Friday, 30 July 2021

புவி சூடாதலும்-இயற்கை சீற்றமும்!

     (டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

தற்போது நமது கவனமும், ஊடகங்களின் ஈர்ப்பும் கொரானா பற்றியும், அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடக்கும் ஆர்ப்பாட்டம், சண்டைகளைப் பற்றியும் தான் செலுத்தப் படுகிறது. ஆனால் உலகை அச்சுறுத்தும் புவி சூடாதலையும், அதனால் ஏற்படும் பேரழிவுகளையும் சற்று சித்திக்க இந்தப் பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.

நமது நாட்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில்  கேதார்நாத் புனித தளம் அமைத்திருப்பதினை உங்களுக்குத் தெரியும். அங்கே ஏற்பட்ட பனிச்சரிவில் 169 பேர் சிக்கி இறந்து விட்டனர். பலர் காணவில்லை என்றும் கூறப் படுகிறது. அதற்கு காரணமாக புனிதத் தளத்திற்கு வரும் யாத்திரிகர்கள் வசதிக்காக தங்கும் விடுதிகளும், ஹோட்டல்களும், மாடி கட்டிடங்களும் காடுகளை அழித்து காட்டியதால் தான் என்று சொல்லப் படுகிறது. . ஜூலை மாதத்தில் கொட்டித்தீர்த்த அடை மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 140 பேர்கள் இறந்து விட்டார்களாம். சீனாவில் 1000 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மழை பொழிந்தும், ஜெர்மனி,உள்பட பல நாடுகளில் மழையினால் பல சேதங்கள் அடைந்ததாக சொல்லப் படுகிறது. ஆர்க்டிக் கண்டத்தில் உள்ள பணிப் பாறை உருகி ஐரோப்பாவில் வெள்ளப் பெருக்காம். ஒரு பக்கம் அங்கே பணிப் பாறை உருகி சேதம் உண்டாக்கினாலும், மறு பக்கம் ருசியாவும், அமெரிக்காவும் போட்டிபோட்டுக் கொண்டு அங்கே பூமிக்குள் இருக்கும் எண்ணெய், எரிவாயு, தாதுப் பொருட்கள்  ஆகிவற்றை எடுக்க ஆய்வு நடத்துகின்றனவாம்.

அடை மழை எவ்வாறு அழிவைத் தருகின்றதோ அதேபோன்று அதிக வெப்பமும், உலக அளவில் வெப்பத்தினை கக்கியுள்ளது என்பது குவைத்தில் நிழலில் 54 டிகிரி செல்சிஸ் 129 பாரங்கீட்டும் வெயிலில் 70டிகிரி செல்சிஸ் 158 டிகிரி பாரங்கீட்டும் உள்ளது. அதன் விளைவு கார்களின் மெட்டல் பகுதியும், டிராபிக் பிளாஸ்டிக் சிக்னல் பகுதியும் உருகி விட்டதாம். அதே போன்று தான் அமெரிக்கா, மற்றும் கனடா நாடுகளில் சில பகுதிகளில் 54 டிகிரி செல்ஸில் வெயில் கொளுத்தியதால் மெட்டல் பகுதி உருகி விட்டதாம். அதே போன்று பல பகுதிகளில் அமெரிக்காவின் காடுகளில் கட்டுக் கடங்கா காட்டுத்தீ பரவியதாம்.

முதன் முதலில் கார்பன்டை ஆக்சைட்டினை தொழில்சாலைகளிலும், மின் உற்பத்தி நிலையங்களிலும், வீடுகளிலும், வாகனங்களிலும், வெளியேறி சுற்றுப் புற சூழலுக்கும், வெப்பத்தினை கட்டுப்  படுத்துவதற்கும் மிகவும் அவசியம் என்று 'Centre for Policy Research’ பேராசிரியர் டாக்டர் நவ்ரோஸ் துபாஷ் சொல்கிறார்.  1970க்கு முன்பு வீட்டில் மர அடுப்பு இல்லாத வீடே இல்லை எனலாம். அதனிலிருந்து வெளியாகும் புகை தாய்மார்களை பாதித்து பல்வேறு நோய்களுக்கும் ஆளானார்கள் எனலாம். மின்சார உற்பத்திற்கு அடுப்புக் கரி மற்றும் நிலக்கரி மிகவும் தேவையான ஒன்று. அந்த மின் சுழற்சியில் வெளியாகும் புகை மண்டலத்தினை வட சென்னையில் குடியிருக்கும் மக்களுத் தெரியும். ஆகவே தான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மிகுந்த சோலார் தகடுகள் மூலமும், சூழல் காற்றாலை மூலமும், கடல் அலை, காற்று, மழை, பூமிக்கு அடியில் உள்ள வெப்பத்தினை கண்டு பிடித்து(Geo Thermal) மின் சக்தி  உற்பத்தி செய்யப்படுகிறது. சென்னையில் ஓடும் மெட்ரோ ரயில் கூட சோலார் மின் உற்பத்தி மூலம் தான் இயக்கப் படுகிறது. ஆகவே அதுபோன்ற கார்பனுக்கு மாற்றான மின் உற்பத்தியினை மக்கள் பயன் படுத்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.

நிலைக்கத் தக்க மின் திறன்: 'Council on Energy and Environment and Water' மின் உற்பத்திக் கவுன்சிலின் தலைமை அதிகாரி 'அருணா கோஸ்'  கூறும்போது இனிமேல் பெட்ரோல், டீசல், காஸ் பயன்படுத்தும் வண்டிகள் 2035க்கு பின்பு ரோடுகளில் காண முடியாது. மாறாக மின்சாரத்தால் பயன் படுத்தும் வாகனம் பயன் படுத்துவதே நாம் காணலாம். G 20 நாடுகளில் இந்தியாவில் மட்டும் தான் உஷ்ணம் 2 டிகிரி செல்சிசுக்குள் கட்டுப்பாடுடன் உள்ளது. ஆனால் சராசரி இந்தியர் இரண்டு வகையாக கொள்கையினை கடைப் பிடிக்கின்றனர். சுத்தமான காற்று வேண்டும் ஆனால் சிக்கனமான டீசல் வண்டிகளையே பயன்படுத்திட வேண்டும். ஆகவே வருங்கால நமது சந்ததியினர் சுதந்திரமான காற்றினை சுவாசிக்க செய்யவேண்டுமென்றால் மாசு விளைவிக்கும் பெட்ரோல், டீசல், காஸ் பயன் படுவதினை குறைக்க வேண்டும். 

சுகாதாரத்திற்கு உலை வைக்கும் நெருக்கமான வாழ்க்கை:

ஜனத்தொகை பெறுக, பெறுக கிராமப்புற மக்கள் வேலை வாய்ப்பிற்காக நகரத்தில் குடியேறுகின்றனர். அப்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனி தனி வீடு முடியாது. ஆகவே உயரமான கட்டிடத்தில் ஒண்டி குடித்தனம் வாழ முயல்கின்றனர். நகரங்களின் அருகில் உள்ள விலை நிலங்கள் குடியிருப்பு வீடுகளாக மாறி வருகின்றன. வயல்களில் இருந்த பச்சை பசேல் என்ற தாவரங்கள், மரங்கள் அழிக்கப் பட்டு குடியிருப்பு கோபுர வீடுகளாக மாறி உள்ளன. தற்போது 'Smart City' என்ற மாதிரி நகர பகுதிகள் பசுமை தாயகமாகவும் மாற வேண்டும் என்று "Integrated Urban Planning at World Resources Institute India' இயக்குனர் 'Jeya Tintav' சொல்கிறார். நகரில் வாழும் ஒவ்வொரு குடி மகனும் மரம் வளர்ப்பதை கொள்கையாக ஏற்கவேண்டும். அதோடு தனித்தனி வாகனத்தில் சென்றால் தான் மதிப்பு என்று கொள்ளாமல் passenger friendly கொள்கைக்கு மாறி வழியில் நிற்பவர்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கமும் வேண்டும். 1983ம் ஆண்டு நான் சிங்கப்பூர் சென்றபோது எனது கல்லூரி தோழர் காரைக்கால் சாலி மரைக்காருடன் காரில் பயணிக்கும் வாய்ப்பினை பெற்றேன். அப்போது ‘பீக் நேரம்’ என்று சொல்லும் அலுவலக நேரங்களில் பஸ் நிறுத்தங்களில் நிற்கும் பயணிகளை தனியாக செல்லும் வாகன ஓட்டிகள் அழைத்துச் செல்வதனை கண்டேன். அப்போது தான் அவர்கள் தனி டிராபிக் லேனில் செல்ல முடியும். அதே போன்று தான் அங்கே குப்பையினை ரோட்டில் கொட்டினால் 5000 டாலர் அபராதமும், 3மாத தண்டனையும் வழங்குகின்றார்கள். 2012ம் ஆண்டு அதுபோன்று தண்டனை விதிக்கப் பட்டவர் 8195 என்றால் 2018 வரை தண்டிக்கப் பட்டவர் 39000 ஆகும். மக்களும் அரசுக்கு ஒத்துழைப்புத் தந்தால் தான் சிங்கப்பூர் போன்று சிறந்த நகரமாகப் படும்.

2011ம் ஆண்டு நான் ஆஸ்திரேலியா சென்ற போது எவ்வாறு குப்பைகளை சேகரிக்கின்றார்கள் என்று கண்டு ஒரு கட்டுரையும் எழுதியுள்ளேன். அங்குள்ள சிட்டி கவுன்சிலில்  பணம் செலுத்தி பச்சை, மஞ்சள், சிகப்பு, நீலம் குப்பை கொட்டும் பிளாஸ்டிக் கொள்கலனை பெற்றுக் கொள்கின்றனர். வீடுகளில் வளர்க்கும் மரம் செடிகளை வெட்டும்போது அதனை பச்சை தொட்டியிலும், மறு சுழற்சிக்கு தேவையான பொருட்களான பிளாஸ்டிக் பொருட்களை மஞ்சள் தொட்டியிலும், தேவைப் படாத குப்பை கூளங்களை சிகப்பு தொட்டியிலும்,  வியாபார நிறுவனங்களில் சேரும் அட்டைப் பெட்டிகள் போன்றவற்றை நீல நிற தொட்டியிலும் போடுவர். அவைகளை ஒரு டிரைவர் இயக்கம் ஹைட்ராலிக்ஸ் வசதி உள்ள வண்டியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேகரிக்கின்றனர். அவ்வாறு சேகரிக்கும் அனைத்துமே மறு சுழற்சி பயன்பாட்டிற்கு செல்கின்றது. குப்பைகளை நடு ரோட்டில் போடுவதால் கழிவு நீர் குழாய்கள் அடைக்கப் பட்டு கொசுக்கள் பெறுக வழி வகுக்கும். அத்துடன் மழை நீர் வடிகாலும் அடைபட்டுப் போகும். ஆகவே தான் ரோடுகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதினை காணலாம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1,47, 613 டன் கழிவுகள் சேருகின்றது. அதில் 25லிருந்து 30 சதவீதம் தான் மறு சுழற்சிக்கு பயன் படுத்தப் படுகிறது. மீதியுள்ளவைகளை நகரங்களின் அருகிலுள்ள வெற்று இடங்களில் கொட்டும்போதும், அதனை எரிக்கும்போதும் சுகாதாரம் கெட்டு, பல்வேறு நோய்களும் அந்தப் பகுதி மக்களை பற்றிக் கொள்கிறது.

கடைகளில் பொருட்களை வாங்கும் போது கடைக்காரர்கள் கொடுக்கும் பிளாஸ்டிக் பைகளை வாங்கி விடுகிறோம். அதற்குப் பதிலாக அட்டைப் பை, துணிப் பை, சாக்குப் பை போன்றவற்றை  ஏன் நாம் எடுத்துச் செல்லக்கூடாது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்குப் பதிலாக ஏன் மெட்டல் பாட்டில்களை பயன் படுத்தக்கூடாது. ஹோட்டல்களில் பிளாஸ்டிக் டம்ளர் கொடுப்பதினை நிறுத்தி கண்ணாடி  உபயோகத்தினை ஏற்படுத்த வேண்டும். முனிசிபல் ஆக்ட் 2001ன் படி உபயோகிப்பவர் குப்பைகளை தரம் பிரித்து வைக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது. அதனை ஒவ்வொரு முனிசிபாலிடியும் சரியாக செயல் படுத்துகிறதா என்று உறுதி செய்ய வேண்டுமென்று 'சகா ஜீரோ வேஸ்ட்'  தலைமை அதிகாரி வில்மா ரோட்ரிக்ஸ் சொல்கிறார்.

 

 பெரிய தொழிற்சாலை, கம்பெனிகள் கடமை:

ஒவ்வொரு பெரிய தொழில் நிறுவனங்களும், கம்பெனிகளும் கார்பன் புகையினை குறைக்க வேண்டிய கடமை உள்ளது என்று ஏரி வாய்வு மற்றும் அதன் பயன் பாடுகள் பற்றிய துறையில் போற்றத்தக்க அறிஞர் ஆர்.ஆர். ராஷ்மி சொல்கிறார். இந்தியாவில் 1000 கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன. அதில் வெறும் 38 நிறுவனங்கள் மட்டும் கார்பனை குறைக்க வழிவகை செய்துள்ளது என்று பார்க்கும் போது ஆச்சரியமாக தெரியவில்லையா? ஆகவே பெரும் நிறுவன பங்குதாரர்கள் அந்த நிறுவனங்கள் கார்பனை கக்குவதை குறைக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

காடுகள் பயன்பாடு:

காடுகள் மனித சமூக, பண்பாடுடன் இணைந்த ஒன்றாகும் என்று IIT கரக்பூர் விஞ்ஞானி டாக்டர் அம்ரிதா சென் கூறுகின்றார். அரசுகளால், நீதி மன்ற உத்தரவாலும் காடுகளை ஒட்டி உள்ள சமுதாய மக்களின் குடியிருப்புகளை அரசு அகற்றி விடுவதால் காடுகளை கண் போன்று காக்கும் மக்களிடமிருந்து பிரித்து விட ஒன்றாக கருதப் படுகிறது. மக்கள் வாழும் இடங்களுக்குப் பதிலாக காடுகளை அழித்து தொழில் நிறுவனங்களும், சுற்றுலா பயண விடுதிகளும் கட்டுவதாலும், அகல பாதைகளுக்கு தேவையான இடங்களை எடுத்துக்கொள்ள மரங்கள், வயல்கள் அழிப்பதாலும் சுத்தமான காற்று சுவாசிக்க மக்களை தடுக்கும் பெரும் முயற்சியாக கருத வேண்டும். அப்படி வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்படுத்தும் தீ காட்டுத்தீயாக பரவுகிறது. கென்யாவினைச் சார்ந்த அரசியல் வாதியும், இயற்கை பாதுகாவலருமான வங்காரி மத்தாய் என்ற பெண் ' கிரீன் பெல்ட் மூவ்மெண்ட் என்ற இயக்கத்தினை ஆரம்பித்து பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களை ஒருங்கிணைத்து சுமார் 2 கோடி மரங்களை நட்டுள்ளார். அதற்காக அவருக்கு 2004ல் உயர்ந்த நோபல் பரிசு வழங்கப் பட்டது. ஒரு தனிப் பட்ட நபரே ஒரு இயக்கத்தினை ஆரம்பித்து 2 கோடி மரங்களை நடும்போது ஏன் அரசும், மக்களும் இணைந்து அதுபோன்ற இயக்கம் மூலம் மரங்களை நடக் கூடாது.

