்தி செத்து மடிகிறான் கடனில்
தட்டிக் கேட்க நாதியில்லை-இளைஞர்களைத் தவிர

உழைக்கும் மாடுகளுக்கு வணக்கம் செலுத்த
அலங்கரித்து மாலையிட்டு வயல் பக்கம் வரும்-மஞ்சுவிரட்டு
அந்தக் காளைகள் கால் பாதிக்கும் வயல்கள் செழிக்கும்
ஆனால் பருவமும் பொய்த்தது-பவிக் கர்நாடகமும்
காவிரித் தண்ணீர் தராது மறுத்தது
கருகியது விளை நிலமட்டுமல்ல
விவசாயிகள் வாழ்வும் தானே
கொழுத்த யானையின் கொம்பையும் எதிர்கொண்டு
போர்க்களத்தில் எதிரியின் கொட்டத்தினை முறியடிக்கும்
யானைப் படையினைக் கொண்டவன் தமிழன்

வடபுலத்தில் படை செலுத்தி அரசர்களை
சிறைப் பிடித்து கோயில் கட்ட
மலைக் கற்களை சிரசில் சுமக்கச் 
செய்தவன் தமிழன்
திமிரும் காளைகள் திமிலை 
தாவிப் பிடித்துசீவிய கொம்புகளை 
மடக்கி பரிசுகள் பல பெறுவான் -வீரன்
அலங்காநல்லூரில் நான் கண்ட காட்சி

காளை விளையாட்டில் கூறிய கத்தி பாய்ச்சி
கொடூரமாக கொல்வர்  ஸ்பெயின் நாட்டில்
 வீதிகளில் காளைகளை ஓட விட்டு கிளித்தட்டு 
ஆடுவர் இளங்காளைகள்  தென் அமெரிக்காவில்
ஒட்டக வயிற்றில் அடிப்பக்கம் சிறு 

அனாதைக் குழைந்தைகளைக் கட்டி 
பந்தயம் ஓடச் செய்வர் அரேபியாவில் 
ஆட்டுக் கிடாயினை ஓடச் செய்து-குதிரையில் சவாரி
செய்து கொல்வார் ஆப்கானிஸ்தானில்-வடபுலத்தில்
எருமையினை குன்றிலிருந்து தள்ளி குதுகூலம் கொள்வர்

குதிரை நுரை தள்ளி நோகடிப்பர் பந்தயத்தில்
யானை அங்குசம் குத்து பட்டு ஓடும் கேரள பந்தயத்தில்
சுமை தாங்காது கழுத்துப் புண் நோக கலங்கடிப்பர்
பிராணிகளின் பசியினை போக்காமல்  
சுற்றுலா தளங்களில்பிக்கினி உடையுடன்  
கொட்டமடிக்கும் 'பீட்டா'
காளைகளை குழந்தைகள் 
போல காக்கும் தாக்க பயன்படுத்தும் 
ஆயுதம்-ஜல்லிக் கட்டுக்கு தடையா

இளிச்ச வாயனல்ல இரும்புத் தமிழன்-குனியக்
 குனிய கொட்டு வாங்க மாட்டான் இனியும்
'போக்கிரி' என்கிறான் போக்கற்ற மனுவாடி
பூச்சாண்டி காட்டாதே அதிகார ஆணவத்தில்
பொங்கி எழுந்து விட்டான்- வீராத் தமிழன்
இனியும் பொறுக்க மாட்டான் துன்பத் தமிழன்
இப்படை தோற்பின் எப்படை வெல்லும்

போர் முரசு கொட்டிவிட்டான் தமிழன் -ஓயமாட்டான்
வெற்றி முரசு கொட்டும் வரை!
  






Friday, 23 December 2016

ரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா அறிவுரை!



ரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா  அறிவுரை!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,(ஐ.பீ.எஸ்(ஓ)

நம் நண்பர், உறவினர், ஏன் நாமும் வெளி நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள பண்பாடுகளை தெரியாமல் சங்கடங்கள் சந்திக்க நேரிடுகிறது. ஒரு பழமொழி சொல்லுவார்கள், 'ரோமில் இருக்கும்போது ரோமனாக மாற வேண்டுமென்று'. ஆகவே செல்லும் நாடுகளின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டால் சங்கடங்கள் தவிர்க்கலாம்.
ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து மக்கள் பஸ், ரயில், வணிக வளாகம் ஆகியவற்றில் வரிசைப் படி நிர்ப்பதினை காணலாம். ஒரு பஸ் நிறுத்தத்தில் ஒருவர் தான் நன்றிருந்தாலும் அடுத்தவர் முந்தி சென்று ஏறமாட்டார். வரிசையில் நிற்கும் போது ஒட்டி, இடித்துக் கொண்டு நிற்கவும் மாட்டார்கள். ஆனால் இங்கு ரூபாய் நோட்டினை மாற்றுவதற்கு வயதான மூதாட்டியார், பெரியவர் என்றும் பாராது  இடித்து தள்ளிக் கொண்டு சென்றதினை தொலைக் காட்சி படம் பிடித்துக் காட்டியது 2016 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில்.
பின்லாந்து நாட்டில் பெரும்பாலான வீடுகள் மரத்தினால் அமைக்கப் பட்டிருக்கும். வீட்டினை சுற்றி நீர் நிலை ஓடிக் கொண்டிருக்கும். அங்கு ஒரு ரம்மியமான சூழ்நிலை காணலாம். அவர்கள் அதிர்ந்து பேசுவதினை விரும்பமாட்டார்கள். காலணி அணிந்து கொண்டு வீட்டுக்குள் வருவதினையோ, விருந்தாளிகள் புகை பிடிப்பதினையோ விரும்பவும் மாட்டார்கள்.
பிரான்ஸ் நாட்டில் மிகுந்த மரியாதையுடன் ஐயா(ஸார்), மேடம் என்று அழைப்பார்கள். விருந்தாளிகளை உபசரிக்கும் போது சம்பிரதாயத்திற்கு முத்தமிடுவார்கள்.
ஜெர்மன் நாட்டினர் சுறுசுறுப்புடன், ஒழுக்கத்துடனும், கட்டுப் பாடுகளுடனும் நடந்து கொள்வார்கள். போக்குவரத்து விதிகளை கடுமையாக அனுசரிப்பார்கள். நேரந்தவராமை அவர்களுக்கு முக்கியம். ஒரு இடத்தில் மீட்டிங் என்றால் 10 நிமிடங்கள் முன்பாகவே வந்து விடுவார்கள்.
இத்தாலி நாட்டில் பிட்ஸா, பாஸ்டா, ஆண்டிபாஸ்டி போன்ற உணவு வகைகள் எந்த மூளை முடுக்குகள் உள்ள கடைகளிலும் கிடைத்தும். சாப்பிட்டவுடன் சர்வர்  கொடுக்கும் பில்லுக்கு ஒவ்வொரு உணவிற்கும் தனித்தனியே பட்டியல் போட்டு கொண்டு வரச்சொல்லலாதீர்கள், மாறாக சாப்பிட்டவர் எண்ணிக்கையினை மொத்த பில்லிலிருந்து வகுத்தால் தெரிந்து விடும் ஒவ்வொரு உணவிற்கான சார்ஜ்.
போலந்து நாட்டில் பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள். காரில் வரும் விருந்தாளிகளுக்கு அவர்கள் கீழே இறங்க வசதியாக கார் கதவினை திறந்து விடுவார்கள், அவர்கள் கோட்டினை கழட்டுவதிற்கு உதவி செய்வார்கள். பெண்கள் ஆண்களிடம் பயமில்லாமல் பழகலாம். பெரும்பாலும் முறைகேடாக நடக்க மாட்டார்கள்.
