Sunday, 20 May 2018

வலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பமா?



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
தென்  கொரியா பியாங் சங்கில்  2018 குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்பு தென் கொரியா-வட கொரியா இணைந்து பணியாற்ற முடிவெடுத்து விட்டது என்ற செய்தியும், அதனைத் தொடர்ந்து இரு நாட்டு அதிபர்களும் சந்தித்தது உலகமே அதிசயமாக திரும்பி பார்க்க வைத்தது. ஏனென்றால்  தென் கொரியா அமெரிக்கா ஆதரவுடன்  இருக்கும் நாடு. வட கொரியா கிம் ஜோங் என்ற ஒரு இரும்பு மனிதன் பிடியில் இருக்கும் கம்யூனிஸ்ட் சர்வாதிகார சந்ததியார் நாடு. இரு துருவங்களை இணைத்தது அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தான் என்று அவருடைய ஆதரவாளர்கள் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை அறிவிக்க வேண்டும் என்றும் பறை சாற்றினர் என்று உங்களுக்குத் தெரியும். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா-வட கொரியா ஜனாதிபதிகள் வருகிற ஜூன் மாதம் 12 ந் தேதி சிங்கப்பூரில் சந்திக்கப் போவதாக அதிகாரப் பூர்வ செய்திகளும் அறிவிக்கின்றன.
இது எவ்வாறு நேர்ந்தது என்று சிறிது பின் நோக்கி பார்ப்போமேயானால் தெரியும் வட கொரியாவின் வலிமைப் பற்றி. நுகிளர் அணு ஆயுதங்கள் சோதனைகள் தடை இருக்கும் போது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுத பரிசோதனைகள் எத்தனை முறை அமெரிக்கா எச்சரிக்கை செய்தாலும் அதனை நடத்திக் காட்டி,  அமெரிக்கா ஹவாய்  தீவினையே அழிக்கும் திறமை தன்னிடம் உள்ள அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்று வெறும் பயமுறுத்தல் மட்டுமல்ல மாறாக அத்தனை சக்தி வாய்ந்த ஆயுதத்தினையும் வெடித்து உலகமே மூக்கில் விரல் வைக்கக் கூடிய அளவிற்கு மாபெரும் சக்தியாக வட கொரியா விளங்குகிறது. இவ்வளவிற்கும் அந்த நாடு பணக்கார நாடு அல்ல. மாறாக மக்கள் உடல் உழைப்பினால் முன்னேறி அமெரிக்கா எத்தனை தடை விதித்தாலும் தன்னிறைவு பெற்ற நாடாகா திகழ்கிறது. ஆகவே தான் அமெரிக்காவும் வட கொரியாவிடம் சமரச பேச்சுக்கு அழைப்பு விட்டுள்ளது.
இதனையே சற்று இஸ்லாமிய நாடுகளின் பரிதாப நிலைகளை எண்ணிப் பாருங்கள். இஸ்லாமிய நாடுகளில் எண்ணெய் வளம் பெருக்கி ஓடுகிறது. வெளிநாடுகளுக்கு எண்ணெய்களை விற்பது மூலம் வருமானம் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொகுசு கப்பல்களும், ஆடம்பர வில்லாக்களும், ஆடை ஆபரணங்களும், செல்வ குளிப்பில் மூழ்கிக் கிடக்கின்றனர். தங்களுடைய நாட்டின் பாதுகாப்பிற்கு வெளிநாட்டினர் உதவி தேட வேண்டிய நிலையில் உள்ளனர். ஏன் அரச குடும்பத்தினர் உபயோகிக்கும்  கார்களை ஜொலிக்கும் தங்க-வைர வைடூரியங்கள் கொண்டு அலங்கரித்தும், தங்கள் கழிவு டாய்லட்டுக்கு தங்க முலாம் பூசும் அளவிற்கு கோடீஸ்வராக இருக்கின்றார்கள். ஆனால் சாதாரண உலக முஸ்லிம் ஒருவேளை கஞ்சிக்கே தகிடு தத்தம் போடுகிறான் என்ற நிலை ஒரு பக்கம் இருந்தாலும், அந்த பணக்கார முஸ்லிம் நாடுகள் கூட அணுவினை கொண்டு ஆக்கப் பூர்வமான செயல்களுக்கு ஈடுபடுத்த முடியாத பரிதாப நிலை உள்ளனர். அங்குள்ள முஸ்லிம்கள் வெளி நாட்டுக் கல்விகள் கற்றாலும் அதனை பயன் படுத்துவதில்லை. ஏனென்றால் பாட்டன், பூட்டன் செல்வம் கொட்டிக் கிடக்கின்றது என்ற ஆணவத்தால். அவ்வாறு எண்ணியதால் தான் இராக், லிபியா போன்ற நாடுகள் அழிந்து கொண்டுள்ளது. சிரியா போன்ற நாடுகள் ஈரான், ரஷியா போன்ற நாடுகளின் உதவியால் நிலைத்து நிற்க முடிகிறது. வட கொரியா  போன்று சொந்தக் காலில் பலம் பெறமுடியா நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் உலக நாடுகளை ஆட்டிப் படைக்க இரு துருவங்களாக ரஷியாவும், அமெரிக்காவும் திகழ்வதால் தான். சீன நெடுங்காலம் இரும்புத்திரையில் இருந்து இப்போது தான் தன் வலிமையினை அடைந்துள்ளது. இனி வரும் காலங்களில் சீனாவும் மூன்றாவது வல்லரசுக்கு சி ஜின்பிங் தலைமையில் கோலோச்சும் என்றால் மிகையாகாது.
இரு துருவங்களாக இருந்த ரஷியாவும், அமெரிக்காவும் ஆயுத போட்டியில் இறங்கியதால் ‘கோல்டு வார்’ என்ற சகாப்தம் ஆரம்பமானது. அமரிக்காவினை ஆண்ட ரீகன் காலத்தில் அமெரிக்கா வல்லமை பெற்றதால் ரஷியா ஜனாதிபதி கோபர்ச்சேவ் ஈடு கொடுக்கமுடியாமல் டிசம்பர் 25, 1991அன்று சோவியத் யூனியன் கலைக்கப் பட்டதாக அறிவித்தார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அமெரிக்கா உலக வல்லமை பெற்ற முடிசூடா மன்னராக திகழ்ந்தது. ஆனால் 2000 ஆண்டு புடின் ரசியாவின் ஆட்சிக்கு வந்த பிறகு பக்கத்து செச்சென்யா முஸ்லிம்  குடியரசு  ரசியாவால் கைப்பற்றப்பட்டது. அத்தோடு நில்லாமல் அமெரிக்கா ராணுவம் ஈராக்  சதாம் ஹுசைன் மனிதக்கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக கூறி ஈராக்கினை கைப்பற்றி, சதாம் ஹுசைன் சிறைப்பிடிக்கப் பட்டபோது ஜார்ஜ் புஸ்ஸை ரசிய புடின் உங்களது போரை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள், அண்டை நாடான  ஈரானுக்கோ, குவைத்துக்கோ, வட கொரியாவிற்கோ நீடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்யும் அளவிற்கு ரசியாவினை வலிமை உள்ள நாடாக ஆக்கினார்.