கடலினை காப்போம்:

உலகின் 70 சதவீதம் கடலால் ஆனது. கடலில் கலக்கும் கழிவு ஆயில், வீசப்படுகின்ற பிளாஸ்டிக் உபயோகப் பொருட்கள், குப்பை கூளங்களால் மாசு அடைந்து மீன் வளங்கள் மற்றும் கடல் வாழ் விலங்கினங்கள் பாதிக்கப் படுகின்றன மட்டுமல்லாது கடலின் மேற்பரப்பிலிருந்து வெளியாகும் குளிர்ந்த காற்று மழை வளத்தினை பொழிய செய்யாது செய்து விடும் என்று 'பயோ-ஓசினோக்ராபி அல்ப்பிரேட் வெபின்னேர் இன்ஸ்டிடியூட்' போராசிரியர் விக்டர் சாஜித் சொல்கிறார்.

கார்பன் என்ற நச்சு புகையினை குறைக்க கீழ்கண்ட வழிளை கையாளலாம்:

 

1) வெப்ப மண்டல நாடுகளான பிரேசில், இந்தோனேசியா, இந்தியா, மடகாஸ்கர் போன்ற நாடுகளில் மரம் வளர்ப்பு திட்டத்தினை பொற்கால அடிப்படையில் அரசும் மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

2) போக்குவரத்தால் 80 சதவீத மாசு ஏற்படுகிறது. ஆகவே சைக்கிளிங், எலெக்ட்ரிக் வாகனங்களை உபயோகிக்க வேண்டும்.

3) 100 பெரிய கம்பெனிகள் 70 சதவீத கிரீன் ஹௌவுஸ்(Green House) கார்பன் வெளிப்படுத்துகிறது. அதனை கட்டுக்கள் வைக்க பங்குதாரர்கள் முயல வேண்டும்.

4) வீடுகள், அலுவலகங்கள் எப்போதும் ஏ.சி பயன் பாட்டிலேயே இல்லாமல் அவைகளில் காற்றோட்ட வசதி செய்து ஜன்னல், கதவுகள் அமைக்க வேண்டும். காரணம் மின்சாரம் தயாரிக்க அதிகமான கார்பன் தேவைப் படுவதால் அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

5)  மரக்கரி, நிலக்கரி பயன் பாட்டினை அதிகமாக குறைக்க வேண்டும்.

கருத்துக்கு: mdaliips@yahoo.com

 

Friday, 16 July 2021

கப்பல் விடுவோம், நல் வாணிபம் செய்வோம்!


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

முஸ்லிம்களின் பல்வேறு துறைகளில் பிரதிநித்துவம், அரசியல் பங்கீடு, இட ஒதுக்கீடு சம்பந்தமாக ஏராளமான ஆய்வுகள் வந்துள்ளன. ஒரு நகரத்தில் மதக் கலவரம் என்றால் முதலில் பாதிக்கப் படுவது பெரும், சிறு வியாபாரிகள் தானே. உதாரணத்திற்கு 1992-1993 மும்பையில் நடந்த கலவரத்தி லும், கோவையில் நடந்த 1998 கலவரத்தில் பாதிக்கப் பட்டது பெரும் கிளாத் ஸ்டோரான 'சோபா' போன்றவையும்,  2002ல் குஜராத்தில் கோத்ரா ரயில் நிலைய சம்பவத்திற்கு பின்பு குஜராத்தில் நடந்த சம்பவமும், 2013ல் உ.பியில் முஸாபிர் நகரில் நடந்த கலவரத்திலும் பாதிக்கப் பட்டது பெரிய மற்றும், சிறிய வியாபாரிகளும் தானே என்பதினை உங்களுக்குத் தெரியும். அந்த வியாபாரிகள், தொழிலதிபர்கள் நிலைகள் பற்றிய ஒரு ஆய்வினை குஜராத் அஹமதாபாத் பல்கலைக் கழகமும், விப்ரோ தொழில் நுட்ப கழக சேர்மன் ஆஜிம் பிரேம்ஜியும் இணைந்து  மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அறிக்கையின் சாராம்சத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

2019ம் ஆண்டு சர்வேபடி இந்தியாவில் முஸ்லிம் ஜனத்தொகை 19.5  கோடியாகும். அது மொத்த ஜனத்தொகையில் 14.2 சதவீதம். 2001-2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி முஸ்லிம்கள் 24.6 இருந்தது. முஸ்லிம்கள் எண்ணிக்கை சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகளில் 59.1 சதவீதம் தான். மிகவும் வேகமாக குறைந்து விட்டது. முஸ்லிம்கள் நிலை பற்றி ஆராய நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. அதன் அறிக்கையில் சராசரி இந்திய மக்களின் படிப்பறிவு 64.8 சதவீதமாகும், ஆனால் முஸ்லிம்கள் படிப்பறிவு 59.1 சதவீதம் தான். நீதிபதி சச்சார் கொடுத்த அறிக்கையினைத் தொடர்ந்து பேராசிரியர் அமிதாப் குண்டு அதனை அமல் படுத்த நியமிக்கப் பட்டு அவர் 4.12.2014ல் ஒரு அறிக்கையினை சமர்ப்பித்தார். அதன் படி  பள்ளிப்படிப்பினை பாதியிலேயே நிற்பாட்டிய முஸ்லிம் மாணவர் மற்ற மத மாணவர்களைவிட அதிகம். அதுவும் பெண்பிள்ளைகள் பாதியிலேயே படிப்பினை நிறுத்துவது மிக

அதிகமாம். பள்ளியிலேயே சேராத முஸ்லிம் சிறுவர்கள் 17 சதவீதமும், சிறுமியர் 22 சதவீதமாக உள்ளது உங்களுக்கு அதிர்ச்சியாக தெரியவில்லையா?

            இந்திய தொழிலாளர்(LEP) வேலை வாய்ப்பு மக்கள் தொகையில் ஹிந்துக்கள், கிருத்துவர், சீக்கியர் அதிகமானோர் உள்ளனர். ஆனால் முஸ்லிம்கள் 31 சதவீதம் தான். 2017-18 ஆய்வின் படி முஸ்லிம்கள் கிராமத்தில் வேலையில்லாமல் இருப்போர் 6.5 சதவீதம், ஆனால் நகரங்களில் 8.5 சதவீதம். அது மற்ற சமுதாயத்தினரை விட அதிகமாகும். சுய வேளையில் ஈடுபடுவோர் நகரங்களில் அதிகமாக உள்ளனர்.மற்ற மத பெண்கள் வீட்டுக்குள்ளே வேலை செய்வது 51 சதவீதமாகும், ஆனால் முஸ்லிம் பெண்கள் 70 சதவீதம் வீட்டுக்குள்ளேயே வேலை செய்கிறார்கள். முஸ்லிம்கள் சுய வேலைகளை செய்வது மற்ற சமுதாய தொழிலதிபர்கள் அவர்களை புறக்கணிப்பது தானாம். முஸ்லிம்கள் தொழில் தொடங்க வங்கிகளை நாடாததிற்கு காரணம், வங்கிகளின் வட்டி முறைகள் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதாலேயே! ஆனால் முஸ்லிம்களுக்கு உதவ ‘இஸ்லாமிய டெவெலப்மெண்ட் பேங்க்’ இருந்த போதிலும், அதனைப் பற்றிய விழிப்புணர்ச்சி மிக, மிக குறைவே எனலாம். மற்றும் அதுபோன்ற வங்கிகள் ஒரு சில இடங்களில் இருப்பதும் ஒரு காரணம். தற்போது பல முகல்லாக்களில் ‘பைத்துல் மால்’ என்ற அமைப்புகள் உதவி செய்ய ஆரம்பித்துள்ளது ஒரு நல்ல வரவேற்பாகும்.

            2014ல் மத்தியில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் 90 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கூறப் படுகிறது. அதுபோன்ற சம்பவங்களில் 91பேர்கள் இறந்துள்ளதாகவும், 579பேர்கள் காயம் அடைந்ததாகவும் தெரிகிறது. 2019 ஜூன் மாதத்திற்குப் பின்பு வந்த அரசின் அதிர்ச்சி தரும் நடவடிக்கைகளான முத்தலாக் சட்டம், காஸ்மீரின் தனி உரிமையான சட்டம் 370 மற்றும் 35A ரத்து செய்தது, ஜம்மு-காஸ்மீரை இரண்டு பகுதிகளாக பிரித்து காஷ்மீர்-லடாக் என்று மாநில அந்தஸ்தை    எடுத்துவிட்டு பாண்டிச்சேரி போன்ற ஒன்றிய பகுதியாக்கியது, பாபரி மஸ்ஜித் இடித்தவர்கள், 'தி கிரேட் எஸ்கேப்' என்று ஆங்கில படத்தில் வருவது போல தப்பித்தது, ராமர் கோவில் அந்த இடத்தில் கட்டுவதற்கு சாதகமான உத்தரவு பெற்றது, குடியுரிமை சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவை முஸ்லிம்களுக்கு ஒரு பெரும் இடியாக அமைந்தது என்பது யாரும் மறுக்க முடியாது.

            முஸ்லிம்கள் ஆடைகள் தயாரித்தல், உணவு பதப் படுத்துதல், ஹோட்டல், பேக்கரி, கட்டிடம் கட்டுதல், சாப்ட் வேர் கம்பனிகள், ஆர்ட்ஸ் மற்றும் கிராப்ட்ஸ், நகை, கைபேசி, மளிகை, கறி, மீன்  ஏற்றுமதி-விற்பனை, பிளாஸ்டிக் மற்றும் மசாலா பொருட்கள் தயாரித்தல், விற்பனை, இன்ஜினியரிங், கேன்வாஸ் மற்றும் தோல் தயாரித்தல்-ஏற்றுமதி, துணிக்கடை, நெய்தல், பாய் முடைதல் போன்ற 20 தொழில்களில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். முஸ்லிம் தொழில் அதிபர்களுக்கு மூலப் பொருட்கள் கிடைப்பதிலும், தொழில் நுட்ப தொடர்பு ஏற்படுத்துவதிலும் அரசு புறக்கணிப்பும், மற்ற சமூக தொழிலதிபர்கள் ஆதரவு கிடைப்பதிலும் தொய்வுகள் உள்ளதாம். தொழில்கள் தொடங்குவதற்கு குடும்பத்தில் உள்ளவர்களும், பொருட்களை வாங்குவோர்களிடமும், பண உதவி பெறுவதிலும், தயக்கங்களும் சில சந்தேகங்களும் உள்ளதாம். வாடிக்கைகார்களுக்கு முதலில் நம்பிக்கையூட்ட மிக பெரிய சிரமம் இருக்கின்றது. முஸ்லிம் தொழிலதிபர்களின் பொருட்களின் தரங்களில் சந்தேகமும் உள்ளதாம். ஒரு தடவை நம்பிக்கை ஏற்படுத்தினால் மறுபடியும் எந்த சிரமும் இல்லையாம். தொழிலாளர் கிடைக்காத பட்சத்தில் 'network' மார்க்கெட்டின் மூலம் 25 முதல் 30 சதவீதம் வேலைப் பளுவினை பகிர்ந்து கொள்ள முடிகிறது.

பொருளாதார சவால்கள்: பல தொழிலதிபர்கள் தங்களுக்கு கடன் கொடுக்க வங்கிகள் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் கூறுகின்றனர். பொருட்களை வாங்கும் நபர்களை பண உதவிக்கு அணுகினால் முதலில் நீங்கள் தொழில் ஆரம்பிங்கள் பிறகு பார்க்கலாம் என்றும் கூறப் படுகிறதாம். வெளிநாட்டில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டினால் அவர்களை வழிநடத்த பல தொழிலதிபர்கள் தயக்கம் காட்டுகின்றனராம். காரணம் எங்கே தங்களுக்கு போட்டியாக தொழிலை ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயமாம். தொழில்களில் அனுபவம் நிறைந்த ஹிந்துக்கள், ஜெயின், பார்சி, சீக்கிய , கிருத்துவமக்கள் தங்களுக்கு பொருட்களை கொடுத்தும், வங்கிகளின் கிரிடிட் துணையுடன் வந்தால் தான் தருவோம் என்கின்றனர். ஆனால் முஸ்லிம் வியாபாரிகளுடன் வியாபாரம் செய்யும்போது அதுபோன்ற சிரமம் இருப்பதில்லையாம்.கொரானா ஊரடங்கால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. வெளிநாட்டவர் தொழில் போட்டி, மற்றும் GST போன்ற வரி விதிப்புகள் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. Demonetisation போன்ற நேரங்களில் முஸ்லிம் வியாபாரிகள் தங்களுடைய பணத்தினை மாற்றுவதற்கு நீண்ட வரிசையில் நின்று காலத்தினையும், நேரத்தினையும் இழந்ததாக கூறுகின்றனர். முஸ்லிம் வியாபாரிகளிடம் பணத்தினை குறித்த நேரத்தில் கொடுப்பதில்லை, கொடுக்கவேண்டியதினை கேட்டால் மிகவும் கடுமையாக நடந்து கொள்கின்றனராம்.  சில வியாபாரிகள் முஸ்லிம் பொருட்கள் தரமில்லை என்று வேண்டுமென்றே புறக்கணிக்கின்றனராம். முஸ்லிம் அல்லாத தங்கள் சமூக உறவினர்களிடமும் முஸ்லிம் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கினால் அவர்களை பகிஸ்கரிக்கின்ற்னராம்.