        ஸ்பெயின் நாட்டினருக்கு சப்தம் சக்கரைப் பொங்கல் போன்றது. மோட்டார் சைக்கிள், கார் சப்தமாக செல்வதும், தொலைக்காட்சிப் பெட்டிகள் அலறலும் நாம் கேட்கலாம். ஹோட்டலில் தங்குபவர்களுக்கு நடு இரவில் வேலைக் காரர்கள் குப்பைப் பெட்டியினை இழுத்துச் செல்லும் சப்தம் கேட்கலாம். அங்கு ஒருவருக்கொருவர் சப்தமாக பேசுவதை காணலாம்.
பிரேசில் நாட்டினர் மாசற்ற பழக்க வழக்கங்களை கொண்டிருப்பர். ஒருவரை பார்க்கும்போது, அவர் குளித்து,  தலைவாரி, நேர்த்தியான ஆடை உடுத்தி, வாசனை திரவியம் தடவி காணப்படுவார். அவர்கள் போன்று நீங்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். கடற்கரை பீச்சில் குளிப்பதற்கும், சூரிய ஒளியில் பீச்சில் ரசிப்பதற்கும் விரும்புவர். ஆனால் கோவா பீச்சில் இருப்பது போல பிக்கினி மாதுகளை பார்க்க முடியாது. எல்லா நகரங்களிலும் உள்ளது போன்ற குற்ற செயல்களை காணலாம். சமீபத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியினை காண வந்த ரசிகர்களிடமிருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கெடியாரம், செல் போன், கைப்பை போன்றவைகளை பறித்துச் செல்லும் இளைஞர்களைக் காணலாம்.
            மெக்ஸிகோவில் ஆங்கிலம் பேச மாட்டார்கள். ஸ்பேனிஷ் மொழியில் தான் பேசுவார்கள். அமெரிக்காவில் கூட கலிபோர்னியா மாநிலத்தில் பலர் ஸ்பானிஷ் மொழி பேசுவதினைக் காணலாம். எந்த வேலையையும் உடனுக்குடன் செய்ய மாட்டார்கள். 'மன்னா' என்ற வார்த்தை வருவதினை காணலாம். மன்னா என்றால் நாளை என்று அர்த்தமாகும். அதாவது 'இன்று போய் நாளை வா' என்று எடுத்துக் கொள்ளலாம். பகல் சாப்பாட்டிற்கு மதியம் ஒரு மணிக்கு வாருங்கள் என்றால் நாம் தாராளமாக மாலை 2 மணியளவில் செல்லாம்.
            அமரிக்காவினைப் பொறுத்த மட்டில் நீங்கள் விட்டு விட்டுப் பேசுவதினை எதிர் பார்ப்பார்கள், ஏனென்றால் இடையிடையே அவர்களும் பேசுவதினை விரும்புவார்கள். உங்கள் உரையாடலோடு சில பழமொழிகளைச் சொன்னால் அதனை ஞாபகப் படுத்தி நண்பர்கள் கூட்டத்தில் சொல்லுவார்கள். நீங்கள் லிப்ட்டில் செல்லும் போது அவர்கள் பேசினாலொழிய நாம் பேசக் கூடாது. அவர்கள் முகம் நோக்கிப் பார்க்கக் கூடாது. சிறுவர், சிறுமிகளுடன் பெற்றோர் அனுமதியில்லாமல் உரையாடல் செய்யவோ, தொடவோ கூடாது. காவலர்கள் உங்களை எச்சரித்தால் உடனே கைகளை  மேலே தூக்க வேண்டும். இல்லையென்றால் சுடப்படுவீர் என்பதினை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.