இதுதான் சமயமென்று இரான் ரசியாவுடன் 27 பிப், 2005 அன்று அணு உற்பத்தி சம்பந்தமாக ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அதன் பின்பு அமெரிக்கா-பிரான்ஸ் கூட்டுப் படை லிபியாவின் மீது தன் கவனத்தினைத் திருப்பி 2011 லிபிய நாடு பிடிக்கப் பட்டதோடு அதிபர் கடாபியும் கொல்லப் பட்ட கதை உங்களுக்குத் தெரியும்.
ருசியாவின் புடின் தனது அண்டை நாடான உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை 2014 ஆண்டு கைப் பற்றியதோடு மட்டுமல்லாமல், பக்கத்து நாடான  போலந்து நாட்டையும் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக வேண்டும் இல்லையென்றால் உங்கள் நாட்டினை ஒரு வார காலத்திற்குள் தன்னால் பிடிக்க முடியும் என்று அறைகூவல் விட்டது, அதனை கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கைப் பார்த்தது ஐ.நா.பொது சபை மட்டுமல்ல, வல்லரசு நாடான அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தான் என்றால் மிகையாகாது.
ரசிய,அமரிக்கா ஆயுத போட்டியால் அழிந்தது ஈராக், லிபியா மற்றும் சிரியா நாடுகள். ஈராக்கில் ஷியா ஆட்சி ஈரான் ஷியா அரசு ஆதரவுடன் நிலை நாட்டியதையும், சிரியா நாடு  ஈரான் மற்றும் லெபனான் கொசுபுல்லாஹ் அமைப்புடன் கூடிய ஷியா ஆட்சி நடத்தியும், லிபியாவில் நிலையில்லா மகனே சமத்து என்று பல பிரிவு ஆட்சியையும் நடத்த வழிவகுத்தது.
ஐநா பொதுச்சபை 29 நவம்பர் மாதம், 1947 பாலஸ்தீன நாட்டினை இரண்டாக பிளந்து இஸ்ரேல் என்ற யூத நாட்டினை உருவாக்கியதில் மூலம் பாலஸ்தீன மக்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப் பட்ட பரிதாப நிலை வந்து விட்டது. இன்னும் பாலஸ்தீன தனி நாடாக ஐநா அங்கீகரிக்க முடியாத கை எழாத நிலை உள்ளது. இதுவரை ஜெருசலம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பொது வழிபாடும் இடமாக இருந்ததினை மாற்றி ஜெருசலத்தில் அமெரிக்கா தூதரகம் அமைத்தது மூலம் ஜெருசலம் இஸ்ரேல் நாட்டிற்கு சொந்தம் போல ஆக்கி விட்டது. அந்த முடிவை எதிர்த்த ஆயிதமில்லா நிராயுத பாணியா பாலஸ்தீன மக்களை 65 பேர்களை கொன்றும், ஆயிரக்கணக்கில் காயம் ஏற்படுத்தியும் செய்துள்ளது இஸ்ரேல், அதனை தட்டிக் கேட்க எந்த நாடும் முன் வரவில்லை. முஸ்லிம் செல்வ நாடான சவுதி அராபியா இளவரசரோ, பாலஸ்தீனர்களைப் பார்த்து ‘நீங்கள் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் சொல்படி கேளுங்கள் இல்லையென்றால் வாயைப் பொத்திக் கொண்டு இருங்கள்  என்று அறிவுரை கொடுக்கின்றார்’. இதைவிட அந்த நாடு வாயை பொத்திக் கொண்டு இருந்திருக்கலாம்.

ரசிய ஆயுதப் போட்டியால் சிரியாவிற்கு ஆதரவு கொடுப்பதின் மூலம் ஷியா அரசு அங்குள்ள மற்ற பிரிவினரை மனித கொல்லி ஆயுதங்கள் மூலம் கொன்றும், குண்டு மழை பொழிந்தும், மாட மாளிகைகள் தகர்க்கப்பட்டும், காயம்பட்டோர் சிகிச்சை பெரும் மருத்துவ மனை தகர்க்கப்பட்டும், மின்சாரம் நிறுத்தப் பட்டும், குடிக்கக் கூட தண்ணீர் இல்லை என்ற நிலை உண்டாக்கியும், தன் நாட்டு மக்கள் கடலை நோக்கி ஆபத்தான பயணங்கள் மேற்கொண்டு காடோ செடியோ என்று ஓடும் பரிதாப நிலை காண நேரும்போது கல்நெஞ்சையும் கரைக்கின்றது. இஸ்ரேல் குண்டு வீச்சில் பத்து மாத பாலஸ்தீன பிஞ்சு குழந்தை இறந்த செய்தி கேட்டு ரத்தக் கண்ணீர் சிந்த வேண்டியுள்ளது. ஈராக், சிரியா, லிபிய, பலஸ்தீன மக்கள் படகுகளில் பொதிமூட்டைபோல ஆழமான கடலில் பயணம் மேற்கொள்ளும்போது படகு பாரந்தாங்காது கவிழ்ந்து கடலே கபர்ஸ்தானாக ஆகும் காட்சி காண்போர்  நெஞ்சை உறுக்கிவிடுகிறது.
அந்த நாட்டிலுள்ள பச்சிளம்  பாலகர்கள் தங்களுக்கென்று ஒரு புகலிடம் இல்லையே, நல்ல உடை இல்லையே, உண்ண ஒரு வாய் உணவு இல்லையே,' ஓதுக'  என்று அல்லாஹ் சொன்னானே அந்த கல்வியைக் கற்க ஒரு பள்ளி இல்லையே என்று ஏங்கி அழும்போது தாயுள்ளம் படைத்த யாருக்கும் இரக்கம் வரும் ஆனால் ஏன் அந்த அதிகார கும்பலுக்குத் தெரியவில்லை என்று இன்னும் புரியாத புதிராக உள்ளதே!
அந்த அதிகார கும்பலுக்குப் புரிய வேண்டும் என்று தான், வட கொரியா அதிபர் தானும் வல்லரசு நாடாக உருவெடுத்தால் தான் தன்னை மதிப்பார்கள் என்று தனது மக்கள் தேவையினை சுருக்கி நாட்டினை வலிமைப் படுத்த அதி நவீன ஆயுதங்களை தயாரித்து ஆதிக்க நாடான அமெரிக்காவிற்கு சவால் விட்டார். அதன் பயன் தான் அவருக்கு தென் கொரியாவில் சிகப்பு கம்பள வரவேற்பு, சிங்கப்பூரில் அமெரிக்கா ட்ரம்ப் அங்கே வந்து வட கொரிய அதிபரை சந்தித்து சமரச பேச்சு என்ற செய்தி.
முஸ்லிம் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு வட்டலப்பம் ஆகும். அது முட்டை, தேங்காய் பால், சீனி ஆகியவற்றினை கொண்டு சமைத்து சுவையாக உண்ணக்  கூடிய உணவு. அந்த உணவு போல உணவு உண்ணும் விதமாக வட கோரிய அதிபருக்கு சிங்கப்பூரில் சிவப்பு கம்பள வரவேற்பு. அதுவும் யார் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்கா அதிபர். ஆனால் சொந்த வீட்டினை, நாட்டினை, உண்ண உணவு, உடுக்க உடை, படிக்க பள்ளிக்கூடம், காயம்பட்டோர் சிகிச்சை பெற மருத்துவமனை இல்லாமல் தவிக்கும் முஸ்லிம் மக்களுக்கு வயிறு முட்ட உண்டவன் செமிக்காமல் போடும் புளிச்சேப்பம் தான் என்றால் அந்த நிலை மாற வேண்டுமா என்று கேட்கப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது முஸ்லிம் நாடுகளுக்கு,
எவ்வாறு ரசூலுல்லாஹ் தனி மரமாக இருந்து இஸ்லாமிய மார்க்கம் ஆட்சி நிலை நிறுத்தி  அராபிய, ஆப்ரிக்க, ஆசிய, ஐரோப்பா போன்ற நாடுகள் வரை முஸ்லிம் ஆட்சி நிலை நிறுத்தப் பட்டது என்று சிறிது சிந்திக்க வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் 'ஓதுக' என்று கட்டளையிட்டான் எதற்காக, முஸ்லிம் நாடுகள் தங்களுடைய செல்வத்தினை விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியில் ஈடுபடுத்தி வட கொரிய நாடு  போன்று  நவீன ஆயுதங்கள் தயாரித்து, பொறியிலில் நவீனங்கள் செயல் படுத்தி தன்னிறைவு நாடுகளாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் மட்டும் தான் முஸ்லிம்கள் உலகில் தலை நிமிர்ந்து நடமாட முடியும் என்றால் மிகையாகுமா!

Saturday, 7 April 2018

என்னைக் கவர்ந்த கலீபா உமர் சிறப்புப் பயான்!