அரசின் மாற்றாந்தாய் மனப்பாங்கு: முஸ்லிம்கள் நடத்தும் கறி, தோல் சம்பந்தமான தொழில்களை மூட முயற்சி மேற்கொண்டும் வருகின்றனர். இந்திய மக்கள் பெரும்பாலோர் அசைவு உணவு உண்பவராக இருந்து, ஹிந்துத்துவா துவேசம் உள்ளவர்கள் மாட்டுக் கறி சாப்பிடுவதையும், தோலால் உற்பத்தி செய்யப் படும் பொருட்களையும் புறக்கணிக்கின்றனர். கறி ஏற்றுமதிக்கான லைசென்ஸ் வழங்குவதிலும், ஏற்கனவே உள்ள லைசென்ஸ்ஸை புதுப்பித்தலும் தயக்கம் காட்டுகின்றனர். ஆகவே 2014ன் சர்வேபடி 50 சதவீத தொழில்கள் சரிவடைந்துள்ளன.  கோவில் திருவிழாக் காலங்களில் புனித ஆற்றில் தோல், டையிங் போன்ற தொழில்களால் ஆறுகள் புனித தன்மை இழப்பதாகக் கூறி அரசே அந்த ஆலைகளை மூடச் செய்கின்றன. ஹிந்துத்துவா வலது சாரி அமைப்பினர் டெல்லியில் தப்லீக் ஜமாத்தால் தான் கொரானா நோய் பரவியது என்றும், ஆகவே முஸ்லிம்கள் நடத்தும் பழ, காய்கறி கடைகளில் பொருட்களை வாங்காதீர் என்றும் பரப்புகின்றனராம்.

வலதுசாரி வன்முறை நடவடிக்கைகள் 2014ம் ஆண்டிற்கு பின்பு முஸ்லிம்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாகவும், பசுமாடுகளை அறுப்பதிற்காக கடத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும், பொய்யான குற்றச் சாட்டுகள் சொல்லி தாக்கப் படுவதும், அவர்களுக்குப் பயந்து வீடுகளை துறந்து அகதிகளாக வேறு இடத்திற்கு இடம் பெயர்வதும் வாடிக்கையாகிவிட்டது. சமீப காலங்களில். தொரு வியாபாரிகளைக் கூட தங்கள் பகுதியில் வியாபாரம் செய்யக் கூடாது என்றதால், பலர் ஆட்டோக்கள் ஓட்டி காலந்தள்ளுகின்றனர்.

            சில பெரும் தொழிலதிபர்கள் தங்கள் தொழில்களை இஸ்லாமிய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தொடங்கினால் தங்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சிலர் தாங்கள் முன்பு செய்த தொழிலனை விட்டு புதுத் தொழில்களை தொடங்க முயல்கின்றனர். எல்லாவிதமான வெறுப்புகள் தங்கள் மீது எறியப் பட்டாலும் முஸ்லிம் வியாபாரிகள் மட்டும் தங்களுடைய மார்க்க கொள்கை, கோட்பாடுகளை விட்டுக் கொடுப்பதில்லையாம். சீனாவில் முஸ்லிம் வியாபாரிகள் பெருகக் காரணம் அவர்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் தொழில் செய்திறது தானாம்.

            பொருளாதார முதலீடுகள்: பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களுடைய சுய சேமிப்பை வைத்தே தொழில் தொடங்குகின்றனராம். சிலர் அரசு உதவி கொண்டும், சிலர் கூட்டுறவு சங்கங்கள் மூலமும் தொழில் தொடங்குகின்றனராம். முஸ்லிம் வியாபாரிகள் சரியான கணக்கு, வழக்கு வைத்துக் கொள்ளாததால் சிலர் அபராதம் கட்ட நேருகின்றது என்று சில ஆடிட்டர்கள் சொல்லுகின்றார்கள். தங்கள் மூதாதையர் தொழில்களை தொடர்ந்து நடத்தும் சிலர் தற்போதைய அரசு வரிவிதிப்பு தெரியவில்லையாம். ஆகவே அவர்களுக்கு பொருளாதார, நிதி,அறிவு மற்றும் விழுப்புணர்ச்சி தேவையாம். முஸ்லிம் முதலீட்டாளர்கள் போடுகின்ற பங்குகளை அமானிதம் என்று கண்ணைப் போல பாதுகாக்கின்றனராம். கடந்த பத்து ஆண்டுகளாக முஸ்லிம் தொழில் அதிபர்களிடையே இஸ்லாமிக் பைனான்ஸ், ஷரியத் பைனான்ஸ், ஹலால் செர்டிபிகேஷன் போன்ற விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதாம்.

            சமூக ஊடகங்களின் உதவி: முஸ்லிம் வியாபாரிகள் தங்கள் உற்பத்தியினை விளம்பரப் படுத்த சமூக ஊடகங்களை நாடுகின்றனர். பல புது என்ஜினீரியங் பட்டதாரிகள் புதுத்தொழில்கள் தொடங்க ‘யு டூப்’ போன்ற ஊடகங்களை தேடி கண்டு பிடித்து தொடங்குகின்றனர். சிலர் தொழில் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். சிலர் 'இன்ஸ்டாகிராம்' மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். கோஜா, போரா முஸ்லிம் சமூதாய மக்கள் தங்கள் சமூதாய மக்கள் தொழில் தொடங்க உதவி செய்கின்றனர். அந்த சமுதாய பெண்களும் தொழில் வியாபாரம், பொருளாதாரம் ஆகிவைகளில் ஆண்களுக்கு பெரும் உதவியாக உள்ளனர். அதற்கு காரணம் அவர்கள் பொருளாதார படிப்பறிவும் உள்ளது தானாம். அவர்களுக்கு RIFA chambar of commerce and Industry மற்றும் MIA ஆகியவை பெண்களுக்கு போதிய பயிற்சி அளிக்கின்றனராம்.

            இந்திய முஸ்லிம் பெரிய தொழிலதிபர்கள் சுமார் 72 கம்பனிகள் நடத்துகின்றனர். அதில் முக்கியமானவை, CIPLA, HIMALAYA, மெட்ரோ ஷூஸ், WIPRO, HAMRAD, WOCKHARDT முக்கியமாதனாகும். அந்த 72 நிறுவனங்களின் வருட வருமானம் சுமார் 20 லட்சம் கோடியாகும் என்றால் நீங்கள் நம்புவீர்களா.

            நான் எதற்கு மேலே குறிப்பிட்ட விவரங்களை சொல்கின்றேனென்றால் தொழில் தொடங்க பல தடைகள் இருக்கும், அதையெல்லாம் உடைத்தெறிந்து தொழில்கள் நடத்தினால் நிச்சயமாக நீங்கள் பெரும் பணக்காரர் ஆவீர்.

2) எப்படி ஆம் ஆத்மி பார்ட்டி டெல்லியில் பள்ளி பாடப் புத்தகங்களில் தொழில் சம்பந்தமான விபரங்களை சேர்த்துள்ளதோ அதேபோன்று முஸ்லிம் கல்வி நிறுவனங்களிலும் சேர்க்க வேண்டும்.

3) புதுவிதமான தொழில் தொடங்க போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியும்.

4) தேசிய தொழில் கருத்தரங்குகளில் மாணவ, மாணவியரை கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். தொழில் நுட்ப மாணவர் எப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழில் முனைவோர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை பெறுவது என்று போதிக்க வேண்டும்.

5) ஒவ்வொருவரும் தங்களது 20 சதவீத ஜக்காத்தினை தங்களுடைய முகல்லா மூலம் தேவையானவர்களுக்கு தொழில் தொடங்க கொடுக்க வேண்டும்.

6) மேலே குறிப்பிட்ட 72 தொழில் அதிபர்களும் முஸ்லிம் தொழில் முனைவோருக்கு பயிற்சியளிக்க நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும்.

7) NGO அமைப்பினர் எந்தந்த தொழில்கள் போலியானவை, எந்தெந்த தொழில் தொடங்கினால் நஷ்டம் வராது, தொழில் தொடங்க யார், யாரை அணுக வேண்டும் என்று பயிற்சி அளிக்க வேண்டும்.

8) முஸ்லிம் தொழிலதிபர்கள் தங்களுக்கு வேண்டிய ஆடிட்டர்களை அணுகி எப்படி கணக்கு, வழக்குகளை பராமரிக்க வேண்டும் என்று பயிற்சி எடுக்க வேண்டும்.

9) மத வெறியில்லாத மற்ற சமுதாய வியாபாரிகளை அணுகி ஆலோசனை பெறுவதினை தவிர்க்க கூடாது.

10) அரசியல் தலைவர்கள் முஸ்லிம்கள் பயன்பெற அமைக்கப் பட்ட நீதிபதி சச்சார் மற்றும் குண்டு கமிட்டிகளை அமல் படுத்தி அதனை கண்காணிக்க ஒரு தனி அமைப்பினை மத்தியிலும், மாநிலத்திலும் செயல் படுத்த வலியுறுத்த வேண்டும்  என்றால் சரிதானே சகோதரர்களே!

Comments: mdaliips@yahoo.com

Wednesday, 23 June 2021

ஒரு கோப்பை மது மானிடத்தை ஆட்டி வைக்கும்!

 

 

  (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

கொரானா முதல் அலையில் மூடப் பட்டிருந்த அரசு மதுக் கடைகள் கொரானா இரண்டாம் அலையில் 14.7.2021 அன்று திறந்து விடப் பட்டுள்ளதனைத் தொடர்ந்து நடந்த குற்றங்கள், கொலைகள், குடும்பச் சண்டைகள், குடிகாரர்களின் குதுகூலங்கள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் ஏதோ பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் கிடைத்ததுபோல இருந்ததினை கண்டு பொது மக்களை முகம் சுளிக்கச் செய்து விட்டதினால்  பல இடங்களில் மதுக் கடைகளுக்கு எதிராக குரல்கள் எழுப்பதினை தொடர்ந்து  தமிழகத்தின் மதுவிலக்கு கொள்கையினை பற்றி ஆராயும் போது  வந்த தகவலினை உங்களுடன் பகிர்ந்து கொள்வது சாலச் சிறந்ததாக கருதுகிறேன்.

இந்தியாவில் ஆண்ட குறுநில மன்னர்கள் பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கத்திற்கு சில மன்னர்கள் வீரக் குரல் எழுப்பி போரிட்டாலும், சிலர் அந்நிய மது, மங்கைகளுக்கு மயங்கி அடிமையாகி அவர்களுக்கு தங்கள் மண்ணையும் இழக்க நேரிட்டதினை சரித்திர வரலாறுகள் சொல்லுகின்றன. எப்படி கடலோர மக்கள் உப்பு எடுப்பதினை அரசுடைமையாக்க Salt Act கொண்டு பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்ததோ அதேபோன்று மக்கள் தன்னிச்சையாக மது தயாரித்து விற்க Madras Akbari Act, 1886 ல் ஒரு சட்டத்தினை கொண்டு வந்தார்கள்.

சங்க இலக்கியம், மற்றும் ரிக் வேதம் போன்றவற்றில் சோம பானம் மக்களிடையே புழக்கத்தில் இருந்ததாக கூறப் படுகிறது. 1913ம் ஆண்டு மாகாத்மா காந்தி இந்தியாவிற்கு வந்ததும் பிரிட்டிஷ் அரசில் மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதனை கண்டு மனம் வெதும்பி மக்கள் மதுவினால் மயங்கி கிடப்பதையும், ஏழ்மையில் உழல்வதினையும் கண்டு 'Young India' என்ற பத்திரிக்கையில் 1913 முதல் 1932 வரை பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அதனை துணை ஆசிரியராக இருந்த 'Badrul Hasan' தொகுத்து 'the drink and drug evil in India' ஒரு புத்தகமாக வெளியிட்டார். அந்த புத்தகத்தில் ஹசன் அவர்கள் குடியினால் குடும்பத்தகராறு, குடும்பம் புறக்கணிப்பு, சமுதாயத்திற்கான கடமை புறக்கணிப்பு, வேலையின்ன்மை, பொருளாதார குற்றங்கள், கொலைகள் செய்ய வழிவகுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கு பழக்கப் பட்ட மது வகைகளாக கள்ளு, சாராயம், சுண்டிச்சோறு, மதுக் கசாயம், எத்தனால், வார்னிஷ், போன்றவைகள் ஆகும்.

1) கள்: விவசாய தொழிலார்கள் பனை, தென்னை மரங்களில் உள்ள குறுத்துக்களை சீவி பானையினை கட்டி அதில் வடியும் சாறு பானமாகும். பானையின் உள் புறத்தில் சுண்ணாம்பு தடவினால் அது பதநீராகும், சுண்ணாம்பு தடவாது விட்டு விட்டால் அது கள்ளாகும். சாதாரணமாக உடல் அலுப்பினைப் போக்க விவசாயத் தொழிலார்கள்.சுமார் ஒரு லிட்டர் கள்ளினை ஒருவர் குடித்து விடுவார். அதற்கு மேல் குடித்தால் போதை வந்து விடும். அந்த பானைக்குள் சில சமயம் தேள் கூட செத்து மிதக்கும்.