            ஆஸ்திரேலியா மக்கள் நட்புடனும், திறந்த மனத்துடனும் பழகுவார்கள். ஆகவே தான் அகதிகளை வரவேற்று அவர்களுக்கென்று ஒரு தனி புகலிடம் கொடுத்து பராமரிக்கின்றார்கள். இன்று அங்கு இருக்கும் ஆசிய, அராபிய மற்றும் ஆப்பிரிக்கா மக்கள் அவ்வாறு குடி பெயர்ந்தவர்கள் தான். இந்திய, இலங்கை உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு திறந்த வெளியில் சாப்பிடுவது(பார்பிக்கு) மிகவும் பிடிக்கும். அப்படிப் பட்ட விருந்திற்கு உங்களை அழைத்து 'நீங்கள் ஒரு பிளேட்' கொண்டு வாருங்கள் என்றால் வெறும் தட்டுடன் சென்று விடாதீர்கள். நீங்களும் ஒரு உணவு வகையினை கொண்டு வரவேண்டும் என்று அர்த்தமாகும். சட்டம், நீதிக்கு மிகுந்த மதிப்பளிப்பார்கள்.ஒரு தடவை ஒரு உச்ச நீதி மன்ற நீதிபதி போக்குவரத்து விதிகளை மீறியதோடு மட்டுமல்லாமல், அவருக்கு போலீஸ் நோட்டீஸ் கொடுத்த பொது, தான் அவ்வாறு மீறவில்லை என்று பொய் சொன்னதால் நான்கு வருடம் சிறை தண்டனை கொடுக்கப் பட்ட வரலாறும் உண்டு.
            சீன நாட்டிற்கு சென்றால் சீனர் உணவிற்கு என்ன கிடைக்கின்றதோ அதனை உண்பர். சீனாவில் 2015 ஆம் ஆண்டு உணவிற்காக 40 லட்சம் பூனைகளை கொன்று இருக்கின்றார்கள்  என்றால் பாருங்களேன். ஆகவே விருந்தாளிகளாக செல்லும்போது அவர்கள் உணவினை  நாசுக்காக தவிர்ப்பது நல்லது. அவர்கள் பரிசுப் பொருட்களை மிகவும் விரும்பி பெறுவதுடன், உங்கள் முன்னாள் அதனைப் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். ஆனால்  நிச்சயமாக நீங்கள் சென்றதும் பார்ப்பார்கள்.
            ஜப்பான் நாட்டு மக்கள் எதிலும் மாசற்ற சடங்குகளை எதிர்பார்ப்பார்கள். சுத்தம், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உங்கள் காலனியை வெளியே விட்டு விட்டு, வீட்டுக்குள் அணிந்து செல்லும் காலணியினை போட்டுக் கொண்டு செல்ல வேண்டும். கழிப்பறைக்கு செல்லும்போது அதற்கான பிரத்தியோக காலணிகளை அணிந்து கொள்ள வேண்டும். மறந்தும் அதனை வீட்டுக்குள் உபயோகிக்க வேண்டாம். அவைகளை வீட்டினை விட்டு வரும்போது அந்த அந்த இடத்தில் விட்டு விட்டு வரவேண்டும்.
            தாய்லாந்து மக்கள் உங்கள் உணர்வுகளை கட்டுக் கோப்புடன் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். உங்கள் கோபத்தினை எதிர்பார்க்க மாட்டார்கள். அங்குள்ள புன்னைகைக்கும் புத்தர் சிலையினைப் பார்த்து, பார்த்து அவர்களுக்கு அமைதியுடனான வாழ்வு பழக்கப் பட்டுப் போய் விட்டது.
            நான் மேலே கூறிய அறிவுரைகள் சிறு துளிகளே, நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கடலளவே.