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)
கி.பி.634 லிலிருந்து கி.பி.644  வரை அராபியாவில் இரண்டாவது கலிபாவாகஹஜ்ரத் உமர் அவர்கள் பதவிக்கு வந்து  முஸ்லிம்கள் ஆட்சியினை அரேபியாவிலிருந்து மெசபொமோடோமியா, சிரியா, இரான், இராக், எகிப்து ஆகிய நாடுகளில் நிலை நிறுத்தியவர். முஸ்லிம் அல்லாத மகாத்மா காந்தி போன்ற தலைவர்களால் உமருடைய நீதி நிறைந்த ஜனநாயக ஆட்சி முறை பற்றி பாராட்டப் பட்டவர். அவருடைய சீரிய புகழ் பற்றி சென்ற  6 4 2018 அன்று மண்ணடி செம்புதாஸ் தெருவில் இருக்கும் பள்ளியில் சேலத்தினைச் சார்ந்த ஒரு இமாம் ஆற்றிய உரை மிகவும் சிறப்புடையதாக இருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
            இன்று காவேரி தண்ணீருக்காக தமிழ்நாடு போராட வேண்டியுள்ளது. அது ஆட்சியினர் குறையே என்றால் மறுக்கமுடியாது. ஒரு தடவை கலிபா உமர் அவர்கள் பக்ரா என்ற ஊருக்கு வருகை  தந்தார்கள். அங்கே தண்ணிர் பஞ்சம் தலை விருத்தாடியது. அந்த ஊரில் தனது நீண்ட நாள் நண்பரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அந்த நண்பரிடம் உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப் படுகிறதா கேளுங்கள் தருகிறேன் என்றாராம், அந்த நபர் வறுமையில் வாடும் நிலை கண்டு. ஆனால் அந்த நண்பரோ தனக்கும் தனது குடும்பத்திற்கும் பொன்னும், பொருளும் கேட்கவில்லை. மாறாக அந்த நகருக்கு தண்ணிர்  பஞ்சத்தினைப் போக்கும் விதத்தில் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டாராம். உடனே அந்த நகர் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள மக்களுக்கும் உதவும் படி பக்ரா அணையினை காட்டினாராம். அதனை இன்றும் ஹஜ், உம்ரா செல்பவர்கள் காண முடியும்.
            உமர் அவர்கள் மக்கள் குறை தீர்ப்பவராக இருந்ததால் ஒரு தடவை அதிகாலை நேரத்தில் நகர் வலம் வந்தார். அங்கே ஒரு பள்ளியில் சில இளைஞர்கள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். உடனே கீழே கிடந்த கல்லை எடுத்துக் கொண்டு அந்த இளைஞர்களை பார்த்து ஏன் தொழுகை முடிந்து உடனே விரைந்து சென்று குடும்பத்திற்கு தேவையான பொருள் சம்பாதிக்க வில்லை என்று கேட்டார்களாம். அந்த இளைஞர்களோ, நாங்கள் ஏமன் நாட்டிலிருந்து நேற்று இரவு வந்து தங்கி காலையில் வியாபாரத்திற்காக செல்ல வேண்டும் என்று கூறினார்களாம். அதனைக் கேட்ட உமர் அவர்கள் நல்ல வேலையாக தப்பித்தீர்கள், இந்நேரம் இந்த நகர வேலை செய்யாமல் சோம்பேறியாக வெறுமனே கதை பேசும் இளைஞர்களாக இருந்திருந்தால்  இந்தக் கல்லைக் கொண்டு தாக்கியிருப்பேன் என்கிறார்களாம். இது எதனைக் காட்டுகின்றது என்றால் பள்ளியில் தொழுகை முடிந்ததும் வீண் பேச்சுகள் குறைத்து குடும்பத்தினை காப்பாற்ற தொழிலில் ஈடுபடவேண்டும் என்ற அறிவுரையினைத் தானே காட்டுகின்றது. ஆனால் ஒரு மாத, மூன்று மாத, ஆறுமாத ஜமாத்து என்று இளைஞர்களை படிப்பு, வியாபாரம், குடும்பத்தினை புறக்கணித்து அழைத்துச் செல்வது  நியாயமா என்று கேட்காத தோனவில்லியா உங்களுக்கு. எனக்குத் தெரிந்த ஒரு ஜாமத்திற்கு சென்ற இளைஞர் தாய் நோயாய் இருக்கும்போது வயதான தந்தையினை அருகில் விட்டு விட்டு 15 நாள் ஜமாத்திற்கு சென்றதும், தாய் மவுத்தானதும் அந்த இளைஞர் எங்கே இருக்கின்றார் என்று கூட அறிய முடியா ஜமாத்தின் நிலை இருந்த ஒரு நிகழ்வுனை அறிவேன். ஜாமத்திற்கு சென்ற அந்த இளைஞரின் கைபேசியினை அந்த குழுவின் தலைவர் வாங்கி வைத்துக் கொண்டாராம் என்ற பரிதாபமான நிலையினைப் பாருங்கள். சில பள்ளியில் அஸர் தொழுது விட்டு வெட்டியாக இஷா வரும்வரை பள்ளி வளாகத்தில் அமர்ந்து வீனே வம்படிக்கும் சிலரைக் காணலாம். இதுபோன்ற நிகழ்வு தேவைதானா. ஏன் அந்த நேரத்தில் வீட்டிற்கு தேவையான காரியங்களை செய்யக்கூடாது.
            உமர் அவர்கள் மக்களிடம் குறை கேட்டு அதனை நிவர்த்தி செய்யும் ஆளுமை படைத்தவராக இருந்தார்கள். ஒரு தடவை மக்கள் குறை கேட்கும் நேரத்தில் ஒரு கவர்னர் பற்றி, 'அவர் தனது வீட்டிற்கு மிகவும் அதிகமான பொருட் செலவில் கதவு அமைத்துள்ளார்' என்ற புகார் வந்ததாம். உடனே அந்த கவர்னரை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றாராம். அங்கே கலீபா உமர் அவர்களுடைய வீட்டின் முன் வாசலில் கதவு எதுவுமில்லாமல் ஒரு கோணிப் பை மறைப்பாக தொங்கியதாம். உடனே அந்த கவர்னர் வருந்தி தனது ஆடம்பர கதவினை நீக்கி விட்டாராம். ஆனால் இன்றைய ஜனநாயக நாட்டில் மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தனது காலைதேநீருக்காக ரூ 3 .5 கோடி இரண்டரை வருடத்தில் செலவு செய்திருப்பதாக தகவல் உரிமை சட்டத்தில் கேட்கப் பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப் பட்டுள்ளது.
            இன்னொருமுறை ஒரு கவர்னர் பற்றி மூன்று புகார்கள் சொல்லப் பட்டதாம். 1 ) காலையில்   குறிப்பிட்ட நேரத்தில் அலுவலுகத்திற்கு வராமல் காலந்தாழ்த்தி வருகிறார், 2 ) விடுமுறை நாட்களில் அலுவலகத்திற்கு வருவதில்லை, 3 ) இரவு நேரங்களில் அலுவல்கள் பார்ப்பதில்லை என்பதான  குற்றச் சாட்டாகும் . ஒரு தடவை உமர் அவர்கள் சபைக்கு அந்த கவர்னர் வருகை தந்ததும் மேற்கூறப்பட்ட குற்றச் சாட்டுகள் பற்றி கேள்வி கேட்கப் பட்டதாம். அந்த கவர்னர் முதலாவது குற்றச் சாட்டிற்கு ப் பதிலாக, 'கலீபா அவர்களே, என் மனைவி நோய் வாய்ப் பட்டவள், அவளுக்கும் என் பிள்ளைகளுக்கும் சமையல் செய்து, அவளுக்கு நோய்க்கான மருந்துகள் கொடுத்து விட்டு வர தாமதமாகிறது என்றாராம். உடனே கலீபா அவர்கள் அந்த கவர்னர் நெற்றியில் முத்தமிட்டாராம். இரண்டாவது குற்றச் சாட்டிற்கு, எனக்கு உடுத்த ஒரே ஆடை தான் உள்ளது அதனை விடுமுறை நாட்களில் துவைத்துப் போட்டு காயவைத்து உடுத்திக் கொள்வதிற்க்காக வருவதில்லை என்றாராம். உடனே கலீபா அவர்கள் அவருடைய நெற்றியில் இரண்டாம்முறையாக முத்தமிட்டு, 'நான் கூட இரண்டு ஆடை வைத்துள்ளேன்' என ஆதங்கப் பட்டாராம். மூன்றாம் குற்றச்சாட்டிற்கு 'நான் பகல் நேரத்தில் படைப்பினங் களுக்கு சேவை செய்து விட்டு இரவு நேரங்களில் படைத்தவனுக்கு எனது நன்றி செலுத்தி தொழுவதால் இரவு அலுவல் செய்வதில்லை என்றாராம். உடனே கலீபா அவர்கள் அவரை கட்டி அணைத்துக் கொண்டு அவர் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு எவ்வளவு அளவிற்கு விசுவாசமாக இருக்கின்றார் என்று சபையினரை நோக்கிச் சொன்னார்களாம்.
            நமது இளைஞர்கள் தற்போதைய நிலையினை மேற்கூறிய கருத்துக் களோடு ஒப்பிட்டுப் பார்க்க கடமை பட்டுள்ளோம். பெற்றோரை பேனிக் காப்பதில்லை, மனவியினை தன் உடலின் ஒரு உறுப்பாக கருதாமல் தனக்கு நோய் வந்தால் அவள் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணமும், அவள் நோய் பட்டு விட்டால் பிறந்த வீட்டிற்கு அனுப்பி அங்கே வைத்தியம் பார்த்து விட்டு வா என்று மூட்டை முடிச்சுடன் அனுப்பும் செயலும் இருக்கின்றது. எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன். ஒரு மணமக்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து அந்த மணமகள் திடீரென்று மயக்கம் அடைந்து கணவன் வீட்டில் விழுந்து விடுகிறாள். உடனே கணவன் வீட்டார் அந்தப் பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே பரிசோதித்த டாக்டர் லோ சுகரினால் மயக்கம் அடைந்துள்ளார் என்று கூறி மருந்து கொடுத்தாராம். வீட்டிற்கு வந்ததும் மணமகன் வீட்டார் பெண்ணிடம் உனக்கு ஏற்கனவே சர்க்கரை  நோய் இருக்கின்றதா என்று கேட்டதிற்கு அந்தப் பெண்ணும் வெகுளியாக ஆம் என்று சொல்லி விட்டதாம். உடனே அந்தப் பெண் மீது ஆதங்கம் படாமல் கோபப் பட்டு ஏன் திருமணத்திற்கு முன்னே அதனை சொல்லவில்லை என்று சண்டைப் போட்டு ஆடு,மாடு போல வீட்டிற்கு அனுப்பி விட்டதோடு, தலாக்கும் சொல்லி விட்டார்களாம். என்னே பரிதாபம். சர்க்கரை ஒரு நோய் அல்ல மாறாக அது ஒரு குறைபாடே என்று அவர்களுக்கு யார் எடுத்துக் காட்ட வேண்டும். படித்த மணமகன் தானே செய்ய வேண்டும். ஆனால் அவன் தன் பெற்றோருடன் சேர்ந்து ஒரு பெண்ணை சுவைத்து விட்டு மறு மணமகளை தேட ஆரம்பித்து விட்டானாம். 
            இஸ்லாமிய கவர்னர் உடுத்த ஒரே உடை தான் வைத்து விடுமுறை நாட்களில் துவைத்து உடுத்தினாராம். ஆனால் இந்திய பிரதமர் ரூ 10 லட்சம் மதிப்புள்ள கோட்டு அணிந்த செய்தியும் படித்திருப்பீர்கள். அதுவும் எந்த நாட்டில் மகாத்மா காந்தி இடுப்பில் ஒரு துணியும், மேலங்கி ஒரு துணியோடு வாழ்ந்து காட்டிய வரலாறு உள்ளது. ஏன் தமிழ் நாட்டிலே சுதந்திர போராட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜீவாவும், நல்லக்கண்ணும் வாழ்ந்தவர் மற்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான். அவர்கள் ஆடையினை அவர்களே தான் துவைத்துக் கொள்வார்களாம். தலைக்கு கூட எண்ணெய் தேய்க்க மாட்டார்கள். ஆனால் நமது சமுதாய தலைவர்கள் கூட தற்போது தங்களை மதிக்க வேண்டுமென்று திருமண நிகழ்ச்சிக்கு கூட கோட்டு, சூட்டு அணிந்து வருகிறார்கள் என்று எதனை காட்டுகின்றது என்றால் அவர்கள் சாமானிய இஸ்லாமிய மக்களை கீழ்த்தரமாக நினைக் கும் போலியான நடவடிக்கை  என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
நமது சமுதாயத்தில் பணம், புகழ், படிப்பு பெரும் வரை இறைவனை வணங்குகிறோம். ஆனால் அந்த மூன்றும் கிடைத்ததும் அகம்பாவம் அடைந்து தன்னுடைய திறமையினால் தான் அத்தனையும் கிடைத்தது என்று எல்லாம் வாரி வழங்கும் வல்ல அல்லாஹ்வினை தொழ மறந்து விடுகின்றோம். ஆகவே தான் கலீபா உமர் அவர்களும், அவர் கீழ் பணியாற்றிய அலுவலர்களும் சிறப்பாக மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக ஆட்சிமுறை நடத்திக் காட்ட முடிந்தது. ஏன் அது போன்று இன்றைய இஸ்லாமிய இளைஞர் படையினால் முடியாத, இழந்த பெருமை திரும்பப் பெற முடியாதா?