2) சாராயம்: ஒரு மொடா பானையில் நெல், வாழைப் பழத்தோல், கரு வேலம் பட்டை, கழிவு சக்கரை, ஹைட்ரொ குளோரைடு, அல்லது படிகாரம் போட்டு பூமிக்குள் புதைத்து அல்லது தோட்டம், வீடுகளில் வைத்து விட்டு மூன்று நாளைக்குப் பின்பு அதன் ஊறலை  எடுத்து பானையில் வைத்து சூடு செய்யும் போது நீராவியாகி வடிகிற தண்ணீர் தான் சாராயமாகும். வயல்கள், காடு, மலைகளில் வைக்கின்ற ஊறல் பானைகளில் சில சமையம் விஷ பாம்பு, தேள், பூரான் கூட புகுந்து செத்து மிதக்கும். காடு, மலைகளில் வைக்கின்ற ஊறல் பானைகளில்  உள்ள ஊறல்களை யானை கூட்டங்கள் கூட குடித்து விட்டு தள்ளாடும்.

3) சுண்டிச்சோறு: கடலோர மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் போதைப் பொருள் சுண்டிச்சோறு ஆகும். கடலில் பயணம் செய்யும் சிலருக்கு தலை சுற்றும், வாந்தி வரும். காரணம் கடலின் உப்புக் காற்று சுவாசித்தால், கடல் அலைகளில் படகு ஆடும்போதும்  அதுபோன்ற ஒரு மயக்க நிலை ஏற்படும். மீனவர்கள் சிலர் படகுகளில் ஒரு நாள் மீன் பிடிக்கச் செல்வர், சிலர் பல நாட்கள் தங்கி மீன் பிடித்து கடற்கரை சேருவர். அதுபோன்ற தங்கல் நிலையில் தொழில் செய்யும் மீனவர்கள் தங்களுக்கு சத்துத்தரும் உணவாக சுண்டிச்சோறும், வெங்காயமும், பச்சை மிளகாயும், கருவாட்டுக் குழம்பும் பயன் படுத்துவர். சுண்டிச்சோறு என்பது சோற்றினை வடித்து அதில் படிகார வில்லைகளை பானையில் போட்டு கடல் மணலில் புதைத்து விடுவர்.  மூன்று நாட்கள் சென்று அது கள்ளுப்போன்று பொங்கிய நீராகாதாரத்திடன் சேர்ந்த பொருளாக மாறும். அதனை ஒரு தூக்கு சட்டியில் ஊற்றி கடலுக்கு ‘தங்கல்’ தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஈடுபடுவர். அதனை கரையோர மக்களில் சிலர் சாப்பிட்டு போதையில் சிலுமிசத்தில் ஈடுபடுவர்.

3) மதுக் கசாயம்: இது ஒரு ஆயுர்வேத தயாரிப்பாகும். இதனை உடல் மெலிந்தவர்களுக்கும், களைப்பு, ரத்த சோகை, ரத்தப் போக்கு உள்ளவர்களுக்கும் ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனை படி வழங்குவர். ஆனால் அதனையே  சிலர் ஹைட்ரொ குளோரைடு கலந்து போதைக்காக தயாரித்து மதுப் பிரியர்களுக்கு வழங்குவர்.

4) இந்திய அந்நிய மது: பிராண்டி, விஸ்கி, ஒயின், ரம், போன்றவை பார்லி, கோதுமை, கரும்பு சாறு, தானியம், திராட்சை பழ சாறு போன்றவைகளால் ஸ்பிரிட் என்ற ஆல்கஹால் மூலம் தயாரிக்கப் படுவது ஆகும்.

5) ஊட்டி மலைப் பகுதிகளில் ஸ்பிரிட்டினை எலுமிச்சை பழத்தினை பிழிந்து விட்டு கலக்கி குடிப்பர். அது அங்கே 'கலக்கல்' என்று அழைக்கப் படும். அதே நேரத்தில் கொடைக்கானல் பகுதியில் ஒரு வித காளானில் தயாரிக்கப் படும் மது 'புல்லட்' என்று அழைக்கின்றார்கள்.

6) எத்தனால் என்பது ஒரு கலர் இல்லாத திரவமாகும். அதனைக் கொண்டு மது தயாரிக்கின்றார்கள். சிலர் அதனை தண்ணீரில் கலந்து குடித்தால் கண் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. சில சமயம் வாந்தி பேதி ஏற்பட்டு மரணமும் ஏற்படுகின்றது.

சமூகத்தில் குடியால் வந்த பாதிப்பு: குடிப் பழக்கம் இந்தியாவில்  இந்தியாவில் 96 நிமிடத்தில் ஒரு சாவினை சந்திக்கின்றது. 2013 தேசிய குற்றப் பதிவேட்டில் படி ஒரு நாளைக்கு குடியினால் 15 பேர்கள் இறக்கின்றார்கள். உலக சுகாதார அமைப்பின் கணக்கின் படி இந்தியாவில் 2003-2005ல் 1.6லிட்டர் மதுவாக இருந்தது 2010-2012ல் 38 சதவீதம் அதிகரித்து 2.2 லிட்டர் மதுவாக உயர்ந்துள்ளது. உலக அளவில் குடிகாரர்கள் மக்கள் தொகையில் 16 சதவீதமாக இருந்த போது இந்தியாவில் மட்டும் அதிகமாக 11 சதவீத குடிகாரர்கள் உள்ளனர். ஒரு நாட்டின் 'குடி'க்கு மதிமயங்கும்  மக்கள் தொகை அதிகமானால் அந்த நாட்டின் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, கல்வியறிவு பின்னோக்கி சென்று விடும். மகாத்மா காந்தி அடிகள், 'ஆயிரம் கள்ளுக்கடைகளை மூடியாவது ஒரு பள்ளிக்கூடத்தினை திறக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

எப்போது மது விலக்கு அமல் படுத்தப் படுகிறதோ அப்போதெல்லாம் கள்ளச்சாராயம் கிராமங்களில் குடிசை தொழிலாகும். தமிழ் நாட்டினை சுற்றி ஒரு ஆட்டுக்குட்டியினை வேட்டையாட எவ்வாறு நரிகள் வலம் வருகின்றதோ அதுபோன்று பக்கத்து மாநிலங்களான பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்றவைலிருந்து கள்ளு, சாராயம், இந்திய அந்நிய மது தமிழ் நாட்டுக்குள் கடத்தி வரப்படும். அதுபோன்ற சமயங்களில் தமிழ்நாட்டின் மதுவிலக்கு கொள்கை தோற்கடிக்கப் பட்டு கடத்தல் பேர்வழிகளும், கள்ளச்சாராய வியாபாரிகளும் தான் லாபம் பெறுவார்.

மது கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததை குடித்து பலர் சாவதினை பத்திரிக்கை வாயிலாக காணலாம். இந்தியாவில் கள்ள மது குடித்து இறந்தவர் பட்டியலில் மஹாராஷ்டிராவும், அதனைத்தொடர்ந்து மத்திய பிரதேசமும், தமிழ்நாடும் உள்ளதாக இந்திய குற்றப்பதிவேடு சொல்கிறது. இந்தியாவில் விஷ சாராயத்திற்கு ஒவ்வொரு நாளும் 5 பேர் பலியாகுகிறார்கள் என்றும் பதிவேடு கூறுகின்றது. 2015ல் மும்பை மேல்வாணி பகுதியில் விஷ சாராயத்திற்கு 100 பேருக்குமேல் பலியானதாக சொல்லப் படுகின்றது. சாராயத்தில் hydro chloride கலப்பதாலும், மற்றும் ஸ்பிரிட் போன்றவை கலப்பாதால்  பலி ஏற்படுகின்றதினை Tamilnadu Chloral Hydrate Rules 1984, Spirit Rules 1987, Rectified ஸ்பிரிட் ரூல்ஸ் 2000 போன்றவை கொண்டு வரப் பட்டன. தமிழ்நாட்டில் 1975-76, 1988-1990 ம் ஆண்டுகளில் கள்ளச்சாராய பலி அதிகமானதாக கூறப் படுகின்றது. கள்ளச் சாராய பலிகளை தடுக்க தமிழக அரசு The Bootleggers Act, 1982 வினை 12.3.1982ல் சட்டமாக்கியது. அதன் படி யார் விஷ சாராயத்தினை அல்லது மதுவினை தயாரித்து, மட்டும் கடத்துகின்றார்களோ அவர்களை விசாரணை இன்றி ஒரு வருடம் குண்டர் சட்டம் போல சிறையில் வைக்க சட்டம் இயற்றப் பட்டது. ஆனால் அப்படி இருந்தும் கள்ளச் சாராயம் கட்டுக்குள் வரவில்லை. ஆகவே அரசே தனியாருக்கு ஏலத்தின் மூலம் பாட்டிலில் சாராயம் விற்க அனுமதி அளித்தது. அதற்கு தேவையான சாராயத்தினை தனியார் Blending units மூலம் வழங்கப் பட்டது. ஏலத்தில் எடுத்த சாராயக் கடைகள் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை gist என்ற வரியும், ஒவ்வொரு பாட்டிலுக்கும் excise duty யும் விதிக்கப் பட்டது. ஆனால் என்ன நடந்தது. சில பணமுதலைகள் மொத்தமாக மாவட்டங்களில் ஏலம் எடுத்து எந்த டுட்டியும் காட்டியதில்லை. மாறாக அரசியல் புள்ளிகளை கவனித்ததால் அவர்கள் இன்று பெரிய மெடிக்கல் காலேஜ், மருத்துவமனை, கல்லூரிகள், தொழிற்சாலை அதிபர்கள் என்று வலம் வருகின்றனர் என்பது உண்மையே! தமிழ்நாட்டில் விஷ சாராயம் சாவுகளை தடுக்கவும், மது விலக்கை மறுபடியும் அமல் நடத்தவேண்டுமென்று 59 வயதான காந்திய வாதி சசிபெருமாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் செல் போன் கோபுரத்தில் 31.7.2015ல் போராட்டம் நடத்தி தீயில் கருகி செத்ததினை இந்திய மக்கள் அனைவரும் கண்டு அதிர்ந்தனர்.

மக்கள் அதிகார அமைப்பு பி.பி.சி தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பெண்களுக்கு எதிரான குற்றம், கொலை, கொள்ளை, குடிகாரர்களால் அதிகமாகிவிட்டதால் தமிழ் நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் விதவையாகி உள்ளனர் என்று கூறியிருக்கின்றனர். இதில் என்ன அதிசயம் என்றால் மது விலக்கினால் பல குற்ற, கொலை, சாவுகள், உடல் உபாதை சம்பவங்கள் அதிகமானாலும், உலக சுகாதார அமைப்போ அல்லது பல விஞ்ஞானிகளோ மது விலக்கு கொள்கையினை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் மது குடிப்பது ஒரு சமுதாயம் சார்ந்த பிரச்சனையாக கருத்தில் கொண்டுள்ளது. அரசின் மாறி , மாறி எடுத்த மதுக் கொள்கையினால் இதுவரை நாம் ஐந்தில் இருவரை குடிகாரர்களாக்கி விட்டோம். சாவு, மண விழாக்கள் என்றால் மது ஆட்டம் இல்லாமல் இருந்தது உண்டா?

அது சரி வேறு மதுவினை ஒழிப்பது என்று கேட்பீர்கள். மக்களிடம் மதுவின் கொடுமையினை பற்றி எடுத்தியம்ப விளம்பர படங்கள், மக்கள் இயக்கம், சுவரொட்டிகள், சினிமா இடைவெளியில் மதுவின் கொடுமை பற்றி டாக்குமெண்டரி ஆகியவை காட்டப் படவேண்டும். மாணவர்கள், சுயநிதிக் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து அரசு அதற்கு நிதிகள் அளித்து  ஊக்கம் கொடுக்க வேண்டும்.

2000ம் ஆண்டு விழுப்பரம் சரகத்தில் வன்னியர்-தலித் சண்டைகள் கொழுந்து விட்டு எரிந்தபோது டி.ஐ.ஜி யாக பதவியேற்றேன்.. ஜாதி சண்டைகள் எதனால் வருகின்றது என்று ஆராயும் போது கிராமங்களில் கரும்பு, முந்திரி தோட்டங்களில் சாராயம் ஊறல் போட்டு, அதனை காய்ச்சி விற்பனை செய்வதில் பெரும் தகராறு வருவதினை அறிந்து கடுமையான நடவடிக்கையோடு, தன்னார்வ நிறுவனங்கள், மாணவர்களை ஒன்று திரட்டி, விழுப்புரத்தில் ஆரம்பித்த பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் ஒவ்வொரு கிராமாக சென்று கடைசியாக ஆன்மீக முனிவர் வள்ளலார் வாழ்ந்த வடலூரில் நிறைவு செய்யப் பட்டது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப் பாடி சம்மட்டிபுரத்தில் அடிக்கடி ஜாதிச் சண்டை, கொலை, தீ வைப்பு போன்றவை நடந்தாதால் அங்கே மக்கள் விழிப்புணர்வு நாடகமும் மாணவர்களால் நடத்தப் பட்டு பொதுக் கூட்டமும் நடந்தது. அதில் தற்போதைய மந்திரியும், அப்போதைய மந்திரியுமான மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்கள். 19.9.2000அன்று வெளிவந்த தினமணி நாளிதழில், 'கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைதி திரும்பியது' என்று குறிப்பிட்டுள்ளது எங்களது நடவடிக்கையின் நிறைவான நடவடிக்கையாக கருதினோம். அதேபோன்ற மதுவின் கொடுமை  விழிப்புணர்வினை சிறு வயதிலிருந்தே புகுத்த வேண்டியது அரசு, தன்னார்வ இயக்கங்கள், கிராம மக்கள் நடவடிக்கை ;எடுப்பது சாலச் சிறந்தது அல்லவா?

 

 

 

 

 

 

Friday, 21 May 2021

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி--'

 


( டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப் படி இந்தியாவில் கொரானா தொற்று நோயால் பாதிக்கப் பட்டவர் இதுவரை 2.3கோடி என்றும், அதில் இறந்தவர் 2.57 லட்சம் என்றும் கூறுகின்றது. ஆனால் சாவின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் அவைகள் கணக்கில் கொள்ளாதவை என்றும், கங்கையில் உ.பி., ம.பி மற்றும் பிகாரில் மிதக்கும் நூற்றுக் கணக்கான பிணங்களை பார்த்து சொல்லுவது மனதினை உலுக்கும் செய்தியாக உங்களுக்குத் தெரியவில்லையா? 2019ம் ஆண்டு டிசம்பர் மாதமே சீனாவில் கொரானா அறிகுறி தெரிந்தும் சரியான தடுப்பு நடவடிக்கை எடுக்கத் தவறியதின் பயனாக லட்சக் கணக்கில் விலை மதிக்க முடியாத உயிரினை இழந்திருக்கின்றோம். அதனை விட்டுவிட்டு மாட்டு மூத்திரம், மாட்டு சாணம் தான் அதற்கு உண்டான தீர்ப்பு என்று நமது அறிவு சால் அரசியல் வாதிகள் பிதற்றியதின் பயனைக் கண்டு அமெரிக்க டல்லாஸ் விமான நிலைய அதிகாரிகள் திகைத்த கதையினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.