Monday, 19 December 2016

கண்கள் குளமாகுதம்மா சதாம் ஹுசைனை நினைக்கையிலே!



கண்கள் குளமாகுதம்மா சதாம் ஹுசைனை நினைக்கையிலே!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்.டி(ஐ.பீ.எஸ்)
உங்களுக்கெல்லாம் தெரியும் 2003 ஆம் ஆண்டு இராக் நாடு அதிகம் ஆள் கொல்லி ஆயுதம் கொண்டு அமெரிக்கா மற்றும் கூட்டு நாடுகளுக்கு எதிராக ஆபத்து விளைவிக்கும் என்று தெரிகிறது என்ற வடி கட்டிய பொய்யினை உலக நாடுகளில் பரப்பியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க-இங்கிலாந்து கூட்டுப் படையினர் அந்த நாட்டின் மீது படையெடுத்தனர் என்று.
அத்தோடு நில்லாமல் அந்த நாட்டினைப் பிடித்து, அதன் எண்ணெய் வளங்களை, மற்றும் அரசு, தனிப் பட்டவர் சொத்துக்களை கொள்ளையடித்து, அல் மாலுக்கி என்ற பொம்மை ஷியா  அரசை அரியணையில் ஏற்றினர். சில நாட்களில் அதன் ஜனாதிபதி சதாம் ஹுசைனை வஞ்சகர் மூலம் கண்டு பிடித்து கண் துடைப்பு நீதி விசாரணை மூலம் தூக்கு மேடைக்கு ஏற்றினர். ஆனால் அவர்கள் தேடி வந்த ஆட்கொல்லி ஆயுதம் சிக்கியதா என்றால் இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியும், உலக நாட்டு மக்களுக்கும் தெரியும். 
ஆனால் அந்த இராக் நாட்டில் அமைதி திரும்பியதா என்றால் இல்லையே, அது ஏன்? அதனைத் தான் உலக நாடுகளும் கேட்கின்றன. அப்படி என்ன தாரகை மந்திரம் அதிபர் சதாம் ஹுசைனிடம். பல்வேறு இனத்தினவரையும் தன் ஆளுமையால் ஒருங்கிணைத்து வல்லரசுகளுக்கே ஒரு சவால் விடும் அரபு நாடு இராக் ஒன்றே என்று சொல்லும் அளவிற்கு தன் நாட்டினை கட்டுக் கோப்பாக வைத்திருந்தார் என்றே சொல்லலாம்.
இராக் நாட்டினை பிடித்த பின்பு, சதாம் ஹுசைன் கைது செய்து அக்கினி  விசாரணையில் அதனை விசாரித்த சி.ஐ.ஏ.என்ற அமெரிக்க உளவுப் படையின் அதிகாரி நிக்சன் சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதனை டெய்லி மிரர் என்ற அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
சதாம் ஹுசைனிடம், உளவுத் துறை அதிகாரி நிக்சன், 'உங்கள் மீது ஆட்கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக குற்றம் உள்ளதேஎன்ற  என்ற கேள்விக்கு, நாங்கள் ஒரு  போதும் அவ்வாறு செய்ய எண்ணவில்லை, எங்களிடம் அதுபோன்ற ஆயுதமும் இல்லை. எல்லாம் வல்ல இறைவன் அப்பாவி பொது அவ்வாறு அழிக்க கட்டளை இடவுமில்லை. உங்களிடம் கூட அதுபோன்ற ஆயுதம் இருந்தாலும் எங்கள் மீது அதனை உபயோகிக்கவில்லையே அது ஏன்' என்று கேட்டுள்ளார்.
 சதாம் தொடர்ந்து கூறும்போது, இராக் நாட்டினைப்   பற்றி அல்லது மொழியினைப் பற்றியோ அல்லது அராபிய நாட்டு மக்களைப் பற்றியோ உங்களுக்குத் அதிகம் தெரியாது. உங்களுடைய முயற்சி வெற்றி பெறாது, தோல்வியினை நீங்கள் அடையப் போவது நிச்சயம்' என்று கூறியதாகவும், அதன் படியே அமெரிக்க கூட்டுப் படை இராக் நாட்டிலிருந்து வெளியேறினாலும், இன்னும் கூட 5000 அமெரிக்க ராணுவத்தினர் அங்கு இருந்து இராக் ராணுவத்திற்கு உதவியாக உள்ளனர். அது மட்டுமல்லாது அவர்களுக்கு உதவியாக ஆளில்லா விமானம் மூலம் சுன்னி முஸ்லிம்களை அழித்துக் கொன்று அதனை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு அவர்களுக்கு மிகப் பெரிய தோல்வியும் தந்துள்ளது என்றும் கூறுகிறார். இதனையே தான் சதாம் ஹுசைன் ஒரு தீர்க்கதரிசியாக எச்சரித்துள்ளார் என்று கூறுகிறார் நிக்சன்.
இதனைப் போன்று தான் கடாபியும் இங்கிலாந்து அப்போதைய பிரதமர் டோனி பிளேயரிடம் 2012 ஆம் ஆண்டு, 'நீங்கள் என்னை பதவியிலிருந்து நீக்கினால் லிபியாவில் குழப்பம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். இன்றும் அந்த நாட்டில் நிலையான ஆட்சி இல்லையே அது ஏன் என்று இப்போதாவது மேலை நாடுகள் சிந்திக்க வேண்டாமா தோழர்களே!