Wednesday, 14 March 2018

இந்திய வரலாற்றை மாற்றியமைக்க முயற்சியா?



                     (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
இந்திய துணைக் கண்டம் ‘இண்டஸ்’ நதியின் பெயரால் அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்பில் இந்தியாவின் பெயர் மஹாபாரத புராணத்தில்  வரும் பரத மகாராஜாவின் பெயரினை தாங்கி பாரத நாடு என்றுள்ளது. மஹாபாரதத்தில் பரதர் கி.மு 5 வது நூற்றாண்டில் இந்தியா முழுவதும் ஆண்டதாக சொல்கிறது.

ஆனால் உலக வரலாற்று ஆசிரியர்கள் இந்திய நாகரீகம், உலகில் பழமையான நாகரீங்களான மெசொபொடோமிய, எகிப்து போன்றது என்கின்றனர். தற்போது மொகஞ்சோதர-ஹரப்பா நாகரீக நகரங்கள் பாக்கிஸ்தான் பஞ்சாப்-சிந்து மாகாணங்களில் உள்ளன. அவைகளை வரலாற்று ஆசிரியர்கள் கி.பி. 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்தனர். அதேபோன்று தான் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தில் பாலத்தால் என்ற இடத்தில் உள்ள பழமை நாகரிகமும் கி.பி.1962ல் கண்டுபிடிக்கப் பட்டது. அவைகளை கண்டு பிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கூறிய நாகரிகங்கள் கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறினர்.
நான்கு வேதங்களை உட்பட்ட காலங்கள் வேதிக் காலங்கள் என்கின்றனர். அவை கி.பி.150லிருந்து-கி.பி.1700 ஆண்டுகளுக்குட்பட்டது என்கின்றனர். இந்த காலக் காட்டத்தில் தான் ஆரிய வம்சாவழியினர் தங்களுக்கென்று ஒரு மதமாக 'சனாத்தான் தர்மம்'(இறைவன் கட்டளை) என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அது காலப் போக்கில் ஹிந்துயிசமாக மாறிவிட்டது. ஆரியரிகள் ஒன்று கூடும் இடத்திற்கு 'சிந்துஸ்' என்று அழைத்தார்கள். ஆரம்பத்தில் 'ஒரு கடவுள்' என்ற கொள்கையினை கொண்டாலும் பிற்காலங்களில் பல உருவ வழிபாடுகள் உள்ளே புகுத்தப் பட்டது. 


நான்கு வேதங்களை தவிர்த்து  ஹிந்து மத இலக்கிய படைப்புகளான உபநிஷம், புராணம், மஹா பாரதம், ராமாயணம் இவையெல்லாம் கி.பி. 6வது நூற்றாண்டினைச் சார்ந்ததாகும். மகாவீரரும், கௌதம புத்தரும் இந்த காலக் கட்டத்தில் தான் 'சனாத்தான் தர்மத்திலிருந்து' பிரிந்து ஜைன, புத்த மதங்களை நிறுவினர்.
இந்தியாவின் வளத்தினை பற்றி கேள்விப்பட்ட பாரசீக சாம்ராஜ்ய சக்கரவர்த்தி 'சைரஸ்' கி.மு. 530ல் ஆக்கிரமிப்பு தொடங்க முதலாம் டாரஸ் ஆட்சி காலத்தில் பாரசீக சாம்ராஜ்யம் வட இந்தியாவில் ஆட்சி கொண்டது. அதன் பின்பு தான் கிரேக்க சக்கரவர்த்தி அலைக்ஸாண்டார் கி.மு.327ல் தனது ஆதிக்கத்தினை வட இந்தியாவில் செலுத்தினார்.
முதல் முதலில் முஸ்லிம் ஆதிக்கம் கி.பி. 712ல் முகமது பின் காசிம் காலத்தில் இன்றைய பாகிஸ்தானில் நிலை நிறுத்தப் பட்டது. அதன் பின்னர் பல குறுநில மன்னர் ஆட்சிகளாக, பல்வேறு மொழி, இன, மத மக்களை ஒருங்கிணைத்து முகலாய சாம்ராஜ்ய இந்தியா முழுவதும் நிருவப் பட்டது. அதன் பின்பு வந்த போர்த்துகீசியர், பிரெஞ் நாட்டினர் ஒரு சில பகுதிகளை பிடித்து ஆட்சி செலுத்தினர். இங்கிலாந்தில் உருவான  தொழில் புரட்சியின் காரணமாக நவீன ஆயுதங்களைக் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா முழுவதும் நிலை நிறுத்தப் பட்டது ஒரு வரலாறு என்று உங்களுக்குத் தெரியும்.
ஆனால் சில இந்திய வரலாற்று மற்றும் மேற்கத்திய ஆசிரியர்கள் இந்திய நாட்டு நாகரிகமே வெளி உலகிற்கு  தெரியக் கூடாது என்று பல நூல்களை கறுப்புக் கண்ணாடி பார்வையுடன் எழுதியுள்ளது வரலாற்று மாணவர்களுக்குத் தெரியும். சிவகங்கை மாவட்டம் கீழடி கிராம ஆராய்ச்சி இந்திய பழமை நாகரிகம் பறைசாற்றுகிறது. அதனை வெளிக்கொணராமல் பார்த்துக் கொள்ளும் முயற்சியும் எடுக்கப் பட்டதும் உங்களுக்குத் தெரியும். முதலில் ஆராய்ச்சி அதிகாரிகள் மாற்றப் பட்டனர். இப்போது அந்த கிராம மக்களில் சிலரைப் பிடித்து ஆராய்ச்சிக்கு எதிராக குரலும் எழுப்பியுள்ளதினை ஊடகங்கள் வாயிலாக நீங்கள் படித்து இருப்பீர்கள். ஆதிகால இந்திய திராவிட மக்கள் வட இந்தியாவிலிருந்து விரட்டபட்டதாக அவர்கள் தெற்கே தஞ்சம் புகுந்ததாகவும் கூறப் படுகிறது. தற்போதைய அமெரிக்காவினை செவ்விந்திய மக்கள் ஆட்சி செய்தனர். அவர்களை ஸ்பெயின், பிரிட்டிஷ் ஆட்சியினர் மலை பகுதிகளுக்கு அனுப்பி விட்டதும். ஒரு காலத்தில் ஸ்பெயின் நாட்டினவருக்கும், பிரிட்டிஷ் மக்களுக்கும் போர் ஏற்பட்ட பின்பு ஏக அமெரிக்காவை பிரிட்டிஷ் ஆட்சி கோலோச்சியது. அதன் அடையாளமான கோட்டைகள் இன்னும் அங்கே உள்ளது.