அதனை டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிய செய்தித் தொடர்பாளர் பிலிப் சேர்வேல் படம் போட்டு காட்டியுள்ளார். டெல்லியிலிருந்து வாஷிங்டன் டல்லாஸ் விமான நிலையத்தில் ஒரு இந்திய பயணியின் பையினை அங்குள்ள அதிகாரிகள் சோதனை இட்டபோது ஒரு பையில் கனமான உருண்டையான பொருள் இருந்தது கண்டு வியந்து அவரிடம் கேட்டபோது அது காய்ந்த சாணத்தின் கட்டி என்றும் அது கொரானா நோயினை கட்டுப் படுத்தும் என்று சொன்னது ஆச்சரியாமலிக்காதா என்ன? Mucormycosis என்ற பூஞ்சை நோய் புதிதாக வந்துள்ளது என்றும் அது ஈரமான, காய்ந்த, காற்றில் பரவக்கூடிய கொரானா என்றும் கூறப்படும் போது அவர் இதனைக் கொண்டு வந்தது ஆச்சரியம் அளிக்காதா என்ன? அவ்வளவு தூரம் மக்கள் அறியாமையில் மூழ்கி உள்ளனர் என்பது எடுத்துக் காட்டவில்லையா? அதற்கு மேலாக 2021 மார்ச் மாதம் ஹரித்துவார் கும்பமேளாவில் கலந்து கொண்ட கொரானா  நோய் பாதித்த சுனில் பாரேடா என்ற தலைவர் தொலைக் காட்சியில் தோன்றி பெருமையாக சொன்னதும், இன்னொரு ஸ்வாமி மாட்டு மூத்திரம் குடிக்கும்(gaumutra) விழா நடத்தியதும் பத்திரிக்கைகள் படம் போட்டுக் காட்டியுள்ளன. பின் ஏன் கொரானா நோய் பரவாமல் இருக்காது சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத் சொல்லும்போது, 2019ல் கொரானா அறிகுறி வந்தபோது அரசும், மக்களும் அலட்சியம் காட்டியதால் அதன் விளைவுதான் லட்சக் கணக்கில் உயிரிழைப்பு மட்டுமல்ல மாறாக வெளி நாடுகளில் ஆக்சிஜென், வெண்டிலேட்டர்,  கொரானா அறிகுறி கண்டு புடிக்கும் கருவிகள், ஊசிகள் போன்றவைகளை இறக்குமதி செய்ய வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா 120 நாடுகளுக்கு தடுப்பூசி சிரிஞ்சி தயாரித்து அரும்பியும், இந்த கொரானா காலத்தின் அவசரத்தினை பயன்படுத்தி  அவசியமான பொருட்கள் தரமற்ற பொருட்களாக இறக்குமதி செய்யப் படுவது இந்திய மருத்துவ உபகரண தொழிலை நசுக்குவதாக உள்ளதாக அதன் சம்மேள தலைவர் ராஜீவ் தத் சொல்லியுள்ளார். இதனை நிரூபித்து காட்டும் விதமாக திண்டிவனத்தில் மருத்துவமனை வைத்திருக்கும் ஒரு டாக்டர் பாண்டிச்சேரியில் விற்ற ரெம்டிசிவிர் ஊசியினை வாங்கி தனக்குப் போட்டுள்ளார். அதன் பின்பு அவர் இறந்து விட்டார். விசாரணை செய்ததில் பாண்டிச்சேரியில் விற்ற ஊசி மருந்து போலியானது என்று அறிந்து இரண்டு டாக்டர்களை கைது செய்துள்ளார்கள். சீன கம்பனிகள் கொரானா காலத்தின் அவசர தேவையினை பயன் படுத்தி மாஸ்க், வெண்டிலேட்டர் போன்ற தரமற்ற உபகரணங்களை போட்டி போட்டுக் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கும், இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கும் அனுப்பியுள்ளன. அவைகளை சில நாடுகளும் திருப்பி உள்ளன. தடுப்பு ஊசிகளை கடத்தி வந்து விற்றது சம்பந்தமாக 2 டாக்டர்கள், 10 மற்ற நபர்கள் கைது செய்துள்ளது வருத்தமளிக்காமலில்லை தானே! இது எதனைக் காட்டுகின்றது என்றால் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'ஏரியிற வீட்டில் பிடுங்குவது லாபமென்று' அதுபோல அமைந்து விட்டதாக உங்களுக்குத் தெரியவில்லையா? அது மட்டுமல்லாமல் பக்கத்து நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, துபாய், சௌதி, குவைத், கட்டார் போன்றவற்றில்  பஞ்சம் பிழைக்க  சென்ற தொழிலாளர்கள் நம்மவர் கூட அவசர தேவைகளுக்கு உற்றார் உறவினரை காண வரமுடியா தடையும் உள்ளது என்று அறியும் போது உண்மையிலேயே ஆளுநர்கள் மேல் கோபம் வரத் தானே செய்யும்.

திருடர்களை கல் நெஞ்சக் காரர்கள் என்று கூறுவோம். ஆனால் அந்த திருடன் கூட தான் திருடி வந்த பொருள் 1270 கோவிஷீல்டு மற்றும் 440 கோவாக்ஸின் மருந்து குப்பிகள் என்று அறிந்து அந்த மருந்துக்காக கொரானா நோய்  பாதித்த ஹரியானா மக்கள் பேயாய் அலைவதினை அறிந்து தன் கைப்பட தனக்கு அவைகள் கொரானா நோய்க்கான மருந்து என்று தெரியாமல் எடுத்து வந்து விட்டதாகவும் அதற்காக மன்னிக்கவும் என்று ஒரு கடிதம் எழுதி வருத்தத்துடன்  திருடிய மருந்துக் கடைக்கு அதனை திருப்பி அனுப்பியது ஒரு மனிதாபிமான செயலாக உங்களுக்குத் தெரியவில்லையா?

 

உயிர் பலிகள் அதிகமானதாலும், நோயாளிகள் தனிமையில் மருத்துவனையிலும், வீடுகளிலும் தனிமைப் படுத்துததாலும் பல்வேறு பிரட்சனைகளை சந்திக்க நேருகின்றது. அவைகளில் சிலவற்றினை ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளன. அவைகள் பின் வருமாறு:

1) வேலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தில் 80 வயது முதியவர் மனைவிக்கு 70 வயது இருக்கும். அவருடைய இரு மகன்களும் பொறியாளர்களாக திருமணமாகி பெங்களூரில் வசித்து வருகின்றார்கள். பெற்றோர் மட்டும் பள்ளிப் பட்டில் குடியிருக்கின்றார்கள். தந்தைக்கு கொரானா வந்து மருத்துவ மனையில் சேர்த்துள்ள தகவல் தெரிவிக்கப் படுகின்றது. அவர்கள் வரவில்லை. சமீபத்தில் தந்தை இறந்து விடுகின்றார். அதன் தகவலையும் பிள்ளைகளுக்கும், பக்கத்து கிராமத்தில் இருக்கும் உறவினருக்கும் தெரிவிக்கின்றார்கள், ஆனால் ஒருவர் கூட  வரவில்லை. சொந்த பிள்ளைகளோ  கொரானா நோயால் ஊர் மக்களே ஈமச் சடங்குகளை செய்து விடுங்கள் என்று கூறியதால் ஊர் மக்களே மகன்கள் செய்ய வேண்டிய காரியங்களை செய்தார்களாம்.

2) சேலம் தாராமங்கலத்தில் ஒரு நடுத்தர வயது மகன் கொரானாவில் மருத்துவனையில் இறந்து விட்டானாம். அவருடைய தந்தை அந்த பிணத்தினை வாங்க மறுத்து விட்டாராம். அதற்கு அவர் சொன்ன காரணம், 'ஊர் மக்கள் கொரானா பிணம் என்று புதைக்க விடமாட்டார்கள், ஆகவே மருத்துவமனை நிர்வாகவே சேலத்தில் புதைத்து விடுங்கள்' என்று சொல்லி விட்டாராம்.

3) இதற்கு நேர்மறையாக பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ஆஸ்பத்திரியில் கொரானா நோயால் பாதிக்கப் பட்ட மகன் இறந்து விட்டான். அவனை ஈமக் காரியங்கள் செய்வதிற்காக எடுத்துச் செல்ல கையில் பணமில்லை. இவ்வளவிற்கும் ஜலந்தரில் 500 ஆம்புலன்ஸ் இருந்தும், தன்னார்வ நிறுவனங்கள் இருந்தும் ஓவருவரும் உதவி செய்யவில்லை. ஆகவே தந்தையே தனது தோளில் மகனுடைய பிணத்தினை சுமந்து சுடுகாடு எடுத்துச் செல்லும் காட்சி பத்திரிக்கை செய்தியாக வந்துள்ளது.

4)  ஆக்ஸிஜன் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் குழாயில் கோளாறுகளால் ஆக்ஸிஜன் சீராக வராமல் பலர் இறப்பு செய்திகள் மருத்துவ வசதிக்காக சென்றவர்கள் உயிர் பிழைத்து வருவார்களா  என்ற நம்பிக்கை மக்களிடமிருந்து மறைந்து போய் விடுகின்றது அல்லவா?

5) ஒரு மென் பொறியாளருக்கு கொரானா வந்து வீட்டில் தனிமை படுத்தப் பட்டுள்ளார். அவருக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கின்றான். அந்த பொறியாளர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தான் நோயால் இறந்து விடுவோம் என்று மகனை காரில் அழைத்துச் சென்றவர் தனியாளாக வருவதினைப் பார்த்த மனைவி குழந்தை எங்கே என்று சண்டை போட, அப்போது தான் சொன்னாராம் குழந்தையினை நாடு ரோட்டில் விட்டு விட்டு வந்து விட்டதாக. பெத்த மனது சும்மா இருக்குமா கணவர் சொன்ன இடத்திற்கு அவசரமாக சென்று அழுது கொண்டு இருந்த குழந்தையினை மீட்டு வந்தாராம்.

6 ) சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி  மருத்துவமனைகள் நோயாளிகளின்  படுக்கைகள் நிறைந்து வழிந்ததால் நோயாளிகளை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் வண்டிகள் மருத்துவமனை முன்பு நின்று நேரம் ஆக, ஆக ஒரு நோயாளி பின் ஒருவராக 10 பேர்களுக்குமேல் இறந்த சம்பவம் சென்னையில் நடந்தது அதிர்ச்சியூட்டும் செயல் தானே!

7) கொரானா வார்டுகளில் பெரும்பாலும் கூட உறவினர் இருப்பதற்கு அனுமதியில்லை. ஒரு வார்டில் ஒரு பெண் நோயாளி மட்டும் அனுமதிக்கப் பட்டுள்ளார். ஆனால் அந்த வார்டில் ஒரு ஆண் நர்ஸ் பணியமர்த்துப்பட்டுள்ளார். அந்த பெண் நோயாளியிடம் ஆண் நர்ஸ் தவறாக நடந்த சம்பவமும் நடந்து  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இன்னொரு சம்பவத்தில் கணவர் கொரானா நோயாளி, அவரை கவனிக்க அவர் மனைவி சென்றிருக்கின்றார். அவரிடம் அங்கு பணியில் இருந்த டாக்டர் பாலியல் சீண்டல்களை செய்துள்ளார். கொரானா களப் பணியாளர்களாக பணியாற்றிய 786 மருத்துவர்கள் முதல் அலையிலும், 270 மருத்துவர்கள் இரண்டாம் காலையிலும் இறந்தாலும், அதேபோன்று எண்ணற்ற நர்ஸுகள் பலியானாலும் இதுபோன்ற சம்பவங்கள் அவப் பெயர் ஏற்படுத்தி தருவது இயற்கைதானே!

கொரானா தொற்றுலிருந்து மீண்ட நபர்கள் வீட்டில் தனிமைப் படுத்தப் படுகின்றனர். அவர்களிடம் பயம், எரிச்சல், தனிமை மற்றும் கவலை பற்றிக் கொள்கிறது. அவர்களுக்கு தைரியம் ஊட்டி, அவர்களை புறக்கணிக்காது மறுபடியும் மனிதர்களாக வாழ வகை செய்ய வேண்டிய கடமை, பிள்ளைகள், பெற்றோர், உற்றார், உறவினர், பக்கத்து வீட்டுக் காரர்களின் பொறுப்பு என்றால் மிகையாகுமா?

ஒரு மனிதன் சந்தோசமாக வாழ பொருள் மற்றும் ஆசை மட்டும் போதாது. பணத்தினை வைத்து விலையுயர்ந்த கார், உடை, செல் போன், வீடு, வித விதமான உணவு போன்றவையினை அடையலாம். அவைகளையெல்லாம் அதிர்ஷ்டத்தில் வந்தவை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவையெல்லாம் தண்ணீர் போன்று கரைந்து விடும். ஒரு நாள் எங்களுடன் நடைப் பயிற்சியில் ஈடுபடும் ஒரு இளைஞருக்கு,  வசதியுள்ள வியாபாரி பேச்சு வாக்கில் கூறிய அறிவுரை என்ன தெரியுமா , 'எனக்கு பீரோவினை திறந்தால்  ரூபாய் நோட்டு கத்தையாக இருக்க வேண்டும், அப்போது தான் எனக்கு சந்தோசமாக இருக்கும்' என்பது தான். அவருக்குத் தெரியாது அது தண்ணீர் போல கரைந்து விடுமென்று. அவைகள்  இருந்தும் சில பணக்காரர்கள் நிம்மதியாக தூக்கம் வரவில்லை என்று சொல்வதினைக் காணலாம். மனம் என்பது அலை பாயும் தகுதி பெற்றது. மூளைக்கும், நெஞ்சுக்கும் இடையே இணைப்புப் பாலம் சீராக இருந்தால் தான் அமைதி பெறமுடியும். ஆனால் மனமுடைந்த கொரானா காலமான இந்த நேரத்தில் அவர்களுக்கு மன அமைதியும் சந்தோசத்தினையும் கொடுக்க வேண்டியது நமது கடமையல்லவா?