நான் மேலே சுட்டிக் காட்டிய வரலாற்று செய்திகளை மாற்றியமைத்து 'ஹிந்துக்கள்' தான் இந்திய துணைக்கண்டத்தின் ஆதிகால மக்கள் என்பதினை நிரூபிக்கும் விதமாக ரகசியமாக ஹிந்துத்துவ கொள்கைகைக் கொண்ட வரலாற்று ஆசிரியர்களைக்கொண்ட 14 உறுப்பினர் கொண்ட ஒரு குழு அமைத்து, அதன் தலைவராக 'பழமை இந்திய வரலாற்று' பேராசிரியர் கே.என் டிக்சித் தலைவராக நியமனம் செய்து அதற்கான முதல் கூட்டமும் நடத்தப் பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதனைப் பற்றி நிருபர்கள் கேட்டபோது மைய அமைச்சர் மகேஷ் சர்மா ஒத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், '12,000 ஆண்டுகளுக்கு முன்பே ஹிந்து கலாட்சாரம் கோலோச்சி இந்தியாவில் இருந்ததாக கூறுவது' வரலாற்று உண்மைகளை சோற்றில் முழு பூசணிக்காயினை' மறைப்பது போன்று உங்களுக்குத் தெரியவில்லையா?
லக்னோவினைச் சார்ந்த ரொமிலா தாப்பர் என்ற பெண் இந்திய வரலாற்று ஆசிரியர் தனக்கு இரண்டு தடவை பத்ம பூஷன் விருது வழங்க ஒப்புமை கேட்டதில்லை ஏற்க மறுத்தவர், உலக வரலாற்று ஆசிரியர்களால் மிகவும் மதிக்கப் பட்டவர் நடு நிலையானவர்.   பி.ஜே.பி  அரசு மைய ஆட்சியில் இருந்தபோது, பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தகங்களில் ஒரு மாற்றம் கொண்டு வந்தனர். அது என்னவெனில் ஆதிகால ஹிந்து மக்கள் மாட்டு உணவை உட்கொண்டதில்லை என்பது தான். ஆனால் ரொமிலா ஹிந்து மதத்தினர் ஆனாலும் ஆதாரங்களுடன் அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டார். அத்தோடு இந்திய மக்களை மதத்தின் பெயரால் முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்கள் என்று பிரிக்கவேண்டாம் என்று கடுமையாக சாடினார்.அவர் ஏன் அவ்வாறு சொன்னார் என்பதற்காக அமெரிக்கா 'லைப் ராகி காங்கிரஸ் கிளப் சேர்' என்ற சிறப்பு இருக்கைக்கு பரிந்துரைக்கப் பட்டவுடன் ஹிந்து அமைப்புகளால் அதற்கு எதிர்ப்பு கணை தொடுத்து அது சம்பந்தமாக துறைக்கும் கடிதம் எழுதினார்கள் என்றால் பாருங்களேன். அவர்கள் மனதில் உள்ள வெறுப்பினை மற்றும் சதித் திட்டத்தை.
அது மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி புத்தகள் மாற்றவும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். தற்போதைய மைய அரசு ஹிந்துத்துவா கொள்கைகளைக் கொண்ட மாநில ஆளுநர்களையும், பல்கலைக் கழக துணை வேந்தர்களையும் நியமனம் செய்திருப்பது உங்களுக்குத் தெரியும். தமிழகம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் போன்று அன்றாட அலுவல்களில் தலையிடுவதும் நீங்கள் அறிந்ததே. அந்த முயற்சிக்கு மகுடம் சூடுவதுபோல் ஆர்.ஆர்.எஸ். முக்கிய பிரமுகர் மன்மோகன் வைத்யா, 'இந்தியாவின் கலர் காவி நிறம் தான், அதனை நிரூபிக்க இந்திய வரலாறு மாற்றியமைக்கப் படும்' என்று கூறியிருப்பது அதிர்ச்சியான செய்திதானே! இந்தியாவினை ஜனநாயக நாடாக உள்ளத்தினை அமெரிக்கா போன்று குடியரசாக மாற்றி மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே தேர்தல் நடத்தி இந்த திட்டத்தினை நிறைவேற்ற போவதாகவும் கூறப் படுகிறது.
இந்த முயற்சிக்குப் பின்பு இந்திய நாடு, 'ஹிந்துஸ்தானாகவும்' முஸ்லிம்களும், கிருத்துவர்களும் இரண்டாம் தர குடி மக்களாக மாற்றி ஒரு புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப் பட்டாலும் ஆச்சிரியப் படவேண்டாம்.  எனது தலைப்பில் சேற்றில் பூசணிக்காய் மறைக்க வேண்டாம் என்று கூறினேன். ஹிந்துஸ்தான் என மாற்றும் முயற்சியினைத் தான் சேறு என்று குறிப்பிட்டேன். ஆகவே  இந்திய வரலாற்றினை மத அடிப்படையில் பொய்யாக மாற்றி அமைக்கும் மைய அரசின் முயற்சியினை, சமூக ஆர்வலர்களும், வரலாறு படித்த மாணவர்களும், பொது சிந்தனையாளர்களும் குரல் எழுப்ப வேண்டும் என்றால்  சரிதானே!


Thursday, 15 February 2018

விஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும்-குரானின் வாசகமும்
(ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ), பிஎச்.டி)
‘களி மண்ணிலிருந்து மனிதப் படைப்பினை துவங்கினான்' என்றது அல்குரான் 1430 ஆண்டுகளுக்கு முன்பு(32:7)
'மனிதனை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான் ஏக அல்லாஹ்' அல் குரான்(35:11)
'அவனை நாம் விந்திலிருந்து படைத்தோம் என்பதினை மனிதன் அறிய வேண்டாமா' என்றும் சொல்லியுள்ளது குரானில்(36:77)
காலனி ஆதிக்க ஏகாதிபத்திய இங்கிலாந்தில் தொழில் புரட்சி காலத்தில் உதித்த விஞ்ஞானி சார்லஸ் டார்வின்(  1809-1882)   மனிதப் படைப்பினைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்து எழுதப்  பட்ட புத்தகம், 'மனிதப் படைப்பின் ஆரம்பம்'( on the origin of species)    
அதனில், 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' என்று நம்பும்படி எழுதியுள்ளார்.
அதற்கு அவர் உதாரணமாக காட்டியது சிம்பனி என்ற மனிதக் குரங்கு மனிதனைப் போல நடவடிக்கைகளில் இருப்பதாலும், சில ஆப்பிரிக்க மக்கள் குரங்குகள் போன்ற முக அமைப்பினையும் கொண்டதாலும் தான். ஆனால் அவரால் ஏன் அந்த மனிதக் குரங்குகளால் பேச முடிவதில்லை என்பதையோ அல்லது இரண்டு கால்கள் கொண்டு மனிதனைப்போல நடமாட  முடியவில்லை என்பதனையே விளக்க முடியவில்லை.
ஆங்கிலேய பகுத்தறிவாளி டாக்கின்ஸ் பித்திலி, 'நாம் மனிதக் குரங்குகள் போல தோற்றம் இருந்தாலும், நாம் மனிதக் குரங்குகளின் சந்ததிகள் என்று ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை' என்கிறார்.
சமீபத்தில் மத்திய மந்திரி சாத்தியபால் சிங், 'சார்லஸ் டார்வினின் கண்டு பிடிப்பு முற்றிலுமாக விஞ்ஞானத்திற்கு மாறுபட்டது' என்று கூறியதோடு மட்டுமல்லாமல், 'அவ்வாறு பள்ளி. கல்லூரி பாடப் புத்தகங்களில் கூறப் பட்டவைகளை நீக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.
ஆகவே மனிதன் எப்போதுமே மனிதனாகவே இருப்பான் என்று ஆணித்தரமாக கூறுகின்றது அல் குரான் ஒன்றே. மேலும் ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களை எப்படி படைத்தான் மற்றும் அவர்களிடமிருந்து எப்படி மனித சமுதாயத்தினை உருவாக்கினான் என்று மேற்கூறிய ஆயத்துகளிடமிருந்து தெள்ளத் தெளிவாக கூறப் பட்டுள்ளது.
மனிதன் குரங்கிலிருந்து வந்தவனென்றால் எங்கே அவனது குரங்கு வால்கள், எப்போது மறைந்து விட்டது, ஏன் மறைந்து விட்டது என்றாவது விஞ்ஞான ஆராய்ச்சியின் போது டார்வின் எண்ணியிருக்க வேண்டாமா? மனிதனின் முதுகு தண்டு வட கடைசிப் பகுதி வால் போல் இருந்தாலும் அது எப்போது சிறுத்து விட்டது என்று எண்ண வேண்டாமா?  ஒரு மனிதன் இறந்து அவன் மண்ணோடு மண்ணாக மாக்கிப் போனாலும் அல்லது தீயிட்டுக் கொளுத்தினாலும் அழிக்க முடியாது என்பது முதுகு தண்டு வட்டத்தின் வால் போன்ற பகுதி தான். ஆகவே அது ஒரு காலும் வளர்ந்ததும் இல்லை, மனிதன் இறந்து விட்டதும் மறைந்து விட்டதுமில்லை.
குழந்தை இல்லாதவர்களுக்கு நவீன முறையில் கருத்தரிக்க முயற்சி செய்பவர்கள் கூட ஆண் விந்து மற்றும் பெண் கரு முட்டைகள் இணைத்துத் தான் கருத்தரிக்க செய்கிறார்கள். அவைகள் இல்லாமல் கருத்தரிக்க முயற்சிகள் விஞ்ஞானிகள் மேற்கொண்டு இருந்தாலும் அது ஒரு மனித அடையாளங்கள் கொண்டு அமைந்திருக்குமா(டி.என். ஏ) என்று சந்தேகமே!
சத்துக் குறைவான விந்துகள் குழந்தை தறிப்பதிற்கு  தடையாக இருக்கும் என்று விஞ்ஞானப் பூர்வமாக சொல்கிறது. அதனைத் தான் குரானிலே சற்று அழுத்தமாக, 'இன்றும் அவன் தான் மனிதனை (ஒரு துளி) நீரிலிருந்து படைத்தான்(25:54) கூறுகிறது.அல் குரான்.
என்னதான் விஞ்ஞான காலங்களில் வாழும் நாம் மனிதனைப் போன்று இயங்கக் கூடிய ரோபோக்கர்களை உருவாக்கினாலும், அல்லாஹ் அருளிய மனிதப் படைப்புப் போன்று அவைகளால் பகுத்தறிந்து தனியே செயலாற்ற முடியுமா என்றால் அது முடியாதுவே ஆகும். ஏனென்றால் அந்த ரோபோக்களை இயக்கக் கூடிய ஒரு சக்கி வேண்டும். மனிதப் படைப்பினுக்கே உரித்தாகுவதான அன்பு,ஆசை, பண்பு, பாசம், நேசம், பற்று போன்ற எண்ணற்ற அறிவு சான்ற செயல்களை எந்த நவீன ரோபோக்களோ, அல்லது எந்த விலங்குகளோ செயலாற்ற முடியாது என்பது தான் உண்மை.

மனிதனை தோற்றுவித்த விஞ்ஞானிகளுக்கெல்லாம் சிறந்த விஞ்ஞானியாக எல்லாம் வல்ல அல்லாஹ் நீக்கமற நிறைந்து இன்றும் என்றும் நிறைந்து நிற்பான் என்பது தான் திருக்குரானில் வேத வாக்கும், எம்பெருமானார்(ஸல்) அவர்களின் வாக்கும் ஆகும். அதனை எந்த விஞ்ஞானியும் வெல்ல முடியாது என்பது தான் உண்மை என்பதினை உறக்கச் சொல்வோமா நமது தொழுகையின் மூலம், நன்றிக் கடனாக!

Saturday, 2 December 2017

நானிலம் போற்றும் நன்னாளில் நற்செய்தி !