உங்களுக்கெல்லாம் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் பற்றி தெரிந்து இருக்கும். அவர் உலகை ஆள நினைத்த மகா சக்ரவர்த்தி அலெக்ஸ்சாண்டர் குரு என்று சொல்வீர்கள். ஆனால் அவர் ஒரு தத்துவ ஞானி என்பது பலருக்குத் தெரியாது. அவர் என்ன போதித்தார் என்றால், 'நீங்கள் சங்கடத்திலும் சந்தோசமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள் என்றுதான். அவர் போன்று தான் மேற்கத்திய தத்துவ மேதைகளான Marcus Aurelius, Maichael De Montaigne, Friedrich மற்றும் Simon de Bevouir போன்றோர் துன்பத்திலும் இன்பமாக இருப்பது எப்படி என்று போதித்துள்ளனர்.

தத்துவ படிப்பில் Stoicism என்று சொல்லும்போது விருப்பு வெறுப்பில்லாத மனதினை அடைவது என்று பொருள். ஒருவருக்கு கொரானா நோய் தொற்று இருக்கலாம். ஆனால் அது ஒரு உடல் நலமில்லாதது அல்ல. கொரானா நோயால் ஏற்படுகின்ற அழிவு எண்ணத்தினை வெற்றி கொண்டு நாம் வாழ வேண்டும் என்ற Essententialism  மன கோட்டையினை உறுதியாக, அறிவுடன்  கட்ட வேண்டும். அதற்காக கொரானா என்ற பயம், கவலை, தனிமை ஆகியவற்றினை தூக்கி எறிந்து ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் வாழ பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் குடும்ப உறுப்பினர், உற்றார், உறவினர், நண்பர்கள், ஊரார் உதவி செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய வில்லையென்றால் கொரானா நோயால் பாதித்தவர், கவிஞர் கண்ணதாசன் பாடியதுபோல, 'வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ' என்று எண்ணி, எண்ணி, மனம் புழுங்கி நடைப்பிணமாக மாற வேண்டிய சூழல் ஏற்படும். இந்த உலகம் அவசரமானது, அதில் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்னு விரக்தியாக இருக்கக் கூடாது. மாறாக நோயிலும் வென்று காட்டுவேன் என்ற மன உறுதி வேண்டும்.

வாழ்க்கையின் சிரமமான நேரத்தில் மனதினை இறைநோக்கி நிறுத்தி, கவலைகளை மறந்து, தான, தர்மம் போன்ற நல்ல செயல்களில் ஈடுபட்டாலும், அன்பு, பாசத்துடனும், அடுத்தவரிடம் வெறுப்பு காட்டாமல் வாழ பழகிக் கொண்டால் உண்மையிலே நீங்கள் சன்தோஷமாக வாழ்க்கை என்ற படகினை  வெற்றி கரமாக செலுத்துவீர்கள்!

 

 

 

 

 

 

Tuesday, 27 April 2021

சுவரை வைத்துத் தான் சித்திரம் வரைய வேண்டுமா?

 


டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

இந்தியாவில் மனித வாழ்வின் ஆயுள் காலம்(longevity) 1960ம் ஆண்டு 40 வயதாக  இருந்தது. அது 2020ம் ஆண்டில் 69 வயதாக  அதிகரித்துள்ளது அதன் காரணங்கள், வாழ்க்கையில் ஆரயோக்கியமாக வாழ்ந்ததும் மற்றும் சிறந்த மருத்துவசேவையும் என்பது வெள்ளிடைமலையே. அதிக வயதில் வாழ்ந்தவர்களிடம் அதிக நாட்கள் வாழ்ந்தது எப்படி என்று கனடா நியூ பவுண்ட் ஆராய்ச்சியாளரான  ஜெனடேல், கேட்கும்போது அவர்கள் சொல்லும் காரணம், 'வீட்டிலே முடங்கிக் கிடந்தால் நீண்ட நாட்கள் வாழமுடியாது',  பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்ததே  என்று ஆச்சரியமாக இருந்ததாக கூறுகிறார்.

            ஒரு மனிதன் நல்ல உடல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவன் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆக்கப் பூர்வமான நடவடிக்கையே முக்கியமாகும். எவ்வாறு ஒரு ஓவியன் சிறந்த படைப்பிற்கு காகிதமோ, பாறையோ  அல்லது சுவரோ தேவையோ அதேபோன்று தான் அதிக நாட்கள் பல கொடிய நோய்களுக்கிடையே வாழ சில செயல்கள் முக்கியமாகும். அவைகளை கீழே காணலாம்:

1)    உங்கள் எடையினை கவனியுங்கள்: 'Annals of Internal Medicine' வரலாற்றுப் பதிவேடுகளில், 'குழந்தைப் பருவத்திலிருந்து அதிக எடையுடன் இருந்தால் அது உங்கள் உயிருக்கு உலை வைக்கும்' என்பது தான். ஆகவே பத்து சதவீத எடையினை குறைத்தால் ஆயுளினை குறைக்கும் நோய்களான, சக்கரை போன்றவற்றைத் தடுக்கும் 

2)    2) பல்லை கவனிக்க: பல் போனால் சொல் போகும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பல் நோயினால் இதய நோயும், சக்கரை நோயும் உண்டாகும் என்று டொரோண்டோ பல் சினாய் ஹெல்த் சிஸ்டம் மருத்துவமனை டாக்டர் ஹாவார்டு அவர்கள் கூறுகின்றார். வாயிலுள்ள கிருமிகள் நரம்புகளில் ஊடுருவி நோயினை அதிகப் படுத்தும்' என்று கூறுகிறார்.

3)    கண்ணை பொன்போன்று கவனி : 2014ம் ஆண்டு வெளி வந்த Journal of American Medical Association அறிக்கையில் ஒருவர் கண் மங்கினால் உடனே கவனிக்கவேண்டும். ஏனென்றால்  வயதானவர்கள் கண் பார்வை மங்க ஆரம்பிக்கும், அப்போது பார்வை தெரிய அதற்கு தேவையான மறுத்துவ  சிகிச்சை அளிக்காவிட்டால் வீட்டிலே ஒரு நடை பிணமாகத் தான் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் வீட்டிலே உள்ள பத்திரிக்கையினை படிக்க ஒரு பூத கண்ணாடி உதவினால் கூட தன்னுடைய வயது குறைவாகவே அவர்களுக்கு நினைக்கத் தோன்றும்.

4)    மூச்சிப் பயிற்சி அவசியம்: சராசரி ஒரு மனிதனுக்கு 35 வயதினை  அடைந்தாலோ மூச்சு விடுதலில் சிரமம் உண்டாகும்.. நுரையீரல் சுருங்கி, விரிந்தால் தான் மூச்சு சீராக வரும். ஆனால் அது குறைந்தால் மூச்சு தினரல் ஏற்படும். Diaphragm என்ற நுரையீரல்-வயிறு இடைப் பகுதி உதரவிதானம் ஆகும். மூச்சு இழுத்து விடும் போது நுரையீரல் கீழ் நோக்கி விரிந்து சுருங்கும். அவ்வாறு நுரையீரல் விரியாவிட்டால் மூச்சு தினரல் ஏற்படும். ஆகவே தான் தினமும் 15 நிமிடங்கள் மூச்சு இழுத்து விடும் பயிற்சி எடுக்கவேண்டும். அதுவும், மரங்கள் நிறைந்த பூங்கா பகுதி, திறந்த வெளியிடங்களில் பயிற்சி எடுப்பது சாலச் சிறந்தது ஆகும்.

5)    அதிக மாத்திரைகள் உடலுக்கு ஆபத்து: ஸ்பெயின் நாட்டின் மருத்துவர்கள் 2015ல் நடத்திய ஆய்வின்படி அதிக மாத்திரைகள் உட்கொண்டால் கிட்னி கோளாறு, வயிற்றுப புண் மற்றும் இதய பல பக்க விளைவுகள் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

6)    இந்தியாவில் 7 கோடி சக்கரை நோயாளிகள் குறை சொல்லுவது என்னவென்றால் அவர்கள் காலில் ஏற்படும் புண்ணினால் தான் என்று கூறுகின்றனராம். ஆஸ்திரேலியாவில் நடத்தப் பட்ட ஆய்வின் படி சக்கரை நோயினால் காலில் ஏற்படும் புண்ணினால் 15 வருடங்கள் முன்பாகவே இறந்து விடுவதாக கூறுகின்றனர். காலில் வெடிப்பு ஏற்பட்டாலோ, காலில் சிகப்பு நிறம்  வந்தாலோ உடனே சம்பந்தப்பட்ட மருத்துவர்களை அணுகி நடவடிக்கை எடுக்கவேண்டுமாம்.

7)    வயதாகும்போது எலும்புப் புரை(osteoporosis) நோயால் அவதிப் பட்டு கால்கள் நடக்க முடியாமல் போகும் நிலை உண்டாகும். அதனை சரி செய்ய nitrogen-bisphosphonate வகைகளான மருந்துகள் மூலம 34 சதவீத இறப்புகளை தடுக்க முடியும் என்று ஆஸ்திரேலியாவில் நாட்டில்  டார்லிக்ஸ்ட் நகரில் அமைந்துள்ள கார்வான் மெடிக்கல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டறியப் பட்டுள்ளதாம்.

8)    ஃப்ளு ஆபத்திலிருந்து  தப்பியுங்கள்: இந்தியாவில் செப்டம்பர் மாதத்திலிருந்து பெப்ரவரி மாதம் வரை சளித் தொல்லை அதிகமாக  இருக்கும்.  சளியினால் வருவது தான் ஃப்ளு நோயாகும். ஃப்ளு வந்தால் காய்ச்சல், அதனைத் தொடர்ந்து நிமோனியா, காது வலி, சயன்ஸ் தொந்தரவு, வயிற்றுப் போக்கு, நீர் சத்து குறைதல், ஆஸ்த்மா அல்லது சக்கரை நோய் ஏற்படும். அதனைத் தொடர்ந்து இதய நோயும் வர வாய்ப்புள்ளது. ஒரு தடவை ஃப்ளு வந்து சுகமானாலும் அதன் வைரஸ் நுரையீரல் பகுதியில் தொற்றிக் கொண்டு இருக்கும். ஆகவே சளித் தொல்லை  தானே என்று அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது.

9)    கழிவுப் பாதை கவனிப்பு: மனிதன் உணவு உட்கொள்ள எவ்வாறு வாய் முக்கியமோ அதே போன்று சாப்பிட்ட உணவு ஜீரணித்து கழிவுகளை வெளியே தள்ள ஆசன வாய் முக்கியம். அந்த ஆசன வாயில் ஏதாவது கட்டி வந்தால் உடனே மருத்துவரை அணுகி, கழிவு DNA பரிசோதனை, கல்சர்(culture) பரிசோதனை நடத்தி புற்று நோய் இல்லை என்பதினை உறுதி செய்ய வேண்டும்.

உணவு வழி வழிமுறைகள்: Journal of the American College of Cardiology ஆய்வின் படி 40 வயதிலிருந்து 75 வயது வரை உள்ள அமெரிக்கர்கள் 87 சதவீதம் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்திருப்பர், அவர்கள் காலை உணவினை சரியான நேரத்தில் எடுத்திராவிட்டால் என்று கூறுகின்றது. ஒரு பழமொழி சொல்வார்கள், 'காலை உணவினை இளவரசர் போல சாப்பிடுங்கள், மதிய உணவினை அரசர் போலவும், இரவு உணவினை ஏழைபோலவும் சாப்பிட வேண்டுமென்று'. காலை உணவினை மறந்தவர் யானை பலத்தினை இழந்தவர் போலாவார்.

2) 70,000 ஜப்பானிய மக்களிடம் நடத்திய ஆய்வின் படி செடிகளிருந்து முளைத்த பீன்ஸ், பருப்பு வகைகள், முழு தானியங்கள் உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வதால் அவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாக கூறுகின்றது. அவர்கள் (Longevity) சராசரி 87.45 வயதில் பெண்களும், 81.41. வயது வரை ஆண்களும் உயிர் வாழ்வதாக கூறப் படுகிறது.

3) சிகப்பு இறைச்சி(Red Meat): சிகப்பு இறைச்சியினை அதிகமாக சாப்பிடுவது உங்களுடைய உயிர் சுமார் 8 வயது குறைந்த ஆபத்து ஏற்படும் என்று Boston நகரில் உள்ள Harvard T.H Chand School Public Health ஆய்வில் கூறுகின்றது. அதே ஸ்கூல் நடத்திய ஆய்வில் சக்கரை அதிகமாக சேர்க்கப் பட்ட குளிர் பானங்கள் தினந்தோறும் குடிப்பது ஆபத்து நிறைந்தவை என்றும் சொல்கின்றது. P.MJ என்ற பத்திரிக்கை 2014ல் நடத்திய ஆய்வில் 20 ஆண்டுகளில் 89,000 பெண்களின் உணவு பழக்கங்களை ஆய்வு செய்தனர். அதில் பதப் படுத்தப் பட்ட இறைச்சி வகைகள் 22 சதவீதம் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

4) நீர் அருந்துவது: சிலர் தண்ணீரினை மருந்துபோல அருந்துவர். நாம் வெப்ப மண்டலத்தில் வாழ்கின்றோம். உடலிலிருந்து வேர்வை, சிறுநீர் வெளியேறும் போது அதனை ஈடு செய்ய நீர் அருந்துவது அவசியம். உங்கள் சிறுநீர் சற்று இல மஞ்சள் நிறத்தில் வெளியேறவில்லை என்றாலும், கருப்பு நிறத்தில் வந்தாலும் நீங்கள் குறைவான நீரினை பருகுகிறீர்கள் என்பது அர்த்தம். ஆகவே சரியான அளவு நீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

5) நவீன உணவு தவிர்: இயற்கையாக சமையல் செய்து சாப்பிடும் பழக்கத்திலிருந்து வேக உலகில் நவீன, ஏற்கனவே தயார் செய்யப் பட்ட உணவினை சூடாக்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்துடன் அதனை தொடர்ந்து உடல் ஆரோக்கியம் கெடவும் செய்கின்றது என்பதை பலர் அறியமாட்டார்கள். 2019ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் 45,000 நடுத்தர மக்களிடம் எடுக்கப் பட்ட ஆய்வில் 'ரெடி டு செர்வ்' உணவினால் பலர் உடல் கோளாறு ஏற்பட்டு இறந்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது. ஏனென்றால் உணவு கெடாமல் இருப்பதற்கு பல வேதியப் பொருட்கள் சேர்ப்பதினால் அதுபோன்ற உடல் உபாதைகள் வருவதாக கூறுகின்றனர்.