நானிலம் போற்றும் நன்னாளில் நற்செய்தி !
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)
 பல நபி மார்களை உருவாக்கிய மக்கமா நகரில் கி.பி . 570ஆம் ஆண்டில் நானிலம் போற்றும், உண்மை, நம்பிக்கைக்கு பாத்திரமான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உதித்தார்கள். அவர்கள் பிறந்த நாளினை ஏன் கொண்டாட வேண்டும், ஏன் நினைத்துப் பார்க்க வேண்டும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். உண்மை தான் பெருமானார் சில மதத்தின் தலைவர்கள் போல தன்னுடைய நிழலையே  அல்லது தனது அங்க அடையாளங்களையோ வைக்கக் கூடாது என்றும், தான் ஒரு கடவுள் இல்லை என்றும், தான் ஏக அல்லாஹ்வால் இறுதி நபியாக மட்டும் அடையாளம் காட்டப் பட்டு தனக்கு இறைவன் போதித்த வஹிக்களை மானிடர் பண் பட எடுத்துரைப்பவன் என்று எளிமையாக சொன்னார்கள் என்பதும் உண்மைதான். அவர்கள் அல்லாஹ்வின் பால் தஞ்சம் புகுந்து 1400 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் கூட அவர்களுடைய உருவ சிறு கோடு கூட வரைந்து வெளிவந்தால் அதனை எதிர்க்கும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கொண்ட சமுதாயம் தான் இஸ்லாம் என்றும் மறுக்க முடியாது தான்.
ஆனால் அந்த ரசூலுல்லாஹ் இல்லையென்றால் இன்று புனிதக் குரானை  கண்டிருக்க முடியாது, மக்கள் மாக்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்றால் மறுக்கமுடியாது. உலகினை நல் வழிப் படுத்த வந்த 1,24,000 நபிமார்களில் இறுதி நபியாக வந்த ரசூலுல்லாஹ் உலகில் உதித்த நபி மார்களையும், அவர்களுக்கு அளிக்கப் பட்ட தவ்ராத், சபூர் , இன்ஜீல் வேதத்தினைப் பற்றியும், அவர்களின் அருமை பெருமையினை என்றாவது மறைத்து சொன்னதுண்டா பெருமானார், இல்லையென்றால் அவர்கள் சரிதம் அகிலத்திற்கு தெரிந்திருக்குமா? தன்னை என்றாவது முன்னிலை படுத்தியதுண்டா? அல்லாஹ்வால் இறக்கிய முதல்  வஹியினை ஜிப்ரயில் அலைவ ஸல்லம் அவர்கள் மூலம் பெற்று ஹிரா குகையிலிருந்து உடல் நடுங்கி வந்தபோது என்றும் உண்மை பேசும் நபி அவர்களின் சொல்லை முதன் முதலில் ஏற்ற பெருமை கதிஜா பிராட்டியாரைத் தகும். அன்று ஒரு விசுவாசியாக இருந்த இஸ்லாமிய மார்க்கம் இன்று அகிலத்தில் 150 கோடி மக்களைக் கொண்டிருக்கின்றது என்றால் அவர்கள் பிறந்த தினத்தினை நினைவு கூறாமலே இருக்க முடியுமா?
பெருமானாரின் இளம் வயது வாழ்வு, வளர்ச்சியினை பார்த்த்தோமென்றால், இளம் வயதில் பெற்றோரை இழந்து, உறவினர் அரவணைப்பில் வளர்ந்து, உண்மை, நம்பிக்கைக்கு பாத்திரம், ஒழுக்கம் தவறாமை, நாணயம் குறையாமை போன்ற நல்ல ஒழுக்கங்கள் தன்னகத்தே கொண்டிருந்தார்கள். மக்கமா நகரிலும், சுற்று வட்டாரத்திலும் நடக்கும் அனாச்சாரங்களை கண்டு மனம் வெதும்பி தனக்கு கொடுக்கப் பட்ட வஹிகளால் மக்களை நல்வழிப் படுத்த முயலும் போது விரட்டப் பட்டு, வந்தாரை வாழ வைக்கும் சங்கை மிகு மதினாவில் தஞ்சம் புகுந்து மக்கா நகருக்கு ஹஜ் செய்ய வரும்போது அரபாத் மலை உச்சியில் இருந்து கடைசி உரையாற்றும் போது மக்கள் வெள்ளம் ஒரு லட்சத்தினைத் தாண்டியது. இன்றைய நவீன ஒலி பெருக்கி சாதனமில்லாமல் சிங்கக் குரலில் தன் சங்கை மிக்க சொற்பொழிவினையாற்றினார்கள். இன்று அந்த உம்மத்தின் வானளாவிய வளர்ச்சி இனம், மொழி, எல்லை தாண்டி, உள் நாட்டு சண்டைகள், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உடல், உடமை, செல்வம் இழந்து பசியும் பட்டினியிலும், கடுங்குளிர், கடுமையான வெயிலிலும் வாடினாலும் முஸ்லிம்கள் ஈமானை இழக்காமல், நம்பிக்கை மோசம் போகாமல், 150 கோடி மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கின்றார்கள் உறுதியான ஆல மரம் போலவும், அகண்ட, ஆழமான கடல் போன்றும், வற்றாத ஜீவ நதி போலவும் வளர்ந்திருக்கின்றார்கள் என்றால் அதன் பெருமை  அதனை போதித்த எம்பெருமானின் புகழினையே சேரும்.
            இன்று பல மேலை நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் 2001 நியூ யார்க் இரட்டைக் கோபுர தகர்ப்பிற்கு பின்னர் முஸ்லிம் வழிபாட்டு தளங்களிலும், உடை, விசா, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் பல கட்டுப் பாடுகள் இருந்தாலும் 2050 ஆம் ஆண்டில் ஐரோப்பிய முஸ்லிம் மக்கள் தொகை மூன்று மடங்காக உயரும் என்று 30.11.2017 தேதியிட்ட 'பைனான்சியல் எக்ஸ்பிரஸ்' செய்தி கூறுகிறது. அதனையே நியூ யார்க்கில் உள்ள 'பியூ' என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உறுதி சொல்கிறது. அதன் விவர அறிக்கையில் ஜெர்மனியில் முஸ்லிம் மக்கள் தொகை 6.1 சதவீதமாக இருப்பது 2050ஆம் ஆண்டில் 19.7 சதவீதமாகுமாம். இவ்வளவிற்கும் ஜெர்மனியில் வெள்ளை நிறவெறி அதிகமாவதுடன், முஸ்லிம்கள் அகதிகளுக்கு வாழ்வளிக்கும் கொள்கையினை ஜெர்மன் இரும்புப் பெண்மணி மார்க்கள் கையிலெடுத்தபோது அதனை அவருடன் கூட்டணி வைத்திருக்கும் காட்சிகளே எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் முஸ்லிம் அகதிகளுக்கு தங்கள் எல்கைகளை மூடினாலும் முஸ்லிம் மக்கள் தொகை கூடுமாம். அதே போன்று தான் இங்கிலாந்தில் 2016 மக்கள் தொகை கணக்குப் படி 6.3 சதவீத முஸ்லிம் மக்கள் 2050ம் ஆண்டில் 16.7 சதவீதம் அதிகரிக்குமாம்.
            அதற்கான காரணத்தினை சொல்லும்போது முஸ்லிம் மக்களிடையே இளைஞர் பட்டாளம் அதிகமாம், அதனோடு முஸ்லிம் மக்கள் இனப் பெருக்கமும் அதிகமாகுமாம். 2050 ம் ஆண்டில் முஸ்லிம் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகமாகுமாம். அதே நேரத்தில் முஸ்லிம் அல்லாத சிறுவர் எண்ணிக்கை 15 சதவீதம் தான் இருக்குமாம். 2010ல் ஐரோப்பிய முஸ்லிம் மக்கள் தொகை ஒரு கோடியே 95 லட்சமாக இருந்தது 2016 ல் மக்கள் தொகை கனக்குப் படி ஐரோப்பாவின் 30 நாடுகளில் முஸ்லிம் மக்கள் தொகை 2 கோடியே 58 லட்சமாக உயர்ந்து விட்டதினை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று தான் சமீப காலங்களில் முஸ்லிம்கள் இந்தியாவில் முன்னேற  பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும் 2050ம் ஆண்டில் முஸ்லிம் மக்கள் தொகை 31 கோடியே 10லட்சத்தினை தாண்டும் என்று அதே 'பியூ' ஆராய்ச்சி அறிக்கை சொல்கிறது.
            மேற்கூறிய உதாரணங்களை உங்கள் கவனத்திற்கு ஏன் எடுத்துச் சொல்கிறேனென்றால் பெருமானார் எடுத்தியம்பியது உண்மையான, உறுதி கொண்ட, இயற்கை நல்வழி மார்க்கமாகும். அதில்  ஆடம்பர, அலங்காரங்களுக்கு இடமில்லை. உண்மைக்கு புறம்பான செய்திகளும் இல்லை. மக்கள் எளிதாக கடைப்பிடிக்கும் வழிமுறைகளைக் கொண்டதாக அமைந்திருப்பதே அதன் சிறப்பாகும். இஸ்லாத்தினை யாரும் வாள்  கொண்டோ, பொன்னையும் புகழையும் அள்ளி இறைத்தோ வளர்க்க வில்லை மாறாக மனித உள்ளத்தினை நல் வழிப் படுத்தியே வளர்ந்திருக்கின்றது என்ற செய்திக்கு ஒரு சமீப கால உதாரணம் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன்.
கேரளாவில் ஒரு முஸ்லிம் அல்லாத அகிலா என்ற பெண்மணி தன் கணவர் முஸ்லிம்  மதத்தில் சேர்ந்ததினை ஒரு 'லவ் ஜிகாத்' என்ற முத்திரை குத்தி அந்த வழக்கு உச்ச நீதி மன்றம் வரை சென்று, அந்த பெண் திருமணத்தினை செல்லாது என்று அறிவித்த கேரளா உயர் நீதி மன்ற தீர்ப்பினை தள்ளுபடி செய்து அந்த பெண்ணுக்கு வாழ்வளித்து  நீதியினை நிலை நிறுத்தியது என்றால் அது மத துவேஷ சமீப கால அரசின் நடவடிக்கையில் பரபரப்பாக பேசப் பட்டது. 1.12.2017ல் இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா கூட பாரத பிரதமரை தனிப் பட்டமுறையில், 'இந்தியாவினை மதத்தின் பெயரால் துண்டாட வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டதாக  பேட்டி கொடுத்துள்ளார்.
அகிலா என்ற சேலம் ஹோமியோபதி கல்லூரி மாணவி தான் எப்படி இஸ்லாமிய மார்க்கத்தின் பால் ஈர்க்கப் பட்டேன் என்று கூறும்போது, 'தன்னுடன் விடுதியில் தங்கியிருக்கும் முஸ்லிம் மாணவிகள் ஜெஸிலா, பசினா ஆகியோர் நாள் தோறும் புனித குரானை படிப்பதினையும், ஐவேளை தொழுவதையும், மற்ற மாணவியர் போலல்லாமல் ஒழுக்க சீலர்களாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. தான் முதல் செமஸ்டர் பரிச்சையில் தோல்வியடைந்து மனமுடைந்து தற்கொலை செய்யுமளவிற்கு வந்தபோது தனது அறை முஸ்லிம் ஜெஸிலா தான் தைரியம் கொடுத்து மறுபடியும் பரீட்சை எழுதி தேர்ச்சி பெறச் செய்தார். நானும் புனித குரானின் மலையாள  மொழிபெயர்ப்பினை வாங்கிப் படித்தும் இன்னும் இணைய தளங்கள் மூலம் இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு பதில்கள் சேகரிக்கும்  போது ஷாபின் என்ற முஸ்லிம் வாலிபர் சிறந்த விளக்கங்களை தந்ததால் அவருடன் இணைய தளம் மூலம் தெளிவு பெற்றேன். என்னுடைய முஸ்லிம் தோழியர் நோன்பு பிடிக்கும் போது நானும்  நோன்பும் கடைப் பிடித்தேன். அதனை அறிந்த தனது பெற்றோர் எனது படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தனர். ஆனால் அதற்குள் எனக்குப் பிடித்த ஷாபினுடன் திருமணம் செய்து கொண்டேன். அதன் பின்பு தான் பட்ட கொடுமையையும், என் ஐ.ஏ. என்ற அமைப்பினர் விசாரணையும் என்னை கலங்க வைக்க வில்லை. எனக்கு உறுதுணையாக உச்ச நீதிமன்றமும் இருந்து எனது கல்லூரி படிப்பினையும் தொடர அனுமதித்தது' என்று கூறியிருக்கின்றார். அகிலா என்ற ஹதியாவின் இஸ்லாமிய பற்றும், குரானின் வரிகளும், பெருமானாரின் ஹதீஸுகளும் தான் அகிலாவினை இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஈர்த்ததே அல்லாமல் வாள் , வன்முறை அதிகாரமோ ஈர்க்க வில்லை.

இதனை பார்க்கும் போது எவ்வாறு பெருமானார் அவர்கள் கல்லடியும், சொல்லடியும், சொல்லவேன்னா துன்பமும் அடைந்தாலும் ஏக இறைவன் என்ற கொள்கையிலிருந்து பிறழாது இஸ்லாமிய மார்க்கத்தினை போதித்ததால்தான் இன்று ஹதியா போன்ற மாற்று மதத்தினர் இஸ்லாத்தினை பின்பற்றி வருகின்றனர். அதனையே தான் 'பியூ' ஆராய்ச்சி கட்டுரையும் சொல்கிறது. ஆகவே தான் பெருமானாரின் புகழினை எடுத்துச் சொல்வது தவறில்லை என்று கூறுவதில் தவறில்லை என்று  நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன். அதே நேரத்தில் ஷிர்க்கான காரியங்களை விட்டு மீலாது நபி விழா என்று ஆடம்பரமாக கொண்டாட இஸ்லாமிய மார்க்கத்தில் இடமில்லைதானே !

Saturday, 11 November 2017

தேசிய கல்வி தினமும்-மௌலானா ஆஜாதும்!


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ)

சுதந்திர இந்திய வானில் கல்வி மேன்பட வால் நட்சத்திரமாக திகழ்ந்த மௌலானா அபுல் கலாம் ஆஜாத்தின் 11.11.1888 ம் ஆண்டின் பிறந்த தினத்தினை தேசிய கல்வி தினமாக இன்று கொண்டாடுகிறோம். ஆஜாத் அவர்கள் பத்திரிக்கையாளராகி, எழுத்தாளராக, மார்க்க அறிஞராக, சுதந்திர போராட்ட வீரராக, தேச பக்தராக, புரட்சியாளராக பண் முகம் கொண்ட அறிஞராக திகழ்ந்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.

பிரிடிஷ் சாம்ராஜ்யத்தின் வைசிராய் லார்ட் கர்ஷன் முதன் முதலில் முஸ்லிம்களையும், இந்துக்களையும் பிரித்தாளும் கொள்கையின் மூலம் வங்கத்தினை பிரிக்க முடிவு செய்தார். அதனை எதிர்த்த புரட்சியாளர்கள்  சுந்தர் சக்கரவர்த்தி, அரபின்டோ ஆகியோர்களை சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்று அவர்களுடன் தானும் ஒரு புரட்சியாளர் ஆனார். தன்னுடைய கருத்துக்களை மக்களிடையே, குறிப்பாக முஸ்லிகளிடையே கொண்டு செல்ல, 'அல் ஹிலால்' என்ற உருது பத்திரிக்கையினை 1912ல் கல்கட்டாவில் ஆரம்பித்தார். என்னே ஆச்சரியம் அந்தப் பத்திரிக்கை ஒரு வாரத்தில் 20,000 பிரதிகளை விற்று வரலாறு படைத்தது.அதனைக் கண்டு பயந்த பிரிட்டிஷ் அரசு அவரது பத்திரிக்கையினை முடக்கியதோடு மட்டுமல்லாது, அவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் கைது செய்து 1919 வரை ஜெயிலில் வைத்து 1920ல் விடுதலை செய்தது.
சி.ஆர்.தாஸ் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அவருடன் இணைந்து பணியாற்றினார். இருவரும் சேர்ந்து பிரிட்டிஷ் அரசு கூட்டிய முதலாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள மகாத்மா காந்தி அவர்களை  சம்மதிக்க வைத்தனர். காங்கிரசுக்குள் உட்பூசல்   இன்றைய தமிழக காங்கிரசில் இருப்பதுபோல இருந்ததால் சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு, ஹக்கீம் அஜ்மல் கான் போன்றோர் பிரிந்து, 'சுவராஜ் பார்ட்டி' என்று தனிக் கட்சியினை  ஆரம்பித்தனர்.
பிரிவை தடுக்க அனைவரும் ஒத்துக்கொண்ட மௌலானா அபுல் கலாம் ஆஜாத்தினை 35 வயதில் ‘ராஜ்கார்கில்’ நடந்த காங்கிரஸ் மஹாசபைக்கு தலைமை ஏற்று நடத்தச் சொன்னார்கள். இரு பிரிவினையும் ஒன்று சேர்த்த பெருமை ஆஜாத்தினை சாரும் .

பிரிட்டிஷ் அரசு மாநில சுயாட்சி கொடுக்கும் திட்டத்தினை  1935 சட்டம் மூலம் அறிவித்தது. அந்த சட்டம் ஆளுநர்களுக்கு அதிகாரம் கொடுத்துவிடும் என்று காந்தி உள்பட தேர்தலில் பங்கு பெற மறுத்தனர். ஆனால் ஆஜாத்து, 'தேர்தலில் பங்கு பெறுவதில் ஒரு பலன் உள்ளது, அது என்னவெனில் மக்களிடம் தங்களுடைய பிரச்சாரம் மூலம் காங்கிரசின் கொள்கையினை எடுத்துச் சொல்லலாமே' என்று எடுத்துச் சொல்லி அவர்களை தேர்தலில் பங்கு பெற வைத்தார்.

3.9.1939 ல் காந்தி கேட்டுக் கொண்டதிற்கிணங்க காங்கிரசின் தலைவரானார். ஆனாலும் பல்வேறு கொள்கை முடிவுகளில் காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரசின் தலைவராக 1946 வரை நீண்ட காலம் பணியாற்றியது ஆஜாத் ஒருவரே. சுபாஷ் சந்திரா போஸ் கூட காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடத்திற்குள் ராஜினாமா செய்தது இங்கு குறிப்பிடவேண்டும்.

               
சுதந்திரம் அடைந்த பின்பு 1947ல் முதலாவது கல்வி அமைச்சர் ஆனார். 1947 ல் நாடு இரண்டாக பிரிந்த போது, இந்து முஸ்லிம் கலவரம் ஏற்பட்ட பின்பும் ஒரு முஸ்லிமுக்கு கல்வி அமைச்சர் கிடைக்கப் பெற்று இருக்கின்றது என்றால் அவர் எவ்வாறு திறமை வாய்ந்தவர், அப்பழுக்கற்றவர், அனைவரும் ஒப்புக் கொண்டவர் என்று ஆச்சரியமாக இல்லையா உங்களுக்கு. அதுவும் 1958 ல் தன் கடைசி மூச்சு வரையும் கல்வி அமைச்சராக இருந்தது எல்லோருக்கும் பெருமைதானே!

அவருடைய பிறந்த நாளை ஏன் தேசிய கல்வி நாளாக அறிவித்திருக்கின்றார்கள் என்று சிறிது பார்க்கலாம்:
1) இந்திய மாணவர் ஒவ்வொருவருக்கும் தரமான கல்வியும், கற்ற கல்வி வேலை வாய்ப்பினை பெற்றுத் தருவதாகவும், நன்னடத்தினை போதிப்பதாகவும், இருக்கவேண்டுமென்று பல்வேறு சீர் திருத்தங்களைக்  கொண்டு வந்தார்..
2) கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் தங்களை நவீன கல்வி போதிக்கும் திறமையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தார்.
3) எல்லா சிறார்களுக்கும் இலவச கல்வி கிடைக்க வேண்டும், பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், தொழில் கவிக்கு முன்னுரிமை அவசியம் என்று நினைத்தார்.
4) நவீன விஞ்ஞான கல்விக்கு முன்னோடியானார்.
5) ஐ.ஐ.டி யினை, டெல்லியில் கட்டிடக் கலை கல்லூரியினை நிறுவினார்.
6) உயர் கல்வி நிறுவனங்களை கண்காணிக்கும் யு.ஜி.சி என்ற நிறுவனத்தினை அமைத்தார்.
7) படிப்பு மட்டுமல்லாமல் இந்திய கலாச்சாரமும் மங்கி விடக்கூடாது என்று சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி, இலக்கிய சாகித்திய அகாடமி ஆகியவற்றினை நிறுவினார்.
அவர் தேசிய கல்விக்கு அரும்பாடு பட்டார் என்பதற்காக அஜாதிற்கு 1992ம் ஆண்டு இந்திய தேசத்தின் உயர்ந்த விருதான, 'பாரத் ரத்னா' 1992ம் ஆண்டு வழங்கப் பட்டது. ஆகவே தான் ஆஜாத் அவர்களை  கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு நவம்பர் மாதமும் 11ந் தேதி, 'தேசிய கல்வி தினமாக' கடைப் பிடிக்கப் படுகிறது.


ஆனால் ஏன் இன்னும் முஸ்லிம்கள் கல்வி,கேள்வியில், வேலைவாய்ப்பில் பின்தங்கி இருக்கின்றார்கள் என்று உங்களுக்குத் தோன வில்லையா? சமுதாய தலைவர்கள் அரசியலில் முன்னிலை நிறுத்தும் அளவிற்கு, சமுதாய கல்வி,கேள்வி, வேலை வாய்ப்பில் முன்னேற வழிவகை செய்யவில்லை என்று தானே உங்களுக்குத் தோன்றும். ஆகவே சமுதாய மக்கள் அடுத்தவர் ஆட்சியினை பிடிக்க ஏணியாக இல்லாமல், தனது சமுதாய முன்னேற்றத்திற்கு ஏணிப் படியாக இருக்கவேண்டும் என்று கூறுவது சரியா!