6) மது உடலுக்குக் கெடுதி: 2014 ம் ஆண்டு நடத்தப் பட்ட ஆய்வில் மது அருந்துவதால் 14,800 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. 88,000 குடிகாரர்கள் மருத்துவமனைக்கு படையெடுத்திருப்பதும் தெரிகிறது. மது ஸ்பிரிட்டிலிருந்து தயாரிக்கப் படுகின்ற ஆல்ககாலனாதால் உடல் உள் உறுப்புகளை கரையான் போல அரித்து விடும்.

7) நட்ஸ் சாப்பிடுதல்: ஹார்வாட் பல்கலைக் கழக ஆராய்ச்சியில் தினமும் சில வால்நட்ஸ், பாதாம், முந்திரிப் பருப்பு, அத்திப் பழம் போன்றவை சாப்பிட்டால் 30 வருடங்களில் 20 சதவீதம் குறைவாகவே இறப்பார்கள் என்று கூறுகின்றது.

8) வைட்டமின்  D: மனிதன் திடகார்த்தமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழ வைட்டமின் D முக்கியம். ஆகவே தான் வெளிநாட்டவர் இந்திய போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு வந்து சூரிய குளியல் செய்கின்றனர் என்பதினைக் காணலாம். நமக்கு இறைவன் இயற்கையிலே சூரிய ஒளியினை கொடுத்துள்ளான். அதனை திறந்த வெளியில் அதிகாலை மற்றும் அந்தி மயங்கும் வேளையிலும்  அனுபவிக்க வேண்டும். அதற்காக அதனை கூட்ட பல மருத்துவர்களை மருந்துக்காக நாடக் கூடாது.

9) எறும்புபோல சுறுசுறுப்பாவீர்: 2019 ம் ஆண்டு நார்வே ஸ்கூல் ஆப் சயின்ஸ் நடத்திய ஆய்வில் வீட்டில் தரையினை சுத்தம் செய்வது, கார் அல்லது இரு சக்கர வாகனத்தினை துடைப்பது, வீட்டுத் தோட்டத்திற்கு தண்ணீர் விடுவது, துணைவியாருக்கும்  சிறு, சிறு உதவி செய்வது மிகுந்த ஆரோக்கியம் தரும் என்று கூறுன்கிறது.  ஜெர்மனி அதிபர் அஞ்சலா மார்கல்  18 வருடம் ஜெர்மனியினை சிறப்புடன் ஆட்சி செய்து 2021 ஜனவரி 19ல் தானாகவே பதவி விலகிய போது நிருபர்கள், 'உங்கள் உடையினை யார் துவைப்பது’ என்று கேட்டபோது, துணிகளை தான் வாஷிங் மெஷினில் அடுக்கி வைப்பதாகவும், தனது கணவர் அதனை துவைத்தப் பின்பு எடுப்பார் என்றும், ‘யார் சமைப்பது’ என்ற கேள்விக்கு, தான் சமைப்பதாகவும், தனது கணவர் சமையலுக்கான காய், கறிகளை நறுக்கித் தருவார் என்றும், வீட்டினை யார் சுத்தம் செய்வது என்ற கேள்விக்கு தான் தான் என்றும், தான் வீட்டில் வேலைக் காரர்களை வைத்துக் கொள்வதில்லை’ என்றும் கூறுவது எதனைக் காட்டுகின்றது என்றால் நாட்டிற்கு ராஜாவானாலும், வீட்டிற்கு பொறுப்பான மற்றும் உறுதுணையான் மனைவியாக இருந்துள்ளார் என்பதனையும் காட்டுகின்றது தானே!

10) விளையாட்டு பயிற்சி: ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா பல்கலைக் கழக மனோதத்துவ நிபுணர், டாக்டர் ஸ்டுவர்ட் மேக் டொனால்டு, பல வயதானவர்கள் பற்றி ஆராயும் போது, வயதானவர்கள் தெரிந்த விளையாட்டினை நண்பர்கள் உடன் விளையாடுவதால் அவர்களுடைய நினைவாற்றல் அதிகப் படுத்துவதுடன், கலகலப்பாகவும் வீட்டில் நடமாடுவதாக கூறுகின்றார். விளையாட்டே தெரியாது என்றாலும் வெளியே நடைப்பயிற்சியில் சில நண்பர்களுடன் கூட செல்வது நல்லது என்றும் தங்களை தனிமைப் படுவத்திலிருந்து காக்கும் என்றும் கூறுகின்றார்.

வேலையினூடே ஓய்வெடுத்தல்: 1) ஒரு மனிதனுக்கு தூக்கம் மிகவும் அவசியம். குறைந்தது ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். இரவில் தொலைக் காட்சி, செல் போன் போன்றவைகளை தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நிறுத்தி விடுங்கள். இரவு விடி விளக்குகள் ஒளி கண்ணைக் கூசும் என்றால் தூங்கும் போது கண்ணுக்கு ஒளி வராமல் தடுக்கும் கட்டையான துணியினை கண்ணில் கட்டிப் படுங்கள். எப்படி விமானத்தில் இரவில் பயணம் செய்யும்போது தூங்குவதற்கு தனி கண் மறைப்பான் கொடுக்கின்றார்களோ அதேபோன்று வாங்கி உபயோகிங்கள்.

2) லான்செட் என்ற குடும்ப பத்திரிக்கையில் 2018ம் ஆண்டு நடத்தப் பட்ட ஆய்வில், அலுவலக வேலையினை வீட்டிற்கு கொண்டுபோய் அதில் கவனம் செலுத்தும் ஆண்கள் 68 சதவீத பேர்களுக்கு இதய நோய் வருகின்றது என்றும். ஆனால் பெண்களை அதுபோன்று பாதிப்பதில்லை என்றும் கூறுகின்றது.

உங்கள் மகிழ்ச்சி தரும் இடங்கள் தேடுங்கள்: 1) நீங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போதோ அல்லது சைக்கிள் பயணம் செய்யும்போதோ மரம், செடி நிறைந்த பகுதிகளில் செல்லவும். அவ்வாறு இயற்கை வளங்களை ரசிக்கும் உங்கள் இறப்பு பத்து வருடங்களில் 10-15 சதவீதம் குறையும் என்று The Lancet Journal அறிக்கை சொல்கிறது.

2) அமெரிக்காவினைச் சார்ந்த John Hopkins பல்கலைக் கழகம் வயதாகுவது மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய 2013ல் நடத்திய ஆராய்ச்சியில்,  யார் குடும்ப இன்ப-துன்பங்களில் பங்காற்றுகிறார்களோ அவர்கள் உயிர் 18 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றது.

3) அமெரிக்காவின் McMaster பல்கலைக் கழகம் 2019ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தாங்கள் 30 வருடம் தனியாக வசித்துவரும் ஆண்களிடம் நடத்திய ஆய்வில் 23 சதவீதம் தனிமை வாட்டி சீக்கிரமே இறந்து விடுகின்றார்கள். ஆகவே தான் ஆணுக்குப் பெண் துணை என்ற தாரக மந்திரத்துடன் பலர் குடும்பம் நடத்துகின்றனர்.

4) புகை மண்டலத்திலிருந்து தப்பியுங்கள்: அமெரிக்காவில் உள்ள பெர்க்கிலி பல்கலைக் கழக ஆய்வின் படி நீங்கள் புகை பிடிக்காதவர்களாக இருந்தாலும், புகை பிடிப்பவர் அருகில் நீண்ட நாட்கள் இருந்தீர்கள் என்றால் அவர்கள் புகைக்கும் போது அதில் வரும் புகையினை நீங்கள் சுவாசித்தல், அல்லது புகை மண்டல  பகுதியில் வாழ்வது உங்கள் ஆயுளை குறைக்கும் என்றும் கூறுகின்றது.

5) உங்களுக்கு வயதாகும்போது மிகவும் வெப்பமான நேரங்களில் வீட்டினுள்ளோ அல்லது உங்கள் அலுவலக கட்டிடத்தினுள்ளோ பெரும்பாலும் இருப்பது சூரிய வெப்ப தாக்குதலிருந்து தப்பிக்க வகை செய்யும்..

மனிதன் உயிர் வாழ்வது நம் கையிலில்லை என்றாலும், மனிதன் புத்திசாலித்தனமாக இருந்தால் இயற்கையிலேயே நீங்கள் அதிக நாட்கள் வாழலாம் எபதினை தான் மேலே குறிப்பிட்ட ஆய்வுகள் கூறுகின்றன அல்லவா?

 

Tuesday, 30 March 2021

கத்தியெடுத்தவன், கத்தியால் சாவானா?

 


டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்,(ஓ)

ஐ.நா. சபையின் இலங்கைக்கான மனித உரிமை மீறல் தீர்மான ஓட்டெடுப்பு 23.3.3021ல் நடந்தது. அதில் 22 நாடுகள் ஆதரவு அளித்தும், சீனா, பாகிஸ்தான்,மற்றும் 9 நாடுகள் எதிர்த்தும், இந்தியா உளபட 14 நாடுகள் வெளிநடப்பு செய்தாலும்,  தீர்மானம் நிறைவேறியது. இந்தியா வெளி நடப்பு செய்ததை எதிர்பாக்காத இலங்கை தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக கட்சிகள், மத்திய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தது ஊடகங்கள் வாயிலாக அறிவோம். இந்தியா அவ்வாறு செய்ததிற்கு சில காரணங்கள் இருக்கலாம், எங்கே குஜராத்தில் 2002 ம் ஆண்டு கோத்ரா ரயில் சம்பவத்தினை காரணம் காட்டி கிட்டத்தட்ட 3000 அப்பாவி முஸ்லிம் மக்களை கொன்று, அவர்கள் இருக்குமிடம் நாசப் படுத்தி, அவர்கள் வியாபார நிறுவனகங்கள் கொலுத்தப் பட்ட விவகாரம், மற்றும் சென்ற ஆண்டு CAA, CRC மசோதா நிறைவேற்றினத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட முஸ்லிம் எழுச்சியினை எவ்வாறு சங் பரிவார் துணையுடன் அடக்க முயன்றனர் என்று உலகமே அறிந்திருக்கும்போது, எங்கே அந்த விவகாரம் மறு மனித உரிமை மீறல் தீர்மானத்திற்கு வழி வகுத்து விடக் கூடாதே என்ற அச்சத்தால் கூட இருக்கலாம் என ஊடகங்கள் எடுத்துக் காட்டின.

            இப்போது, இலங்கையில் அப்படி என்ன மனித உரிமை மீறல் என்று பார்க்கலாம். இலங்கை ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து 1948ல் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கள மக்களின் அத்துமீறல் தமிழர் அதிகமாக வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தலையெடுத்தது. மேற்படி பகுதிகளில் குடியேறியவர்கள் தமிழ் நாட்டினை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றால் மிகையாகாது. 1956ம் ஆண்டு இலங்கை பிரதமர் பண்டார நாயகா சிங்கள மொழி ஆட்சி மொழி என்று அறிவிப்பு செய்தது இலங்கை  தமிழர்கள் தலையில் இடி விழுந்தது போல இருந்தது. 1970ம் ஆண்டு கல்வியில் கொண்டு வரப் பட்ட, 'Policy of Standardization' என்ற கொள்கை தமிழ் மாணவர்கள் உயர்கல்வி கட்க தடைக் கல்லாக இருந்தது. மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், மறியல் போன்றவைகள் தொடர்ந்தன. தமிழ் மாணவர்கள் போராட்டத் தலமாக Jaffna பொது நூலகம் செயல் பட்டது.  1981ம் வருடம் சிங்கள மக்களாலும் அவர்களுக்கு உறுதுணையாக ராணுவமும் செயல் பட்டு Jaffna நூலகம் கொலுத்தப் பட்டது. பௌத்த மதத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்தது தமிழ் மக்களை மொழி, இனம், மதத்தினால் அரசு பிரித்தாளும் கொள்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறிந்த படித்த இளைஞர்கள் வெகுண்டெழுந்து ‘தமிழ் ஈழம்’ பெறுவதே ஒரே வழி என்று முடிவெடுத்தனர்.

            ஈழ தமிழர்களின் எழுச்சி தலைவர்களான செல்வராஜா என்ற குட்டிமணி, நடராஜா என்ற தங்கதுரை மற்றும் 30 தமிழ் இளைஞர்கள் ‘வெளிகொடா’ என்ற சிறையில் இருந்தபோது 25.7.1983 அன்று சிங்கள சிறை அதிகாரிகள் துணையுடன் சிங்கள வெறியர்களால் பரிதாபமாக கொல்லப் பட்டது உலகெங்கும் உள்ள தமிழ் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ் ஈழம் சுயாட்சி என்ற குரலிலிருந்து தமிழ் ஈழம் விடுதலை என்ற கோசம் ஆரம்பித்தது. சிங்கள வெறியாட்டத்திற்குப் பயந்து போராளிகள் தமிழகத்திற்கு வர ஆரம்பித்தனர். அவர்கள் தங்கள் பயிற்சி முகாம், மற்றும் பிரசாரா பொருட்காட்சிகள் நடத்தப் பட்டன. அதற்கு மத்திய மாநில அரசுகளும் உதவி செய்தன. 1984ம் ஆண்டு ஊட்டியில் ADSP ஆக பணியாற்றியபோது என்னிடம் மூன்று இலங்கை தமிழ் இளைஞர்கள் வந்து தமிழர் போராட்ட பொருக்காட்சி நடத்த வேண்டுமென்றனர். அப்போது அதில் ஒருவர் கழுத்தில் செப்பு தகடால் ஆனா தாயத்து அணிந்திருந்தார். அதனை கூர்ந்து பார்த்தபோது அதில் Al Fatah என அரபிக் மொழியில் இருந்தது. அதனை சுட்டிக் காட்டி அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார் 'தான் பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றதாகவும், அவர்கள் பயிற்சி எடுத்ததிற்காக நம்பர்' என்றார். அதன் பிறகு  நான் 1986 ல் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது TELO இயக்கம் நடத்திய பயிற்சி முகாமை உத்தரவின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி Nailwal அவர்களுடன் சென்று கொல்லிமலையில் சோதனையிட்டோம்.

1)    ஈழ விடுதலை போராளிகளில் இரு பிரிவுகளாக காணலாம். பிரபாகரன் தலைமையிலான LTTE மீனவர் சமுதாயமான ‘கரையார்’ என்ற சமூகத்தினை சார்ந்தவர்களாகவும், மற்ற அமைப்புகள் ‘வெள்ளாளர்’ என்ற விவசாய சமூகத்தினவராகவும் இருந்தனர். LTTE இயக்கத்தில் பிரபாகரனும், பாலசிங்கமும் இணைந்து செயலாற்றினர். அவர்களுக்கு வெளிநாடுகளிருந்து பணம் பெற்றது KP என்ற பத்மநாபனாகும் என்று உலக பயங்கரவாத பொருளாதாரம் ஈட்டும் பட்டியலில் உள்ளார். ஆரம்பத்தில் ஒன்றாக இணைத்து போராட்டம் நடத்திய விடுதலை இயக்கத்தினர் LTTE இயக்கத் தலைவர் பிரபாகரனால் மற்ற இயக்கங்களை கட்டுப் படுத்தும் முயற்சியில் இறங்கியதால் இரு பிரிவாக செயல் பட்டனர். ஒன்று பிரபாகரன் ஆதரவு மற்றொன்று அரசுக்கு ஆதரவானது.

2)    Elam Revolutionary Organisation of Students(EROS ) பாலகுமார் தலைமையில் ஈழப் போராட்டம் நடத்தினர்.

3) EPRLF Elam People's Revolutionary Libration Front Pathamanaba       தலைமையில் அரசு சார்ந்த இயக்கமாக LTTEக்கு மாற்றாக வரவேண்டும் என்று    தலையெடுத்தனர்.

4) EPDP Elam People Democratic Front டக்லஸ் தேவானந்தா தலைமையில்     அரசு சார்ந்த இயக்கமாக செயல்பட்டு இலங்கை பிரதமர் சந்திரிகா    பண்டாரநாயக்கா மந்திரி சபையில் மந்திரியாகவும் செயல் பட்டார். இவருடைய இயக்கம் சென்னை சூளைமேட்டில் இருந்தபோது அங்குள்ள மக்களுக்கு இடைஞ்சலாக இருக்கின்றது என்று 1986ம் ஆண்டு திருநாவுக்கரசு என்ற வக்கீல் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தபோது டக்ளஸ் தேவானந்தா கைத்துப்பாக்கியால் சுட்டபோது வக்கீல் இறந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

   உலக அளவில் மிகவும் அபாயகரமான தீவிரவாத இயக்கங்களில் முக்கியமான   மிகவும் வல்லமை கொண்ட LTTE இயக்கம் தேய் பிறையாகு மங்கி மறைந்தது   ஒரு வரலாற்றுக் கதை எனலாம்:

25 வருட கால தமிழ் ஈழப் போர் வெற்றி கொண்டதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணங்கள் ஆராய்வோமென்றால்:

1)    ஈழ போராட்டக் குழுவினரிடையே யார் பெரியவர் என்ற போராட்டம் உச்சக் கட்டத்தில் சகோதர யுத்தம் விஸ்வ ரூபம் எடுத்தது. அதன் பலன்  ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த TELO அமைப்பின் தளபதி ஸ்ரீ சபாரத்தினம் LTTE முன்னாள் சரணடைந்தபோதும், தி.மு.க தலைவர்  'விடுதலைப் புலிகள் தளபதி பிரபாகரனை நோக்கி, 'தம்பி சபாரெத்தினத்திற்கு உயிர் பிச்சை கொடு' என்று வேண்டுகோள் விடுத்தும் சபாரத்தினம் 1986ல் கொல்லப் பட்டார். தமிழர் ஆதரவு தலைவர் பெரியவர் அமிர்தலிங்கம் 1989ம் ஆண்டு கொல்லப் பட்டார். பிரபாகரன் தமிழகத்தில் தஞ்சம் கொண்ட நாட்களில் புலிகளின் இயக்கத்தினை தலைமையேற்று நடத்தி இலங்கை அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த தளபதி மாத்தையா 1994ல் கொல்லப் பட்டார். பிரபாகரனுக்கு சிங்கப்பூரிலிருந்து கப்பலில் ஆயுதம் கொண்டு வந்த கிட்டு என்ற கிருஷ்ணகுமார் நடுக் கடலில் மடிந்தார். EPRLF சென்னை அலுவலகத்தில் இருந்த அதன் தலைவர் பத்மநாபா மற்றும் 12 ஸ்ரீலங்கன் தமிழர், ஒரு சென்னை வாசியும் விடுதலைப் புலிகளின் தாக்குதலால் 1990ல் கொல்லப் பட்டதால் அன்றைய தி.மு.க அரசுக்கு அவப் பெயர் உண்டானது.

2)    இலங்கை பெட்டிக்கோலா மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் அதிகாலை பாஜ்ர் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது 1990 ல் துப்பாக்கி பிரயோகம் செய்து கிட்டத்தட்ட 300 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப் பட்டது, முஸ்லிம்களிடையே இன்னமும் விடுதலைப் புலிகள் பெயர் கேட்டாலே அதிர்ச்சியில் உறைந்து விடும் அளவிற்கு பயங்கரமான இயக்கமானது.

3)    அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி  இலங்கையில் அமைதி ஏற்படவும், அனைத்து மக்களும் நிம்மதி பெறவும், புலிகளிடமிருந்து ஆயுதங்கள் களையவும் 1987ல் இந்திய ராணுவத்தினை அனுப்பினார். ஆனால் விடுதலிப் புலிகள் இந்தியப் படைகள் மீது அபாண்டமான பழிகள் சுமத்தியதுடன் இலங்கை அரசும் உங்கள் பணி போதும் என்று சொன்னதால் 1990ம் ஆண்டு ராணுவம் திரும்பப் பெறப் பட்டது. அதற்கு பலன் ராஜிவ் மீது கோபம் கொண்ட விடுதலைப் புலிகள் மே மாதம் 21ந்தேதி 1991ல் ஸ்ரீபெரும்புதூரில் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது மனித வெடிகுண்டு மூலம் அவரும் அவருடன் சேர்ந்து 13 பேர்களும் கொல்லப் பட்டனர். இந்திய மண்ணில் வருங்கால உலக தலைவர் ஒருவர் கொல்லப் பட்டது தமிழர் மட்டுமல்லாது உலக அளவில் சோகத்தினை ஏற்படுத்தியது.

4)    கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வர்கள், 'வினை விதித்தவன் வினை அறுப்பானென்று' அதற்கெனங்க புலிகள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச அனுதாபமும் காற்றில் பறந்தது. இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா மற்றும் 32 ஐரோப்பிய நாடுகள் LTTE இயக்கத்தினை தடை செய்தது.

5)    இந்தியாவில் நடத்திய கொலைவெறி தாக்குதல் இலங்கையிலும் நடத்தப் பட்டது. 1993ம் ஆண்டு இலங்கை பிரதமர் பிரேமதாசா கலந்து கொண்ட 1993 மே தின ஊர்வலத்தில் மனித வெடிகுண்டால் கொல்லப் பட்டார். அதேபோன்று அன்றைய பிரதமர் சந்திரிகா பண்டாரநாயகா கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தின் மீது கொலைவெறி 1999ல் நடத்தப் பட்டு ஒரு கண்ணை இழந்தார்.

6)    இந்திய மண்ணில் மற்றொரு தாக்குதலும் நடைபெற்றது. 1990ம் ஆண்டு விடுதலைப் புலிகள் சென்ற வாகனத்தினை இராமநாதபுரம் பட்டினப் காத்தான் செக் போஸ்டில் தடுத்து நிறுத்தியபோது சுப்பிரமணியன் என்ற காவலரை சுட்டுத் தள்ளிவிட்டு சென்றது தமிழக காலவரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.

7)    LTTE அமைப்பின் கிழக்குப் பகுதி தளபதியாக இருந்த கருணா,  பிரபாகரன் செயல் பிடிக்காது 5000 செயல் வீரர்களுடன் தனியாக இருந்து அரசு சார்ந்த நிலையினை எடுத்தார்.

8)    2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் 30,000 கடற்கரை ஒர மக்கள் மடிந்தது விடுதலை இயக்கத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

9)    25 வருட தமிழ் ஈழ போராட்டம் மூலம் தமிழர் பொருளாதாரம் பெரிதே பாதிக்கப் பட்டது. ஐ.நா. ஆய்வின்படி தமிழ் விடுதலை போரில் ஒரு லட்சம் மக்கள் மடிந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

10)  உலகெங்கும் தீவிரவாதத்தினை அழித்திடும் இயக்கத்திற்கு குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் அந்தந்த அரசுக்கும் உதவியும் உலக நாடுகள்  செய்தது. தழீழ போரினால் பாதிக்கப் பட்ட இலங்கையில் அவர்களை ஒழிக்க நிலையான அரசு வேண்டும் என்று குரல் எழுப்பப் பட்டு அதற்கு பௌத்த சாமியார்களும் ஆதரவு தெரிவித்ததால் இலங்கையில் ராஜபக்சே அரசு பதவி ஏற்று இறுதி கட்ட போர் நடந்து 2009ம் ஆண்டு முல்லை வாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள், பனைய கைதிகளாக பிடிக்கப் பட்ட அப்பாவி தமிழர்கள் இறந்ததும், தளபதி பிரபாகரன் கொல்லப் பட்டும் LTTE இயக்கத்தால் 16, மே மாதம் 2009ல் தோல்வியினை ஒப்புக் கொள்ளப் பட்டது.

இதில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், எந்த தீவிரவாத இயக்கமும் நிலையான அரசிடம் தோல்வி அடைவது உறுதி. 1991ல் ராஜிவ் காந்தி குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டு ஜெயிலில் உள்ளனர். அதனை ஒரு கருவியாக வைத்து தமிழ் நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் பொம்மலாட்டம் செய்கின்றனர். தண்டனை அடைந்தவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று. ஆனால் தண்டனை பெற்ற  முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பியாஸ், அவருடைய சகோதரர் ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர்

ஸ்ரீலங்காவிலிருந்து கள்ளத்தனமாக இந்தியா வந்தவர்கள். அதில் பேரறிவாளன் மட்டும் தான் தமிழகத்தினைச் சார்ந்தவன். ஸ்ரீலங்காவினைச் சார்ந்தவர்களை விடுதலை செய்தால் அவர்கள் இலங்கை அரசிடம் தான் ஒப்படைக்க வேண்டும். இப்போதுள்ள சூழலில் அவர்கள் அங்கு சென்றால் அவர்கள் உயிர் வாழமுடியுமா என்பதே சந்தேகம். அதெல்லாம் இங்குள்ள தமிழர் கட்சிகளுக்குத் தெரியும் ஆனாலும் அரசியலுக்காக குரல் கொடுக்கின்றனர். அப்படி உள்ளவர்கள் எத்தனையோ தமிழ்நாட்டின் கைதிகள் 20 வருடத்திற்கு மேலாக ஜெயிலில் வாடுகின்றனர் அவர்கள் விடுதலைக்கு குரல் எழுப்பவில்லையே அது ஏன் என்று கேட்க முடியவில்லை?

இந்த இடத்தில் ராஜிவ் காந்தியின் அருமை மகளார் பிரியங்கா வேலூர் சிறையில் இருக்கும் நளினியினை பார்த்து என்ன நடந்தது என்று விசாரிக்க 18.3.2008 ம் ஆண்டு முன்னறிவிப்பு இன்றி சென்றார். அவர் வந்ததினை ஒரு கனவு போல இருந்தது என்று பின்பு நளினி  கூறியுள்ளார். பிரியங்கா, நளினியினை பார்த்ததும், 'My father is a good and soft man, why did you do it? you would have sorted out the issues whatever it may be through dialogue' (என்னுடைய தந்தை நல்லவர், மென்மையானவர், ஏன் அவ்வாறு செய்தீர்கள், எந்த விஷயமாக இருந்தாலும் பேசி தீர்த்து இருக்கலாமே) என்று சொன்னது மட்டுமல்லாமல் கண்ணீர் விட்டு அழுதாராம். தந்தையினை இழந்த மகள் அதனைவிட மிகவும் மென்மையான ஆனால் கடுமையான உள்ளர்த்தம் உள்ள வார்த்தைகளை யாரும் சொல்ல இயலாது. நளினியும் அழுதாராம், ஆனால் தான் நிரபராரி என்று மட்டும் சொன்னாராம். 'எங்கள் குடும்பம் உங்களை மன்னித்து விட்டது' என்று சொல்லி வந்து விட்டாராம். அந்த வார்த்தைகள் நளினி உயிருடன் இருக்கும் வரை அவரை வாட்டி எடுக்கும் என்பது நிச்சயமல்லவா

தமிழர் பழமொழி, 'அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொள்ளும்',  'கொலைக் குற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தற்காலிகமாக தப்பிக்கலாம் ஆனால் ஒரு போதும் தப்பிக்க முடியாது' 'கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்' போன்ற வாசகங்கள் LTTE பிரபாகரன் போன்றவர்களுக்கு தகும் என்றால் மிகையாகாது தானே?